வகை  |  odb

நம்மைக் குறித்த தேவனின் பார்வை

அது 1968, அமெரிக்கா வியட்நாமுடனான போரில் மூழ்கியது, நகரங்களில் இன வன்முறை வெடித்தது, இரண்டு பிரபலமான நபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு வருடத்திற்கு முன்பு, ஏவுதளத்தில் மூன்று விண்வெளி வீரர்களின் உயிரை நெருப்பு பறித்தது, நிலவுக்குச் செல்வது ஒரு பகற்கனவாகத் தோன்றியது. ஆயினும்கூட, அப்பல்லோ 8 கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு விண்ணில் பாய முடிந்தது.

இது சந்திரனுக்கு மனிதர்களை முதன்முறையாக அனுப்பிய திட்டமாய் மாறியது. விண்கல குழுவினரான, போர்மன், ஆண்டர்ஸ், மற்றும் லவல் என்று அனைவருமே விசுவாசிகள். கிறிஸ்துமஸ் நாளுக்கு முன்னான செய்தியாக: "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்" (ஆதியாகமம் 1:1) என்பதை ஒளிபரப்பினர். அந்த நேரத்தில், இது உலகில் அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்வாக இருந்தது, மேலும் மில்லியன் கணக்கானவர்கள் பூமியைத் தேவனின் பார்வையில் இருப்பதுபோன்ற இப்போதும் உள்ள நினைவுச் சின்னமான புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டனர். ஃபிராங்க் போர்மன் படித்து முடித்தார்: "தேவன் அது நல்லது என்று கண்டார்." (வ.10).

சில நேரங்களில் நம் நிலையை எண்ணி, நாம் சிக்கிக்கொண்டிருக்கும் அனைத்து கஷ்டங்களையும் உணர்ந்து, ஒரு நன்மையும் இல்லாததுபோல்  உணரலாம். ஆனால் நாம் சிருஷ்டிப்பின் நிகழ்வுக்குத் திரும்பி, நம்மைப் பற்றிய தேவனின் கண்ணோட்டத்தைப் பார்க்கலாம்: "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்" (வ.27). அதை மற்றொரு தெய்வீகக் கண்ணோட்டத்துடன் இணைப்போம்: "இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16). இன்று, தேவன் உங்களைப் படைத்தார் என்பதையும், பாவம் இருந்தபோதிலும் நன்மையைக் காண்கிறார் என்பதையும், அவர் உங்களை எவ்வாறு உருவாக்கினாரோ அவ்வாறே உங்களை நேசிக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

நாம் யாருக்குச் செவிகொடுக்கிறோம்?

"நான் அவசரநிலையை அறிவிக்க வேண்டும். எனது விமானி இறந்து விட்டார்", டக் ஒயிட் பதற்றத்துடன் தனது விமானத்தைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு இந்த  வார்த்தைகளைக் கூறினார். புறப்பட்ட சில நிமிடங்களில், டக் குடும்பம் வாடகைக்கு எடுத்திருந்த தனியார் விமானத்தின் விமானி திடீரென மரித்தார். பழைய வகை விமானங்களை ஓட்டும் மூன்று மாத பயிற்சி அனுபவத்துடன், டக் விமானி இருக்கையில் அமர்ந்தார். பின்னர், அவர் விமானத்தைத் தரையிறக்குவதன் மூலம் தன்னிடம் பேசிய உள்ளூர் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்களுக்கு கவனமாகச் செவிகொடுத்தார். பின்னர், டக், "ஏறக்குறைய ஏற்பட்டிருக்கும் நிச்சயமான தீ விபத்திலிருந்து [அவர்கள்] என் குடும்பத்தைக் காப்பாற்றினர்" என்றார்.

வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள ஒருவர் மட்டுமே நமக்கு உதவ முடியும். மோசே இஸ்ரவேலர்களிடம் பேசுகையில், “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக” (உபாகமம் 18:15) என்றார். இந்த வாக்குத்தத்தம் தேவன் தம் மக்களுக்கு வழங்கிய தீர்க்கதரிசிகளின் வரிசையைச் சுட்டிக்காட்டியது, ஆனால் அது மேசியாவைப் பற்றியும் பேசுகிறது. பேதுரு மற்றும் ஸ்தேவான் இருவரும் இந்த கடை முடிவான தீர்க்கதரிசி இயேசுவே என்று பின்னர் கூறியிருப்பார்கள் (அப்போஸ்தலர் 3:19-22; 7:37, 51-56). அவர் மட்டுமே தேவனின் அன்பும் ஞானமுமான அறிவுரைகளை நமக்குச் சொல்ல வந்தார் (உபாகமம் 18:18).

கிறிஸ்துவின் வாழ்நாளில், பிதாவாகிய தேவன், “இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்” (மாற்கு 9:7) என்றார். ஞானமாக வாழவும், இந்த வாழ்க்கையில் நொறுங்கி அழிவதைத் தவிர்க்கவும், வேதாகமம் மற்றும் பரிசுத்த ஆவியானவர் மூலம் இயேசு சொல்வதற்குச் செவிகொடுப்போமாக. அவருக்குச் செவிசாய்ப்பதே பெரிய மாற்றத்தை உண்டாக்குகிறது.

இயேசு நமது மீட்பர்

ஒரு சாதாரண தொங்கு கயிா்கூர்தி பயணமாகப் பாகிஸ்தான் பள்ளத்தாக்கில் ஆரம்பித்த அந்த பயணம்,  பயங்கரமான சோதனையாக மாறியது. சவாரி தொடங்கிய சிறிது நேரத்திலேயே, இரண்டு துணை கயிறுகள் அறுந்து விழுந்ததில், பள்ளிக் குழந்தைகள் உட்பட எட்டு பயணிகள்  நூற்றுக்கணக்கான அடிகளுக்கு மேல் அந்தரங்கத்தில் தொங்கினர். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பன்னிரண்டு மணி நேர மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அவர்கள் ஜிப்லைன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பலவற்றைப் பயன்படுத்தி பயணிகளை மீட்டனர்.

நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அந்த மீட்புக் குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள், ஆனால் பாவம் மற்றும் மரணத்திலிருந்து நம்மைக் காப்பாற்றி மீட்கும் இயேசுவின் நித்திய பணியுடன் ஒப்பிடுகையில் அவர்களின் பணி பெரிதல்ல. கிறிஸ்து பிறப்பதற்கு முன், ஒரு தூதன்  மரியாளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி யோசேப்பை அறிவுறுத்தினார், ஏனெனில் அவளுடைய கரு "பரிசுத்த ஆவியினால்" (மத்தேயு 1:18, 20) அருளப்பட்டது. யோசேப்பு தன் மகனுக்கு இயேசு என்று பெயரிடவும் சொல்லப்பட்டான், ஏனெனில் அவர், "அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" (வ.21). இருப்பினும், இந்த பெயர் முதல் நூற்றாண்டில் பொதுவானதாக இருந்தபோதிலும், இந்த குழந்தை மட்டுமே இரட்சகராக இருக்கத் தகுதி பெற்றது (லூக்கா 2:30-32). மனந்திரும்பி தம்மை நம்புகிற அனைவரின் நித்திய இரட்சிப்பையும் முத்திரையிட்டுப் பாதுகாக்கக் கிறிஸ்து சரியான நேரத்தில் வந்தார்.

நாம் அனைவரும் பாவம் மற்றும் மரணத்தின் தொங்கூர்தியில் சிக்கி, தேவனிடமிருந்து நித்திய பிரிவின் பள்ளத்தாக்கில் தொங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் தம்முடைய அன்பினாலும் கிருபையினாலும் இயேசு நம்மை மீட்டு, நம் பரலோகத் தகப்பனிடம் பாதுகாப்பாகக் கொண்டுவர வந்தார். அவரை துதிப்போம்!

கிறிஸ்துவிலுள்ள ஊக்கம்

ஒரு பள்ளி ஆசிரியை தனது மாணவர்கள் தங்கள் சகாக்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் உண்டாக்கும் குறிப்புகளை எழுதப் பரிந்துரைத்தார். சில நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டின் வேறொரு பகுதியில் ஒரு பள்ளியில்  துயரம் ஏற்பட்டபோது, ​​அவர்களுக்கும் ஏதாகிலும் நடக்கலாம் என்று ஏற்பட்ட பயத்தையும் வேதனையையும் அவர்கள் மேற்கொள்ள, அவர்களின் குறிப்புகள் சக மாணவர்களை உற்சாகப்படுத்தியது.

தெசலோனிக்கேயிலுள்ள விசுவாசிகளுக்கு பவுல் எழுதியபோது ஊக்கமும் பரஸ்பர அக்கறையும் இருந்தது. அவர்கள் நண்பர்களை இழந்திருந்தனர், மேலும் தங்கள் அன்புக்குரியவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க இயேசுவின் வாக்களிக்கப்பட்ட வருகையில் நம்பிக்கை வைக்குமாறு பவுல் அவர்களுக்கு அறிவுறுத்தினார் (1 தெசலோனிக்கேயர் 4:14). அது எப்போது நிகழும் என்று அவர்களுக்குத் தெரியாத நிலையில்,  அவர் திரும்பி வரும்போது விசுவாசிகளாகத் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு பயந்து காத்திருக்க வேண்டியதில்லை என்று அவர்களுக்கு நினைவூட்டினார் (5:9). அதற்குப் பதிலாக, அவர்கள் அவருடனான தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நம்பிக்கையுடன் காத்திருக்கவும், இதற்கிடையில் "ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி" (வ. 11) செய்யலாம்.

வேதனையான இழப்புகள் அல்லது புரிந்துகொள்ள முடியா துயரங்களை நாம் அனுபவிக்கும் போது, ​​பயம் மற்றும் சோகம் நம்மை மேற்கொள்வது எளிது. பவுலின் வார்த்தைகள், எழுதப்பட்ட காலத்தில் உதவியது போலவே இன்றும் நமக்கு உதவியாக உள்ளன. கிறிஸ்து அனைத்தையும் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போமாக. இதற்கிடையில், குறிப்புகள், நல்வார்த்தைகள், சேவைகள் அல்லது எளிய அணைப்பு மூலம் நாம் ஒருவரையொருவர் ஊக்குவிக்கலாம்.

ஒரு பாட்டியின் விசுவாசம்

நாங்கள் இரவு உணவு அருந்துகையில், என் ஒன்பது வயது பேரன் புன்னகையுடன், "நான் பாட்டியைப் போலவே இருக்கிறேன். நான் படிக்க விரும்புகிறேன்!” என்றான். அவன் வார்த்தைகள் என் மனதை மகிழ்வித்தது. அவன் உடல்நலம் குன்றி, பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்த முந்தைய வருடத்தை நான் மீண்டும் நினைத்தேன். அவன் நன்றாகத் தூங்கிய பிறகு, நாங்கள் அருகருகே அமர்ந்து ஒன்றாகப் படித்தோம். புத்தகங்களை நேசிக்கும்படி என் அம்மாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மரபை நான் அவனுக்குக் கடத்துவதில் மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால் என் பேரக்குழந்தைகளுக்கு நான் கடத்த விரும்பும் மிக முக்கியமான மரபு அதுவல்ல. என் பெற்றோரிடமிருந்து நான் பெற்ற விசுவாசத்தின் மரபையே மற்றும் என் பிள்ளைகளுக்குக் கடத்த முயல்கிறேன், அது என் பேரக்குழந்தைகளுக்கும் அவர்களின் விசுவாசத்தை நோக்கிய பயணத்தில் உதவும் என்று நான் ஜெபிக்கிறேன்.

தீமோத்தேயு ஒரு ஆவிக்குரிய தாய் மற்றும் பாட்டியின் மரபைக் கொண்டிருந்தார். மேலும் ஒரு ஆவிக்குரிய வழிகாட்டியான அப்போஸ்தலன் பவுலும் இருந்தார். அப்போஸ்தலன், "அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்" (2 தீமோத்தேயு 1:5) என்றெழுதினார்.

நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க போதுமானதாக இல்லை என்று நாம் நினைக்கலாம். ஒருவேளை நமக்குக் கடத்தப்பட்ட மரபு தீமையானதாக இருக்கலாம். ஆனால் நம் குழந்தைகள், பேரக்குழந்தைகள் அல்லது எந்தவொரு குழந்தையின் வாழ்க்கையிலும் விசுவாசத்தின் மரபை உருவாக்கக் காலம் கடந்து போகவில்லை. தேவனின் உதவியால், நாம் விசுவாச விதைகளை விதைக்கிறோம். விசுவாசத்தை வளரச் செய்பவர் அவரே (1 கொரிந்தியர் 3:6-9).