வகை  |  odb

வரவேற்பு விரிப்பு

எனது உள்ளூரின் நவீன அங்காடியில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு விரிப்புகளைப் பார்த்துக்கொண்டே நடக்கையில், ​​அவற்றின் மீது பதிக்கப்பட்டிருந்த வாசகங்களைக் கவனித்தேன். "வணக்கம்!", இதய வடிவில் "இல்லம்" போன்றவை. நான் வழக்கமான ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன், "வரவேற்பு" அதை வீட்டில் வைத்த பின்னர், என் உள்ளதை ஆராய்ந்தேன். தேவன் விரும்புவதை உண்மையிலேயே என் இல்லம் வரவேற்கிறதா? துன்பப்படும் அல்லது குடும்ப பிரச்சனையால் துயரப்படும் சிறுபிள்ளையை? தேவையோடிருக்கும் அண்டை வீட்டாரை? அவசரமாக அழைக்கும் வெளியூரிலிருந்து வந்திருக்கும் குடும்ப அங்கத்தினரை?

மாற்கு 9 இல், அவரது பரிசுத்த பிரசன்னத்தைக் கண்டு பிரமித்து நின்ற பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானை விட்டு (வ.1-13) கீழே பிசாசு பிடித்திருந்த தனது மகன் குணமாவான் என்ற நம்பிக்கை இழந்த தகப்பனைக் கண்டு மகனைக் குணமாக்க, இயேசு மறுரூப மலையிலிருந்து இறங்கினார் (வ.14-29). பின்னர் இயேசு சம்பவிக்கப்போகும் தனது  மரணத்தைப் பற்றிய தனிப்பட்ட படிப்பினைகளைச்  சீடர்களுக்கு வழங்கினார் (வ.30-32). அவர்களோ அவருடைய கருத்தை மிகவும் தவறாகப் புரிந்துகொண்டனர் (வ.33-34). மறுமொழியாக, இயேசு ஒரு சிறுபிள்ளையை தம் மடிமீது அமர்த்தி, “இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்” (வ. 37). இங்கு ஏற்றுக்கொள்ளுதல் என்ற சொல்லுக்கு விருந்தினராகப் பெறுவதும்,  ஏற்பதும் என்று பொருள். தம்முடைய சீடர்கள் அனைவரையும் வரவேற்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். மதிக்கப்படாதவர்களையும், அசௌகரியம் உண்டாக்குகிறவர்களையும் கூட நாம் அவரை வரவேற்பது போல ஏற்றுக்கொள்ளவேண்டும்.

நான் எனது வரவேற்பு கம்பளத்தை மனதிற்கொண்டு, அவருடைய அன்பை நான் எப்படி மற்றவர்களுக்கு வழங்குகிறேன் என்று சிந்தித்தேன். இது இயேசுவைப் பொக்கிஷமான விருந்தினராக வரவேற்பதன் மூலம் தொடங்குகிறது. அவர் விரும்பும் வழியில் பிறரை வரவேற்கும்பொருட்டு, என்னை வழிநடத்திட நான் அவரை அனுமதிப்பேனா?

வேதாகம பிரியர்கள்

அழகான மணமகள், தனது பெருமிதமான தந்தையின் கையைப் பற்றிக் கொண்டு, பலிபீடத்திற்குச் செல்லத் தயாராக இருந்தாள். ஆனால் அவளுடைய பதின்மூன்று மாத தமக்கையின் மகன் அவளை முந்திக்கொண்டான். பொதுவாக உபயோகிக்கும் "மோதிரத்தை" எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அவன் வேதாகமத்தை ஏந்திக்கொண்டிருந்தான். இந்த முறையில் மணமகனும், மணமகளும், இயேசுவின் உறுதியான விசுவாசிகளாக, வேதாகமத்தின் மீதான தங்கள் அன்பிற்கு சாட்சியமளிக்க விரும்பினர். பெரிதாய் கவனம் சிதறாமல், அந்த பிள்ளையும் குறுநடை போட்டு சபையின் முன்புறம் சென்றது. வேதாகமத்தின் தோல் அட்டையில் காணப்பட்ட சின்னஞ்சிறு குழந்தையின் பற்களின் அடையாளங்கள் எவ்வளவு அழகாய் இருந்தது. கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு அல்லது அவரை அறிய விரும்புபவர்களுக்கு வேதத்தைச் சுவைத்து எடுப்பதைக் காண்பிக்கச் செயல் விளக்கமாகும் சித்திரம்.

சங்கீதம் 119, வேதாகமத்தின் விஸ்தாரமான மதிப்பைப் போற்றுகிறது. கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிறவர்களின் (வ.1)  ஆசீர்வாதத்தை அறிவித்த பிறகு, ஆசிரியர் கவிதை நடையில் அதைப் பற்றி முழங்கினார், அதில் அதின் மீதான அவரது அன்பும் அடங்கும். "இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்" (வ.159); "பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்." (வ.163); "என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்" (வ.167)

தேவன் மீதும் அவரது வார்த்தையின் மீதும் உள்ள நமது அன்பை எவ்வாறு வாழ்ந்து காட்டுகிறோம் என்பதை நாம் எத்தகைய வண்ணம் அறிவிக்கிறோம்? அவர் மீதான நம் அன்பைச் சோதிப்பதற்கான ஒரு வழி என்னவென்றால், நான் எதில் பங்குகொள்கிறேன்? நான் வேதத்தின் இனிமையான வார்த்தைகளை "சுவைக்கிறேனா"? என்று நம்மை நாமே ஆராய்வதாகும். பின்னர் "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்"  (34:8) என்ற இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

 

தேவனை பற்றிக்கொள்ளுதல்

ரேகாவை பற்றி சுமதி கூறும்போது, ​​அவள் தன் தோழியின் "தேவன் மீதான ஆழமான, காலத்தால் சோதிக்கப்பட்ட விசுவாசம்" மற்றும் நாட்பட்ட பலவீனமான நிலையில் வாழும் போதும் அவள் வளர்த்துக் கொண்ட சகிப்புத்தன்மையைப் பெரிதாகப் பேசுவாள். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக, ரேகா தனது அறையின் சிறிய ஜன்னலிலிருந்து நிலவைக்  கூட பார்க்க முடியாமல் படுத்த படுக்கையாய் கிடந்தாள். ஆனால் அவள் நம்பிக்கையை இழக்கவில்லை; அவள் தேவனை நம்புகிறாள்; வேதாகமத்தைப் படிக்கிறாள், கற்கிறாள். இதை, “மனச்சோர்வுக்கு எதிரான கடுமையான யுத்தத்தின் போது எவ்வாறு உறுதியாக நிற்பது என்று அவள் அரிவாள்” எனச் சுமதி விவரிக்கிறாள்.

ரேகாவின் உறுதியையும் விடாமுயற்சியையும், பெலிஸ்தியரிடமிருந்து தப்பியோட மறுத்த தாவீது ராஜாவின் காலத்திலிருந்த எலெயாசார் எனும் வீரனோடு சுமதி ஒப்பிடுகிறாள். முறிந்தோடிய படைகளோடு சேருவதற்குப் பதிலாக, அவன் “எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்” (2 சாமுவேல் 23:10). தேவனுடைய வல்லமையின் மூலம், "அன்றையதினம் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்" (வச. 10). சுமதி அவதானிப்பதுபோல், எலெயாசார் உறுதியுடன் வாளை பற்றிக்கொண்டதுபோல, ரேகாவும் "தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தை" (எபேசியர் 6:௧௭) பற்றிக்கொள்கிறாள். அதிலே, தேவனிலே, அவள் தன் பெலனைக் காண்கிறாள்.

நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும் சரி அல்லது நாள்பட்ட நோயால் மனச்சோர்வடைந்தாலும் சரி, நம் நம்பிக்கையின் களஞ்சியத்தை ஆழப்படுத்தவும், சகிக்கும்படி நமக்கு உதவவும் நாமும் தேவனை நோக்கிப் பார்க்கலாம். கிறிஸ்துவில் நாம் நமது பலத்தைக் காண்கிறோம்.

 

கிரியையில் அன்பு

கணவனைப் பிரிந்த அந்த தாயார், ஐந்து வருடங்களுக்கும் மேலாக நற்குணசாலியான முதியவரின் வீட்டருகே வசித்து வந்தார். ஒரு நாள், அவள் நலனில் அக்கறை கொண்டு, அவள் வீட்டுக் கதவைத் தட்டினார். "ஒரு வாரமாக உன்னைப் பார்க்கவில்லையே, உன்னை நலம் விசாரிக்கவே வந்தேன்" என்று அவர் கூறினார். அவரது "கரிசனையான விசாரிப்பு" அவளை ஊக்கப்படுத்தியது. சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னையும் தன் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் அன்பான மனிதனைப் பாராட்டினாள்.

இலவசமாகக் கொடுப்பதற்கும் விலையேறப்பெற்றதாய் பெறுவதற்குமான இரக்கம் எனும் வெகுமதியால், வெறுமனே நலலவர்களாக இருப்பதைக் கடந்து  கிறிஸ்துவின் அன்பைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் பிறருக்கு ஊழியம் செய்கிறோம். எபிரேயரின் எழுத்தாளர், இயேசுவை விசுவாசிப்பவர்களிடம், “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்” (எபிரெயர் 13:15) என்றார். பின்னர் தங்கள் விசுவாசத்தை வாழ்ந்து காண்பிக்கும் பொருட்டு, "அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்" (வ. 16) என்று ஆக்கியோன் எழுதினார்.

இயேசுவின் நாமத்தை அறிக்கையிட்டு, அவரை ஆராதிப்பது மகிழ்ச்சியும் பாக்கியமும் ஆகும். ஆனால் இயேசுவைப் போல நாம் அன்பு செலுத்தும்போது, தேவன் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறோம். நம் சொந்தக் குடும்பங்களுக்குள்ளும் அதற்கு அப்பாலும் பிறரை நன்றாக நேசிக்க நம்மை ஆற்றல் படுத்தவும், அப்படிப்பட்ட வாய்ப்புகள் குறித்து உணர்வுள்ளவர்களாக்கவும் பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடலாம். அத்தகைய ஊழிய தருணங்களின் மூலம், கிரியை செய்யும் அன்பின் வல்லமையான செய்தியின் மூலம் இயேசுவைப் பகிர்ந்து கொள்வோம்.

 

சுத்தமாக்கும் அறிக்கையிடுதல்

ஜனங்கள் மரிக்கும் தறுவாயில், அவர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கவும்,  அவர்கள் உயிருடன் இருந்தபோது பகிர்ந்து கொள்ளாத ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளவும் சம்பளத்திற்காக பணியமர்த்தப்பட்ட ஒருவர் இருக்கிறார். இரங்கல் செய்திகள் வாசிக்கப்படுகையில் அவர்  குறுக்கிடுவார். திகைக்கும் பொறுப்பாளர்கள் எதிர்க்கத் துவங்குகையில், அவர்களை உட்காரச் சொல்வதுமுண்டு. ஒருமுறை இவர் எழுந்து நின்று  சவப்பெட்டியிலிருந்தவர் எவ்வாறு அதிர்ஷ்ட குலுக்கலில் வென்று, பின்பு அதை யாரிடமும் சொல்லாமல் பல ஆண்டுகளாகத் தன்னை வெற்றிபெற்ற ஒரு தொழிலதிபராகப் பிறரிடம் காட்டிக்கொண்டார் என்பதை விளக்கினார். இந்த வாடகைக்கு அமர்த்தப்பட்டவர், விதவையான ஒரு மனைவியிடம் அவரது கணவனின் பல பாலியல் துரோகங்களை அறிக்கையிட்டார். இவரது  செயல்கள் சொந்த நலனுக்காகப் பிறரைச் சுரண்டுவதோ அல்லது நல்ல நோக்கத்தில் செய்யப்படுகிறதோ என்று கேட்கலாம், ஆனால் ஜனங்கள் தங்களுடைய கடந்தகால பாவங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற மக்களின் வாஞ்சை இதில் அப்பட்டமாகத் தெரிகிறது.

வேறொருவர் நமக்காக அறிக்கை செய்வதென்பது (குறிப்பாக நாம் இறந்த பிறகு) இரகசியங்களைக் கையாள்வதற்கான ஒரு பயனற்ற மற்றும் ஆபத்தான வழியாகும். எவ்வாறாயினும், இந்தக் கதைகள் ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகின்றன: நம் சுமையை இறக்கிட, நாம் அறிக்கையிட வேண்டும். அறிக்கையிடலானது நாம் மறைத்த, புரையோடச் செய்த காரியங்களைச் சுத்தப்படுத்துகிறது. "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்" (5:16) என்று யாக்கோபு கூறுகிறார். அறிக்கையிடல்  நம்மைக் கட்டி வைத்திருக்கும் சுமைகளிலிருந்து விடுவிக்கிறது, தேவனுடன் நெருங்கிட நம்மை விடுவிக்கிறது. அவரிடமும், நமது விசுவாச அங்கத்தினரோடும் திறந்த மனதுடன் ஜெபிக்கச் செய்கிறது. அறிக்கையிடல் குணப்படுத்துகிறது.

தேவனிடமும் நமக்கு நெருக்கமானவர்களிடமும் நாம் புதைக்க ஆசைப்படும் வலிகள் மற்றும் தோல்விகளை ஒப்புக்கொண்டு, ஒரு திறந்த வாழ்க்கை வாழ யாக்கோபு நம்மை  அழைக்கிறார். இந்த சுமைகளை நாம் மட்டும் சுமக்க வேண்டியதில்லை. அறிக்கையிடல் நமக்கான ஒரு பரிசு. நம் இருதயத்தைச் சுத்திகரிக்கவும், நம்மை விடுவிக்கவும் தேவன் அதைப் பயன்படுத்துகிறார்.