
கிறிஸ்துவில் பராமரித்தல்
என் நண்பனின் தாயார் திருமதி சார்லின், தொண்ணூற்றுநான்கு வயது, ஐந்தடிக்கு கீழ் உயரம், ஐம்பது கிலோவுக்கும் குறைவான எடை கொண்டவர். ஆயினும்கூட, இவையெல்லாம் தனது மகனைப் பராமரிக்க தன்னால் முடிந்ததைச் செய்வதிலிருந்து அவளைத் தடுக்கவில்லை, அவனது உடல்நல குறைபாட்டால் தன்னை தானே அவன் பராமரித்துக்கொள்ள முடியாது. அவர்களது இரண்டு மாடி வீட்டிற்குச் சென்றால், அவள் வசிக்கும் இரண்டாவது மாடியில் அடிக்கடி அவளைக் காணலாம். மெதுவாக, பதினாறு படிக்கட்டுகளிலிருந்து முதல் மாடிக்கு இறங்கி, தான் நேசிக்கும் மகனைப் பராமரிப்பதில் உதவுவதுபோலவே தன் விருந்தாளிகளையும் உபசரிக்கிறாள்.
தனது நலனை விட தன் மகனின் நலனையே முதன்மைப்படுத்துவதால், திருமதி. சார்லினின் தன்னலமற்ற உறுதியானது, என்னைக் குற்ற உணர்வுள்ளவனாக்கியும், அறைகூவல் விடுத்தும் மற்றும் ஊக்கப்படுத்துகிறது. பிலிப்பியர் 2-ல் பவுல் ஊக்குவிப்பதை, அவள் முன்மாதிரியாகக் காட்டுகிறாள்: "மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக" (வ.3-4).
உடல்நலப் பிரச்சினைகள் அல்லது பிற தேவைகள் உள்ளவர்களைக் கவனிப்பதற்கு அதிக கிரயம் செலுத்தவேண்டியிருக்கலாம். அவர்கள் வாழ்க்கையின் தேவைகளுக்காக அனைத்தையும் செலுத்தவேண்டி இருக்கலாம். மேலும் நம்மையே மையப்படுத்தியிருக்கும் நோக்கத்தை நாமே வலிய அகற்றாவிடில், நமக்கு நெருக்கமானவர்களுக்குக் கூட பற்றாக்குறை உண்டாகலாம். ஆனால் இயேசுவின் விசுவாசிகள், தாழ்மையுடன் பராமரிக்கவே அழைக்கப்படுகிறார்கள் (பார்க்க. வ. 1-4). நம்மையே நாம் அர்ப்பணிக்கும்போது , இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி மற்றவர்களுக்கு உதவி செய்கிறோம். "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது" (வ.5) என்று அப்போஸ்தலன் நமக்கு நினைப்பூட்டுகிறார்.

தேவனின் பார்வையில் ஒவ்வாதது அல்ல
வருடாந்திர தேசிய கால்பந்து போட்டிகளுக்கான தேர்வுகளின் போது, தொழில்முறை கால்பந்து அணிகள் புதிய வீரர்களைத் தேர்வு செய்கின்றன. வருங்கால வீரர்களின் திறமை மற்றும் உடல் தகுதியை மதிப்பிடுவதற்குப் பயிற்சியாளர்கள் ஆயிரக்கணக்கான மணிநேரங்களைச் செலவிடுகின்றனர். 2022 இல், ப்ராக் பர்டி கடைசி 262வது இடத்தைப் பிடித்தார் மற்றும் "திரு. ovvvadhavar” என்று முத்திரை குத்தப்பட்டார். கடைசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் புனைபெயர் அது. வரும் போட்டி தொடரில் அவர் விளையாடுவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், சில மாதங்களுக்குப் பிறகு, பர்டி தனது அணியை இரண்டு பிளேஆஃப் (சமநிலை உடைக்கும் போட்டிகள்) வெற்றிகளுக்கு வழிநடத்தினார். உண்மை என்னவென்றால், அணியின் நிர்வாகிகள் எப்போதும் திறனைக் கண்டறியும் வேலையைத் திறம்படச் செய்வதில்லை. நாமும் அப்படிதான்.
பரீட்சயமான பழைய ஏற்பாட்டுக் கதை ஒன்றில், ஈசாயின் குமாரரிலிருந்து இஸ்ரேலின் அடுத்த ராஜாவைத் தேர்ந்தெடுக்க சாமுவேல் தீர்க்கதரிசியைத் தேவன் அனுப்பினார். சாமுவேல் அந்த ஆண்மக்களைப் பார்த்தபோது, அவர்களின் உடல் தோற்றத்தால் அவர் சற்றே தடுமாறினார். ஆனால் தேவன் அவரிடம், "நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்" (1 சாமுவேல் 16:7) என்றார். மாறாக, தேவன் அவரை மூத்தவனையோ அல்லது பராக்கிரமசாலியையோ தெரிந்துகொள்ளும்படி வழிநடத்தாமல், இளையவனும் வெளித்தோற்றத்தில் பொருத்தமற்றவனாகவும் தோன்றும் தாவீதையே தேர்ந்தெடுக்கும்படி வழிநடத்தினார். இவரே பின்னர் இஸ்ரவேலின் மிகப் பெரிய பூமிக்குரிய ராஜாவானார்.
மக்களை மதிப்பிடுவதில் அடிக்கடி நாம் ஏன் மோசமாகத் தவறுகிறோம்? " மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" (வ.7) என்பதை நமது வேதாகம பகுதி நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு பணிக்குழுவில் பணியாற்றவோ அல்லது ஒரு தன்னார்வ குழுவில் சேவைசெய்யவோ எவரையாகிலும் தேர்ந்தெடுக்கும்படி நாம் கேட்கப்படும்போது, தேவனுக்குமுன் விலையேறப்பெற்ற சுபாவங்களின் அடிப்படையில் தேர்வுகளைச் செய்வதற்கான ஞானத்தைத் தரும்படி அவரிடம் கேட்கலாம்.

கிறிஸ்துவில் ஒரு பண்பட்ட வாழ்வு
நாங்கள் எங்கள் வீட்டைக் கட்டியபோது, அது ஒரு சரளைக்கல் சாலையின் முடிவிலே, சேறும் காலியுமான இடத்தை விடச் சற்று உயரமாக இருந்தது. சுற்றியிருந்த மலையடிவாரங்களுக்கு ஏற்ப பொருந்துவதற்குப் புற்கள், மரங்கள் மற்றும் புதர்கள் எங்களுக்குத் தேவைப்பட்டன. புல்வெளி வெட்டும் கருவிகளை எடுத்துக்கொண்டு வேலைக்குச் செல்லும்போது, மனிதர்களுக்காகக் காத்திருந்த முதல் தோட்டத்தைப் பற்றி நான் நினைத்தேன்: “நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை.. நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை” (ஆதியாகமம் 2:5).
ஆதியாகமம் 1 இல் உள்ள சிருஷ்டிப்பின் விவரிப்பில், தேவன் "நல்லது" அல்லது "மிகவும் நன்றாயிருந்தது" (வ. 4, 10, 12, 18, 21, 25, 31) என்று மீண்டும் மீண்டும் தனது படைப்பை மதிப்பீடு செய்ததைக் கூறுகிறது. இருப்பினும், அது முழுமையடையவில்லை. ஆதாமும் ஏவாளும் நிலத்தைப் பண்படுத்த வேண்டியிருந்தது, தேவனின் படைப்பின் மீதான உக்கிராணத்துவத்தை செயல்படுத்த வேண்டும் (வ.28). அவர்கள் நிலைமாறாத பரதீசில் அல்ல, மாறாகப் பராமரிப்பும் மேம்பாடும் தேவைப்படும் ஒன்றில் வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்டனர்.
ஆதியிலிருந்தே, தேவன் தனது சிருஷ்டிப்பில் தன்னுடன் பங்காளியாக மனிதர்களை அழைத்தார். அவர் அதை ஏதேன் தோட்டத்தில் செய்தார்; மேலும் நாம் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது, அவர் நம்மில் உண்டாக்கும் "புதிய சிருஷ்டியை" கொண்டும் அதைச் செய்கிறார் (2 கொரிந்தியர் 5:17). இரட்சிக்கப்படுகையில், நாம் பூரணம் ஆக்கப்படவில்லை. அப்போஸ்தலன் பவுல் சொல்வது போல், "இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்" (ரோமர் 12:2), “தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு” (8:29) அவருக்குப் பிரியமான வாழ்க்கையை நாம் நாடும்போது தேவன் நம்மில் செயல்படுகிறார்.
நிலத்தைப் பராமரிப்பதோ அல்லது கிறிஸ்துவில் நம்முடைய புதிய வாழ்க்கையைப் பராமரிப்பதோ, தேவன் நமக்கு வரமாக ஈந்துள்ளார் நாம் அதைப் பண்படுத்த வேண்டும்.

இயேசுவின் மீது நம் கண்களைப் பதித்தல்
வினிதாவின் கண்கள் அவள் அருகே இருந்த சாம்பல் நிற காரின் மீதே பதிந்திருந்தன. நெடுஞ்சாலையிலிருந்து வெளியேற அவள் பாதையை மாற்ற வேண்டியிருந்தது, ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் வாகனத்தை முந்திச் செல்ல முயலும்போது, மற்ற ஓட்டுநரும் வேகத்தைக் கூட்டியதாகத் தோன்றியது. இறுதியாக, அவள் முன்னால் முந்த முடிந்தது. தன் அற்பமான வெற்றியின் தருணத்தில், வினிதா பின் கண்ணாடியில் பார்த்துச் சிரித்தாள். அதே சமயம், அவள் செல்லவேண்டிய இடத்தை, தான் கடந்து செல்வதைக் கவனித்தாள்.
ஒரு கசப்பான புன்னகையுடன், அவள்: "நான் முந்திச் செல்வதிலேயே நோக்கமாய் இருந்தேன், ஆகவே நான் வெளியேறும் வழியைத் தவறவிட்டேன்" என்று சொல்லிக்கொண்டாள்.
தேவனுடைய வழிகளில் நடக்க வேண்டும் என்ற நமது விருப்பத்திலும் இப்படிப்பட்ட சறுக்கல் ஏற்படலாம். யூத நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்காததற்காக மதத் தலைவர்கள் இயேசுவை நெருக்குகையில் (யோவான் 5:16), நியாயப்பிரமாணம் சுட்டிக்காட்டிய நபரைக் கவனிக்காமல், அவர்கள் நியாயப்பிரமாணத்தை படிப்பதிலும் செயல்படுத்துவதிலும் மிகவும் உறுதியாகிவிட்டனர் என்று எச்சரித்தார்: “என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (வ.39-40).
தேவனுக்கு முன்பாக நீதிபரராய் இருக்க முயன்றதில், மதத் தலைவர்கள் யூத நியாயப்பிரமணத்தை தாங்கள் பின்பற்றுவதுமின்றி, மற்றவர்களும் பின்பற்றுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தினர். அவ்வாறே, தேவனுக்கேற்ற வைராக்கியத்தில் சபை கூடுதல், வேத வாசிப்பு, சமூக சேவை போன்ற நல்ல காரியங்களை நாமும் செய்து, பிறரையும் நம்முடன் சேரச் செய்யலாம். ஆனால் நாம் அவைகளின் மீது அதிக கவனம் செலுத்தி, அவற்றை நாம் யாருக்காகச் செய்கிறோமோ, அந்த இயேசுவானவரையே கவனிக்கத் தவறக்கூடும்.
நாம் செய்யும் அனைத்திலும், கிறிஸ்துவின் மீதே நம் கண்களைப் பதிந்திருக்க உதவும்படி தேவனிடம் கேட்போம் (எபிரெயர் 12:2). அவர் ஒருவரே "வழியும் சத்தியமும் ஜீவனும்" (யோவான் 14:6) ஆனவர்.
