தேவன் பதிலளிப்பார்
போதகர் தீமோத்தேயு பயணம் செய்யும் போது, தனது போதருக்குரிய கழுத்துப்பட்டையை அணிந்திருந்தால், அவர் அடிக்கடி அந்நியர்களால் அணுகப்படுவார். "தயவுசெய்து எனக்காக ஜெபியுங்கள்" என்று விமான நிலையத்தில் உள்ளவர்கள் அவரது எளிய கறுத்த மேலங்கியின் மீது போதகருக்கான பட்டையைப் பார்க்கும்போது கூறுகிறார்கள். சமீபத்தில் ஒரு விமானத்தில், ஒரு பெண் அவரைக் கவனித்தபோது அவருடைய இருக்கை அருகே மண்டியிட்டு, “நீங்கள் ஒரு போதகரா? எனக்காக ஜெபிப்பீர்களா?" என்று கெஞ்சினார். போதகர் தீமோத்தேயு ஜெபித்தார்.
எரேமியாவில் உள்ள ஒரு பகுதி, தேவன் ஏன் ஜெபத்தைக் கேட்கிறார் மற்றும் பதிலளிக்கிறார் என்பதை நாம் உணர உதவுகிறது. தேவன் அக்கறை காட்டுகிறார்! அவர் தனக்குப் பிரியமான ஆனால் பாவத்தால் நிறைந்து சிறைபிடிக்கப் பட்டுப்போன ஜனங்களுக்கு, "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே" (29:11) என்று உறுதியளிக்கிறார். அவர்கள் தம்மிடம் திரும்பும் காலத்தைத் தேவன் எதிர்நோக்கினார். "அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்" (வ. 12-13).
தீர்க்கதரிசி சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஜெபத்தைப் பற்றி இதையும் இதற்கு மேலும் கற்றுக்கொண்டார். தேவன் அவருக்கு, "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்" (33:3) என்று உறுதியளித்தார்.
ஜெபிக்கும்படி இயேசுவும் நம்மை உந்துகிறார். "உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்" (மத்தேயு 6:8) என்று அவர் கூறினார். எனவே ஜெபத்தில் "கேளுங்கள்," "தேடுங்கள்," மற்றும் "தட்டுங்கள்" (7:7). நாம் வைக்கும் ஒவ்வொரு விண்ணப்பமும் பதில் அளிப்பவருடன் நம்மை நெருங்கச் செய்கிறது. ஜெபத்தில் நாம் தேவனுக்கு அந்நியராக இருக்க வேண்டியதில்லை. அவர் நம்மை அறிந்திருக்கிறார், நம்மிடமிருந்து கேட்க விரும்புகிறார். நம்முடைய கவலைகளை இப்போதே அவரிடம் எடுத்துச் சொல்லலாம்.

முற்றிலும் நேர்த்தியான பரிசு
பெருவிற்கு ஒரு குறுகிய கால ஊழிய பயணத்தின் போது, ஒரு இளைஞன் என்னிடம் பணம் கேட்டான். பாதுகாப்பு காரணங்களுக்காக, பணத்தை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று எனது குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது, ஆகையால் நான் அவனுக்கு எவ்வாறு உதவுவது? அப்போஸ்தலர்களான பேதுருவும், யோவானும் அப்போஸ்தலர் 3-ல் குறிப்பிடப்பட்ட முடவனுக்கு அளித்த பதிலை நான் நினைவு கூர்ந்தேன். என்னால் அவனுக்குப் பணம் கொடுக்க இயலாது, ஆனால் தேவனின் அன்பைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்று அவனுக்கு விளக்கினேன். தான் ஒரு அனாதை என்று அவன் சொன்னபோது, தேவனே அவனுக்குத் தகப்பனாயிருக்க விரும்புகிறார் என்றேன். அதைக் கேட்டதும், அழுதான். அவனைத் தொடர்ந்து வழிநடத்துவதற்கு, எங்களை உபசரித்த சபையின் உறுப்பினரோடு அவனை அறிமுகப்படுத்தினேன்.
சில நேரங்களில் நம் வார்த்தைகள் மட்டும் போதுமானதாக இல்லை என்பதாக உணரலாம், ஆனால் நாம் இயேசுவைப் பிறருடன் பகிரும்போது பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பலப்படுத்துவார்.
பேதுருவும் யோவானும் அந்த மனிதனை ஆலய பிராகாரத்தில் சந்தித்தபோது, கிறிஸ்துவைப் பகிர்ந்துகொள்வதே மிகப் பெரிய பரிசு என்பதை அவர்கள் அறிந்தார்கள். "அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொ(ன்னான்)ல்லி" (வ. 6). அந்த மனிதன் அன்றே இரட்சிப்பையும் சுகத்தையும் பெற்றான். காணாமல் தொலைந்தவர்களை தன்னிடமாய் இழுக்க, தேவன் தொடர்ந்து நம்மைப் பயன்படுத்துகிறார்.
இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில், கொடுப்பதற்குச் சரியான பரிசுகளைத் தேடுகையில், இயேசுவையும் அவர் அருளும் நித்திய இரட்சிப்பின் ஈவையும் கொடுப்பதே மிகநேர்த்தியான பரிசு என்பதை நினைவில் கொள்வோம். இரட்சகரிடம் மக்களை வழிநடத்த, தேவனால் பயன்படுத்தப்படுவதைத் தொடர்ந்து நாடுவோம்.

தேவனுடைய வாக்குகளால் ஊக்கமடைதல்
மருத்துவமனையில் நீண்ட நாள் அது. இளமையில் ஜொலித்த அந்த பத்தொன்பது வயது இளைஞனைப் பாதித்த நோய்க்கு இன்னும் பதில் இல்லை. வீட்டிற்குத் திரும்பிய குடும்பத்தினர் தளர்ந்திருந்தனர். அவர்களுக்கு ஆச்சரியமாக, அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு பெட்டியின் முன்புறத்தில் ஏசாயா 43:2 அச்சிடப்பட்டு, படியில் வைக்கப்பட்டிருந்தது. உள்ளே, நண்பர்கள் கையால் எழுதப்பட்ட பலதரப்பட்ட ஊக்கமளிக்கும் வேதாகம வசனங்கள் இருந்தன. அடுத்த மணிநேரம் வேதவசனங்களாலும், குடும்ப நண்பர்களின் சிந்தனையாக்கச் செயலாலும் உற்சாகம் உண்டானது.
கடினமான நேரங்கள் அல்லது குடும்ப பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள், எப்போதும் ஒரு ஆத்மார்த்தமான ஊக்கத்தை உபயோகிக்கலாம். அதுதான் வேத வசனங்கள். ஒரு நீண்ட பகுதியோ அல்லது ஒரே வசனமோ; உங்களை, ஒரு நண்பரை அல்லது குடும்ப உறுப்பினரை ஊக்குவிக்கும். தனிநபருக்காகவோ அல்லது அனைவருக்குமென்றோ பெறக்கூடிய உற்சாக துளிகளால் ஏசாயா 43 நிறைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிந்தனைகளை அதிலே கவனியுங்கள்: கர்த்தர் " உன்னைச் சிருஷ்டித்தவர்", "உன்னை உருவாக்கினவர்", "உன்னை மீட்டவர்" மற்றும் "உன்னைப் பேர்சொல்லி அழைத்தவர்" (வ.1). கர்த்தர் "உன்னோடு இருப்பார்" (வ. 2), அவர் "இஸ்ரவேலின் பரிசுத்தர்" மற்றும் அவர் நமது "இரட்சகர்" (வ. 3).
தேவனின் வாக்குகளை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, அவை உங்களை ஊக்குவிக்கட்டும். உங்களுக்குத் தேவையானதை அவர் வழங்குகையில், நீங்கள் வேறொருவரை ஊக்குவிக்கலாம். அந்த வசனப் பெட்டியைச் செய்ய அதிகம் செலவாகவில்லை, ஆனால் அதன் தாக்கம் விலையேறப்பெற்றது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த வசன அட்டைகளில் சில இன்னும் அந்த குடும்பத்தால் போற்றப்படுகின்றன.

இயேசுவில் புதிய வாழ்க்கை
மத்திய ஆசியாவில் ஒன்றாக வளர்ந்த பஹீரும், மெடெட்டும் சிறந்த நண்பர்களாக இருந்தனர். ஆனால் பஹீர் இயேசுவின் விசுவாசியாக மாறியதும், எல்லாம் மாறியது. மெடெட் அவரைப்பற்றி அரசாங்க அதிகாரிகளிடம் புகாரளித்த பிறகு, பஹீர் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தார். "இந்த வாய் இனி ஒருபோதும் இயேசுவின் பெயரை உச்சரிக்காது"- காவலர் உறுமினார். மோசமாக இரத்தக் காயங்கள் பட்டிருந்தாலும், கிறிஸ்துவைப் பற்றிப் பேசுவதை அவர்கள் தடுக்க முற்படலாம், ஆனால் அவர்கள் ஒருபோதும் "அவர் என் உள்ளத்தில் செய்ததை மாற்ற முடியாது" என்றார் பஹீர்.
அந்த வார்த்தைகள் மெடெட்டையும் தொட்டது. சில மாதங்களுக்குப் பிறகு, நோய் மற்றும் இழப்பால் மெடெட் அவதிப்பட்டு; சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பகீரைக் கண்டுபிடிக்கப் பயணம் செய்தார். அவர் பெருமையைக் கைவிட்டு, தனக்கும் இயேசுவை அறிமுகப்படுத்துமாறு தனது நண்பரிடம் கேட்டார்.
பெந்தெகொஸ்தே பண்டிகையின்போது, பேதுருவைச் சுற்றித் திரண்டிருந்தவர்கள் ஊற்றப்பட்ட தேவகிருபையை கண்டும், கிறிஸ்துவைப் பற்றிய பேதுருவின் சாட்சியைக் கேட்டபோதும், அவர்கள் " இருதயத்திலே குத்தப்பட்ட(து)வர்களாகி" (அப்போஸ்தலர் 2:37) போலவே, மெடெட் பரிசுத்த ஆவியானவர் அருளிய பாவ உணர்த்துதலில் செயல்பட்டார். பேதுரு, மக்களை மனந்திரும்பி இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற அழைத்தார். சுமார் மூவாயிரம் பேர் அவ்வாறு செய்தார்கள். அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கை முறைகளை விட்டுச் சென்றது போலவே, மெடெட்டும் மனந்திரும்பி இரட்சகரைப் பின்பற்றினார்.
இயேசுவுக்குள்ளான புதிய வாழ்வு என்ற பரிசு அவரை நம்பும் அனைவருக்கும் உண்டு. நாம் என்ன செய்திருந்தாலும், நாம் அவரை விசுவாசிக்கையில், நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.

சோதிக்கப்பட்டுப் பரீட்சிக்கப்பட்டது
ஸ்டான்லி ஒரு தனியார் வாடகை வாகன ஓட்டுநராக வேலை செய்வதிலுள்ள சுதந்திரம் மற்றும் சௌகரியம் அவருக்கு பிடித்திருந்தது. பல வசதிகள் மத்தியில், அவர் எப்போது வேண்டுமானாலும் வேலையைத் தொடங்கலாம் மற்றும் நிறுத்தலாம், மேலும் அவர் தனது நேரத்தையும் பணிகளையும் குறித்து யாருக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டியதில்லை. இருப்பினும், நேர்மாறாக அது தான் கடினமான பகுதி என்று அவர் கூறினார்.
"இந்த வேலையில், திருமணத்திற்குப் புறம்பான கள்ள உறவை வளர்ப்பது மிகவும் எளிதானது. நான் பல வகையான பயணிகளை அழைத்துச் செல்கிறேன். ஆனால், என் மனைவி உட்பட யாருக்கும் நான் ஒவ்வொரு நாளும் எங்கே இருக்கிறேன் என்று தெரியாது" என்று அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இது எதிர்ப்பதற்கு எளிதான சலனம் அல்ல, மேலும் அவரது சக ஓட்டுநர்கள் பலர் அதற்கு அடிபணிந்துள்ளனர் என்று அவர் விளக்கினார். "தேவன் என்னைக்குறித்து என்ன நினைப்பார், என் மனைவி எப்படி உணருவாள் என்று நிதானிப்பதே என்னைத் தடுக்கிறது" என்றும் அவர் கூறினார்.
நம் ஒவ்வொருவரையும் படைத்த நம் தேவன்; நமது பலவீனங்கள், ஆசைகள் மற்றும் நாம் எவ்வளவு எளிதில் சோதிக்கப்படுகிறோம் என்பதை அறிவார். ஆனால், 1 கொரிந்தியர் 10:11-13 நமக்கு நினைவூட்டுவது போல, நாம் அவரிடம் உதவி கேட்கலாம். “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” என்று பவுல் கூறுகிறார். அந்த "தப்பிக் கொள்ளும்படியான போக்கு" என்பது விளைவுகளைப் பற்றிய ஆரோக்கியமான பயம், உணர்வுள்ள மனசாட்சி, வேத வசனங்களை நினைவில் கொள்வது, தக்க சமயத்தில் கவனச்சிதறல் அல்லது வேறு ஏதாவது இருக்கலாம். நாம் தேவனிடம் பெலனைக் கேட்கும்போது, ஆவியானவர் நம்மைச் சோதிக்கும் விஷயங்களிலிருந்து நம் கண்களைத் திருப்பி, அவர் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்பான வழியை நோக்கிப் பார்க்க உதவுவார்.