நன்மைக்காகத் தேவனுக்கு ஊழியஞ்செய்தல்
விமல் ஒரு புதிய நகரத்திற்குக் குடிபெயர்ந்தார், அவர் ஆராதிப்பதற்கு ஒரு சபையையும் விரைவில் தேடிக்கொண்டார். அவர் சில வாரங்கள் ஆராதனைக்குச் சென்றார். பின்னர் ஒரு ஞாயிறன்று, அவர் போதகரிடம் ஏதாவது ஒரு முறையில் ஊழியம் செய்திட விரும்புவதைப் பற்றிப் பேசினார். "நான் துடைப்பத்தால் சுத்தம் செய்யவே விரும்பினேன்" என்றார். ஆராதனைக்கு நாற்காலிகள் அடுக்குவது, கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது என்று அவர் துவங்கினார். விமலின் திறமை போதிப்பதில் இருப்பதைச் சபை குடும்பத்தினர் பின்னர் கண்டுபிடித்தனர், ஆனால் அவர் எதையும் செய்யத் தயாராக இருந்தார்.
இயேசு தம்முடைய சீஷர்களில் இருவரான யாக்கோபு, யோவான் மற்றும் அவர்களது தாயாருக்கு ஊழியத்தைக் குறித்ததான பாடத்தைக் கற்பித்தார். கிறிஸ்து தமது ராஜ்யத்தோடு வருகையில், அவளுடைய மகன்களுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் முக்கியமான இடம் வேண்டும் என்று அவர்களின் தாய் கேட்டுக் கொண்டாள் (மத்தேயு 20:20-21). மற்ற சீஷர்கள் இதைக் கேள்விப்பட்டு அவர்கள் மீது கோபம் கொண்டார்கள். ஒருவேளை அவர்களும் தங்களுக்காக அந்த பதவிகளை விரும்பினார்களா? பிறர் மீது அதிகாரம் செலுத்துவது வாழ்வதற்கான வழி அல்ல (வ. 25-26), மாறாகப் பணிவிடை செய்வதே மிக முக்கியமானது என்று இயேசு அவர்களிடம் கூறினார். "உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்" (வ. 26).
"துடைப்பத்தால் சுத்தம் செய்தல்" என்ற விமலின் வார்த்தைகள்; கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய, நம் சமூகங்களிலும் சபைகளிலும் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்திடலாம் என்பதற்கான நடைமுறை பாடம். விமல் தனது வாழ்க்கையில் தேவன் மீதான கொண்டுள்ள ஆர்வத்தை இவ்வாறு விவரித்தார்: "நான் தேவனின் மகிமைக்காகவும், உலகின் நன்மைக்காகவும், என் சொந்த மகிழ்ச்சிக்காகவும் ஊழியம் செய்ய விரும்புகிறேன்." தேவன் நம்மை வழிநடத்துகையில், நீங்களும் நானும் எவ்வாறு "துடைப்பத்தைக் கையிலெடுப்போம்"?

நன்றாய் செலவிடப்பட்ட நேரம்
மார்ச் 14, 2019 அன்று, நாசா ராக்கெட்டுகள் தீ பிளம்புகளுடன் மேலெ எழுந்து, விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச்சைச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சுமந்து சென்றன. கோச் 328 நாட்களுக்குப் பூமிக்குத் திரும்பாமல், நீண்ட தொடர்ச்சியான விண்வெளிப் பயணத்திற்கான சாதனையைப் படைத்த பெண்ணானாா். ஒவ்வொரு நாளும், பூமியிலிருந்து சுமார் 254 மைல்களுக்கு மேல் வாழும் விண்வெளி வீரரின் நேரத்தை, ஒரு திரை ஐந்து நிமிட அதிகரிப்புகளில் கண்காணிக்கும். அவளுக்கு எண்ணற்ற தினசரி பணிகள் (உணவு முதல் பரிசோதனைகள் வரை) இருந்தன, மற்றும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு சிவப்புக் கோடு திரையில் கோச் கால அட்டவணைக்கு முன்னால் இருக்கிறாரா அல்லது பின்னால் இருக்கிறாரா என்பதைத் தொடர்ந்து காட்டியது. ஒரு கணமும் வீணாகவில்லை.
நம் வாழ்க்கையில் ஊடுருவி நம்மை ஆளும் சிவப்புக் கோடு போன்ற எதையும் அப்போஸ்தலன் பவுல் நிச்சயமாகப் பரிந்துரைக்கவில்லை என்றாலும், நம்முடைய விலைமதிப்பற்ற, வரையறுக்கப்பட்ட நேரத்தைக் கவனமாகப் பயன்படுத்துமாறு நம்மை ஊக்குவித்தார். "ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்" (எபேசியர் 5:15-16) என்று அவர் எழுதினார். தேவனின் ஞானம் நமது நாட்களை நல்ல நோக்கங்களினாலும் அக்கறைகளாலும் நிரப்பிடவும்; அவருக்குக் கீழ்ப்படிவதைப் பயிலவும்; நமது பிறரை நேசிக்கவும்; உலகில் இயேசுவின் தொடர்ச்சியான மீட்புப் பணியில் பங்கேற்கவும் பயன்படுத்தும்படி அறிவுறுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக, ஞானத்தின் போதனைகளைப் புறக்கணித்து, மாறாக நமது நேரத்தை மதியற்றவா்களாகப் பயன்படுத்துவதும் (வ. 17), சுயநலமான அல்லது அழிவுகரமான நோக்கங்களில் நம் ஆண்டுகளைக் கழிப்பதும் முற்றிலும் சாத்தியமே.
இது நேரத்தைக் குறித்து அதீத வருத்தப்படுவதற்கல்ல, மாறாகக் கீழ்ப்படிதலுடனும் நம்பிக்கையுடனும் தேவனைப் பின்பற்றுவதைக் குறித்தது. நம்முடைய நாட்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்த அவர் நமக்கு உதவுவார்.

மிகபெரிய பிளவு
புகழ்பெற்ற "பீனட்ஸ்" என்ற நகைச்சுவை இதழில், தி கிரேட் பம்ப்கின் மீதான நம்பிக்கைக்காக 'லினஸ்' என்பவரின் நண்பர் அவரைத் திட்டுகிறார். விரக்தியுடன் விலகிச் சென்று, லினஸ் கூறுகிறார், “பிறருடன் ஒருபோதும் விவாதிக்கக் கூடாத மூன்று விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்; மதம், அரசியல் மற்றும் தி கிரேட் பம்ப்கின்!"
தி கிரேட் பும்ப்கின் என்பது லினஸின் கற்பனையில் மட்டுமே இருந்தது, ஆனால் மற்ற இரண்டு காரியங்கள் மிகவும் உண்மையானவை. அவை நாடுகள், குடும்பங்கள் மற்றும் நண்பர்களைப் பிரிக்கிறது. இயேசுவின் காலத்திலும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது. பரிசேயர்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்களாகப் பழைய ஏற்பாட்டுச் சட்டத்தை அப்படியே பின்பற்ற முயன்றனர். ஏரோதியர்கள் மிகவும் அரசியல் ரீதியானவர்கள், இருப்பினும் இரு பிரிவினரும் யூத மக்களை ரோமானிய அடக்குமுறையிலிருந்து விடுவிக்க விரும்பினர். இயேசுவுக்கோ அந்த நோக்கமில்லை, எனவே அவர்கள் அவரை அரசியல் ரீதியாகக் குற்றம் சாட்டக் குறுக்குக் கேள்வியுடன் அணுகினர்: இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? (மாற்கு 12:14-15). இயேசு ஆம் என்று சொன்னால், மக்கள் அவரை வெறுப்பார்கள். அவர் இல்லை என்று சொன்னால், ரோமர்கள் அவரை கிளர்ச்சிக்காகக் கைது செய்யலாம்.
இயேசு ஒரு நாணயம் கேட்டார். "இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது?" என்று கேட்டார் (வ. 16). அது இராயனுடையது என்பது அனைவருக்கும் தெரியும். இயேசுவின் வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன: "இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்" (வ. 17). அவருடைய முக்கியத்துவங்களைச் சீராக வைத்திருந்தார், இயேசு அவர்களின் பொறியைத் மேற்கொண்டார்.
இயேசு தம் பிதாவின் சித்தத்தைச் செய்ய வந்தார். அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றி, நாமும் தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் எல்லாவற்றிற்கும் மேலாகத் தேடலாம், எல்லா கருத்து வேறுபாடுகளிலிருந்தும் விலகி, சத்தியமானவரை நோக்கி கவனத்தைத் திருப்பலாம்.

அழகான ஓர் ஆச்சரியம்
உழப்பட்ட நிலத்தில் ஒரு ரகசியம் இருந்தது, ஏதோ மறைந்திருந்தது. அவர்களின் ஐம்பதாவது திருமண ஆண்டு விழாவை முன்னிட்டு, லீ வில்சன் தனது எண்பது ஏக்கர் நிலத்தைத் தனது மனைவி இதுவரை கண்டிராத மிகப் பெரிய மலா்கள் பூக்கும் தோட்டத்தை பரிசை வழங்குவதற்காக ஒதுக்கினார். அவர் ரகசியமாக எண்ணற்ற சூரியகாந்தி விதைகளை விதைத்திருந்தார், அது இறுதியில் 1.2 மில்லியன் சூரியகாந்தி செடிகளாக வெடித்தது, அவரது மனைவிக்குப் பிடித்தவை. சூரியகாந்திப் பூக்கள் தங்கள் மஞ்சள் கிரீடங்களை விரித்தபோது, ரெனி லீயின் அழகான அன்பின் செயலால் திக்குமுக்காடி அதிர்ச்சியடைந்தார்.
ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யூதாவின் மக்களிடம் பேசுகையில், தேவன் அவர்களுடன் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர்களால் இப்போது காணமுடியாவிட்டாலும், அவர்கள் தமக்குச் செய்த துரோகத்திற்காக அவர்களுக்கு எதிராக அவர் வாக்களித்த நியாயத்தீர்ப்புக்குப் பிறகு (ஏசாயா 3:1-4:1) ஒரு புதியதும் பொன்னானதுமான நாள் விடியும். "அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்." (4:2). ஆம், அவர்கள் பாபிலோனிய கைகளில் பேரழிவையும் சிறையிருப்பையும் அனுபவிப்பார்கள், ஆனால் ஒரு அழகான “கிளை" அப்போது தரையிலிருந்து ஒரு புதிய தளிராக வெளிப்படும். அவருடைய ஜனங்களில் மீதியாயிருப்பவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு ("பரிசுத்தனென்று", வ. 4), சுத்திகரிக்கப்பட்டு (வ. 4), மற்றும் அவரால் அன்பாக வழிநடத்தப்பட்டுப் பராமரிக்கப்படுவார்கள் (வ. 5-6).
நம்முடைய நாட்கள் இருண்டதாகவும் தேவனுடைய வாக்குகளின் நிறைவேற்றம் மறைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றலாம் ஆனால் விசுவாசத்தினால் நாம் அவரைப் பற்றிக்கொள்ளும்போது, ஒரு நாள் அவருடைய "மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும்" (2 பேதுரு 1:4) அனைத்தும் நிறைவேற்றப்படும். ஒரு அழகான புதிய நாள் காத்திருக்கிறது.

ஜெபிக்கும்படி இடைநிறுத்துங்கள்
மார்ச் 24, 2023 அன்று தனது வானிலை முன்னறிவிப்பின் போது மிசிசிப்பியில் உள்ள ஒரு வானிலை ஆய்வாளர், ஆறு எளிய மற்றும் ஆழமான வார்த்தைகளைப் பேசியதற்காகப் பிரபலமானார். மேட் லௌபன், கடுமையான புயலை ஆய்வு செய்துகொண்டிருந்தார், அமோரி நகரத்தை பேரழிவுகரமான சூறாவளி தாக்கப் போகிறது என்பதை உணர்ந்தார். அப்போதுதான் உலகமெங்கும் கேட்கப்பட்ட, "அன்புள்ள இயேசுவே, தயவுசெய்து அவர்களுக்கு உதவும். ஆமென்" என்ற ஜெபத்தை லௌபன் தொலைக்காட்சி நேரலையில் இடைநிறுத்தி ஜெபித்தார். அந்த ஜெபம்தான் தங்களைப் பாதுகாப்பாய் மறைத்துக்கொள்ள உணர்த்தியதாக சில பார்வையாளர்கள் பின்னர் கூறினர். அவரது தன்னிச்சையான மற்றும் இதயப்பூர்வமான ஜெபம், எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற உதவியிருக்கலாம்.
நம்முடைய ஜெபங்களும் மாற்றத்தை ஏற்படுத்தும். அவை நீளமாக இருக்க வேண்டியதில்லை. அவை குறுகியதாகவும் இனிமையாகவும் மற்றும் நாளின் எந்த நேரத்திலும் ஜெபிக்கக் கூடியதாக இருக்கலாம். நாம் வேலையிலிருந்தாலும் சரி, நேரமின்றி இயங்கிக்கொண்டிருந்தாலும் சரி அல்லது விடுமுறையிலிருந்தாலும் சரி, நாம் “இடைவிடாமல் ஜெபிக்கலாம்” (1 தெசலோனிக்கேயர் 5:17).
நாள் முழுவதும் நாம் ஜெபிப்பதைக் கேட்கத் தேவன் விரும்புகிறார். நாம் கவலைக்கும் பயத்திற்கும் அடிமைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நம்முடைய எல்லா கரிசனைகளையும் கவலைகளையும் தேவனிடம் கொண்டு செல்ல முடியும் என்பதை அப்போஸ்தலன் பவுல் நமக்கு நினைவூட்டுகிறார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலிப்பியர் 4:6-7).
நாம் ஒரு வறட்சியான நாளை அனுபவித்தாலும், அல்லது வாழ்க்கையின் உண்மையான அல்லது அடையாளப்பூர்வமான புயல்களால் தாக்கப்பட்டாலும், நாள் முழுவதும் இடைநிறுத்தி, ஜெபிக்க நினைவில் கொள்வோம்.