வகை  |  odb

சேவை மனப்பான்மை

எனது “மாமா” மோகன் காலமானபோது, பலர் பலவகையான அஞ்சலிகளைச் செலுத்தினர். இருப்பினும் அந்த இறுதி மரியாதைகள் அனைத்தும் ஒன்றையே மையமாகக் கொண்டிருந்தன; மோகன் பிறருக்குச் சேவை செய்வதன் மூலம் தேவன் மீதான தனது அன்பைக் காட்டினார். இரண்டாம் உலகப் போரின்போது அவர் நிராயுதபாணியாகப் போர்க்களம் சென்று அங்கே மருத்துவ பணியாற்றினார், இதுவே அவரது சேவை மனப்பான்மைக்கு இணையற்ற உதாரணம். தனது துணிச்சலுக்காக இராணுவத்தின் உயர்ந்த கெளரவங்களைப் பெற்றார், ஆனால் மோகன் போரின் போதும், அதற்குப் பின்னரும், தனது இரக்கமுள்ள சேவைக்காகவே மிகவும் நினைவுகூரப்பட்டார்.

மோகனின் தன்னலமற்ற தன்மை, கலாத்தியருக்கு பவுல் எழுதியதை நினைவூட்டுகிறது:”சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்” (கலாத்தியர் 5:13) என்றெழுதினார். ஆனால் எப்படி? நாம் உடைந்திருக்கையில், பிறரைக் காட்டிலும் நமக்கே முன்னுரிமை கொடுக்க தூண்டப்படுகிறோம். எனவே இந்த இயற்கைக்கு மாறான தன்னலமற்ற தன்மை எங்கிருந்து வருகிறது?

பிலிப்பியர் 2:4-5ல் பவுல், “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக.கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” என்று ஊக்கமளிக்கிறார். கிறிஸ்து நம்மீதுள்ள அதீத அன்பால் சிலுவையில் மரணத்தைக் கூட அனுபவிக்கத் தயாராக இருந்ததை பவுல் விவரிக்கிறார். அவருடைய ஆவியானவர் கிறிஸ்துவின் மனதை நம்மில் உண்டாக்கும்போது மட்டுமே, நாம் பிரித்தெடுக்கப்பட்டு பிறருக்காகத் தியாகம் செய்ய இயலும். அது இயேசு நமக்காக தம்மையே கொடுத்தபோது செய்த அதீத தியாகத்தைப் பிரதிபலிக்கும். நம்மில் உள்ள ஆவியானவரின் கிரியைக்கு நாம் அடிபணிவோமாக. 

 

சங்கடங்களும் ஆழமான விசுவாசமும்

சனிக்கிழமை காலை வேதவகுப்பின் போது, ஒரு அப்பா தனது அன்பான , திசைமாறிய மகள் ஊருக்குத் திரும்பியதால் பதற்றமடைந்தார். அவளுடைய நடத்தை காரணமாக, வீட்டில் அவளுடன் சங்கடத்துடனே இருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை, நீண்ட கால நோய் மற்றும் முதுமையின் தாக்கம் அதிகம் வாட்டத் துவங்கின. பல மருத்துவர்களிடம் பல முறை சென்றது குறைந்த பலனையே அளித்தது. அவள் மனம் தளர்ந்தாள். தேவனின் நடத்துதலின்படி, அன்று படித்த வேதபகுதி மாற்கு - 5 அவா்களுக்கு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அளித்தது.

மாற்கு 5:23 இல் வியாதிப்பட்டிருந்த பிள்ளையின் தகப்பனான யவீரு, “என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள்” என்று தத்தளித்தான். அச்சிறுமியைப் பார்க்கச் செல்லும் வழியில், பேரெழுதப்படாத ஒரு பெண்ணின் நீண்டகால உடல்நலக் குறையை இயேசு குணப்படுத்தினார். “மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” (வ.34) என்றார். யவீருவும் அந்தப் பெண்ணும், இயேசுவின் மீதான விசுவாசத்தால் உந்தப்பட்டு அவரைத் தேடினர், அவர்கள் ஏமாற்றமடையவில்லை. ஆனால் இரண்டு சம்பவங்களிலும், இயேசுவைச் சந்திக்கும் வரை, அவ்விருவரின் காரியங்களும் இன்னும் மோசமாகிக்கொண்டே இருந்தது.

வாழ்க்கையின் சங்கடங்களுக்குப் பாகுபாடு கிடையாது. ஆண்,பெண், வயது, இனம் ,வர்க்கம் என்ற எந்த பேதமும் இன்றி ,நாம் அனைவரும் குழப்புகிற, விடை தேடி அலைகிற சூழல்களை எதிர்கொள்கிறோம். பிரச்சனைகள் நம்மை இயேசுவிடமிருந்து பிரிக்குப்படிக்கு அனுமதிப்பதற்கு மாறாக, நாம் அவரைத் தொடும்போது அதை உணருகிறவரும் (வ. 30) நம்மை குணப்படுத்துகிறவருமாகிய அவரில் நமது விசுவாசத்தை வைக்கும்படி உந்தப்படுவதற்கு முயல்வோம். 

 

இயேசுவை எதிர்பார்த்தல்

என் தோழன் செல்வா, தனது குளிர்சாதனப்பெட்டியைப் பழுதுபார்ப்பவரின் வருகைக்காகக் காத்திருக்கையில், அந்த நிறுவனத்திலிருந்து குறுஞ்செய்தி ஒன்றைப் பெற்றார். அதில், “இயேசு வந்துகொண்டிருக்கிறார், சுமார் 11:35 மணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றிருந்தது. பழுதுபார்ப்பவரின் பெயர் உண்மையில் ஜீசஸ் (இயேசு) என்பதைச் செல்வா விரைவில் கண்டுகொண்டார்.

ஆனால் தேவனுடைய குமாரனாகிய இயேசு எப்போது வருவார் என்று எதிர்பார்க்கலாம்? அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதனாக வந்து நம்முடைய பாவத்தின் தண்டனையை அனுபவித்தபோது, அவர் திரும்பி வருவார் என்று கூறினார். ஆனால் அவர் திரும்பி வருவதற்கான “அந்த நாளையும் அந்த நாழிகையையும்” பிதா மட்டுமே அறிவார் (மத்தேயு 24:36). நமது இரட்சகர் மீண்டும் பூமிக்கு வரும் தருணத்தை நாம் அறிந்திருந்தால், நமது அனுதின முன்னுரிமைகளில் எத்தகைய வித்தியாசம் ஏற்படும்? (யோவான் 14:1-3).

“நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” (மத்தேயு 24:44) என்று தனது வருகைக்காக ஆயத்தப்படும்படி இயேசு எச்சரித்தார். “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்” (வ. 42) என்று நமக்கு நினைப்பூட்டினார்.

கிறிஸ்து திரும்பும் நாளில், நம்மை எச்சரிப்பதற்கு நமது அலைபேசியில் தகவலைப் பெற மாட்டோம். எனவே, நம் மூலம் செயல்படும் ஆவியானவரின் வல்லமையின் மூலம், ஒவ்வொரு நாளும் நித்தியத்தின் கண்ணோட்டத்துடன் வாழ்ந்து, தேவனுக்கு ஊழியம் செய்வோம். அவருடைய அன்பு மற்றும் நம்பிக்கையின் செய்தியைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வோம். 

 

தேவன் தலைசிறந்த படைப்பு

மூளை இயங்கும் முறையைப் புரிந்துகொள்வதில் நரம்பணுவியல் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதைப் புரிந்துகொள்வதற்கான ஆரம்பக் கட்டத்தில்தான் இன்னும் இருப்பதாக விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். மூளையின் கட்டமைப்பு, அதன் செயல்பாட்டின் சில அம்சங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பதிலளிக்கும் பகுதிகள், நமது உணர்வுகளைச் செயல்படுத்துதல், இயக்கங்களை உருவாக்குதல் மற்றும் உணர்ச்சிகளைக் கொண்டிருக்கும் பகுதிகள் ஆகியவற்றை அவர்கள் புரிந்துள்ளார்கள். ஆனால் நடத்தை, கருத்து மற்றும் நினைவாற்றலுக்கான தொடர்புகள் அனைத்தும் , அவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. வியப்பூட்டும் வண்ணமாக , தேவனால் உருவாக்கப்பட்ட தலைசிறந்த படைப்பான மனிதனைப் பற்றி புரிந்து கொள்வதே கடினமாக இருக்கிறது.

மனித உடலின் அதிசயங்களை, உருவக நடையில், தாவீது கொண்டாடினார், “என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்” (சங்கீதம் 139:13) என்பது இயற்கைமுறை மீதிருக்கும் தேவனின் சர்வ ஆளுகைக்குச் சான்றாகும். அவர் , “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்” (வச. 14) என்று எழுதினார். முன்னோர்கள் தாயின் வயிற்றில் ஒரு குழந்தையின் வளர்ச்சியைப் பெரிய மர்மமாகக் கருதினர் (பிரசங்கி 11:5 ஐப் பார்க்கவும்). மனித உடலின் வியக்கத்தக்கப் புதிர்களைப் பற்றிய குறைந்த அறிவே இருந்தாலும், தாவீது தேவனின் அற்புதமான கிரியை மற்றும் பிரசன்னத்தை பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் வியந்தார் (சங்கீதம் 139:17-18).

மனித உடலின் வியப்பான, அற்புதமான புதிர்கள், நமது மகாதேவனின் வல்லமை மற்றும் சர்வ ஆளுகையைப் பிரதிபலிக்கிறது. துதிப்பது , வியப்பது மற்றும் பிரமிப்பது மட்டுமே நம்மால் செய்யக்கூடியது.

 

செப்னாவின் கல்லறை

தமிழ் அரசியல்வாதியான கருணாநிதி, சென்னை மெரினா கடற்கரையில் தனது ஆசான் சி.என்.அண்ணாதுரையின் அருகில் அடக்கம் செய்யப்பட விரும்பினார். அவரது பகுத்தறிவு நம்பிக்கை காரணமாக, எந்த மதச் சடங்குகளும் செய்யப்படுவதை அவர் விரும்பவில்லை.

ஒரு பெரிய நினைவுச்சின்னம் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உண்டு என்றாலும் அவரது நம்பிக்கையானது அவரை மரணம் என்ற யதார்த்தத்திலிருந்து விலக்கி விடவில்லை என்பதுதான் உண்மை. நாம் இறந்தாலும் வாழ்க்கை கடந்து செல்கிறது என்பதே கசப்பான உண்மை.

யூதாவின் வரலாற்றில் ஒரு இக்கட்டான நேரத்தில், “அரமனை விசாரிப்புக்காரனான” செப்னா, மரணத்திற்குப் பிறகு தனக்கான மரபை நிலைநாட்ட, தனக்கென ஒரு கல்லறையை ஏற்படுத்தினான். ஆனால் தேவன், அவனுடைய தீர்க்கதரிசி ஏசாயா மூலம், “உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?” (ஏசாயா 22:16) என்றார். மேலும் தீர்க்கதரிசி, “அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்” (வ.18) என்றார்.

செப்னா தவறாகப் புரிந்துகொண்டான். நாம் எங்கே புதைக்கப்பட்டோம் என்பதல்ல, நாம் யாரைச் சேவிக்கிறோம் என்பதே முக்கியம். இயேசுவைச் சேவிப்பவர்களுக்கு இந்த அளவிட முடியாத ஆறுதல் உண்டு: “கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள்.. பாக்கியவான்கள்” (வெளிப்படுத்தின விசேஷம் 14:13). நமது “மரணத்தை” ஒருபோதும் அலட்சியப்படுத்தாத தேவனை நாம் சேவிக்கிறோம். அவர் நமது வருகையை எதிர்பார்த்து நம்மை தமது வீட்டிற்கு வரவேற்கிறார்!