ஏறக்குறைய ஒரு வருடம் தேடியும் மதுவுக்கு வேலை கிடைக்காதபோது, நிச்சயமற்ற எதிர்காலத்தைப் பற்றிய பயமுறுத்தும் எண்ணங்கள் அவள் மனதை மூடிமறைத்தன. இந்த நேரத்தில் மக்கள் அவளிடம் சொன்ன அன்பற்ற வார்த்தைகளால் அவள் தூக்கத்தையும் வாழ வேண்டும் என்ற ஆர்வத்தையும் கூட இழந்தாள். ஒரு நாள், சூரிய ஒளிக்கதிர் போல, ஒரு வேதாகம வசனம் அவளுடைய நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்தது. அவள் அதை ஒரு அட்டையில் வைத்தாள், அவள் அதைச் சத்தமாகப் படிக்கும்போதெல்லாம், அவளுடைய விசுவாசம் வலுவடைந்தது, அவளுடைய பயம் விலகி அவள் நிம்மதியாக இருந்தாள்.
ஏசாயா 26, அமைதியான மனதைப் பெறுவதற்கான நடைமுறை யோசனைகளை வழங்குகிறது. முதலில், நம்மைக் காக்கும் தேவன் மீது விசுவாசம் வைப்பது (வ.2-3). அவரை நம்புவதுடன், நம் மனதையும் எண்ணங்களையும் தேவன் மீது உறுதியாக நிலைநிறுத்த வேண்டும் (வ.3). நாம் அவரை நம்பி, நம் வாழ்க்கையை அர்ப்பணிக்கும்போது, அவர் நம் மனதைக் காத்து, நமக்கு “பூரண சமாதானத்தை” (வ.3) தருவதாக வாக்களிக்கிறார். இந்த “பூரண சமாதானம்” என்பது மனசாட்சியில் அமைதி, குற்ற உணர்விலிருந்து அமைதி, பதட்டத்திலிருந்து அமைதி அல்லது நாம் கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலைகளில் அமைதி ஆகியவை அடங்கும். நாம் நம்பும் ஒருவர் “நித்திய கன்மலையாயிருக்கிறார்” (வ.4) என்பதே நமது நிச்சயமாகும். நம்முடைய சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும், அவருடைய சுபாவமும் அன்பும் மாறுவதில்லை. நாம் நிச்சயமற்ற தருணங்களினூடே செல்லும்போது, நம் மனம் கவலை மற்றும் பதட்டமான எண்ணங்களுடன் போராடக்கூடும். ஆனால், நம் பாடுகளைத் தேவனிடம் கொண்டு சென்று, நம் மனதை அவர் மீது நிலைநிறுத்தி, அவரது அற்புதமான வாக்குறுதிகளால் நம் எண்ணங்களை நிரப்பினால், மதுவைப் போல, வாழ்க்கையின் கொந்தளிப்புக்கு மத்தியிலும் நாம் அவருடைய சமாதானத்தை அனுபவிக்க முடியும். நாம் தேவனை நம்பி, நமது மன உளைச்சலை அவரிடம் ஒப்படைத்தால், அவர் தனது “பூரண சமாதானத்தால்” நம் மனதைச் சாந்தப்படுத்துகிறார், மேலும் நம் பயம் நீங்கும்படி செய்கிறார். நிச்சயமற்றதைப் பற்றிக் கவலைப்படுவதை விட, கைவிடாத இயேசுவை நம்புவோம்.
நீங்கள் எத்தகைய கவலையான எண்ணங்களுடன் போராடுகிறீர்கள்? குழப்பங்களுக்கு மத்தியில் உங்களுக்குச் சமாதானத்தைத் தரும் வேதத்தின் ஒரு பகுதியை உங்களால் நினைவுபடுத்த முடியுமா?
அன்பு இயேசுவே, என் சமாதான பிரபுவே, என் எண்ணங்கள் என்னுள் போர் தொடுக்கும் போது, உமது வாக்குத்தத்தங்களை நினைவுகூரவும்,
உம்மை நம்பவும் எனக்கு உதவும்.
