தேவன் புரிந்துக்கொள்கிறார்
சமீபத்திய நடவடிக்கைக்குப்பிறகு, மாதுரியின் ஏழு வயது மகன் ரோஹித், தனது புதிய பள்ளியில் கூடுதல் வகுப்புகளில் கலந்துக்கொள்ளத் தயாரானப்போது வம்பு செய்தார்.
மாற்றம் கடினமானது என்று அவள் புரிந்துக்கொண்டதை சொல்லி அவனை மாதுரி ஊக்குவித்தாள். ஆனால் ஒரு காலையில் ரோஹித்தின் அவனை மீறிய நடத்தை எரிச்சலூட்டுவதாக இருந்தது. மாதுரி இரக்கத்துடன் “எது உன்னை தொந்தரவு செய்கிறது மகனே? என்று கேட்டாள்.
ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு “எனக்கு தெரியவில்லை அம்மா. எனக்கு பல உணர்வுகள் உள்ளன” என்று ரோஹித் கூறினான்.
அவனை ஆறுதல் படுத்தும்போது மாதுரியின் இருதயம் கனத்தது. அவனுக்கு உதவ வேண்டி இந்த காரியம் அவருக்கும் கடினமானதாக இருக்கிறது என்பதை பகிர்ந்துக்கொண்டார். அவர்களுடைய விரக்தியை புரிந்துக்கொள்ளவோ, குரல் கொடுக்கவோ முடியாத நேரத்திலும், எல்லாவற்றிலும் தேவன் அருகிலிருப்பார் என்று உறுதியளித்தார். “பள்ளி ஆரம்பிக்கும் முன் உன் தோழர்களைப் சந்திப்போம்” என்று கூறினாள். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு அதிகமான உணர்வுகள் இருந்தாலும் தேவன் அதைப் புரிந்துக்கொள்ளுகிறார் என்ற நன்றியறிதலோடு அவர்கள் திட்டமிட்டார்கள்.
சங்கீதம் 147ஐ எழுதினவர் தன்னுடைய விசுவாச பயணம் முழுவதும் பெரும் உணர்ச்சிகளை அனுபவித்தார். எல்லாம் அறிந்தவர், எல்லோரையும் பராமரிப்பவர், உடல் மற்றும் உணர்ச்சிகளால் ஏற்பட்ட காயத்ததை ஆற்றுகிறவர் - இவரைப் துதிப்பதால் வரும் நன்மைகளை அறிந்துக்கொண்டார். (வச. 1-6). அவர்களுக்கு தேவன் வழங்கும் வழிகளுக்காகவும், தமக்கு பயந்து தமது கிருபைக்கு காத்திருக்கிறவர்கள் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார் (வ 11) என்றும் அவரைத் துதித்தார்
எப்போதும் மாறும் நம்முடைய உணர்ச்சிகளை புரிந்துக்கொள்ள நாம் போராடும்போது, நாம் தனிமையாக அல்லது ஊக்கமில்லாமல் இருப்பதாக உணர வேண்டியதில்லை. என்றும் மாறாத தேவனின் நிபந்தனையற்ற அன்பிலும், வரம்பற்ற புரிதலிலும் நாம் சார்ந்துக்கொள்ளலாம்.
தேவனோடு பணிசெய்தல்
1962 ஆம் ஆண்டு, பில் ஆஷ் என்பவர் மெக்ஸிக்கோவிற்குச் சென்றிருந்த போது, ஓர் அநாதை இல்லத்திற்கு காற்றாலையில் இயங்கக் கூடிய கைப் பம்ப்களை பொருத்திக் கொடுத்தார். 15 ஆண்டுகள் கழித்து, தேவையுள்ள கிராமங்களுக்கு தூய்மையான நீர் வழங்குவதன் மூலம் தேவப் பணி செய்யும்படி தூண்டப்பட்டார். பில், லாபநோக்கமில்லாத ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். “கிராமப் புற ஏழைமக்களுக்குப் பாதுகாப்பான குடி நீரை வழங்குவதற்கு ஆர்வமுடைய மக்களை கண்டுபிடிப்பதில் என்னுடைய நேரம் அனைத்தையும் செலவிடும் படி தேவன் என் கண்களைத் திறந்தார்” என்று அவர் கூறினார். பிற்காலத்தில், 100க்கும் மேலான நாடுகளில் இருந்து போதகர்களும், ஊழியர்களும் கேட்டுக் கொண்டதிலிருந்து உலகெங்கும் பாதுகாப்பான குடி நீர் தேவையிருப்பதை அறிந்து கொண்டார், எனவே பில் மற்றவர்களையும் இந்த ஊழியத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைத்தார்.
பல்வேறு வகைகளில், நாம் தேவனோடும், மற்றவர்களோடும் இணைந்து குழுவாகப்பணி செய்ய தேவன் நம்மை அழைக்கின்றார். கொரிந்து சபை மக்கள், தாங்கள் தெரிந்து கொண்ட போதகரைக் குறித்து தர்க்கம் செய்த போது, அப்போஸ்தலனாகிய பவுல் தன்னை தேவனுடைய வேலையாள் எனவும், அப்பொல்லோவின் குழுவில் சேர்ந்து பணிபுரிபவன் எனவும், ஆவியின் வளர்ச்சிக்கு தேவனையே முழுமையாகச் சார்ந்திருப்பவன் எனவும் (1 கொரி.3:1-7) கூறுகின்றார். எல்லா வேலைகளுக்கும் தேவன் கூலியைக் கொடுப்பார் (வ.8) எனவும் நினைவுபடுத்துகின்றார். பவுல், பிறரோடு சேர்ந்து, தேவனுக்குப் பணி செய்வதை தனக்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதுகின்றார். தேவன் தம் அன்பினால் நம்மை மாற்றியிருக்க, நாமும் ஒருவரையொருவர் தாங்குவோம் என பவுல் நம்மை ஊக்கப் படுத்துகின்றார் (வ.9).
நம்முடைய வல்லமை பொருந்திய பிதாவுக்கு, தன்னுடைய பெரிய வேலையை நிறைவேற்றி முடிக்க, நம்முடைய உதவி தேவை இல்லையெனினும், அவர் நம்மை பெலப் படுத்தி, அவரோடு கூட பங்காளிகளாக இருக்க அழைக்கின்றார்.
செயல்படும் தேவ இரக்கம்
ஒரு பெண் என்னைத் தவறாக நடத்தியதோடு, என்னைக் குற்றப்படுத்தி, என்னைக் குறித்து தவறாகப் பிறரிடமும் கூறிய போது, என்னுடைய கோபம் அதிகரித்தது. நான், அவள் செய்த காரியத்தை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பினேன். அவள் நடந்து கொண்ட விதத்தால், நான் கஷ்டப்படுதைப் போன்று, அவளும் கஷ்டம் அநுபவிக்கட்டும் என்று எனக்குத் தலைவலி தோன்றும் வரை, என்னுடைய கோபத்தால் கொப்பளித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய தலைவலி நீங்குமாறு ஜெபித்த போது, பரிசுத்த ஆவியானவர் என்னுடைய குற்றத்தை உணர்த்தினார். நான் பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு, எப்படி தேவனிடம் விடுதலை தரும்படி கெஞ்ச முடியும்? அவர் என்னைப் பாதுகாத்துக் கொள்வார் என்று நான் நம்பும் போது, இந்த சூழ்நிலையையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று நான் ஏன் நம்பக் கூடாது? காயப்படுத்துகின்ற மக்கள், பிறரை அடிக்கடி மற்றவரை காயப்படுத்திக் கொண்டேதான் இருப்பர் என்பதை அறிந்திருந்த நான் அந்த பெண்ணை மன்னிப்பதற்கு தேவனிடம் உதவி கேட்டதோடு, மனம் பொருந்தவும் முயற்சித்தேன்.
அநியாயமாக நாம் நடத்தப் படும் போது, தேவன் மீது நம்பிக்கையோடு இருப்பதின் கஷ்டத்தை சங்கீதக்காரனான தாவீது அறிந்திருந்தார். ஓர் அன்பான பணிவிடைக் காரனாக இருக்க தாவீது எவ்வளவோ முயற்சித்த போதும், பொறாமை கொண்ட சவுல் அரசன், தாவீதை கொல்ல விரும்பினான் (1 சாமு.24:1-2). தேவன் தன்னுடைய திட்டத்தை செயல் படுத்தி, அவனை அரசனாக்கும்படி தயாரித்துக் கொண்டிருந்த போது, அவன் கஷ்டங்களைச் சகித்தான். ஆனாலும் அவன், பழிவாங்குவதையல்ல, தேவனை மகிமைப் படுத்துவதையே தெரிந்து கொண்டான் (வ.3-7). அவன் சவுலோடு மனம் பொருந்தும்படி, காரியங்களைச் செய்தான், அதன் பலனை தேவனுடைய கரத்தில் கொடுத்து விட்டான் ( வ.8-22).
தவறு செய்கின்றவர்கள் தண்டிக்கப்படாமல் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண்கின்றோம். அநியாயத்தின் நிமித்தம் நாம் கஷ்டங்களைச் சகிக்கின்றோம். தேவனுடைய இரக்கம் நம்முடைய இருதயங்களிலும், மற்றவர்களின் இருதயங்களிலும் கிரியை செய்யும் போது, அவர் நம்மை மன்னித்தது போல நாமும் பிறரை மன்னிக்க முடியும், அவர் நமக்கு ஆயத்தம் பண்ணிவைத்துள்ள ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.
இருளில் வெளிச்சம்
நாங்கள் குடியேறியுள்ள புதிய பட்டணத்தை, அநேக இடியோடு கூடிய புயல்கள் தாக்கியதால் காற்றின் ஈரப்பதம் உயர்ந்தது, காலைப் பொழுதில் வானம் கருமேகங்களால் சூழ்ந்திருந்தது. மாலையில் நான் என்னுடைய நாய் ஜிம்மியை நடக்க அழைத்துச் சென்றேன். என் நாட்டின் வேறொரு பகுதிக்கு, என்னுடைய குடும்பம் நகர்ந்துள்ளதால், சந்திக்க வேண்டிய அநேக சவால்கள் என்னுடைய மனதை அழுத்திக் கொண்டிருந்தன. எங்களுடைய உயர்ந்த நம்பிக்கைக்கும், எதிர்பார்ப்புக்கும் வெகுதொலைவில் அநேக காரியங்கள் போய் கொண்டிருந்ததால், ஏமாற்றம் ஒரு புறமிருக்க, நான் என்னுடைய நாயை மெதுவாக நடத்திச் சென்று, அங்குள்ள புற்களை முகர்ந்து கொள்ளச் செய்தேன். எங்கள் வீட்டின் அருகில் ஓடிய ஓடையின் ஒலியைக் கேட்டேன். சிறிய வெளிச்சம் விட்டு விட்டு வந்தது, ஓடையின் அருகிலுள்ள கொடிகளில் மலர்ந்துள்ள கொத்துக் கொத்தான காட்டு மலர்களைச் சுற்றி வெளிச்சம் விட்டு விட்டு வந்து கொண்டிருந்தது. அவை மின்மினிப் பூச்சிகள்!
இருளைக் கிழித்துக் கொண்டு வந்த அந்த மின்னும் ஒளியைப் பார்த்த என்னை தேவன் சமாதானத்தால் நிரப்பினார். நான் சங்கீதக்காரனின் பாடலை நினைத்துப் பார்த்தேன். “தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்” (சங். 18:28). தேவன் அவருடைய இருளை வெளிச்சமாக்குவார் என உறுதியாகக் கூறிய தாவீது, தேவன் அவருடைய தேவைகளையெல்லாம் பார்த்துக் கொள்வார், அவரே தன்னைப் பாதுகாக்கிறவர் (வ.29-30) என்று கூறுகின்றார். தேவன் தரும் பெலத்தால், அவருடைய பாதையில் வரும் எத்தகைய எதிரியையும் மேற்கொள்ளுவேன் (வ.32-35) என்கின்றார். ஜீவனுள்ள தேவன் எல்லா சூழ் நிலைகளிலும் அவரோடிருக்கிறார் என்ற நம்பிக்கை கொண்ட தாவீது, எல்லா ஜாதிகளுக்குள்ளும் கர்த்தரைத் துதித்து, பாடல்களால் அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபப் படுத்துகின்றார் (வ.36-49).
வாழ்க்கையில் எதிர்பாராத புயல்களின் வழியே நாம் கடந்து கொண்டிருந்தாலும், மழை நின்ற பின்னுள்ள அமைதியை அநுபவித்துக் கொண்டிருந்தாலும் சரி, தேவனுடைய பிரசன்னத்தின் சமாதானம், இருளை அகற்றி, நம் பாதைக்கு வெளிச்சம் தருகின்றது. நம்முடைய ஜீவனுள்ள தேவனே நமக்கு பெலனும், அடைக்கலமும், நம்மைக் காப்பவரும், விடுவிக்கிறவருமாய் இருக்கிறார்.
ஆழ்ந்த விசுவாசம்
அநேக மரங்கள் 500 ஆண்டுகளையும் அதற்கும் மேலாகவும் தாண்டி வாழ்கின்றன. ஆரம்பத்தில் அவற்றின் வளைந்த கிளைகள் உயரமாகவும் படர்ந்தும் காணப்படும். அவற்றின் இலைகளுக்கு ஊடாக குளிர்ந்த காற்று வீசும், சூரிய கதிர் அந்த இடைவெளியில் ஊடுருவி, மரத்தின் அடியில், அசைந்தாடும் நிழலைத் தோற்றுவிக்கும். தரைக்கு அடியில்தான் மிகவும் விரிவடைந்த வேர்த் தொகுதி காணப்படுகின்றது. இது, மரத்திலிருந்து செங்குத்தாக கீழ் நோக்கி வளர்ந்து, தான் சார்ந்து வாழக் கூடிய ஊட்டச்சத்தைத் தேடுகின்றது. அந்த ஆணிவேரிலிருந்து ஏராளமான கிளைவேர்கள் தோன்றி, கிடைமட்டமாக பரவுகின்றது. இவை மரத்திற்குத் தேவையான நீர் சத்தையும் ஊட்டத்தையும் வாழ் நாள் முழுவதும் கொடுக்கின்றன. இந்த வலைப் பின்னல் போன்ற வேர்த் தோகுதி, மரத்தைக் காட்டிலும் அதிகமாக வளர்ந்து, மரத்தைத் தாங்கிப் பிடிப்பதோடு, அதன் தண்டு தொகுதியை உறுதியாக நிறுத்தும் நங்கூரம் போல செயல் படுகின்றது.
இந்த பிரமாண்டமான மரத்தைப் போல, நமக்கு வாழ்வு தரும் வளர்ச்சி மேற்புறதிற்கு உள்ளே நடைபெறுகின்றது. இயேசு விதைப்பவன் உவமையை தன்னுடைய சீஷர்களுக்கு விளக்கிய போது, நாம் ஒவ்வொருவரும் பிதாவோடு, தனிப்பட்ட முறையில் உறுதியாக நிலைத்திருக்கும் உறவைப் பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றார். நாம் வேதாகமத்தின் மூலம், தேவனைக் குறித்த அறிவில் வளரும் போது, நம்முடைய விசுவாச வேர்களை பரிசுத்த ஆவியானவர் தாங்கிப் பிடிப்பார். மாறுகின்ற சூழலைக் கொண்டுள்ள வாழ்வில் சோதனைகளோ, துன்பங்களோ, கவலையோ எது வந்த போதும், அவரைப் பின்பற்றுகின்றவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு தேவன் உதவி செய்கின்றவராய் இருக்கின்றார் (மத்.13:18-23).
நம்முடைய அன்புத் தந்தை அவருடைய வார்த்தைகளால் நம்முடைய இருதயத்தை பெலப்படுத்துகின்றார். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய குணத்தை மாற்றுகின்றார். நம்முடைய ஆழ்ந்த வேர் கொண்ட விசுவாசம், நம்மில் கனிகளை உருவாக்கும், இதனை நம்மைச் சுற்றிலும் இருப்பவகள் காண்பர்.
நம்முடைய மகிழ்ச்சிக்கான காரணம்
புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததும், பதினான்கு வயது நிரம்பிய சந்தீப், ஒவ்வொரு மாலையும் பஸ்ஸிலிருந்து குதித்து, தன்னுடைய வீட்டினை அடையும் வரை நடனமாடிக் கொண்டேச் செல்வான். அவனுடைய தாயார் அதனை பதிவு செய்து, அதனை, பள்ளிக்கு பின் நடன நேரம், என்று நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார். அவன் நடனமாடுகின்றான் ஏனெனில், அவன் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவிக்கின்றான், தன்னுடைய ஒவ்வொரு அசைவினாலும் “மற்றவர்களையும் மகிழ்ச்சியாக்குகின்றான்”. ஒரு நாள், குப்பை சேகரிக்கும் பணியிலிருந்த இரண்டு பேர், தங்களுடைய பரபரப்பான வேலையின் மத்தியிலும், இந்த இளைஞனோடு சுழன்று, அசைந்து, நடனமாடி மற்றவர்களையும் நடனமாட அழைத்தனர். இம்மூவரும் சேர்ந்து, ஒருவரையொருவர் தொற்றிக் கொள்ளும் உண்மையான மகிழ்ச்சியினைத் தெரிவித்தனர்.
நிலைத்திருக்கும், முழுமையான மகிழ்ச்சியைத் தரக்கூடியவர் தேவன் ஒருவரே என்பதை சங்கீதம் 149 விளக்குகின்றது. தேவனுடைய பிள்ளைகள் இணைந்து “கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்” (வ.1) என்று சங்கீதக்காரன் உற்சாகப் படுத்துகின்றார்.
அவர் இஸ்ரவேல் ஜனங்களை “தன்னை உண்டாக்கினவரில் மகிழவும்”, “தங்கள் ராஜாவில் களிகூரவும் கடவர்கள்” (வ.2) என்று அழைக்கின்றார். அவர் நம்மை நடனத்தோடும், இசையோடும் தேவனை ஆராதிக்கும்படி அழைக்கின்றார் (வ.1-3). ஏனெனில், “கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்” (வ.4).
நாம் ஆராதிக்கும் நம்முடைய தந்தை, நம்மைப் படைத்தார், அவரே இந்த உலகத்தையும் காத்து வருபவர். அவர் நம்மில் மகிழ்ச்சியடைகின்றார், ஏனெனில் நாம் அவருடைய நேசப் பிள்ளைகள். அவரே நம்மை வடிவமைத்தவர், நம்மை அறிந்திருக்கின்றார், அவரோடு உறவாடும்படி நம்மை அழைக்கின்றார். இது எத்தனை பெரிய கனம்! என்றும் உயிரோடிருக்கின்ற, நமது அன்பின் தேவனே நம்முடைய மாறாத மகிழ்ச்சிக்குக் காரணர். நம்மைப் படைத்தவர், ஒவ்வொரு நாளையும் நமக்கு ஈவாகத் தந்து, நம்மோடு எப்பொழுதும் இருக்கின்றதற்காக நாம் மகிழ்ந்து களிகூருவோம்.
நிலவைப் படைத்தவர்
விண்வெளி வீரர்கள், தங்களின் விண்வெளிக்கலத்தின் ஈஹிள் என்ற பகுதியை நிலவின் அமைதி கடல் பகுதியில் இறக்கிய போது, நீல் ஆம்ஸ்ராங், “மனிதன் எடுத்து வைக்கும் ஒரு சிறிய எட்டு, மனிதகுலத்திற்கு ஓர் இராட்சத எட்டு ஆகும்” என்றார். அவர் தான், நிலவில் நடந்த முதல் மனிதன் ஆவார். இவரைத் தொடர்ந்து மற்ற விண்வெளி வீரர்கள் நிலவில் காலடிவைத்தனர், அவர்களில் அப்பொல்லோவின் கமாண்டர் ஜெனி செர்னன் என்பவரும் ஒருவர். “நான் அங்கேயிரு ந்தேன், பூமியே நீ அங்கே இயங்கிக் கொண்டிருக்கின்றாய், நான் வியப்பில் மூழ்கின்றேன், ……இது ஏதோ ஒரு விபத்தில் ஏற்பட்டதாக இருக்க முடியாது, அது எத்தனை அழகாக இருக்கின்றது!” என்று செர்னன் கூறினார். மேலும், “ உன்னையும், என்னையும் காட்டிலும் பெரியவர் ஒருவர் இருக்க வேண்டும்” என்றார். ஆழமான வழிமண்டலத்திலிருந்து அவர்கள் கண்ட விசித்திரமான காட்சி, அவர்களைச் சிந்திக்க வைத்தது, பரந்து விரிந்த அண்டத்தின் அளவைப் பார்க்கும் போது, தாங்கள் எத்தனை சிறியவர்கள் என்பதை உணர்ந்தனர்.
இந்த பூமியையும் அதற்கும் மேலானவற்றையும் படைத்து, அவற்றைக் காத்து வருகின்ற தேவனுடைய மிகப் பெரிய தன்மையை வியந்து காண்கின்றார் எரேமியா தீர்க்க தரிசி. இவையெல்லாவற்றையும் படைத்தவர், தன்னுடைய ஜனங்களுக்கு அன்பையும், மன்னிப்பையும், நம்பிக்கையையும் வழங்கி, தன்னுடைய நெருக்கத்தை நமக்கு காண்பிக்கின்றார் (எரே.31:33-34). “சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும், சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவர்” (வ.35), நம்மைப் படைத்தவர், சர்வ வல்ல தேவன், தம்முடைய படைப்புகள் எல்லாவற்றையும் ஆளுகை செய்கின்றார், அவர் தன்னுடைய ஜனங்களை மீட்டுக் கொள்ள கிரியை செய்கின்றார் (வச. 36-37).
மேலே இருக்கின்ற வானங்களை அளக்கவும், கீழே இருக்கின்ற பூமியின் அஸ்திபாரங்களை ஆராயவும் நம்மால் ஒரு போதும் கூடாது. ஆனால் நாம் இந்த உலகத்தின் விரிந்த தன்மையை பார்த்து வியந்து, இவை எல்லாவற்றையும், நிலவையும் படைத்த தேவனை வியப்போடு பார்ப்போம்.
என்றுமுள்ள அன்பு
பல ஆண்டுகளுக்கு முன்னர், என்னுடைய நான்கு வயது மகன், ஓர் உலோகத்தகட்டில் பதிக்கப்பட்டிருந்த மரத்தாலான இருதயம் அமைப்பு, ஒன்றினை எனக்குப் பரிசாகக் கொடுத்தான். அதின் மத்தியில் “என்றும்” என்ற வார்த்தை எழுதப் பட்டிருந்தது. “நான் என்றும் உங்களை நேசிக்கிறேன், அம்மா” என்றான். நான் அவனை நன்றியோடு அணைத்துக் கொண்டேன். “நான் இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்” என்றேன். அந்த விலையேறப் பெற்ற வெகுமதி, என்னுடைய மகன் என் மீது வைத்துள்ள முடிவில்லாத அன்பைக் காட்டியது. கடினமான நாட்களில் தேவன் அந்த இனிமையான பரிசின் மூலம் என்னைத் தேற்றி, ஊக்கப் படுத்தி, அவருடைய ஆழ்ந்த அன்பு எப்போதும் எனக்குண்டு என்பதை உறுதிப்படுத்துகின்றார்.
என்னுடைய மகனின் பரிசின் மூலம், வேதாகமம் முழுமையிலும் கூறப்பட்டுள்ள தேவனுடைய ஈவாகிய அவருடைய மாறாத அன்பு எனக்கு என்றுமுள்ளது என்றும், பரிசுத்த ஆவியானவர் அதை உறுதிபடுத்துகின்றார் என்பதை அவர் நினைவு படுத்துகின்றார், தேவனுடைய மாறாத நன்மைகள் என்றும் நமக்குள்ளது என்பதை நன்றியோடு போற்றிப் பாடுவோம். சங்கீதக்காரனைப் போன்று, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (சங். 136:1) என்று பாடுவோம். எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய நாமத்தை உயர்த்திப் பாடுவோம் (வச. 2-3). அவருடைய அளவற்ற அதிசயங்களையும், முடிவில்லாத ஞானத்தையும் தியானிப்போம் (வ.4-5). நம்மை என்றும் நேசிப்பவரை, வானங்களையும் பூமியையும் ஞானமாய் படைத்தவரை, எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவரைத் துதிப்போம் (வச. 6-9).
சங்கீதக்காரன் பாடுகின்றது போல, என்றுமுள்ள அவருடைய கிருபையும், அன்பும் இப்பொழுது நம் வாழ்விலும் அவருடைய பிள்ளைகள் மீதும் தொடர்ந்து பொழிகின்றது.. நாம் எத்தகைய பிரச்சனைகளைச் சந்தித்தாலும் நம்மைப் படைத்தவர் நம்மோடிருந்து, நம்மை பெலப் படுத்தி, நம்மை நிபந்தனையற்று முற்றிலும் நேசிக்கிறேன் என்கின்றார், தேவனே, வாழ்வை மாற்றும் உம்முடைய மாறாத அன்பினைக் குறித்து எங்களுக்கு அநேகம் முறை நினைவு படுத்துவதற்காக நன்றி கூறுகின்றேன்.
நாம் தேவனைத் துதிப்போம்!
எஸ்தரின் அலைபேசியின் அலாரம் ஒவ்வொரு நாள் மாலையிலும் 3:16 க்கு அடிக்கின்றது, அது அவளுடைய துதி இடைவெளி. தேவன் செய்த நன்மைகளுக்காக அவள் நன்றி கூறுகின்றாள். அவள் நாள் முழுவதும் தேவனோடு பேசிக் கொண்டே இருந்தாலும், இந்த இடைவெளியை அவள் விரும்புகின்றாள், ஏனெனில் தேவனோடு அவள் கொண்டுள்ள உறவைக் கொண்டாட இது உதவியாய் இருக்கின்றது.
அவளுடைய இந்த மகிழ்ச்சியான பக்தியினால் ஈர்க்கப்பட்ட நானும், ஒவ்வொரு நாளும், ஒரு திட்டமான நேரத்தை ஒதுக்கி, கிறிஸ்து நமக்காக சிலுவையில் நிறைவேற்றிய தியாகத்தை எண்ணி நன்றிகூறவும், இன்னமும் இரட்சிக்கப் படாதவர்களுக்காகவும் ஜெபிக்கும்படி திட்டமிட்டேன். கிறிஸ்துவின் விசுவாசிகள் யாவரும் அனுதினமும் அவரைத் துதிப்பதை விட்டு விட்டு, மற்றவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்து விட்டால் என்னவாகும் என்று அதிசயித்தேன்.
அவரை ஆராதிக்கும் ஓசையின் அழகிய அலைகள் நகர்ந்து, பூமியின் கடைமுனை மட்டும் செல்கின்றது என்பதாக சங்கீதம் 67 சொல்கின்றது. சங்கீதக்காரன் தேவனுடைய இரக்கத்திற்காக கெஞ்சுகின்றார், எல்லா ஜாதிகளுக்குள்ளும் அவருடைய மகத்துவமான நாமத்தை விளங்கப்பண்ணும்படி தெரிவிக்கின்றார் (வச. 1-2). அவர், “தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக” (வச. 3) என்று பாடுகின்றார். சர்வ வல்லவரின் அரசாட்சியையும், அவருடைய உண்மையான வழி நடத்துதலையும் அவர் கொண்டாடுகின்றார் (வச. 4). தேவனுடைய மிகப் பெரிய அன்பிற்கும், அளவற்ற ஆசிர்வாதங்களுக்கும் சாட்சியாக இருந்து, தேவனுடைய பிள்ளைகளை அவரைத் துதிக்கும்படி வழி நடத்துகின்றார் (வச. 5-6).
அவருக்கு அன்பான பிள்ளைகளின் மீது, தேவன் தொடர்ந்து உண்மையுள்ளவராய் இருப்பது, நம்மையும் அவரை போற்றச் செய்கின்றது. நாம் அப்படிச் செய்யும் போது, மற்றவர்களும் அவர் மீது நம்பிக்கை வைக்கவும், அவருக்கு மரியாதை செலுத்தவும், அவரைப் பின்பற்றவும் அவரே தேவனென்று ஆராதிக்கவும் நம்மோடு சேர்ந்து கொள்வர்.