சுத்திகரிக்கும் முறை
கை கழுவும் தொட்டியில் தங்கள் கைகளை கழுவும்போது, இரண்டு சிறுவர்களும் பிறந்தநாள் வாழ்த்து பாடலை இரண்டுமுறை பாடினார்கள். “கைகளில் உள்ள கிருமிகளை கழுவி சுத்தம்செய்வதற்கு அவ்வளவு நேரம் தேவைப்படும்” என்று அவர்களுடைய அம்மா சொல்லியிருக்கிறார்கள். கோவிட்-19 தொற்று பரவத்துவங்கும் முன்னரே, தங்கள் கைகளை நன்றாய் கழுவி சுத்தம்செய்ய இவர்கள் பழகிக்கொண்டனர்.
இந்த தொற்று பரவிய நாட்களில், நம்மைச் சார்ந்த அனைத்தையும் சுத்தமாக வைக்கும் கடினமான பழக்கத்தைக் கற்றுக்கொண்டோம். ஆனால் நம்முடைய பாவத்தைக் கழுவி சுத்திகரிப்பது, நம்மை தேவனிடமாய் திருப்பும்.
யாக்கோபு, ரோம சாம்ராஜ்யம் எங்கிலும் சிதறிக்கிடந்த கிறிஸ்தவர்களை தேவனிடமாய் திருப்பும்படிக்கு அறிவுறுத்துகிறார். சண்டை சச்சரவுகள், சுயமேம்பாட்டு யுத்தங்கள், ஆஸ்திகள், உலக இன்பங்கள், பணம், புகழ், ஆகியவைகள் அவர்களை தேவனுக்கு விரோதிகளாய் மாற்றிவிட்டது. ஆகையினால் யாக்கோபு, “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்... பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்” என்று அவர்களை எச்சரிக்கிறார் (யாக்கோபு 4:7-8). ஆனால் அதை செய்வது எப்படி?
“தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்” (வச. 8). இந்த வார்த்தைகள் தேவனிடமாய் திரும்புவதின் அவசியத்தை உணர்த்துவதின் மூலமாய், பாவத்தை வேறோடு அகற்றும் கிருமிநாசினியாய் செயல்படுகிறது. யாக்கோபு தொடர்ந்து, சுத்திகரிக்கும் முறையை அறிவிக்கிறார்: “நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (வச. 9-10).
பாவத்தைக் கழுவுதல் என்பது நம்மை முற்றிலும் தாழ்த்துவதாகும். ஆனால். அல்லேலூயா! நம்முடைய “சுத்திகரித்தலை” ஆராதனையாய் மாற்றுவதற்கு தேவன் உண்மையுள்ளவர்.
அவர் உனக்காய் யுத்தம் செய்வார்
சரித்திரத்தில் புகழ்பெற்ற லைட் பிரிகேட் யுத்தத்தின் போது, “டிரம்மர் பாய்” என்று பெயர்கொண்ட காயப்பட்ட அந்த குதிரை 112 மலை ஏற்றங்களைக் கடந்து பிரிட்டிஷ் இராணுவ வீரனை யுத்தத்திற்கு சுமந்து வந்த பெருமைக்குரியது. அது இராணுவ படைத்தளபதி, லெப்டினன்ட் கலோனல் டி சலீஸின் குதிரை. திறமையுள்ள வீரர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் பதக்கம் அந்த குதிரைக்கும் கொடுக்கப்பட்டது. யுத்தத்தில் அவர்களின் படை ஜெயிக்கவில்லை என்றபோதிலும், குதிரைக்கு இந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் இராணுவ வரலாற்றில் ஒரு குதிரைக்கு கிடைத்த இந்த அந்தஸ்து சர்ச்சையை கிளப்பினாலும், இன்றும் கொண்டாடப்படுகிறது.
இந்த சர்ச்சை பழம்பெரும் நீதிமொழியை நமக்கு நினைவுபடுத்துகிறது. “குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்” (நீதிமொழிகள் 21:31). வேதாகமம் இந்தக் கொள்கையை மிகத் தெளிவாய் உறுதிபடுத்துகிறது. “உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர்” (உபாகமம் 20:4). மரணத்தின் பிடியிலிருந்தும், “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று பவுல் குறிப்பிடுகிறார்.
இந்த உண்மையை அறிந்தவர்களாய், வாழ்க்கையின் கடினமான சவால்களை சந்திக்க நம்முடைய ஆயத்தங்களில் தொடர்ந்து ஈடுபடுவோம். ஒரு ஊழியத்தைத் துவங்குவதற்கு, படிப்போம், உழைப்போம், அதிகமாய் ஜெபிப்போம். ஒரு அழகான ஓவியத்தை உருவாக்குவதற்கு தேவையான திறமையை வளர்த்துக்கொள்வோம். மலையின் உச்சியை அடைவதற்கு தேவையான கருவிகளை ஆயத்தப்படுத்துவோம் ; நம்மையும் பலப்படுத்திக்கொள்வோம். நம்முடைய தரப்பில் ஆயத்தமாகிய பின், கிறிஸ்துவின் உறுதியான அன்பைச் சார்ந்து யுத்தத்தில் வெற்றிபெறுவோம்.
உன் பெயர் அவருக்கு தெரியும்
வெகுநாளாய் நாங்கள் போகாமல் இருந்த எங்கள் திருச்சபைக்கு மூன்று ஆண்டுகள் கழித்து நானும் எனது கணவரும் போகத் தீர்மானித்தோம். மக்கள் எங்களை எப்படி நடத்துவார்கள்? மறுபடியும் எங்களை எப்படி வரவேற்பார்கள்? எப்படி நேசிப்பார்கள்? சபையை விட்டுச் சென்றதை மன்னிப்பார்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் அந்த ஞாயிற்றுக் கிழமை காலையிலே பதில் கிடைத்தது. சபைக்குள்ளே நாங்கள் நுழைந்தபோது, எங்கள் பெயர்கள் தொடர்ந்து எங்கள் காதுகளில் ஒலித்தது. “பாட்! டான்! உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி!” என்று மகிழ்ச்சியோடு வரவேற்றனர். மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் சிறுவர்களுக்காய் எழுதிய புத்தகமொன்றில், “வாசகர்களே, இந்த சோகமான உலகத்தில், நீங்கள் விரும்பும் நபர் உங்களை பேர்ச்சொல்லி அழைப்பதைக் காட்டிலும் இன்பம் வேறொன்றுமில்லை” என்கிறார்.
தேவன் அதேபோன்று ஒரு உறுதியை இஸ்ரவேல் ஜனத்திற்கு கொடுத்துள்ளார். நாங்கள் தற்காலிகமாக வேறொரு திருச்சபையைத் தேர்ந்தெடுத்தோம், ஆனால் இஸ்ரவேலர்கள் தேவனை விட்டு விலகினார்கள். ஆனாலும் தேவன் அவர்களை மீண்டும் வரவேற்றார். அவர் ஏசாயா தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பி, “பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன் ; உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்” (ஏசாயா 43:1) என்று உறுதிகொடுத்தார்.
இந்த உலகத்தில் நாம் கண்டுகொள்ளப்படாதவர்களாய், பாராட்டப்படாதவர்களாய், கவனிக்கப்படாதவர்களாய் இருக்கலாம். ஆனால் தேவன் நம் ஒவ்வொருவரையும் பேர்பேராய் அறிந்திருக்கிறார். “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்” (வச. 4) என்று வாக்களிக்கிறார். “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை” (வச. 2). இது இஸ்ரவேலுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் அல்ல. இயேசு தன்னுடைய வாழ்க்கையையே நமக்காய் பலியாய் கொடுத்துள்ளார். அவருக்கு நம்முடைய பெயர்கள் தெரியும். ஏன்? அன்பில் நாம் அவருக்கு சொந்தமானவர்கள்.
துணிச்சலான அன்பு
நான்கு சிற்றாலய போதகர்கள் கதாநாயகர்களாய் அறியப்படவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது, 1943 ஆம் ஆண்டு பிப்ரவரி இரவு, எஸ்.எஸ். டோர்செஸ்டர் என்னும் அவர்களின் போக்குவரத்துக் கப்பல், கிரீன்லாந்து கடற்கரையில் தாக்கப்பட்டது. இந்த நான்கு பேரும் பீதியடைந்த நூற்றுக்கணக்கான வீரர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்தனர். கப்பல் மூழ்கிக்கொண்டிருக்க, காயமடைந்த நபர்கள் நெரிசலான உயிர் காக்கும் படகுகளில் குதித்தனர். இந்த நான்கு போதகர்களும் அமைதியாய் “தைரியத்தைப் பிரசங்கித்து" குழப்பத்தை அமைதிப்படுத்தினர் என்று உயிர் பிழைத்த ஒருவர் கூறுகிறார்.
உயிர்காக்கும் லைஃப் ஜாக்கெட்டுகள் தீர்ந்துபோனபோது, இவர்கள் நால்வரும் தங்களுடையதை கழற்றி, பயந்துபோன ஒரு இளைஞனுக்குக் கொடுத்தனர். மற்றவர்கள் வாழும்படி அவர்கள் கப்பலுடன் மூழ்க தீர்மானித்தார்கள். அதில் தப்பிப்பிழைத்த ஒருவர், “இது நான் பார்த்த மிகச் சிறந்த விஷயம், அல்லது பரலோகத்தின் இந்தப் பக்கத்தைப் பார்க்க வாஞ்சிக்கிறேன்” என்று கூறுகிறார்.
கப்பல் மூழ்கத் தொடங்கியவுடன் தங்கள் கரங்களைக் கோர்த்து, இந்த நான்கு போதகர்களும் ஒன்றாக ஜெபித்து, அவர்களுடன் அழிந்துபோகிறவர்களுக்கு ஊக்கத்தை அளித்தனர்.
துணிச்சல் அவர்களின் வீரமிகு சாதனையைக் குறிக்கிறது. இருப்பினும், அன்பானது நான்குபேர் வழங்கிய இந்த பரிசை வரையறுக்கிறது. கொரிந்துவில் புயலால் தாக்கப்பட்ட தேவாலயத்தில் உள்ளவர்கள் உட்பட அனைத்து விசுவாசிகளிடமும் இதுபோன்ற அன்பை பவுல் வலியுறுத்தினார். மோதல், ஊழல் மற்றும் பாவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பவுல் “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்” என்று வலியுறுத்தினார் (1கொரிந்தியர 16:13). பின்னர் அவர், “உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.” (வச.14) என்றும் வலியுறுத்தினார்.
இயேசுவில் உள்ள ஒவ்வொரு விசுவாசிக்கும், குறிப்பாக ஒரு நெருக்கடியின் போது இது ஒரு உத்தமமானக் கட்டளை. கிறிஸ்துவைப் பிரதிபலிப்பதும் மற்றவர்களுக்கு அவருடைய அன்பைக் கொடுப்பதுமே வாழ்க்கையில் பிரச்சனைகள் அச்சுறுத்தும் போது நம்முடைய துணிச்சலான பதிலாய் இருக்கட்டும்.
பாதுகாப்பாய் கரைசேர்த்தல்
பப்புவா நியூ கினியாவில், கந்தாஸ் பழங்குடி மக்கள், தங்கள் மொழியில் அச்சிடப்பட்ட வேதாகம புதிய ஏற்பாட்டின் வருகைக்காக உற்சாகத்துடன் காத்திருந்தனர். இருப்பினும், புத்தகங்களுடன் கிராமத்தை அடைய, மக்கள் சிறிய படகுகளில் கடலில் பயணிக்க வேண்டியிருந்தது.
கடலைக் கடந்துவரும் தைரியத்தை அவர்களுக்கு எது கொடுத்தது? அவர்களின் நீந்தும் திறமையா, ஆம். ஆனால் சமுத்திரத்தை உருவாக்கியது யார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். நம் வாழ்வின் சலசலக்கும் அலைகள் மற்றும் ஆழமான நீர்நிலைகளைக் கடக்க ஒவ்வொருவருக்கும் வழிகாட்டுவதும் அவர்தான்.
தாவீது எழுதியது போல, “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?” (சங்கீதம் 139:7). “நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்… சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்” (வச.8-10).
வெப்பமண்டல கடற்கரைகள், அடர்த்தியான மழைக்காடுகள் மற்றும் கரடுமுரடான மலைகள் “கடைசியாக அறியப்படாதவை” என்று அழைக்கப்படும் ஒரு தீவு தேசத்தில் வாழும் கந்தாஸ்களுடன் இந்த வார்த்தைகள் ஆழமாக ஒத்திருக்கும். ஆயினும்கூட அங்குள்ள விசுவாசிகள் அறிந்திருப்பதைப் போல, எந்த இடமும் தேவனுக்கு கடினமும் தூரமும் இல்லை. “உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது,” “இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி” என்று சங்கீதம் 139:12 சொல்லுகிறது.
பலத்த சுழல்காற்றைப் பார்த்து தேவன், “இரையாதே, அமைதலாயிரு” என்று அதட்டினார். அலைகளும் காற்றும் கீழ்ப்படிகின்றன (மாற்கு 4:39). எனவே, இன்று உங்கள் வாழ்க்கையின் ஆழமான அல்லது கொந்தளிப்பான அலைகளுக்கு அஞ்ச வேண்டாம். நம் தேவன் நம்மை பாதுகாப்பாக கரைசேர்ப்பார்.
தேவனுடன் சிறந்தது
அவளது கல்லூரி கைப்பந்து அணியில், என் பேத்தி வெற்றியின் கொள்கை ஒன்றை கற்றுக்கொண்டாள். பந்து தன் வழியில் வந்தபோது, எந்த நிலையிலும், அவளால் “பந்தை சிறப்பாக” விளையாட முடியும். தந்திரங்களை பயன்படுத்தாமலும், குற்றம் சாட்டாமலும், சாக்கு சொல்லாமலும், ஒரு சிறந்த சூழ்நிலையில் தனது அணியினரை கொண்டுச்செல்லும் ஒரு ஆட்டத்தை அவளால் ஆட முடியும் என்பதே. எப்போதும் இருக்கும் நிலைமையை மேம்படுத்துங்கள்.
தானியேலும் மூன்று எபிரேய நண்பர்களும் பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சரால் சிறைபிடிக்கப்பட்டபோது தானியேலின் பதிலும் அதுதான். அவர்களுக்கு புறமத பெயர்கள் வழங்கப்பட்டாலும், எதிரிகளின் அரண்மனையில் மூன்று வருட “பயிற்சி” எடுக்கும்படி கட்டளையிடப்பட்டாலும், தானியேல் ஆத்திரமடையவில்லை. அதற்கு பதிலாக, ராஜாவின் உயர்ரக உணவையும் திராட்சரசத்தையும் சாப்பிடுவதன் மூலம் தேவனின் பார்வையில் தன்னைத் தீட்டுப்படுத்த வேண்டாம் என்று அவர் அனுமதி கேட்டார். இந்த சுவாரஸ்யமான வேதத்தின் சம்பவம் காட்டுவது போல், மரக்றிகளையும் தண்ணீரையும் மட்டும் பத்து நாட்கள் சாப்பிட்ட பிறகு (தானியேல் 1:12), தானியேலும் அவருடைய நண்பர்களும் “ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப் பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது” (வச.. 15).
மற்றொரு முறை, நேபுகாத்நேச்சார் தானியேல் மற்றும் அரண்மனை ஞானிகள் அனைவரையும் ராஜாவின் குழப்பமான சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் சொல்ல முடியாவிட்டால் கொன்றுவிடுவேன் என்று மீண்டும் மிரட்டினார். மீண்டும், தானியேல் பீதியடையவில்லை, ஆனால் "பரலோக தேவனிடமிருந்து" இரக்கம் கோரினார், மறைபொருள் அவருக்கு ஒரு தரிசனத்தில் வெளிப்பட்டது (2:19). தேவனைப் பற்றி தானியேல் அறிவித்தபடி, “ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது” (வச.. 20). சிறைப்பிடிக்கப்பட்ட காலம் முழுவதும், தானியேல் எதிர்கொண்ட மோதல்களுக்கு மத்தியிலும் தேவனிடம் சிறந்ததை நாடினார். நம்முடைய தொல்லைகளிலும், நாம் அந்த முன்மாதிரியைப் பின்பற்றி, அதை தேவனிடம் எடுத்துச் செல்வதன் மூலம் நிலைமையைச் சிறப்பாக மாற்றுவோம்.
துதிப்பதில் மகிழ்ச்சியைக் கண்டறிதல்
பிரபல பிரிட்டன் நாட்டு எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ் முதன்முதலில் தனது வாழ்க்கையை இயேசுவுக்குக் கொடுத்தபோது, ஆரம்பத்தில் தேவனை துதிப்பதை அவர் எதிர்த்தார். உண்மையில், அவர் அதை "ஒரு இடையூரு" என்று அழைத்தார். "தேவனே அதைக் கோரியது." தான் அவரது பிரச்சனை. ஆயினும்கூட லூயிஸ் இறுதியாக உணர்ந்தார் “அது ஆராதிக்கப்படும் செயல்முறையில் உள்ள போது தேவன் தம்முடைய பிரசன்னத்தை” தம்முடைய மக்களுக்கு அளிக்கிறார் என்று. பின்னர், "தேவனோடுள்ள பரிபூரண அன்பினால்", " ஒரு கண்ணாடி பெறும் பிரகாசத்தை விட அதிகமாய் அது பிரதிபலிக்கிறது போல" பிரிக்க முடியாத சந்தோஷத்தை அவருள் கண்டடைகிறோம்.
இந்த முடிவுக்கு ஆபகூக் தீர்கதரிசி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்தார். யூத மக்களை குறிவைத்த தீமைகளைப் பற்றி தேவனிடம் முறையிட்ட பின், அவரைத் துதிப்பது மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதை ஆபகூக் கண்டறிந்தார்—தேவன் என்ன செய்கிறார் என்பதில் அல்ல, ஆனால் அவர் யார் என்பதே. இவ்வாறு, ஒரு தேசிய அல்லது உலக அளவிளான நெருக்கடியில் கூட, தேவன் இப்போதும் வல்லவராய் இருக்கிறார். தீர்க்கதரிசி அறிவித்தபடியே:
"அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்" (ஆபகூக் 3:17-18).”நான் இரட்சகராகிய தேவனிடத்தில் மகிழ்ச்சியாயிருப்பேன்” என்று கூறினார்.
சி.எஸ். லூயிஸ் உணர்ந்தபடி, "உலகம் முழுவதும் துதியின் சத்தம் ஒலிக்கிறது." அதேபோல், ஆபக்கூக்கும் தேவனை எப்போதும் துதிப்பதற்கு அர்ப்பணித்தார், “நித்திய நடைகளாயிருந்தவருள்” மிகுந்த மகிழ்ச்சியைக் கண்டார் (வச. 6).
ஞானமாக களையெடுப்பது
என் பேரக்குழந்தைகள் என் கொல்லைப்புறத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்தார்கள். விளையாடிக்கொண்டிருந்தார்களா? இல்லை, களைகளை பிடுங்கிக்கொண்டிருந்தார்கள். “வேரோடு அவற்றைப் பிடுங்குகிறேன்” என்று இளைய குழந்தை கூறி எனக்கு மிகப்பெரிய பரிசைக் காட்டினாள். அந்த நாளில் நாங்கள் கடினமாக முயற்சித்து களைகளை சமாளிக்கும் போது அவளுடைய மகிழ்ச்சியானது, களைவேர்களை பிடுங்குவதை - ஒவ்வொரு தொல்லைதரும் அச்சுறுத்தலையும் நீக்குவதை நாங்கள் எவ்வளவு ரசிக்கிறோம் என்பதாகும். எனினும், சந்தோஷங்களுக்கு முன்பு அவைகளை செய்ய முடிவெடுக்கும் தேர்ந்தெடுப்பு வந்தது.
குறிப்பிட்ட நோக்கத்துடன் களையெடுப்பது தனிப்பட்ட பாவத்தை அகற்றுவதற்கான முதல் படியாகும். தாவீது இவ்வாறு ஜெபித்தார்: “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்... வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து” (சங்கீதம் 139: 23-24).
என்ன ஒரு ஞானமான அணுகுமுறை, நம்முடைய பாவத்தை நமக்குக் வெளிப்படுத்திக்காண்பிக்கும்படி தேவனிடம் கேட்டு அதைப் பின்பற்றுவது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்தவர். “கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்”. சங்கீதக்காரன் எழுதுகிறார், “என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்” (வச. 1-2).
“இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும் எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது (வச. 6). பாவம் வேரூன்றுவதற்கு முன்பே, தேவன் ஆபத்தை நமக்கு முன்னமே எச்சரிக்க முடியும். அவர் நம்மை உள்ளும் புறமுமாக அறிவார். ஆகவே, ஒரு ரகசியமான பாவமனப்பான்மை நம்மில் வேரூன்ற முயற்சிக்கும்போது, அவர் அதை முதலில் அறிந்து, சுட்டிக்காட்டுகிறார்.
“உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?”, தாவீது எழுதுகிறார். “உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?” (வச. 7). நம்முடைய இரட்சகரை உயர்ந்த ஒழுக்க மேன்மையுடன் நெருக்கமாக பின்பற்றுவோம்.
ஒருபோதும் விட்டுக்கொடுத்துவிடாதே
தங்கள் சொந்த மொழிகளில் வேதத்தை பெறவிரும்பிய, தங்களுடைய சபை மக்களின் போராட்டத்தை “காலம் கடந்தது, போர் நுழைந்தது” என்றுதான் தெற்கு சூடானின் கெலிகோ மக்களின் பாதிரியார் செமி நிகோ விவரிப்பார். உண்மையை சொல்லப்போனால், ஒரு வார்த்தைகூட கெலிகோ மொழியில் அதுவரைக்கும் அச்சடிக்கப்பட்டிருக்கவில்லை. பல தசாப்தங்களுக்கு முன்பு பாதிரியார் நிகோ வின் பாட்டனார் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் வேலையை தைரியமாக தொடங்கினார். ஆனால் போரும், அமைதியின்மையும் அந்த முயற்சியை தடுத்துநிறுத்திக்கொண்டே இருந்தன. வடக்கு உகாண்டாவிலுள்ள தங்களுடைய அகதிகள் முகாம்கள் மற்றும் காங்கோ வின் ஜனநாயக குடியரசின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோதிலும் பாதிரியாரும் அவருடன் அவருடைய சக விசுவாசிகளும் அந்த திட்டத்தை உயிர்ப்போடு வைத்திருந்தனர்.
அவர்களுடைய விடாமுயற்சி பலனளித்தது. ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு பிறகு, ஒரு கிளர்ச்சியூட்டும் கொண்டாட்டத்தில் வேதாகம புதியஏற்பாடு கெலிகோவில் அகதிகளுக்கு கொடுக்கப்பட்டது. “கெலிகோவின் உத்வேகம் வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டது,” என்று ஒரு திட்ட ஆலோசகர் சொல்கிறார்.
கெலிகோ மக்களின் அர்ப்பணிப்பு தேவன் யோசுவாவிடம் கோரிய நிலைத்தன்மையை பிரதிபலிப்பதாக உள்ளது. “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய் அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்” (யோசுவா 1:8). தேவன் கூறியபடி சமமான விடாமுயற்சியுடன் கெலிகோ மக்கள் வேதாகமத்தின் மொழிபெயர்ப்பை அடைந்தனர். இப்பொழுது,“நீ அவர்களை முகாம்களில் காணும்போது அவர்கள் சிரிக்கிறார்கள்” என்றுஒரு மொழிபெயர்ப்பாளர் கூறுகிறார். வேதத்தை கவனிப்பதும் புரிந்துகொள்வதும் “அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது”. கெலிகோ மக்களை போல நாமும் வேதத்திலிருந்து வல்லமையையும்,ஞானத்தையும் தேடுவதை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது.