நான் எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையின் கட்டுரை மிக முக்கியமானது என்று உணர்ந்ததால், பத்திரிக்கையின் ஆசிரியருக்கு என்னால் இயன்ற சிறந்த கட்டுரையை வழங்குவதில் சிரமப்பட்டேன். அவருடைய எதிர்பார்ப்பை சந்திக்க தீர்மானித்த நான், மீண்டும் மீண்டும் என்னுடைய சிந்தனைகளை மாற்றி எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் என் பிரச்சனை என்ன? இது எனக்கு சவாலான ஒரு தலைப்பா? அல்லது ஆசிரியர் என்னுடைய வார்த்தைகளை விட்டுவிட்டு, என்னை அங்கீகரிக்க வேண்டும் என்னும் தனிப்பட்ட ஆதங்கமா?

நம் வேலைப் பளுவிற்கு, பவுல் நம்பகமான ஆலோசனையைக் கொடுக்கிறார். கொலோசெய திருச்சபைக்கு எழுதிய நிருபத்தில், மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாமல், தேவனுக்காக வேலை செய்ய பவுல் விசுவாசிகளுக்கு அறிவுறுத்துகிறார். அப்போஸ்தலர் அறிவுறுத்தியது போல, “நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” (கொலோசெயர் 3:23-24).

பவுலின் ஆலோசனையின் பிரகாரம், நம்முடைய பூமிக்குரிய எஜமானர்களின் பார்வையில் நாம் நல்லவர்களாய் காண்பித்துக்கொள்வதற்கு பிரயாசப்பட வேண்டாம். அவர்களை மதித்து, நம்மால் முடிந்த நன்மையான காரியங்களை அவர்களுக்கு நிச்சயமாய் செய்யலாம். ஆனால் நாம் தேவனை முன்நிறுத்தி, நம் வேலையை ஆசீர்வதிக்கும்படிக்கு அவரை சார்ந்துகொண்டால், அவர் நம் முயற்சிகளுக்கு ஒளியூட்டுவார். நம்முடைய வெகுமதி? நம் வேலை அழுத்தங்கள் எளிதாகி, நம் பணிகள் நிறைவடைகின்றன. மேலும் “சிறப்பாய் செய்தீர்கள்” என்ற பாராட்டையும் அவரிடத்திலிருந்து நாம் ஒரு நாள் கேட்க முடியும்.