பிரகாசிக்கும் ஒளி
எங்களுக்கு அருகிலுள்ள ஓர் ஆலயத்தில், ஐந்து வாரங்கள் வேதாகம வகுப்பு எடுக்கும்படி, நான் ஒப்புக்கொண்டதிலிருந்து, எனக்கு சற்று நடுக்கமாக இருந்தது. அந்த மாணவர்கள் இதை விரும்புவார்களா? அவர்கள் என்னை விரும்புவார்களா? என்பதாக என்னுடைய எதிர்பார்ப்பு தவறான காரியங்களின் மீது திருப்பப் பட்டது, அதனால், நான் அதிகமாக தயாரிக்க ஆரம்பித்தேன்- பாடத் திட்டங்கள், மின்னணு தகடுகள், வகுப்பில் கொடுக்க வேண்டிய கைப்பிரதிகள் என பல தயாரிப்புகளைச் செய்தேன். இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், நான் இன்னமும் அநேகரை அதில் கலந்து கொள்ளும்படி அழைக்கவில்லை.
இந்த வகுப்பு, தேவனுடைய வெளிச்சத்தைப் பிரகாசிக்கும் ஒரு தேவ பணி என்பதை ஜெபத்தின் மூலம் அறிந்து கொண்டேன். இந்த வகுப்பின் மூலம், பரிசுத்த ஆவியானவர் மக்களை பரலோகத் தந்தைக்கு நேராக திருப்புவார் என்பதை அறிந்து கொண்ட நான், என்னுடைய உரையைக் குறித்த பயத்தை அகற்றி விட்டேன். மலைப் பிரசங்கத்தின் போது, இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்” (மத்.5:14-15). என்றார்.
இந்த வார்த்தைகளை வாசித்த நான், ஊடகத்தின் வாயிலாக ஓர் அறிவிப்பை வெளியிட்டேன். உடனடியாக, மக்கள் பதிவு செய்ய ஆரம்பித்தனர். தங்களின் நன்றியையும், ஆர்வத்தையும் தெரிவித்தனர். அவர்களின் பதிலைப் பார்த்த நான், இயேசுவின் போதனையான, “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக் கடவது” (வ.16) என்பதை அதிகமாக தியானித்தேன்.
அந்தக் கண்னோட்டத்துடன், நான் அந்த வகுப்பில், மகிழ்ச்சியோடு கற்றுக் கொடுத்தேன். என்னுடைய எளிய செயல், பிறரை ஊக்கப்படுத்தி, தேவனுடைய ஒளியைப் பிரகாசிக்கும்படி வழி நடத்துமாறு ஜெபிக்கின்றேன்.
மேலே பார்!
திரைப்படம் தயாரிக்கும் வைலி ஓவர்ஸ்ட்ரீட் என்பவர், நிலாவின் நேரடிக் காட்சியை, தனது வலிமைவாய்ந்த தொலை நோக்கி வழியே பார்க்கும்படி மற்றவர்களுக்குக் காண்பித்தார். மிக அருகில் தெரிந்த அக்காட்சியை அநேகர், ஆச்சரியத்தோடு வியந்து பார்த்தனர். இத்தனை மகிமை பொருந்திய காட்சியைப் பார்க்கும் போது, “நம்மைக் காட்டிலும் மிகப் பெரிய பொருட்கள் இருக்கின்றன என்பதை நினைக்கும் போது, அது நம்மை ஆச்சரியத்தால் நிறைக்கின்றது” என்று அவர் விளக்கினார்.
சங்கீதக்காரனாகிய தாவீது, தேவனுடைய பரலோக ஒளியைக் கண்டு வியக்கின்றார். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும் போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?” என்கின்றார் (சங்.8:3-4).
தாவீதின் இந்த தாழ்மையான கேள்வி, நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு கண்ணோட்டத்திற்கு கொண்டு செல்கின்றது. தேவன் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைத்த பின்னர், அங்கு சூரியனும் சந்திரனும் தேவையில்லை. அபோஸ்தலனாகிய யோவான் கூறுவதைப் போல, தேவனுடைய பிரகாசமான மகிமையே ஒளியைத் தருகின்றது. “நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக் குட்டியானவரே அதற்கு விளக்கு…………..அங்கே இராக்காலம் இல்லை.” (வெளி. 21:23-25).
இதனை நினைக்கும் போது எத்தனை ஆச்சரியமாக இருக்கின்றது! அவருடைய பரலோக மகிமையை நாம் இப்பொழுதும் அநுபவிக்கலாம். உலகிற்கு ஒளியாக வந்த கிறிஸ்துவை நாம் தேடும் போது நாம் அந்த மகிமையைக் காணமுடியும். ஓவெர்ஸ்ரீட் கூறியதை போல, “நாம் அடிக்கடி மேல் நோக்கிப் பார்ப்போமாக” அவ்வாறு நாம் செய்யும் போது தேவனைக் காண்போம்.
எளிமையாக கேள்வி
அவளுடைய மருத்துவர், பிரிந்து காணப்படும் அவளுடைய விழித்திரை சரிபார்க்கக் கூடிய நிலையில் இல்லை என்றார். 15 ஆண்டுகள் பார்வையில்லாதவளாய், பிரெயில் முறையைக் கற்றுக் கொண்டு, ஒரு கோலையும், பழக்குவிக்கப் பட்ட நாயையும் பயன் படுத்தி வாழக் கற்றுக் கொண்டபின்பு, ஒரு நாள் அவளுடைய கணவன் வேறொரு மருத்துவரை அணுகி, ஒரு எளிய கேள்வியைக் கேட்டார் “அவளுக்கு எப்படியாகிலும் உதவ முடியுமா?” என்றார். உடனடியாக “ஆம்” என்ற பதில் வந்தது. அந்த மருத்துவர் அவளுக்குச் சாதாரண கண் புறை நோய் (cataracts) இருப்பதைக் கண்டுபிடித்தார். முதலாவது, அதனை அவளுடைய வலது கண்ணிலிருந்து நீக்கினார், அப்பொழுது அவளுடைய பார்வை 20/20 என்றிருந்தது. பின்னர், அவளுடைய இடது கண்ணிலும் அறுவை சிக்கிச்சை செய்தார், அதுவும் வெற்றியாக முடிந்தது.
ஒரு எளிய கேள்வி நாகமானின் வாழ்வை மாற்றியது. மிக வலிமையான இராணுவ வீரன் குஷ்டரோகத்தால் பாதிக்கப் பட்டான். ஆனால், எலிசா தீர்க்கதரிசி, “நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு, அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய்” (2 இரா.5:10) என்று அறிவுரை கூறியதைக் கேட்ட போது, அவன் கோபமடைந்தான். நாகமானின் வேலைகாரன் அந்த படைத்தலைவனிடம் ஓர் எளிய கேள்வியைக் கேட்டான். “அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா?” (வ.13) என்றான். அதற்குச் சம்மதித்த நாகமான் ஸ்நானம் பண்ணினான், “அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்” (வ.14).
சில வேளைகளில், நாமும் நம்முடைய வாழ்வில் சில பிரச்சனைகளோடு போராடிக் கொண்டிருக்கலாம், காரணம், நாம் தேவனிடம் கேட்கவில்லை. நீர் உதவுவீரா? நான் போகலாமா? நீர் வழி நடத்துவீரா? என்று சந்தேகமான கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர் நம்மிடமிருந்து சிக்கலான கேள்விகளை எதிர்பார்க்கவில்லை. “அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்” என்று தேவன் அவருடைய பிள்ளைகளுக்கு வாக்களிக்கின்றார் (ஏசா.65:24). எனவே, இன்றே அவரிடம் கேள்.
தேனைக் காட்டிலும் இனிமையானது
அவருடைய பேச்சின் தலைப்பு இன அழுத்தம். ஆயினும் அவர் அமைதியாகவும், தன் உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டும் இருந்தார். மிகப் பெரிய கூட்டத்திற்கு முன்பாக, மேடையில் நின்றவராய் தைரியமாகப் பேசினார், தாழ்மையோடும், கிருபையும் இரக்கமும் நிறை ந்த வார்த்தைகளை நகைச் சுவையோடும் பேசினார். இறுக்கத்தில் இருந்த கூட்டத்தினர் தளர்ச்சியடைந்ததைக் காணமுடிந்தது. விவாதத்திற்கு உரிய இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று குழப்பத்தில் இருந்த மக்கள், பேச்சாளரோடு சேர்ந்து சிரித்தனர், தங்களின் உணர்வுகளையும், வார்த்தைகளையும் அமைதிப் படுத்தினர். விரும்பத்தகாத ஒரு தலைப்பையும் எப்படி சமாளிப்பது என்பதைச் செயலில் காட்டினார்.
சாலமோன் ராஜாவும் இத்தகைய ஒரு அணுகு முறையையே ஆலோசனையாகத் தருகின்றார். “இனிய சொற்கள் தேன்கூடு போல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்” (நீதி. 16:24) என்கின்றார். மேலும், “ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவை ஊட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்” என்றும் கூறுகின்றார் (வ.23).
சாலமோனைப் போன்ற ஒரு வல்லமையுள்ள அரசன், ஏன், எவ்வாறு பேசவேண்டும் என்பதை கூறத் தன் நேரத்தைச் செலவளிக்க வேண்டும்? ஏனெனில் வார்த்தை கொல்லக் கூடியது. மேலும் சாலமோன் அரசனின் காலத்தில், தங்களின் தேசத்தைப் பற்றிய செய்தியைத் தெரிந்து கொள்ள, அரசன் செய்தியாளர்களையே சார்ந்திருக்க வேண்டியதாய் இருந்தது, ஆதலால், அமைதியும், நம்பகத்தன்மையும் உள்ள செய்தியாளர்களுக்கு அதிக மதிப்பு இருந்தது. அவர்கள் விவேகமும் ஞானமும் நிறைந்த வார்த்கைகளை உபயோகித்தனர், எத்தகைய காரியமாக இருந்தாலும் அதிக அலட்டலும், கடுமையான வார்த்தைகளும் அவர்களிடம் காணப்படவில்லை.
நம்முடைய கருத்துக்கள் கருணையோடும், நமது சிந்தனைகள் தேவனோடு இசைந்ததாகவும் விவேகமும், இனிமையும் நிறைந்ததாகவும் இருப்பின், அது நமக்கு நன்மையே பயக்கும். இதனையே சாலமோன் “மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்திரம் கர்த்தரால் வரும்” என்பதாகக் கூறுகின்றார் (வச. 1).
தேவையான பொருட்களைத் தரும் இவ்வுலகு
நடு இரவு தாண்டிய வேளையில், ஜேம்ஸ் என்ற மீனவன் மீன்களைப் பிடிப்பதற்காக கடலில் படகைச் செலுத்திக் கொண்டிருக்கின்றான். அந்த அதிகாலை வேளையையும் அவன் பொருட்படுத்தவில்லை. “நான் மீன் பிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு என்னுடைய வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது, எனக்கு வருமானம் தரக் கூடிய எந்த ஆதாரமும் இல்லை” என்று அவன் கூறினான். இப்பொழுது கடல் பாதுகாப்பு இயக்கத்தில், ஒரு உறுப்பினராக இருப்பதால், அவனுடைய வருமானமும் அதிகரித்துள்ளது, நிலையான வருமானமும் வருகின்றது, “இந்த செயல் திட்டத்தைத் துவக்கித் தந்த தேவனுக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம்” என்றும் கூறினான்.
இந்த திட்டம் பெரிய அளவில் உருவானது, ஏனெனில், இந்த திட்டத்திற்குத் தேவையானவற்றை தேவனுடைய படைப்புகள் கொடுத்தன – அவை இயற்கையில் கிடைக்கும் கடல் உயிரினங்கள். எல்லாம் தருகின்ற தேவனை துதித்து, “பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்” (சங்.104:14). “பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும், பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு (வச. 25).
தேவனுடைய ஆச்சரியமான படைப்புகள் நமக்குத் தேவையானவற்றைத் தருகின்றன, இது எத்தனை அற்புதமானது! எடுத்துக் காட்டாக மீன்கள் ஒரு சுகாதாரமான கடல் உணவைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன. இந்த மீன்களைப் பாதுகாப்பாக பிடிப்பதன் மூலம், ஜேம்ஸ் மற்றும் அவனுடைய சுற்றத்தாருக்கும் வாழ்வாதாரம் கிடைக்கின்றது.
தேவனுடைய படைப்புகள் எல்லாமே ஒரு நோக்கத்தோடு தான் படைக்கப்பட்டுள்ளன, அவை எல்லாவற்றையும் தேவன் தன்னுடைய மகிமைக்காகவும் நம்முடைய நன்மைக்காகவும் பயன்படுத்துகின்றார். இவ்வாறு சங்கீதக்காரன், “நான் உயிரோடு இருக்கும் மட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்” (வச. 33) என்கின்றார், நாமும் தேவன் நமக்குத் தந்துள்ள யாவற்றையும் நாம் சிந்தித்துப் பார்த்து, நாமும் அவரைப் போற்றுவோம்.
பரிதாபத்திலிருந்து துதிக்குள்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உடைகள் வழங்கும் நிகழ்வில், குழந்தைகள், ஆர்வத்தோடும், நன்றியோடும், தங்களுக்குப் பிடித்தமான நிறமும், அளவுமுள்ள உடைகளைத் தேடியெடுத்தனர், இது, அவர்களுக்குத் தன்நம்பிக்கையைக் கொடுத்தது. இந்த முயற்சியை எடுத்த ஒருவர் கூறும் போது, புதிய உடைகளை அணிந்த குழந்தைகள், தாங்கள் சுற்றத்தாரால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றனர் என்பதை உணர்ந்தனர், அந்தக் குளிர்ந்த கால சூழலில், அது அவர்களுக்கு வெப்பத்தைக் கொடுத்தது.
அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் ஒரு அங்கி தேவைப்பட்டது. அவர், தீமோத்தேயுவுக்கு எழுதும் போது, “துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும்… எடுத்துக் கொண்டு வா” (2 தீமோ. 4:13) என்கின்றார். ரோமர்களின் சிறைச்சாலையில் அகப்பட்டு, குளிரினால் கஷ்டப்பட்ட பவுலுக்கு வெப்பமும், ஒரு துணையாளரும் தேவைப் பட்டது. அவர் ஒரு ரோம நியாயாதிபதி முன் நின்ற போது “நான் முதல்விசை உத்தரவு சொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடே கூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்” என்பதாகப் புலம்புகின்றார் (வச. 16). இந்த ஊழியக்காரனின் உண்மையான, வேதனை தரும் வார்த்தைகள் நம் இருதயத்தை குத்துகின்றது.
ஆயினும், பவுல் தன்னுடைய வியத்தகு ஊழியத்தை முடித்தபின்னர், தன்னுடைய கடைசிக் கடிதத்தை முடிக்கும் போது, அவருடைய எண்ணங்கள் சுய பரிதாபத்திலிருந்து துதியாக மாறுகின்றதைக் காண்கின்றோம், “கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப் படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்” (வச. 17) என்கின்ற வார்த்தைகள் நம்முடைய இருதயத்தைத் தேற்றுகின்றன.
நீயும் பிரச்சனைகளின் மத்தியில் இருக்கின்றாயா? வெப்பத்தைக் கொடுக்க சரியான உடையின்றி இருக்கின்றாயா? உன்னைத் தேற்றக் கூடிய நண்பர்களின்றி தவிக்கின்றாயா? தேவனை நோக்கிப் பார், அவர் உனக்கு வாழ்வளிக்கவும், உனக்குத் தேவையானவற்றைக் கொடுக்கவும், உன்னை மீட்டுக் கொள்ளவும் உண்மையுள்ளவராய் இருக்கின்றார். ஏன்? அவருடைய மகிமைக்காகவும் அவருடைய ராஜ்ஜியத்தில் அவருடைய சித்தத்தை நிறைவேற்றவும், நமக்குத் துணையாக இருக்கின்றார்.
பழச்சாறு
பேரம் பேசி, மிகச் சரியான விலைக்கு, அந்த விளக்கு வாங்கப்பட்டது. அது என் வீட்டு அலுவலகத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும், அதன் நிறம், அளவு மற்றும் விலை மிகப்பொருத்தமாக அமைந்தது. வீட்டிற்கு வந்ததும் அந்த விளக்கிற்கு மின் இணைப்பு கொடுத்தபோது ஒன்றும் நடக்கவில்லை, விளக்கும் எரியவில்லை!
“பிரச்சனை ஒன்றுமில்லை, நான் அதனை எளிதில் சரிபார்த்து விடுவேன்” என்று உறுதியளித்தார் என்னுடைய கணவர். அவர் அந்த விளக்கைப் பிரித்துப் பார்த்தார், அதன் பிரச்சனையை எளிதில் கண்டுகொண்டார். அங்கு மின் இணைப்புக் கம்பி, எதனோடும் பொருத்தப்படவில்லை, மின் ஆற்றல் மூலத்தோடு இணைக்கப் படாவிட்டால் அந்த நேர்த்தியான அழகிய விளக்கு பயனற்றதாகிவிடும்.
இது நம்முடைய வாழ்விற்கும் பொருத்தமானது. இயேசு தன் சீஷர்களிடம், “நானே திராட்சச் செடி, நீங்கள் கொடிகள், ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது” (யோவா. 15:5) என்று கூறுகின்றார்.
இயேசு இந்தப் போதனையை, திராட்சை அதிகம் விளையும் பகுதியில் கொடுத்தார், எனவே அவருடைய சீஷர்கள் எளிதில் புரிந்து கொண்டனர். திராட்சைச் செடிகள் கடினமான சூழல்களையும் தாங்கக் கூடியன, அதன் கொடிகள் அதிகம் வெட்டப் பட்டாலும் வளரக் கூடியன. ஆனால் முக்கிய செடியிலிருந்து அவை வெட்டப்பட்டு, தனிமையாக்கப்பட்டால் அவை பயனற்றவையாகிவிடும், எரிக்கப் படும் விறகாகிவிடும். அதேப் போலத்தான் நம்முடைய வாழ்வும் இருக்கும்.
நாம் இயேசுவில் நிலைத்திரு க்கும் போது, அவருடைய வார்த்தைகள் நமக்கு ஜீவனைத்தரும், நாமும் நமக்கு ஜீவன் தரும் மூலமாகிய கிறிஸ்துவோடு இணைக்கப் பட்டிருப்போம். “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப் படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்” (வச. 8) என்றார். மிகுந்த கனிகளைக் கொடுக்க வேண்டுமென்றால் அனுதினமும் சத்தான உணவு கொடுக்கப்பட வேண்டும். தேவன் நமது ஆத்துமாவிற்குத் தேவையான உணவை வேதாகமத்தின் மூலமாகவும், அவருடைய அன்பினாலும் இலவசமாகக் கொடுக்கின்றார். எனவே, தேவனோடு எப்பொழுதும் இணக்கப் பட்டிருங்கள், அவருடைய சாறு உங்களுக்குள்ளே பாயட்டும்!
தேவன் நம்மைக் காக்கிறார்
எங்களுடைய சிறிய பேரன் கரமசைத்து விடை பெற்றான், பின்னர் அவன் திரும்பிப் பார்த்து ஒரு கேள்வி கேட்டான். “பாட்டியம்மா, நாங்கள் போகும் வரை நீங்கள் ஏன் முற்றத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டான். நான் அவனைப் பார்த்துச் சிரித்தேன், அவன் மிகவும் சிறியவனாகையால், அவனுடைய கேள்வியை மிகவும் ரசித்தேன். அவன் எங்கள் மீது கொண்டுள்ள அக்கறையை எண்ணிப் பார்த்து, அவனுக்கு ஒரு நல்ல பதிலைக் கொடுக்க விரும்பினேன், “அது ஒரு வகை மரியாதை” என்றேன். “நீ எனக்கு விருந்தாளியாக வந்திருக்கும் போது, நீ போகும் வரை உன்னை கவனித்துக் கொண்டிருப்பது, நான் உன் மீது கரிசனைக் கொண்டுள்ளேன் என்பதைக் காட்டுகின்றது” என்றேன். அவன் என்னுடைய பதிலை ஏற்றுக் கொண்ட போதும் சற்று கலக்க மடைந்தவனாய் காணப்பட்டான். எனவே நான் ஒரு எளிய உண்மையை அவனுக்கு எடுத்துக் கூறினேன். “நான் உன்னை நேசிப்பதால் உன்னைக் கவனிக்கிறேன், உங்களுடைய கார் சென்று கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீட்டிற்குச் செல்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்வேன்” என்றேன். அவன் சிரித்தான், என்னை அன்போடு அணைத்துக்கொண்டான். கடைசியாக, அவன் புரிந்துகொண்டான்.
அவனுடைய குழந்தைத்தனமான புரிந்து கொள்ளல், நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்கு அறிவுறுத்தியது, நம்முடைய பரலோகத் தந்தை, அவருடைய விலையேறப் பெற்ற பிள்ளைகளாகிய நம் அனைவரையும் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றார், சங்கீதம் 121ல் கூறப்பட்டுள்ளபடி, “கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்” (வச. 5). தேவனை ஆராதிக்கும்படி எருசலேம் நோக்கிப் பயணம் செய்த இஸ்ரவேலர், ஆபத்தான பாதை வழியே பயணித்த போது, தேவன் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தார், “பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார் (வச. 6-7). என்று உறுதியளித்தார். இதேப் போன்று, நம்முடைய வாழ்க்கையாகிய பயணத்தின் போதும், நாம் ஆவிக்குரிய அச்சுறுத்தல்களையும், தீமைகளையும் சந்திக்க நேரிடும், “கர்த்தர் உன் போக்கையும், உன் வரத்தையும்” காப்பார், ஏன்? அவர் நம்மீது கொண்டுள்ள அன்பு. எப்பொழுது? “இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார்” (வ.8).
தேவனிடத்தில் ஐசுரியவான்
மிகப் பெரிய பணவீக்கத்தின் போது, சிறுவர்களாக இருந்த எனது பெற்றோர், கடினமான சூழல்களைச் சந்திக்க நேரிட்டதால், அவர்கள் வளர்ந்த பின்னரும் கடின உழைப்பாளிகளாகவும், தங்களுடைய பொருளால் பிறரையும் போஷிப்பவராகவும் இருந்தனர். அவர்கள் பேராசைப் பட்டதில்லை, அவர்களின் நேரத்தையும், திறமைகளையும், பொருளையும் ஆலயத்திற்கும், உதவி செய்யும் குழுக்களுக்கும் மற்றும் தேவையிலிருப்போருக்கும் கொடுத்தனர். உண்மையில், அவர்கள், தங்கள் பணத்தை ஞானத்தோடு கையாண்டு, உற்சாகமாகக் கொடுத்தனர்.
“ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும், கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும், அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்” (1 தீமோ. 6:9) என்ற பவுலின் எச்சரிக்கையை, இயேசுவின் விசுவாசிகளாகிய எனது பெற்றோர், தங்களது வாழ்வில் கையாண்டனர்.
அனைவரையும் ஈர்க்கத்தக்க செல்வங்களால் நிறை ந்த, எபேசு பட்டணத்தில் போதகராக இருந்த, இளம் தீமோத்தேயுவிற்கு பவுல் இந்த அறிவுரையை வழங்குகிறார்.
“பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” என பவுல் எச்சரிக்கிறார். மேலும், “சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்” (வச. 10) என்கின்றார்.
அப்படியானால் இந்த பேராசைக்கு மாற்று மருந்து என்ன? “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிருங்கள்” என இயேசு கூறுகின்றார் (லூக்.12:13-21). எல்லாவற்றிற்கும் மேலாக நம் பரலோகத் தந்தையைத் தேடி, போற்றி, அவரை அன்பு செய்வோமேயாயின், அவரே நமக்கு நிரந்தர மகிழ்ச்சியைத் தருபவராக இருப்பார். சங்கீதக்காரன் எழுதியுள்ளதைப் போன்று, “நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும் (சங். 90:14) என்று நாமும் ஜெபிப்போம்.
ஒவ்வொரு நாளும் நாம் தேவனில் மகிழ்ந்து களிகூரும் போது, நம்முடைய பேராசைகளிலிருந்து விடுபட்டு, மன நிறைவைப் பெற்றுக் கொள்வோம். இயேசு நம்முடைய இருதயத்தின் ஆசைகளிலிருந்து நம்மை விடுவித்து, தேவனிடத்தில் ஐசுவரியவானாக இருக்கச் செய்வாராக!