மாற்றத்தின் விளையாட்டு
1963 ஆம் ஆண்டு மார்ச் இரவில், இரண்டு கல்லூரி கூடைப்பந்து வீரர்கள் கருப்பு வெள்ளை பிரிவினைவாதத்தின் வெறுப்பை மீறிக் கைகுலுக்கி, மிசிசிப்பி மாநில வரலாற்றில் முதல் முறையாக முழு வெள்ளை ஆண்கள், ஒருங்கிணைந்த அணிக்கு எதிராக விளையாடியது. லயோலா பல்கலைக்கழகம் சிகாகோவிற்கு எதிராக "மாற்றத்தின் விளையாட்டு" என்றழைக்கப்பட்ட அந்த தேசிய போட்டியில் பங்கேற்க, அவர்களின் மாநிலத்தை விட்டு வெளியேற வீரர்களைத் தடுக்க மிசிசிப்பி மாகாண குழு முயன்றது. அதேபோல லயோலாவின் கறுப்பின வீரர்கள் இதற்கிடையில், அனைத்து போட்டிகளிலும் இன அவதூறுகளை அனுபவித்தனர். நொறுக்குத்தீனிகளையும், பனிக்கட்டிகளையும் அவர்கள் மீது மற்றவர்கள் வீசினார்கள், மேலும் பயணத்தின் போது பல எதிர்ப்புகளையும் எதிர்கொண்டனர்.
ஆனாலும் இளைஞர்கள் விளையாடினார்கள். லயோலா அணியினர், மிசிசிப்பி அணியினரை 61-51 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தனர், மேலும் லயோலா இறுதியில் தேசிய பட்டத்தையும் வென்றது. ஆனால் அந்த இரவில் உண்மையில் வென்றது எது? வெறுப்பிலிருந்து அன்பை நோக்கி நகர்தலே வென்றது. இயேசு போதித்தது போல், "உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்" (லூக்கா 6:27) என்ற தேவனுடைய அறிவுரை வாழ்க்கையை மாற்றும் கருத்தாக இருந்தது.
கிறிஸ்து கற்பித்தபடி நம் எதிரிகளை நேசிக்க, மாற்றத்திற்கான அவரது புரட்சிகரமான கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். பவுல், "ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்: பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என்றது போல, நம்மில் உள்ள பழையதை அவருடைய புதிய வழி எப்படித் தோற்கடிக்கிறது? அன்பினால்தான். ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பதின் மூலம் இறுதியாக அவரைக் காணலாம்.
கிறிஸ்துவின் சமாதானம்
வாக்குவாதத்தால் வெல்வார்களா? ஒருபோதுமில்லை. ஒரு சிறு நகரத் தலைவர் அடிரோண்டாக் பூங்காவில் வசிப்பவர்களை எச்சரித்தார், அங்கு சுற்றுச்சூழலாளர்கள் மற்றும் சிறு தொழில் உரிமையாளர்களுக்கு இடையேயான சண்டை, "அடிரோண்டாக் போர்களை" தூண்டியது. அப்ஸ்டேட் நியூயார்க்கில் உள்ள பழமையான வனப்பகுதியைக் காப்பாற்றுவதா அல்லது அதை மேம்படுத்துவதா என்ற அவர்களின் போராட்டத்தை, பெயரே விவரித்தது.
"நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்புங்கள்!" ஒரு உள்ளூர் தலைவர், சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் கத்தினார். ஆனால் விரைவில் ஒரு புதிய செய்தி வெளியானது. “ஒருவருக்கொருவர் சத்தம் போடாதீர்கள். ஒருவருக்கொருவர் பேச முயலுங்கள்". சண்டையிடும் பிரிவுகளுக்கு இடையே பாலம் அமைக்க, சார்பற்ற ஒரு பொதுவான கூட்டணி உருவாக்கப்பட்டது. பொதுஜனங்களின் உரையாடல் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது; இருபது ஆண்டுகளிலிருந்ததை விட அடிரோண்டாக் நகரங்கள் மிகவும் செழிப்பாக வளர்ந்தபோதும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஏக்கர் காட்டு நிலம் பாதுகாக்கப்பட்டது.
சமாதானமான சகவாழ்வு ஒரு ஆரம்பமே, ஆனால் பவுல் மேலான ஒன்றைக் கற்பித்தார். கொலோசேயில் இருந்த புதிய விசுவாசிகளிடம், “கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்" (கொலோசெயர் 3:8) என்றார். கிறிஸ்துவிலான புதிய சுபாவத்திற்கு தங்கள் பழைய வழிகளை மாற்றிக்கொள்ளுமாறு பவுல் அவர்களை வலியுறுத்தினார்: "உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு" (வ.12) என்று அவர் எழுதினார்.
கிறிஸ்துவிலான புதிய வாழ்க்கைக்கு நமது பழைய கேவலமான வாழ்க்கையைச் சரணடையச் செய்வதற்கான இந்த அழைப்பு அனைத்து விசுவாசிகளுக்கும் இன்று விடுக்கப்படுகிறது. "தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்" (வ.15). அப்போது, நம் சமாதானத்தில், உலகம் இயேசுவைக் காணும்.
நேசிப்பதற்கே மணமுடித்தல்
ராதாவின் திருமணத்தில், அவளது தாயார் 1 கொரிந்தியரிலிருந்து ஒரு அழகான வேத வாக்கியத்தை வாசித்தார். வேதாகமத்தின் "அன்பின் அதிகாரம்" என்று அடிக்கடி அழைக்கப்படும் பதின்மூன்றாவது அதிகாரம் அந்த வைபவத்திற்கு ஏற்றதாக இருந்தது. “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது” (வ.4). இதைக் கேட்டவாறே, அப்போஸ்தலனின் அசைவுண்டாக்கும் இந்த வார்த்தைகளுக்குப் பின்பாக இருந்ததைத் தற்கால மணப்பெண்களும் மாப்பிள்ளைகளும் அறிவார்களா என்பது கேள்விக்குறியே. பவுல் ஏதோவொரு காதல் கவிதையை எழுதவில்லை. அப்போஸ்தலன், பிளவுபட்ட சபையில் கொதித்தெழும் பிரிவினைகளை ஆற்றும் முயற்சியாகத் தனது கெஞ்சலையே எழுதினார்.
எளிமையாகச் சொன்னால், கொரிந்துவில் உள்ள தேவாலயம் "சீர்கெட்டிருந்தது" என்று அறிஞர் டக்ளஸ் ஏ. கேம்ப்பெல் கூறுகிறார். தவறான உறவுமுறை, விபச்சாரம் மற்றும் மூப்பர்களிடையே போட்டிமனப்பாண்மை போன்றவை தலைதூக்கும் பிரச்சனைகளில் சில. சபை மக்களிடையே சட்ட வழக்குகள் சர்வ சாதாரணம். ஆராதனைகள் பெரும்பாலும் குழப்பமாகவே இருந்தன, அந்நிய பாஷையில் பேசுபவர்கள் முதலிடம் பெறப் போட்டியிட்டனர், தீர்க்கதரிசனம் உரைப்பவர்களோ பிறரை ஈர்க்கவே தீர்க்கதரிசனம் கூறினர் (பார்க்க. 1 கொரிந்தியர் 14).
இந்தக் குழப்பத்தின் பின்பாக இருந்தது, "ஒருவருக்கொருவர் அன்பில் உறவாடுவதில் ஏற்பட்ட அடிப்படை தோல்வி" என்று காம்ப்பெல் கூறுகிறார். மேன்மையான வழியைக் காட்ட, பவுல் அன்பைப் பிரசங்கித்தார், ஏனென்றால் “அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்” (13:8).
பவுலின் அன்பான நினைவூட்டல்கள் நிச்சயமாக ஒரு திருமண வைபோகத்தை உற்சாகமூட்டும். அவைகள் நம் அனைவரையும் அன்பாயும் கனிவாயும் வாழ ஊக்குவிக்கட்டும்.
சோதனைகளின் பரிசு
மனிதர்களும் பறக்கலாம் என்று இருவர் கண்டுகொண்டனர். ஆனால், ரைட் சகோதரர்களின் வெற்றிக்கான பாதை அவ்வளவு எளிதல்ல. எண்ணற்ற தோல்விகள், அவமானங்கள், பண நஷ்டங்கள், இருவரில் ஒருவருக்குக் கடுமையான காயம் என்று எல்லாம் இருந்தபோதிலும், சோதனைகள் இந்த சகோதரர்களைத் தடுக்க இயலவில்லை. “அமைதியிருக்கையில் எந்த பறவையும் உயரே எழும்பாது” என்று ஆர்வில் ரைட் உணர்ந்தார். இவர்களின் சுயசரிதை ஆசிரியரான டேவிட் மெக்கலோ இந்த கருத்தைப் பற்றி குறிப்பிடுகையில், “பொதுவாகவே எதிர்ப்பு தான் நாம் உயரே எழும்புவதற்கான உந்துதலைத் தரும்” என்றார். மேலும் மெக்கலோ, “அவர்களின் சந்தோஷம் மலையுச்சியை அடைவதிலல்ல, மாறாக மலை ஏறுவதே அவர்களின் சந்தோஷம்” என்றார்.
அப்போஸ்தலன் பேதுருவும், உபத்திரவப்பட்ட ஆதி திருச்சபைக்கு இதேபோன்ற ஒரு ஆவிக்குரிய கோட்பாட்டைக் கற்பித்தார். அவர்களிடம், “உங்களைச்சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்” (1 பேதுரு 4:12) இருக்கும்படி சொன்னார். இது பாடுகளின் வேதனையை மறைப்பது அல்ல. கிறிஸ்துவிலான எதிர்பார்ப்பு தேவனுக்குள்ளான நமது நம்பிக்கையை வளரச்செய்யும்.
குறிப்பாக, ஆதி கிறிஸ்தவர்களைப் போல இயேசுவின் விசுவாசிகளாக இருப்பதற்கு நாமும் துன்பப்படுகையில் இது நன்றாகப் பொருந்தும். அவர்களுக்கு பேதுரு, “கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்” (வ.13) என்றெழுதினார். மேலும், “நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்” (வ.14) என்றார்.
ரைட் சகோதரரின் குணாதிசயம் அவர்களின் சுயசரிதை ஆசிரியரால் போற்றப்பட்டதுபோல, தேவ அன்பின் சுபாவம் நம்மில் செயல்படுவதைப் பிறர் காணட்டும். நமக்கு எதிரானதை வைத்தே நாம் புதிய மைல்கற்களை எட்டச்செய்வார்.
தேவனின் பாதுகாக்கும் பிரசன்னம்
எனது உயர்நிலைப் பள்ளி ஆண்டு புகைப்படங்களைப் பார்த்து, எனது பேரக்குழந்தைகள் பழமையாய் போன சிகை அலங்காரங்கள், ஆடைகள் மற்றும் "பழங்கால" வாகனங்களைக் கண்டு வியந்தனர். நானோ வித்தியாசமான ஒன்றைக் கண்டேன்; முதலாவதாக நீண்டகால நண்பர்களின் புன்னகை, சிலர் இன்னமும் நண்பர்களாக உள்ளோம். இருப்பினும், அதை விட, தேவனின் பாதுகாக்கும் வல்லமையை நான் கண்டேன். அந்த பள்ளியிற்கேற்ப என்னை மாற்றிக்கொள்ள நான் சிரமப்படுகையில், அவரது மென்மையான பிரசன்னம் என்னைச் சூழ்ந்திருந்தது. பாதுகாக்கும் அவருடைய நற்குணம் என்னைப் பேணியது, தம்மைத் தேடும் அனைவருக்கும் அவர் இந்த தயவை அருளுகிறார்.
தேவனின் காக்கும் பிரசன்னத்தை தானியேல் அறிந்திருந்தார். பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டுப் போயிருக்கையில், "தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க," (தானியேல் 6:10) அவர் ஜெபித்தார். அவ்வாறு செய்யக்கூடாது என்ற ராஜாவின் ஆணையைப் பொருட்படுத்தவில்லை (வ. 7-9). நன்மை பயக்கும் அவருடைய ஜெப கண்ணோட்டத்தில், தன்னை தாங்கி, தன் ஜெபங்களை கேட்டு, பதிலளிக்கும் தேவனின் பேணிக்காக்கும் பிரசன்னத்தை தானியேல் நினைவில் கொள்வார். இவ்வாறு, தேவன் அவரைக் கேட்டு, பதில் அளித்து, மீண்டும் அவரைத் தாங்குவார்.
இருப்பினும், புதிய சட்டம் இயற்றப்பட்ட போதிலும், தானியேல் தனக்கு நேரிடப்போவதைப் பொருட்படுத்தாமல் தேவனின் பிரசன்னத்தை இன்னும் நாடினார். மேலும் அவர் முன்பு பலமுறை ஜெபித்தது போலவே ஜெபித்தார் (வ. 10). சிங்கங்களின் குகையிலிருந்தபோது, கர்த்தருடைய தூதன் தானியேலைப் பாதுகாத்தார், அவருடைய மெய்யான தேவன் அவரை மீட்டார் (வ. 22).
தற்கால சோதனைகளின் போது நமது கடந்த காலத்தைப் பார்ப்பது, தேவனின் உண்மைத்தன்மையை நினைவுபடுத்த உதவும். தரியு ராஜா கூட தேவனைப் பற்றிக் கூறியது போல், “அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார்” (வ. 27). தேவன் அப்போது நல்லவராகவே இருந்தார், இப்போதும் நல்லவராகவே இருக்கிறார். அவருடைய பிரசன்னம் உங்களைக் காக்கும்.
தேவன் பதிலளிப்பார்
போதகர் தீமோத்தேயு பயணம் செய்யும் போது, தனது போதருக்குரிய கழுத்துப்பட்டையை அணிந்திருந்தால், அவர் அடிக்கடி அந்நியர்களால் அணுகப்படுவார். "தயவுசெய்து எனக்காக ஜெபியுங்கள்" என்று விமான நிலையத்தில் உள்ளவர்கள் அவரது எளிய கறுத்த மேலங்கியின் மீது போதகருக்கான பட்டையைப் பார்க்கும்போது கூறுகிறார்கள். சமீபத்தில் ஒரு விமானத்தில், ஒரு பெண் அவரைக் கவனித்தபோது அவருடைய இருக்கை அருகே மண்டியிட்டு, “நீங்கள் ஒரு போதகரா? எனக்காக ஜெபிப்பீர்களா?" என்று கெஞ்சினார். போதகர் தீமோத்தேயு ஜெபித்தார்.
எரேமியாவில் உள்ள ஒரு பகுதி, தேவன் ஏன் ஜெபத்தைக் கேட்கிறார் மற்றும் பதிலளிக்கிறார் என்பதை நாம் உணர உதவுகிறது. தேவன் அக்கறை காட்டுகிறார்! அவர் தனக்குப் பிரியமான ஆனால் பாவத்தால் நிறைந்து சிறைபிடிக்கப் பட்டுப்போன ஜனங்களுக்கு, "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே" (29:11) என்று உறுதியளிக்கிறார். அவர்கள் தம்மிடம் திரும்பும் காலத்தைத் தேவன் எதிர்நோக்கினார். "அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்" (வ. 12-13).
தீர்க்கதரிசி சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஜெபத்தைப் பற்றி இதையும் இதற்கு மேலும் கற்றுக்கொண்டார். தேவன் அவருக்கு, "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்" (33:3) என்று உறுதியளித்தார்.
ஜெபிக்கும்படி இயேசுவும் நம்மை உந்துகிறார். "உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்" (மத்தேயு 6:8) என்று அவர் கூறினார். எனவே ஜெபத்தில் "கேளுங்கள்," "தேடுங்கள்," மற்றும் "தட்டுங்கள்" (7:7). நாம் வைக்கும் ஒவ்வொரு விண்ணப்பமும் பதில் அளிப்பவருடன் நம்மை நெருங்கச் செய்கிறது. ஜெபத்தில் நாம் தேவனுக்கு அந்நியராக இருக்க வேண்டியதில்லை. அவர் நம்மை அறிந்திருக்கிறார், நம்மிடமிருந்து கேட்க விரும்புகிறார். நம்முடைய கவலைகளை இப்போதே அவரிடம் எடுத்துச் சொல்லலாம்.
கிறிஸ்துவின் ஒளி பிரகாசமாக ஒளிர்கிறது
மிச்சிகனில் உள்ள ஹைலேண்ட் பார்க் தெருக்களில் விளக்குகள் அணைந்தபோது, ஒளிக்கு மற்றொரு மூலமான சூரியன், அங்கு இரவில் ஒளியேற்றியது. மின் பயன்பாட்டு நிறுவனத்திற்குப் பணம் செலுத்த நிதியின்றி அந்நகரம் தவித்தது. மின்வாரியத்தினர் தெருவிளக்குகளை அணைத்து, 1,400 மின்கம்பங்களிலிருந்த மின்விளக்குகளை அகற்றினர். இதனால் நகரவாசிகள் பாதுகாப்பின்றி இருளில் மூழ்கினர். "இங்கே சில குழந்தைகள் பள்ளியிலிருந்து வருகிறார்கள், இங்கே விளக்குகள் இல்லை. அவர்கள் தெருவில் குத்துமதிப்பாகத்தான் நடக்க வேண்டும்" என்று ஒரு நகரவாசி செய்தி குழுவினரிடம் கூறினார்.
நகரத்தில் சூரிய சக்தியில் இயங்கும் தெருவிளக்குகளை நிறுவ ஒரு இலாப நோக்கற்ற குழு அமைக்கப்பட்டபோது, நிலைமை மாறியது. மனிதவள அமைப்பு ஒருங்கிணைந்து பணியாற்றி, எரிசக்தி கட்டணங்களில் நகரத்தின் பணத்தை மிச்சம் பிடித்தும், அதே நேரத்தில் நகரவாசிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் ஒளிக்கான ஆதாரத்தையும் பெற்றுத் தந்தது.
கிறிஸ்துவுக்குள்ளான நம் வாழ்வில், நமது நம்பகமான ஒளி ஆதாரம் தேவகுமாரனாகிய இயேசுவே. அப்போஸ்தலன் யோவான் எழுதியது போல், “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1யோவான் 1:5). யோவான், "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்" (வ.7) என்று குறிப்பிட்டார்.
இயேசுவே தன்னை, "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” (யோவான் 8:12) என்று அறிவித்தார். தேவனின் பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொரு அடியையும் வழிநடத்துகையில், நாம் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டோம். அவரது வெளிச்சம் எப்போதும் பிரகாசமாக ஒளிர்கிறது.
ஞானமான தெரிந்தெடுப்பு
மறைந்த எனது தாயாரின் வீட்டை விற்கவா? என் அன்பான, விதவை தாயார் இறந்த பிறகு, அந்த முடிவு என் இதயத்தை பாரமாக்கியது. பாச உணர்வு, என் உணர்வுகளை ஆண்டது. இருப்பினும், நானும் என் சகோதரியும் இரண்டு வருடங்களாக அவரது காலி வீட்டைச் சுத்தம் செய்து, பழுது பார்த்தோம். அதை விற்பனைக்கேற்றதாக மாற்றினோம். இது 2008 இல் நடந்தது, மேலும் உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் வாங்குபவர்கள் இல்லை. நாங்கள் விலையைக் குறைத்துக்கொண்டே இருந்தோம் ஆனால் விற்பனையாகவில்லை. பிறகு, ஒரு நாள் காலையில் என் வேதாகமத்தைப் படிக்கும் போது, இந்தப் பகுதி என் கண்ணில் பட்டது: "எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு" (நீதிமொழிகள் 14:4).
இந்த நீதிமொழி, விவசாயத்தைப் பற்றிப் பேசுகிறது, ஆனால் அதன் செய்தியில் நான் பேராவல் கொண்டேன். ஒரு ஆளில்லாத தொழுவம் சுத்தமாக இருக்கும், ஆனால் குடியிருப்போரின் "ஜனசடுதி " இருந்தால் மட்டுமே அது பயிர் அறுவடை இருக்கும். எங்களுக்கோ அந்த அறுவடை லாபம் மற்றும் குடும்ப மரபாக இருக்க வேண்டும். என் சகோதரியை அழைத்து, “அம்மா வீட்டை நாமே வைத்துக் கொண்டால் என்ன? நாம் அதை வாடகைக்கு விடலாம்" என்றேன்.
இந்த முடிவு எங்களை ஆச்சரியப்படுத்தியது. அம்மாவின் வீட்டை முதலீடாக மாற்றும் திட்டம் எங்களிடம் இல்லை. ஆனால் வேதாகமம், ஆவிக்குரிய வழிகாட்டியாக மட்டுமின்றி, நடைமுறைக்கேற்ற ஞானத்தையும் வழங்குகிறது. தாவீது ஜெபித்தபடி, “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்” (சங்கீதம் 25:4).
எங்கள் விருப்பப்படி, நனையும் என் சகோதரியும் பல அன்பான குடும்பங்களுக்கு அம்மாவின் வீட்டை வாடகைக்கு விடும் பாக்கியம் பெற்றோம். மேலும் வேதம் நம் தீர்மானங்களை முடிவெடுக்க உதவுகிறது என்ற வாழ்வை மாற்றும் இந்த சத்தியத்தையும் நாங்கள் கற்றுக்கொண்டோம். "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங்கீதம் 119:105) என்று சங்கீதக்காரன் எழுதினான். நாம் தேவனுடைய வெளிச்சத்தில் நடப்போமாக.
ஒரே பார்வையாளர்
கைல் ஸ்பெல்லர், சாம்பியன்ஷிப் கூடைப்பந்தாட்டப் போட்டிகளின் போது, உற்சாகமாக அறிவிப்பு கொடுக்கும் தனது பிரேத்யேகமான அறிவிப்பு மொழிநடைக்கு மிகவும் பிரபலமானவர். "ஆரம்பிக்கலாம்!" அவர் மைக்கில் இடி முழக்கினார், ஆயிரக்கணக்கான ரசிகர்களும், அந்த செயலைப் பார்க்கும் அல்லது கேட்கும் லட்சக்கணக்கான மக்களும், 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வர்ணனையாளர் விருதுக்கான பரிந்துரையைக் கைலைப் பெற்ற குரலுக்கு இசைகின்றனர். "கூட்டத்தினரையும், வீரர்களையும் எவ்வாறு உற்சாகப்படுத்துவது என்பது எனக்குத் தெரியும்," என்று அவர் கூறுகிறார். இருப்பினும், அவரது குரல் கலைத்திறனின் ஒவ்வொரு வார்த்தையும் தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில் இடம்பெற்றது தேவனை மகிமைப்படுத்துவதாகும் என்கிறார். கைல் மேலும், "ஒரே பார்வையாளர்களுக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்" என்று தனது பணி குறித்துச் சொல்கிறார்.
கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை மற்றும் இறையாண்மை குறித்த சந்தேகங்களை தங்களது நடைமுறை வாழ்க்கையிலும் கூட ஊடுருவ அனுமதித்த கொலோசெய சபையினருக்கு இதே போன்ற நெறிமுறைகளை அப்போஸ்தலன் பவுல் வலியுறுத்தினார். அதற்கு உத்தரவாக, பவுல் எழுதினார், "வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்" (கொலோசெயர் 3:17).
பவுல் மேலும் கூறினார், "எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்" (வச. 24). கைல் ஸ்பெல்லரைப் பொறுத்தவரை, அதில் அவரது சிற்றாலய போதகர் என்ற பணியும் அடங்கும். அதைக் குறித்து, "பூமியில் எனது நோக்கம் இதுவே; மேலும் அறிவிப்பு கலை அதில் ஒரு சிறந்த பகுதியே" என்கிறார். தேவனுக்கான நமது சொந்த வேலை, நமது ஒரே பார்வையாளருக்கு இனிமையாக இருக்கும்.