எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மைக் விட்மெர்கட்டுரைகள்

அறிவு காயப்படுத்தும்போது

கிராண்ட் கேன்யன் வழியாக, இருபத்தைந்து நாட்கள் மிதவைப் படகு பயணத்திற்கு பிறகு, சாக் எல்டரும் அவரது நண்பர்களும் கரை வந்துசேர்ந்தனர். அவர்களின் படகுகளை மீட்டெடுக்க வந்த நபர் கோவிட்-19 வைரஸ் பற்றி அவர்களிடம் கூறினார். அவர்கள் அதை நம்பவில்லை, அவர் கேலி செய்கிறார் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறியதும் அவர்களின் தொலைபேசிகள் பெற்றோரின் அவசர செய்திகளுடன் வந்து சேர்ந்தன. சாக்கும் அவனது நண்பர்களும் திகைத்தனர். அவர்கள் மீண்டும் ஆற்று பயணத்திற்கு திரும்பிப்போய் தற்போதைய தொற்று பிரச்சனையிலிருந்து விடுபட எண்ணினர்.

பாவ உலகத்தில், அறிவானது வேதனையை கூட்டக்கூடியதாயிருக்கிறது. பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்” (1:18) என்று குறிப்பிடுகிறார். குழந்தையின் அறியாமையைக் கண்டு பொறாமை கொள்ளாதவர் யார்? காரணம் இனவெறி, வன்முறை மற்றும் புற்றுநோய் பற்றி குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. நாம் வளர்ந்து, நம்முடைய பலவீனங்களையும் தீய எண்ணங்களையும் பகுத்தறிவதற்கு முன்பு மகிழ்ச்சியாக இருக்கவில்லையா?

எங்கள் மாமா ஏன் அதிகமாக குடிக்கிறார் அல்லது எங்கள் பெற்றோரின் விவாகரத்துக்கு என்ன காரணம்? போன்ற குடும்ப இரகசியங்களை அறிவதற்கு முன்பு நாம் மகிழ்ச்சியாய் இருக்கவில்லையா?

அறிவின் வேதனை விரும்பத்தக்கதல்ல. ஆனால் அவற்றை சகித்துக்கொள்ளவும், அதில் வளரவும் நம்மை ஊக்குவிக்கும், ஒரு உயர்ந்த அறிவு இருக்கிறது. இயேசு என்னும் தேவனுடைய வார்த்தையே நம்முடைய

இருளில் பிரகாசிப்பிக்கும் ஒளி (யோவான் 1:1-5). “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1 கொரிந்தியர் 1:30). இயேசுவிடம் சரணடைவதற்கு உங்களுடைய வேதனையே ஒரு காரணம். அவர் உங்களை அறிந்திருக்கிறார், உங்களை பாதுகாக்கிறார்.

குணமடைந்ததைப் போல வாழுங்கள்

இந்தியாவில் இருந்த இரண்டு சகோதரிகள் பார்வையற்றவர்கள். அவர்களின் தந்தை கடின உழைப்பாளியாக இருந்தார். ஆனால் அவர்களுக்கு பார்வையை அளிக்கும் அறுவை சிகிச்சையை செய்ய அவருக்கு வசதியில்லை. பின்னர் குறுகிய கால மருத்துவ பணிக்காக ஒரு டாக்டர்கள் குழு அவர்களின் பகுதிக்கு வந்தனர். அவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் விளைவாக,  காலையில், செவிலியர்கள் தங்கள் கண் கட்டுகளை அவிழ்க்கும்போது, பார்வையற்ற அந்த பெண்கள் மகிழ்ச்சியோடு சிரித்தனர். அதில் ஒருவள், “அம்மா, நான் பார்க்கிறேன்! என்னால் பார்க்க முடிகிறது!” என்று ஆனந்த கூச்சலிட்டாள். 

பிறப்பிலிருந்தே முடவனாக இருந்த ஒருவன், தேவாலய வாசலில் தனது வழக்கமான இடத்தில் அமர்ந்து பிச்சை கேட்டான். பேதுரு தன்னிடம் பணம் ஏதுமில்லை, ஆனால் அவரிடம் அதைவிட சிறந்த ஒன்று இருந்ததாய் கூறினார். “நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட” (அப்போஸ்தலர் 3:6) என்று சொன்னார். அந்த மனிதன் “குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூடத் தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்” (வச. 8).

பார்வை பெற்ற அந்த சகோதரிகளும், சுகம் பெற்ற அந்த முடவனும், தங்கள் நன்றியுணர்வை வெளிப்படையாய் பிரதிபலித்தனர். அந்த சகோதரிகள் ஆச்சரியத்தில் வியப்படைந்தனர். அந்த முடவன் துல்லி குதித்து நடந்தான். 

உங்கள் சொந்த திறன்களைக் கருத்தில்கொள்ளுங்கள். நீங்கள் அற்புதவிதமாக குணமடைந்திருந்தால், இந்த திறன்களை நீங்கள் எப்படி ஆச்சரியமாய் அனுபவித்திருப்பீர்கள்? அவற்றை எப்படி வித்தியாசமாகப் பயன்படுத்தியிருப்பீர்கள்? இப்போது இதை கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் இயேசுவை நம்பினதினால், அவர் உங்களை ஆவிக்குரிய ரீதியில் குணமாக்கியுள்ளார். அவர் உங்கள் பாவங்களிலிருந்து உங்களை மீட்டெடுத்தார். 

நம்மை உருவாக்கி காப்பாற்றியவருக்கு நன்றி செலுத்துவோம். அவர் நமக்கு வழங்கிய அனைத்தையும் அவருக்கு அர்ப்பணிப்போம்.

 

மற்றவர்கள் மீது முதலீடு செய்தல்

ஒரு கார்பரேஷன் நிறுவனம் தங்களுடைய உணவுப்பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்கும் பத்து நபர்களில் ஒருவருக்கு 1000 மைல்கள் தூரம் விமான பயணத்தை இலவசமாய் அறிவித்தது. ஒரு நபர், அவர்களின் மிகவும் மலிவான உணவுப்பொருளான சாக்லேட் கப் கேக்கை பன்னிரண்டாயிரம் ஆர்டர் செய்தார். அதற்கு சுமார் 2.25 இலட்ச ரூபாய் செலவானது. அதினால் அவர் முக்கிய அந்தஸ்தை அடைந்து, அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் வாழ்நாள் முழுமைக்குமான விமானப் போக்குவரத்தை இலவசமாகப் பெற்றார். மேலும் அவர் வாங்கிய அந்த சாக்லேட் கேக்குகளை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். அதினால் அவர் வரிவிலக்கும் பெற்றார். என்ன ஒரு புத்திசாலித்தனம்!

ஒரு அநீதியான உக்கராணக்காரனைக் குறித்து இயேசு சற்று முரண்பாடான ஒரு உவமையைச் சொல்லுகிறார். அவன் பணி நீக்கம் செய்யப்படவிருப்பதால், தன் எஜமானுக்கு போகவேண்டிய கடனை கடளானிகளுக்கு குறைக்கிறான். அவன் அவ்வாறு செய்தால், தன்னுடைய பணி நீக்கத்திற்கு பின்பு மக்கள் அவனை ஆதரிப்பார்கள் என்று எண்ணி அவன் அவ்வாறு செய்கிறான். அவனுடைய இந்த நெறியற்ற இரக்கத்தை இயேசு பாராட்டவில்லை. ஆனால் அவனுடைய புத்திசாலித்தனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்" (லூக்கா 16:9) என்று இயேசு கூறுகிறார். “அந்த சாக்லேட் கப் கேக் மனிதர்” தன்னுடைய குறைவான தொகையில் உணவுப்பொருளை வாங்கி, அதை இலாபகரமான விமான பயணமாய் மாற்றியதுபோல, உலகத்தின் ஆஸ்திகளைப் பயன்படுத்தி, நாமும் மெய்யான ஐசுவரியத்தை சுதந்தரிக்கலாம் (வச. 11).

இந்த ஆஸ்திகள் யாவை? “உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை" (12:33) என்று இயேசு கூறுகிறார். நம் முதலீடு நமக்கு இரட்சிப்பை வாங்கித் தராது. ஆனால் “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (வச. 34) என்பதங்கிணங்க, அது நம்முடைய இரட்சிப்பை உறுதிப்படுத்துகிறது (வச. 34).

தாய் போல நேசி

1943இல் வங்காளத்தின் பஞ்சத்தில் தான் வளர்ந்த விதத்தை மாலினி தன் பேரனிடத்தில் சொன்னாள். அவளுடைய ஏழ்மையான குடும்பம், பெரும்பாலும் அரிசிக்கூழையே குடித்தனர். பலநேரம் பட்டினியாய் இருந்தனர். அவள் தகப்பனார் எப்போதாவது மீன்பிடித்துக் கொண்டுவருவார். இரவு உணவு சமைத்த அவருடைய தாயார், "மீனின் தலைப்பகுதியே எனக்கு போதுமானது, அதுதான் நல்லது" என்று எடுத்துக்கொள்வாராம். ஆண்டுகள் கடந்த பின்புதான், மீனின் தலைப்பகுதியில் எந்த சதையும் இருக்காது என்பதைத் மாலினி தெரிந்துகொண்டாள். அவள் தாயார் அதை சாப்பிடவும் இல்லை. ஆனால் அது சுவையாய் இருந்தது போல காட்டிக்கொள்வாராம். “பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் என்று அவர் அப்படிச் செய்வார். நாங்கள் அவரைக் குறித்து கவலைப்பட்டதேயில்லை.” என்றாள் மாலினி.
நாளைக்கு தாய்மார்கள் தினம் கொண்டாடப்போகிற நாம், அவர்கள் நமக்கு செய்த நன்மைகளை நினைவுகூர்வோம். அவர்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துவோம். அவர்களைப் போலவே நேசிக்கப் பழகுவோம்.
“பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல” (1 தெசலோனிக்கேயர் 2:7) பவுல், தெசலோனிக்கேய சபைக்கு ஊழியம் செய்தார். “வெகு போராட்டத்தோடே” அவர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்ததாகவும், அவர்களுக்காய் தன் ஜீவனையும் கொடுக்க ஆயத்தமாயிருப்பதாகவும் அறிவிக்கிறார் (வச. 2,8). "ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்" (வ.9). என்கிறார். ஒரு தாயைப் போல் பிரயாசப்படுகிறார்.
சிலர் தாயின் அன்பை புறக்கணிக்கக்கூடும். "ஆனால் எங்களுடைய பிரயாசம் வீணாகவில்லை" (வச. 1) என்று பவுல் குறிப்பிடுகிறார். மற்றவர்கள் எப்படி நம்மை ஏற்றுக்கொள்ளுகிறார்கள் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் தியாகமாய் ஊழியம் செய்ய நம்மால் தீர்மானிக்க முடியும்ம. நம் பரம தகப்பனைப் போலவே, நம் தாயும் பெருமிதம் கொள்வாள்.

பொய்யின் பிதா

விக்டர், ஆபாச படங்களுக்கு அடிமையானான். அவன் நண்பர்கள் பலர் அத்தகைய படங்களை பார்ப்பதுண்டு. இவனும் நேரத்தை போக்க எண்ணி. அதில் சிக்கிக்கொண்டான். ஆனால், அது எவ்வளவு பெரிய தவறென்பதை இப்போது உணர்கிறான், அவன் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தான், மேலும் அவன் மனைவியும் அவனைப் பிரிந்தாள். எனவே, இனி அதை பார்ப்பதில்லை என்று தீர்மானித்துள்ளதால், அவைகளைப் பார்க்கமாட்டான். ஆனாலும், இது மிகவும் தாமதமோ என்று சந்தேகிக்கிறான். அவன் திருமண வாழ்வு மீட்கப்படுமா? அவன் முற்றிலுமாய் விடுதலைப்பெற்று, மன்னிக்கப்பட முடியுமா?
எல்லோரும் இதைச் செய்கிறார்கள். இதிலென்ன தவறு?.என்று நம் எதிரியாகிய பிசாசு, சோதனைகளை அற்ப விஷயங்களைப்போல கொண்டுவருவான். ஆனால் அவனுடைய திட்டங்களில் நாம் பிடிபட்ட மாத்திரத்தில், அவன் நம்மை விழத்தள்ளுகிறான். 'இது மிகவும் தாமதம்! நீ வெகு தூரம் சென்றுவிட்டாய்! இப்போது உனக்கு நம்பிக்கை ஏதுமில்லை!' என்றும் கூறுகிறான்.
நாம் ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபடும்போது நம்மை வீழ்த்த என்னவெல்லாம் சொல்லவேண்டுமோ, பிசாசு அதையெல்லாம் சொல்வான். ஆனால் இயேசுவோ, “அவன் (பிசாசு) ஆதிமுதற் கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்” (யோவான் 8:44) என்கிறார்.
பிசாசு பொய்யனென்றால், நாம் அவனுக்கு செவிசாய்க்க கூடாது. நம்முடைய பாவம் பெரிய விஷயமல்ல எனும்போதும், நமக்கு இனி நம்பிக்கையே இல்லை எனும்போதும், நாம் செவிகொடுக்க கூடாது. இத்தீமையானவனின் வார்த்தைகளை புறக்கணிக்கவும், மாறாக அவர் சத்தத்திற்கு செவிகொடுக்கவும் இயேசு உதவிசெய்வாராக. “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (வச. 31-32) என்னும் அவருடைய வாக்குறுதியில் நாம் ஆறுதலடைவோம்.

ஆவிக்குரிய நோய் கண்டறிதல்

என் மாமனாரின் கணையத்திலிருந்த புற்றுநோய் கட்டியை கிமோ சிகிச்சை கட்டுப்படுத்தியது, ஆனால் பலனளிக்கவில்லை. அக்கட்டி மீண்டும் வளர ஆரம்பிக்க, அவர் வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் தன் மருத்துவரிடம், “இந்த கிமோ சிகிச்சையை நான் இன்னும் தொடரத்தான் வேண்டுமா? ஒருவேளை மாற்று மருந்தோ, கதிர்வீச்சு சிகிச்சையை முயற்சிக்கலாமா?” எனக் கேட்டார்.

யூத ஜனங்களும் தங்கள் ஓட்டத்தில் வாழ்வா சாவா என்ற கேள்வியோடிருந்தனர். யுத்தத்தினாலும், பஞ்சத்தினாலும் சோர்ந்துபோன தேவ ஜனங்கள், தங்கள் பிரச்சனைக்கு காரணம் அதிகமான விக்கிரக ஆராதனையா, அல்லது விக்கிரக ஆராதனை போதுமானதாக இல்லையென்பதா என குழம்பினர். வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அதற்குப் பானபலிகளை அதிகம் வார்த்தால், அது தங்களைப் பாதுகாத்து, செழிப்படையச் செய்யும் என முடிவெடுத்தனர் (எரேமியா 44:17).

அவர்கள் மிகவும் தவறாக தங்கள் சூழ்நிலையை புரிந்துகொண்டதாக எரேமியா சொல்கிறார். விக்கிரகத்தை ஆராதிப்பதில் ஏதேனும் தவறு செய்துவிட்டோமா என்று அவர்கள் யோசித்தனர், ஆனால் அந்த விக்கிரகங்களை அவர்கள் வைத்திருந்தது தான் அவர்களின் தவறு. அவர்கள் தீர்க்கதரிசியைப் பார்த்து, “நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல்” (வச. 16) என்றார்கள். எரேமியா, “நீங்கள் தூபங்காட்டி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வேதத்துக்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும் இணங்கி நடவாமலும் போனபடியினாலே இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்கு நேரிட்டது என்றான்” (வச. 23).

யூதாவைப் போலவே, நாமும் நம்மை சிக்கலில் அகப்படுத்திய பாவங்களை இருமடங்காக்கச் செய்ய தூண்டப்படலாம். உறவில் சிக்கலென்றால் நாம் தனித்து வாழ்கிறோம்; பணப்பிரச்சனை என்றாலும் நம் விருப்பப்படியே செலவுசெய்கிறோம். ஒதுக்கிவைக்கப்பட்டால் நாம் அதற்கு சமமாக மூர்க்கமடைகிறோம். ஆனால் நம் பிரச்சனைகளுக்கு காரணமாயிருந்த விக்கிரகங்கள் நம்மை காப்பாற்றப் போவதில்லை. நாம் இயேசுவிடம் மனந்திரும்பும்போது, அவரே நம் பிரச்சனைகளினூடே நம்மை தூக்கி சுமப்பார்.

சிறுநரிகள்

விமானி தன் தேநீர் கோப்பையை அதின் இருக்கையில் வைக்க முடியவில்லை. எனவே அதை கட்டுப்பாட்டின் பகுதியில், நடுவிலே வைத்தார். விமானம் சற்று தடுமாறியபோது, தேநீர் கோப்பை கவிழ்ந்து, அதிலிருந்த தேநீர் கட்டுப்பாட்டு பலகையில் சிந்தி, இயந்திரத்தை பழுதடையச் செய்தது. விமானம் சற்று தடுமாறி, கடைசியில் தரையிறக்கப்பட்டது. அதேபோன்ற ஒரு சம்பவம் வேறொரு விமானத்திற்கு ஏற்பட்ட பின்னர், அந்த விமானத்தின் கட்டமைப்பாளர்கள் பிரச்சனை என்ன என்பதை உணர்ந்தனர். 30கோடி விலைமதிப்புள்ள விமானத்தில் தேநீர் கோப்பை வைக்கும் இருக்கை சிறியதாக இருந்தது. இந்த சிறிய தவறானது பெரிய பிரச்சனைகளுக்கு மூலகாரணமாய் அமைந்தது. 

சிறிய விஷயங்கள் சிலவேளைகளில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, உன்னதப்பாட்டின் நேசர் தன்னுடைய ரூபவதியைப் பார்த்து, “திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்” (2:15) என்று கூறுகிறார். திராட்சைப் பழங்களுக்கு ஆசைப்படும் நரிகள் திராட்சைத் தோட்டத்தின் மதில்கள் மேல் ஏறியும், குழிதோண்டுவதையும் அவர் பார்க்கிறார். அவைகளை தேடிப்பிடிப்பது மிகவும் கடினம். அவைகள் இரவு வேளைகளில் ஊடுருவுகின்றது. அவைகளை இலகுவாய் எடுத்துக்கொள்ளக் கூடாது. 

உங்களுடைய நெருங்கிய உறவுகளை எது அச்சுறுத்துகிறது? அது, பெரும்பாலும் பெரிய காரியமாய் இருக்காது. ஒரு சிறுவார்த்தையோ, விமர்சனமோ நம்முடைய அன்பின் வேருக்குள் ஊடுருவலாம். அவ்வப்போது ஏற்படும் சிற்சில தவறுகள் ஒன்றாகச் சேர்ந்து, ஒரு நல்ல, ஆழமான சிநேகத்தையோ அல்லது திருமண உறவையோ முற்றிலும் பாதிக்கும். 

அந்த சிறுநரிகளை பிடிப்பதற்கு தேவன் நமக்கு உதவி செய்வாராக! நம்முடைய திராட்சைத் தோட்டங்களை பலப்படுத்த தேவையான மன்னிப்பை கேட்பதற்கோ அல்லது கொடுப்பதற்கோ தயங்காமல் செயல்படுவோம். நமக்கு தேவையானதை தேவன் நமக்கு அருளுவாராக!

சிறியதும் பெரியதுமான சிருஷ்டிகள்

மிச்சல் கிராண்ட், டிம்பர் என்று பெயரிட்டு ஒரு நீர்நாய்க்கு பயிற்சியளித்து, அதை காட்டில் கொண்டுபோய் விட தீர்மானித்தார். அதற்கு நீச்சல் பழக்குவதற்கு அதை குளத்தில் கொண்டுபோய் விட்டபோது, சிறிய படகில் பயணித்த மிச்சலிடத்தில் அது திரும்பவந்து தன் மூக்கால் படகை வருடியது. ஒரு நாள் காலையில் டிம்பர் படகின் அருகே வரவேயில்லை. குளத்தில் ஆறு மணி நேரம் தேடியும் டிம்பரைக் காணவில்லை. சில வாரங்கள் கழித்து அந்த குளத்தின் அருகே ஒரு நீர்நாயின் எலும்புக்கூட்டை மிச்சல் கண்டெடுத்தாள். அது டிம்பருடைய எலும்புக் கூடுதான் என்று எண்ணிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

மிச்சலுக்காகவும் டிம்பருக்காகவும் என் மனது வலித்தது. “அது ஒரு நீர் வாழ் ஜந்து தானே” என்று எனக்குள் ஆறுதல் படுத்திக்கொண்டேன். ஆனால் நான் அதை நேசிப்பதுபோல், தேவனும் அதை நேசித்து பராமரிக்கிறார் என்பதே உண்மை. வானளாவும் அவருடைய அன்பு, தாழ பூமியிலுள்ள சிறிய உரியினங்களையும் எட்டுகிறது. அவருடைய சிருஷ்டிப்பின் பகுதியில், நம்மை நல்ல பராமரிப்பாளர்களாக அழைக்கிறார் (ஆதியாகமம் 1:28). அவர் “மனுஷரையும் மிருகங்களையும்” காப்பாற்றுகிறார் (சங்கீதம் 36:5-6). “அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்” (147:9).

ஒரு நாள் மிச்சல் அந்த குளத்தில் படகின் மூலம் பயணித்தபோது, அங்கே டிம்பர் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அங்கே டிம்பர் தன் குடும்பத்தை தேடிக்கொண்டது. அதின் குடும்பத்தின் வேறு இரண்டு குட்டிகளை வளர்க்கவும் மிச்சல் உதவிசெய்தார். டிம்பர் மிச்சலின் படகின் அருகே வந்து, அதை தன் நுனி மூக்கால் செல்லமாய் வருடியது. “நீ நன்றாய் வாழ்கிறாய், உனக்கு அழகான ஒரு குடும்பம் இருக்கிறது” என்று மிச்சல் புன்னகையோடு கூறினாள். டிம்பர், சத்தம் எழுப்பிக்கொண்டு தன் வாலால் தண்ணீரை பீய்ச்சியடித்து, தன் புதிய அம்மாவை தேடிப் புறப்பட்டது.

எனக்கு மகிழ்ச்சியான முடிவு பிடிக்கும். பிதா, ஆகாயத்துப் பறவைகளை போஷிக்கிறவராதலால் அவர் நம்மையும் போஷிக்க போதுமானவர் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 6:25-26). “உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் (அடைக்கலான் குருவிகள்) ஒன்றாகிலும் தரையிலே விழாது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (10:29-31).

உங்கள் அனுக்குரியவர்களை நேசியுங்கள்

ஆமோஸ், கர்வம் உள்ள ஒரு ஊதாரி, டேனி சுயசந்தேகத்தால் உடைக்கப்பட்ட தனிமையானவன். எப்படியோ இந்த விசித்திரமான அறிவாளிகள் நண்பர்களாயினர். சுமார் 10 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக சிரித்து, கற்று மகிழ்ந்தனர். ஒரு நாள் இவர்களின் வேலைக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் டேனி, ஆமோஸின் சுயநலமான போக்கை சகிக்க கூடாமல் தாங்கள் இதற்கு மேல் நண்பர்களாய் இருக்க முடியாது என்று கூறினார்.

மூன்று நாட்கள் கழித்து, ஆமோஸ் ஒரு கொடுமையான செய்தியோடு தொலைபேசியில் அழைத்தார்; மருத்துவர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தனர், மேலும் அவர் உயிர்வாழ ஆறு மாதங்கள் அவகாசம் கொடுத்திருந்தனர். டேனியின் உள்ளம் உடைந்தது,”நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நீங்கள் எண்ணினாலும் சரி, நாங்கள் நண்பர்கள்” என்று கூறினார்.

பவுல் சற்றே கடினமான தொலைநோக்குப் பார்வையாளர், மேலும் பர்னபா மென்மையான இருதயம் கொண்ட ஊக்குவிப்பாளர். ஆவியானவர் இவர்கள் இருவரையும் இணைத்து அருட்பணி பயணத்தில் ஒன்றாக அனுப்பினார் (அப்போஸ்தலர் 13:2-3) அவர்கள் பிரசங்கித்து சபைகளை நிறுவினார்கள். மார்க்குவின் பிரிவினால் உண்டான கருத்து வேறுபாடுமட்டில் ஒன்றாக இருந்தார்கள். பர்னபா, மார்க்குவிற்கு இரண்டாம் வாய்ப்பு அளிக்க மனதாய் இருந்தார். ஆனால் பவுல், அவர் இனி நம்பிக்கைக்குரியவர் அல்ல என்றார். ஆகவே இருவரும் பிரிந்தனர் (அப்போஸ்தலர் 15:36-41).

இறுதியில் பவுல் மார்க்குவை மன்னித்தார். மூன்று நிருபங்களை அவருடைய வாழ்த்துகளோடு ஆரம்பித்தோ அல்லது அவரை பாராட்டி நிறைவோ செய்துள்ளார் (கொலோசெயர் 4:10; 2தீமோத்தேயு 4:11; பிலேமோன் 1:24). ஆனால் பர்னபாவிற்கு என்ன ஆனது என்று நமக்கு தெரியவில்லை. பவுலோடு இந்த வாழ்வில் ஒப்புரவாகும் வரை அவர் வாழ்ந்தாரா? அப்படித்தான் என்று நான் நம்புகிறேன்.

உங்களின் இன்றைய சூழ்நிலை எப்படியோ, யாருடனாகிலும் உங்களுக்கு உறவில் பிரிவு இருந்தால் ஒப்புரவாக முயலுங்கள். அவர்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று சொல்வதற்கும், காண்பிப்பதற்கும் இதுதான் நேரம்.