ஒரு ஆபத்தான மாற்றுப்பாதை
ஹேமா நினைத்தாள் “என்ன ஒரு வீணான நேரம்”. அவளுடைய காப்பீட்டு முகவர் அவர்கள் மீண்டும் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது மற்றொரு சலிப்பான விற்பனைக் காரியம் என்று ஹேமாவுக்குத் தெரியும், அனால், அவளுடைய விசுவாசத்தைக் குறித்துப் பேச ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தாள்.
முகவரின் புருவங்கள் பச்சை குத்தப்பட்டிருக்கிறதை கவனித்த அவள், தயக்கத்துடன் ஏன் என்று கேட்டாள். அந்தப் பெண் இது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்பி இப்படி செய்திருக்கிறாள் என்பதை அறிந்துக்கொண்டாள். ஹேமாவின் கேள்வி, எப்போதும் வழக்கமாக பேசும் நிதியைப் பற்றிய பேச்சிலிருந்து ஒரு ஆபத்தான மாற்றுப் பாதையியிருந்தாலும், அதிர்ஷ்டம் மற்றும் விசுவாசத்தைப் பற்றி உரையாடவும், தான் ஏன் இயேசுவை சார்ந்து வாழ்கிறார் என்பதைப் பற்றி பேசவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அந்ந வீணான நேரம் ஒரு தெய்வீக நியமனமாய் மாறியது.
இயேசுவும் ஒரு ஆபத்தான மாற்றுப் பாதையில் சென்றார். யூதேயதவிலிருந்து கலிலேயாவுக்கு பிரயாணப்படும்போது, ஒரு யூதன் நினைத்துப் பார்க்க முடியாத காரியமான, ஒரு சமாரியப்பெண், மற்ற சமாரியர்களும் அவளை தவிர்த்த ஒரு விபச்சார பெண்ணிடம் பேசுவதற்தான மாற்றுப்பாதையை தெரிந்துக்கொண்டார். ஆனாலும் தன்னுடைய உரையாடல் அனேகரை இரட்சிப்புக்குள்ளாக நடத்தும்படியாக முடிந்தது (யோவா. 4:1-26, 39-42.).
நீங்கள் பார்கக்கூட விரும்பாத ஒருவரை சந்திக்கிறீர்களா? நீங்கள் சாதாரணமாக தவிர்க்கும் பக்கத்து வீட்டுக்காரரிடம் மோதிக்கொண்டிருக்கிறீர்களா? “சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும்” எப்போதும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க ஆயத்தமாயிருக்க வேண்டுமென்று வேதாகமம் நாமக்கு நினைவுபடுத்துகிறது (2 தீமோ. 4:2). ஒரு ஆபத்தான மாற்றுப்பாதையைக் கருத்தில் கொள்ளுங்கள். யாருக்குத் தெரியும். தேவன், அவரைக்குறித்துப் பேச ஒரு தெய்வீக வாய்ப்பை இன்றைக்குக் கொடுக்கலாம்!
பிரிவிலும் இணைக்கப்படல்
தன்னுடன் பணிபுரியும் தருணுடன் ஒரு செயல் திட்டத்தை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்ட அசோக், ஒரு பெரிய சவாலைச் சந்தித்தான். அசோக்கும் தருணும் எப்போதுமே எதிர் எதிரான எண்ணங்களைக் கொண்டவர்களாகையால், இதனை எப்படி செய்ய முடியும் என்று மலைத்தனர். இருவரும் மற்றவரின் கருத்துக்களை மதிப்பவர்களாக இருப்பினும், அவர்கள் இருவரின் அணுகு முறைகளும் வேறுபட்டிருப்பதால், பிரச்சனை மிக அருகில் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டனர். முரண்பாடுகள் தோன்றுவதற்கு முன்பு, அந்த இருவரும் தங்களுடைய வேறுபட்ட கருத்துகளைக் குறித்து, தங்களுடைய மேலாளரிடம் கூறினர், அவர், இருவரையும் வெவ்வேறு குழுக்களில் போட்டார். அது ஒரு புத்திசாலித்தனமான முடிவு. அன்று, அசோக் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டான்: ஒன்றாக இணைந்திருப்பது என்பது எப்பொழுதும் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பதில்லை.
இந்த உண்மையை ஆபிரகாமும் உணர்ந்திருக்க வேண்டும். பெத்தேலில் இருந்த அவனும் லோத்துவும் வெவ்வேறு வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறினான் (ஆதி.13:5-9). அவர்கள் இருவரின் மந்தைகளுக்கும் போதிய இடம் இல்லை என்பதை அறிந்த ஆபிரகாம், புத்திசாலித்தனமாக அவர்களின் கூட்டு வாழ்க்கையைப் பிரிக்க ஆலோசனை கூறுகின்றான். முதலில், அவன் “நாம் சகோதரர்” என்பதை வலியுறுத்துகின்றான் (வ.8), லோத்துவிற்கு தன்னுடைய உறவினை நினைவு படுத்துகின்றான். பின்னர், மிகப் பெரிய தாழ்மையைக் காட்டுகின்றான், தன்னுடைய உறவினனான லோத்து முதலாவது தேர்ந்தெடுக்கட்டும் (வ.9) என்று விட்டு கொடுக்கின்றான். ஆபிரகாம் மூத்தவனாக இருந்த போதும், ஒரு போதகர் குறிப்பிட்டதைப் போன்று, “மனம் ஒன்றிய பிரிவினை” க்கு வழிவகுக்கின்றார்.
நம் ஒவ்வொருவரையும் தேவன் தனித்தனி திறமைகளோடு படைத்துள்ளதால், நாம் தனித்து செயல் பட்டால், அந்த இலக்கினை சிறப்பாக அடைய முடியும் என நினைக்கக் கூடும். வேறுபாடுகளிலும் ஒரு ஒற்றுமை உண்டு. நாம் தேவனுடைய குடும்பத்தில் சகோதரரும் சகோதரிகளுமாக இருக்கின்றோம். நாம் காரியங்களை வெவ்வேறு வகையில் தான் செய்ய முடியும், ஆனாலும் நாம் ஒருமித்து ஒரே நோக்கத்திற்காக செயல்படுவோம்.
தேவன் அங்கே இருக்கின்றாரா?
லீலா புற்று நோயால் பாதிக்கப் பட்டு, மரித்துக் கொண்டிருந்தாள். ஓர் அன்பான தேவன், ஏன் தன்னுடைய மனைவி இத்தனை கஷ்டங்களையும் அநுபவிக்கும்படி விட்டார் என்பதை அவளுடைய கணவன் தீமோத்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் வேதாகம ஆசிரியையாக இருந்து கிறிஸ்துவுக்காக உண்மையாய் பணிபுரிந்தாள், அநேகரை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினாள். “நீர் ஏன் இதனை அனுமதித்தீர்?” என்று கதறினான். ஆனாலும், தீமோத்தி தேவனோடு கூட நடப்பதில் உண்மையாய் இருந்தான்.
“அப்படியானால் ஏன் நீ இன்னமும் தேவன் மீது நம்பிக்கையோடு இருக்கின்றாய்?”, “அவரை விட்டுத் திரும்பாமல் இருக்க காரணம் என்ன?” என்று நான் அவனிடம் கேட்டேன்.
“ஏனெனில் இதற்கு முன்பு நடந்தவற்றிற்காக” என்று திமோத்தி பதிலளித்தான். இப்பொழுது நான் தேவனைக் “காண” முடியவில்லை, ஆனால், தேவன் அவனைப் பாதுகாத்து, உதவி செய்த நாட்களை அவன் நினைத்துப் பார்த்தான். இன்னமும் தேவன் அவனுடைய குடும்பத்தைப் பாதுகாத்து வருகின்றார் என்பதற்கு இவை அடையாளம், “நான் நம்பியிருக்கின்ற தேவன், அவர் குறித்த நேரத்தில் வருவார்” என்றான்.
திமோத்தியின் வார்த்தைகள், ஏசாயா 8:17 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, விசுவாசத்தைக் குறித்து ஏசாயாவின் வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றது. அவனுடைய ஜனங்கள், எதிரிகளால் வரும் துன்பத்தை எதிர் நோக்கியிருந்த போது, அவனால் தேவனுடைய பிரசன்னத்தை உணர முடியவில்லை, எனினும் அவன் “நானோ கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்” என்கின்றார், ஏனெனில், தேவனுடைய பிரசன்னம் அவர்களோடு இருக்கும் என்ற அடையாளத்தை அவர் கொடுத்தபடியால், அவன் தேவன் மேல் நம்பிக்கையோடு இருந்தான் (வ.18).
சில வேளைகளில் நம்முடைய துன்பங்களின் மத்தியில் தேவன் இல்லையோ என்று நாம் எண்ணும்படியான சந்தர்ப்பங்கள் நேரலாம். அப்படிப்பட்ட நேரங்களில், நம்முடைய வாழ்வில், கடந்த நாட்களிலும், தற்சமயமும் அவர் செய்த காரியங்களை நினைத்துப் பார்ப்போம். இவையே, நம்மால் காணக்கூடாத தேவன் செய்த, காணக்கூடிய நினைப்பூட்டிகள். அவர் எப்போதும் நம்மோடிருக்கும் தேவன், அவர் தான் தீர்மானித்திருக்கின்ற நேரத்தில், அவருடைய வழியில் பதிலளிப்பார்.
தடைபட்ட திட்டங்கள்
பேச்சுக் குறைவைத் திருத்தும் பயிற்சியாளராக வேண்டுமென திட்டமிட்ட ஜேன், அதற்கான கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தாள். அவள் சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படகூடியவள் என்பதால், பயிலும் போதுள்ள செயல்முறை பயிற்சியின் போது, தான் அந்த வேலைக்குப் பொருத்தமில்லாதவள் என்பதாக உணர்ந்தாள். பின்னர், அவள் ஒரு பத்திரிக்கைக்கு எழுதும் வாய்ப்பைப் பெற்றாள். அவள் தன்னை ஒரு எழுத்தாளராக நினைத்துப் பார்த்ததேயில்லை. ஆனால் அநேக ஆண்டுகளுக்குப் பின்னர், அவள் தேவையிலிருக்கும் குடும்பங்களுக்கு ஆலோசனைகளை எழுதுபவராக மாறினார். “என்னுடைய வாழ்வை நான் பின்னோக்கிப் பார்க்கும் போது, என்னுடைய திட்டத்தை தேவன் ஏன் மாற்றினார் என்பதைக் காணமுடிகிறது, அவர் எனக்கென்று ஒரு பெரிய திட்டத்தை வைத்திருக்கின்றார்” என்றாள்.
தடைசெய்யப்பட்ட திட்டங்களைக்குறிப்பிடும் அநேக நிகழ்வுகளை வேதாகமத்தில், நாம் காணலாம். பவுலின் இரண்டாவது மிஷனரி பயணத்தின் போது, அவர் பித்தினியா நாட்டிற்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல பிரயாசம் எடுத்தார், ஆனால் ஆவியானவரோ அவரை அங்கு போகத் தடை பண்ணினார் (அப். 16:6-7). இது நம்மை நிச்சயமாக திகைக்கச் செய்யும், ஏனெனில், தேவன் தந்த ஊழியத்தினிமித்தம் செய்யும் திட்டங்களை, ஏன் இயேசுவானவர் தடைசெய்ய வேண்டும்? அதற்கான பதிலை அவர் கனவில் பெற்றார், மக்கெதோனியாவினருக்கு அவருடைய உதவி மிகவும் தேவையாயிருந்தது. ஐரோப்பாவின் முதல் சபையை, பவுல் அங்கு தான் நிறுவினார். சாலமோன் இதனையே, “மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்” என்று கூறியுள்ளார் (நீதி. 19:21).
நாம் நமக்குத் திட்டங்களை வகுத்துக் கொள்வது புத்திசாலித்தனம் தான். “திட்டமிடத் தவறு; தவறுவதற்கு திட்டமிடுகின்றாய்” என்பது ஒரு பழமொழி. தேவன் தம்முடைய திட்டங்களை நம்மில் நிறைவேற்றும் படி, நம்முடைய திட்டங்களைத் தடை செய்யலாம். தேவன் மீது நம்பிக்கையுள்ள நாம், அவருடைய வார்த்தைகளை கவனித்து, அதற்குக் கீழ்படிய வேண்டும். அவருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, நம்முடைய வாழ்வில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுபவர்களாவோம்.
நாம் நம்முடைய திட்டங்களைத் தொடரும் போது, அதில் ஒரு புதிய திருப்பத்தையும் சேர்த்துக் கொள்வோம், கவனிப்பதற்குத் திட்டமிடுவோம், தேவனுடைய திட்டத்தைக் கவனிப்போம்.
அன்பிலே பிரிவினையா
சிங்கப்பூரின், ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தைக்குறித்து, பொதுமக்களிடையே கருத்து பரிமாற்றங்கள் ஏற்பட்ட போது, அது, வெவ்வேறு கருத்துடைய விசுவாசிகளையும் பிரித்தது. சிலர் மற்றவர்களைக்குறித்து “குறுகிய மனமுடையவர்கள்” என்றனர், தங்கள் விசுவாசத்தை விட்டுக் கொடுக்கின்றனர் என்றனர்.
சர்ச்சைகள், தேவனுடைய குடும்பங்களில் பிரிவினைகளையும், மனக்காயங்களையும், மக்களிடையே மனச்சோர்வையும் கொண்டுவரும். நான், என்னுடைய சொந்த தீர்ப்புகளைக் கொடுப்பதற்கு முன்பு, வேதாகமப் போதனைகளை என்னுடைய வாழ்வில் பயன்படுத்தும்படி உணர்ந்தேன். நான் ஏற்றுக்கொள்ளாதவர்களைக் குறித்து அதிகமாக விமர்சனம் செய்த தவற்றை உணர்ந்தேன்.
நாம் ஏற்றுக்கொள்ளாத கருத்துக்கள் எவை அல்லது அவற்றை நாம் எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பது பிரச்சனையல்ல, நாம் அவற்றை வெளிப்படுத்தும் போது நம்முடைய இருதயம் எவ்வாறு இருக்கிறது என்பதுதான் பிரச்சனை. நாம் கருத்துக்களை மட்டும்தான் ஏற்றுக் கொள்ளவில்லையா அல்லது அக்கருத்துக்குப் பின்னால் இருக்கும் மக்களையும் கிழித்தெறிய நினைக்கிறோமா?
சில வேளைகளில் தவறான போதனைகளுக்கு எதிர்த்து பேசவேண்டிய நேரம் வரும். நம்முடைய உறுதியான கருத்துகளைக் குறித்து விளக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம். எபேசியர் 4:2-6 வரையுள்ள வசனங்கள் நம்மை மிகுந்த மனத்தாழ்மையோடும், சாந்தத்தோடும், நீடிய பொறுமையோடும், அன்போடும் ஒருவரையோருவர் தாங்கி, “ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்ளுவதற்கு” ஜாக்கிரதையாய் இருக்கும்படியும் வலியுறுத்துகிறது (வச. 3).
சில சர்ச்சைக்குரிய கருத்துகள் தீர்க்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய இலக்கு மக்களின் விசுவாசத்தைக் கட்டுவதேயொழிய, அவற்றைக் கிழித்தெறிவதல்ல (வ.29). நம்முடைய விவாதத்தில் மற்றவர்களை கீழேத்தள்ளி, நாம் வெற்றிபெற நினைக்கிறோமா? அல்லது நாம் தேவனுடைய உண்மையை, அவருடைய நேரத்தில், அவருடைய வழியில், புரிந்துகொள்ள தேவன் உதவும் மட்டும் காத்திருக்கப் போகிறோமா? ஒரே கர்த்தரையும், ஒரே விசுவாசத்தையும் தான் பகிர்ந்து கொள்கிறோம் (வச. 4-6) என்பதை மறவாதிருப்போம்.
தேவனுக்கு அழகானவர்கள்
டெனிஸ் என்கிற இளம்பெண், தன் ஆண் நண்பனுடன் பழகத் துவங்கிய சமயத்தில் தன்னை ஒல்லியாகவைக்கவும், ஸ்டைலாக உடையணியவும் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வாள். அப்போதுதான் அவனுக்கு தன்னை அதிகமாகப் பிடிக்குமென நினைத்தாள். அப்படித்தானே மகளிர் பத்திரிகைகளும் விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் அவன் என்ன நினைத்தான் என்பதை பின்னர்தான் அவள் கண்டுபிடித்தாள். அதாவது, “நீ ஒல்லியாக இல்லாமல், உடைகளில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்த நாட்களிலும்கூட உன்னை எனக்கு அதிகமாகப் பிடித்திருந்தது” என்று சொன்னான்.
அழகு என்பது “மனதுசார்ந்த” ஒன்று என்பதை டெனிஸ் அப்போது உணர்ந்தாள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வைத்துதான் பெரும்பாலும் அழகை மதிப்பிடுகிறோம். வெளிப்புற அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உள்ளான அழகின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறோம். ஆனால் தேவன் எப்போதும் நம்மை தம்முடைய அழகான, பிரியமான பிள்ளைகளாகவே பார்க்கிறார். தேவன் இந்த உலகத்தைச் சிருஷ்டித்தபோது, அற்புதமான ஒன்றை இறுதியில் படைத்தார். அது வேறு எதுவுமல்ல, நாம்தான். அவர் சிருஷ்டித்த எல்லாமே நன்றாயிருந்தன, ஆனால் நம்மை தம்முடைய சாயலில் சிருஷ்டித்தார், அதுதான் கூடுதல் சிறப்பு (ஆதி. 1:27).
தேவன் நம்மை அழகானவர்களாகப் பார்க்கிறார்! இயற்கையின் மகத்துவங்களை மனிதர்களோடு ஒப்பிடும்போது சங்கீதக்காரனால் பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை. “மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்” என்று கேட்கிறார் (சங். 8:4). ஆனாலும் மற்ற அனைத்தையும்விட நமக்கே அதிக மகிமையையும் கனத்தையும் கொடுக்க தேவன் தீர்மானித்தார் (வச. 5.).
இந்த உண்மையை உணரும்போது தேவனை ஏன் துதிக்கவேண்டும் என்று புரிகிறது, ஒரு நிச்சயம் கிடைக்கிறது (வச. 9). மற்றவர்கள் நம்மைப்பற்றி என்னவும் நினைக்கட்டும், ஏன் நாமும்கூட நம்மைப்பற்றி எதுவேண்டுமானாலும் நினைக்கலாம், ஆனால் ஒன்றை மட்டும் மறவாதிருங்கள்; நாம் தேவனுக்கு அழகானவர்கள்.
எல்லாவற்றையும் இழந்துபோனபோது
எல்லாவற்றையும் இழந்துபோனபோது
நீ அங்கிருக்கின்றாயா?
அவனுடைய மனைவி மீள முடியாதவகையில் நோய்வாய்ப்பட்டபோது, மைக்கேல் தான் தேவனோடு வைத்துள்ள உறவால் பெற்றுள்ள சமாதானத்தை தன் மனைவியும் பெற்றுக்கொள்ள வேண்டுமென ஏங்கினான். அவன் தன்னுடைய விசுவாசத்தை அவளோடு பகிர்ந்து கொண்டான். ஆனால், அவளோ அதில் எந்தவொரு ஆர்வத்தையும் காட்டவில்லை. ஒரு நாள் மைக்கேல் அருகிலுள்ள புத்தகக் கடைக்குள் சென்ற போது ஒரு புத்தகத்தின் தலைப்பு அவனுடைய கண்களை ஈர்த்தது. “தேவனே, நீர் அங்கிருக்கின்றீரா? என்பதே அப்புத்தகம். அந்த புத்தகத்திற்கு அவள் எவ்வாறு பதிலளிப்பாள் என்ற சந்தேகத்தோடு, அநேக முறை அந்த புத்தகக் கடைக்குள் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்த மைக்கேல் கடைசியாக அப்புத்தகத்தை வாங்கினார். என்ன ஆச்சரியம்! அவள் அந்த புத்தகத்தை ஏற்றுக் கொண்டாள்.
அந்தப் புத்தகம் அவளுடைய இருதயத்தைத் தொட்டது. அன்றிலிருந்து அவள் வேதாகமத்தையும் வாசிக்க ஆரம்பித்தாள். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மைக்கேலின் மனைவி சமாதானமாக, தேவன் தன்னை விட்டு விலகவும், கைவிடவும் மாட்டார் என்ற உறுதியைப் பெற்றுக் கொண்டவளாய் மரித்துப் போனாள்.
இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தை விட்டு வழிநடத்தும்படி மோசேயை தேவன் அழைத்தபோது, அவனுக்கு வல்லமையைத் தருவதாக தேவன் வாக்களிக்கவில்லை. மாறாக தேவனுடைய பிரசன்னம் அவனோடிருக்கும் என்றார். “நான் உன்னோடே இருப்பேன்” (யாத். 3:12) என்றார். இயேசு. சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக, அவருடைய சீடர்களிடம் கடைசியாக பேசிய போது தேவனுடைய மாறாத பிரசன்னம் எப்பொழுதும் அவர்களோடு இருக்கும் எனவும், அதனை அவர்கள் பரிசுத்த ஆவியின் மூலம் பெற்றுக் கொள்வர் எனவும் வாக்களித்தார் (யோவா. 15:26).
நம் வாழ்வின் சவால்களைச் சந்திக்க தேவன் பல வகைகளில் நமக்கு உதவுகின்றார். உலகப் பிரகாரமான வசதிகளையும், சுகத்தையும், நம் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் தருகின்றார். சில வேளைகளில் அவர் பிரச்சனைகளை சரிசெய்கிறார். ஆனால் மிகச் சிறந்த ஈவாக அவர் தம்மையே தந்துள்ளார். இதுவே நாம் பெற்றுள்ள மிகப் பெரிய பாக்கியம். வாழ்வில் எது நடந்தாலும் அவர் நம்மோடிருக்கின்றார். அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை.
வேதனையில் ஒர் நோக்கமுண்டோ?
தன்னுடைய சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன, இனி வாழ்நாள் முழுவதும் டயலிஸிஸ் செய்துகொள்ள வேண்டுமென தெரிந்து கொண்டபோது ஸ்யூ ஃபென், அந்த சிகிச்சையைத் தொடர விரும்பவில்லை. பணி ஓய்வுபெற்று, தனியாக, ஆனால், நீண்ட நாட்களாக இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தில் வாழும் அவர், தன்னுடைய வாழ்நாளை நீடித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், நண்பர்களின் விடாப்பிடியான முயற்சியால் டயலிஸிஸ் செய்ய சம்மதித்ததோடு, தேவன் அவளுக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையையும் பெற்றுக் கொண்டாள்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தான் செல்லும் ஆலயத்தில் பெலவீனப்படுத்தும் ஒரு வியாதியோடு போராடிக் கொண்டிருந்த ஒரு சிநேகிதியைச் சந்தித்த போது ஸ்யூ தன்னுடைய அனுபவத்திற்கு ஒரு பயன் வந்ததைக் கண்டாள். அந்தப் பெண்ணும் தனிமையில், தன்னை உண்மையாய் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் யாருமின்றி தவித்தாள். ஸ்யூ அவளுடைய உடல், மனரீதியானத் தேவைகளை புரிந்து கொண்டதோடு, அவளுக்குத் தனிப்பட்ட முறையில் உதவவும் முன்வந்தாள். ஸ்யூ தான் சென்ற பாதையின் அனுபவம், அந்தப் பெண்ணோடு அவளுடைய பாதையில் துணையாகச் செல்ல உதவியது. வேறெந்த நபராலும் கொடுக்கமுடியாத ஆறுதலை அவளால் கொடுக்க முடிந்தது. 'தேவன் என்னை எப்படி பயன்படுத்த முடியுமென்பதைத் தெரிந்து கொண்டேன்" என்று கூறினாள்.
நாம் ஏன் கடினமான பாதையில் வழிநடத்தப் படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். ஆனால், தேவன் நம்முடைய துன்பங்களை வேறுவகையில் பயன்படுத்துகின்றார். நம்முடைய சோதனையின் மத்தியில் அவரின் ஆறுதலையும் அன்பையும் தேடி அவரிடம் திரும்புவோமாயின், நாம் பிறருக்கு உதவியாயிருக்கும்படி நம்மை பெலப்படுத்துவார். பவுலும் தன்னுடைய சோதனைகளின் வழியே தேவனுடைய திட்டத்தைத் தெரிந்து கொண்டார். அது அவருக்கு தேவனிடமிருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்ளவும், பிறருக்கு ஆசீர்வாதமாக அதை பயன்படுத்தவும் வாய்ப்பளித்தது (2 கொரி. 1:4). நமக்கு வரும் துன்பங்களையும், வேதனைகளையும் நாம் தடுத்துவிட முடியாது. ஆனால், துன்பத்தின் வழியே தேவனுடைய வல்லமையைப் பெற்று, அதனை நன்மையான பணிக்கு பயன்படுத்துவோமாக.