ஒரு குழந்தையாய், டென்னி பாதுகாப்பற்றவனாய் உணர்ந்தான். அவன் தன் தந்தையின் ஒப்புதலைப் பெற முயன்றான். ஆனால் அதை அவனால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் பள்ளியிலோ அல்லது வீட்டிலோ என்ன செய்தாலும் அதை நேர்த்தியாய் செய்வதில்லை. அவன் வளர்ந்தபோதும் அந்த குற்றவுணர்வு அவனுக்குள் இருந்தது. நான் சிறந்தவனா?. என்ற கேள்வி அவனுக்குள் எப்பொழுதும் இருந்தது.

டென்னி, இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட பின்பே பாதுகாப்பாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாகவும் உணர ஆரம்பித்தான். அவனை படைத்த ஆண்டவர் அவனை நேசித்து தன்னுடைய பிள்ளையாக்கிக்கொண்டார் என்பதைக் கற்றுக்கொண்டான். கடைசியாக, அவன் மதிப்புமிக்கவன், பாராட்டுக்குரியவன் என்னும் நம்பிக்கையோடு தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான். 

ஏசாயா 43:1-4ல், தேவன் தான் தெரிந்துகொண்ட மற்றும் உருவாக்கின இஸ்ரவேலிடம், அவர்களை தன்னுடைய பெலத்தினாலும் அன்பினாலும் மீட்டுக்கொள்வதாக அறிவிக்கிறார். “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்” என்று அறிவிக்கிறார். அவர் அவர்களை நேசித்தபடியினால், அவர்களின் சார்பில் நின்று செயலாற்றுவதாக அறிவிக்கிறார் (வச. 4).

அவர் நேசிக்கிறவர்கள் மீது உண்டாகும் மதிப்பானது எதிலிருந்தும் கிடைப்பதில்லை, அவர் நம்மை அவருடையவர்களாய் தெரிந்துகொண்டார் என்னும் எளிமையான, வலிமையான சத்தியத்திலிருந்தே கிடைக்கிறது. 

ஏசாயா 43ஆம் அதிகாரத்தில் உள்ள இந்த வார்த்தைகள் டென்னிக்கு வெறும் பாதுகாப்பை மட்டும் கொடுக்கவில்லை, தேவன் அவனை அழைத்த அழைப்பிற்கு தன்னால் இயன்றவரை உண்மையாய் செயல்படவேண்டும் என்ற உத்வேகத்தை அவனுக்குள் ஏற்படுத்தியது. இன்று அவர் ஒரு போதகராய், “நாங்கள் இயேசுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டோம்” என்னும் வாழ்வளிக்கும் செய்தியைக் கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறார். இன்று இந்த சத்தியத்தை நாமும் உறுதியாய் நம்பி ஜீவிக்கலாம்.