எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லேஸ்லி ஹோகட்டுரைகள்

இயேசுவில் தொடருவோம்

காட்டுப்பகுதியில் ஓட்டப்பயிற்சி செய்யும்போது, அங்கு ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்து, எனக்கு சற்றும் பரீட்சயமில்லாத அந்த பாதையில் சென்றேன். நான் வழியை தொலைத்து விட்டேனோ என்று எண்ணி, எனக்கு பின் ஓடிவந்த இன்னொரு சக பயிற்சியாளரைப் பார்த்து, நான் சரியான பாதையில் தான் செல்கிறேனா என்று கேட்டேன். 

“ஆம்” என்று அவர் உறுதியுடன் பதிலளித்தார். என்னுடைய சந்தேகப் பார்வையை அறிந்த அவர், “கவலைப்படாதீர்கள், நானும் பல தவறான வழிகளை தெரிந்தெடுத்திருக்கிறேன். ஆனால் பரவாயில்லை, ஓட்டப்பயிற்சியில் இதுவும் ஒரு அங்கம் தான்” என்று உற்சாகப்படுத்தினார். 

என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு கச்சிதமாய் பொருந்தக்கூடிய என்னே நேர்த்தியான விளக்கம்! எத்தனை முறை நான் சோதனைக்குட்பட்டு, தேவனுடைய வழியை விட்டு திசைமாறி போயிருக்கிறேன்? ஆனால் நான் மீண்டும் விழுவேன் என்பதை தேவன் அறிந்திருந்தும் ஒவ்வொரு முறையும் என்னை மன்னித்து, தொடர்ந்து முன்னேறுவதற்கு கிருபை கொடுத்தார். நாம் தவறான பாதையில் செல்ல விரும்பும் சுபாவம் கொண்டவர்கள் என்பதை தேவன் நன்கு அறிந்திருக்கிறார். ஆனால் அவர் எப்போதும் நம்மை மன்னிப்பதற்கும், நம்முடைய பாவத்தை அறிக்கையிடும்போது அவருடைய ஆவியைக் கொண்டு நம்மை முற்றிலும் மறுரூபமாக்குவதற்கும் அவர் போதுமானவராயிருக்கிறார். 

பவுல் அப்போஸ்தலரும் இது விசுவாசப் பாதையின் ஒரு அங்கம் தான் என்பதை அறிந்திருந்தார். அவருடைய கடந்த கால பாவ வாழ்க்கை மற்றும் பலவீனங்களுக்கு மத்தியிலும் அவரால் கிறிஸ்துவைப் போல மாற முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார் (பிலிப்பியர் 3:12). “ஒன்று செய்கிறேன்” என்று சொல்லி, “பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (வச. 13-14) என்று குறிப்பிடுகிறார். இடறுதல் என்பது தேவனோடு நடக்கும் நம்முடைய பயணத்தின் ஒரு அங்கமே. நம்முடைய தப்பிதங்களின் மூலமாகவே அவர் நம்மை புடமிடுகிறார். மன்னிக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளாய் அவருடைய கிருபை நம்மை தொடர்ந்து ஓடச் செய்கிறது. 

தூரம் அல்லவே அல்ல

ராஜ் தனது இளமை பருவத்தில் இயேசுவை இரட்சகராக நம்பினார், ஆனால் விரைவில், அவர் நம்பிக்கையிலிருந்து விலகி, தேவனை விட்டு விலகி வாழ்க்கையை நடத்தினார். ஒரு நாள், இயேசுவுடனான தனது உறவைப் புதுப்பித்து மீண்டும் தேவாலயத்திற்குச் செல்ல அவர் முடிவெடுத்தார். இத்தனை ஆண்டுகளாக சபைக்கு வராததால் ஒரு பெண்ணால் திட்டப்பட்டார். பல வருடங்களாக அலைந்து திரிந்த ராஜின் அவமானத்தையும் குற்ற உணர்வையும் இந்தத் திட்டு மேலும் கூட்டியது. நான் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவனா என அவர் சந்தேகித்தார். சீமோன் பேதுரு இயேசுவை மறுதலித்தான்  (லூக்கா 22:34, 60-61) அதே வேளையில் அவனைத் தேவன் மீட்டெடுத்ததை (யோவான் 21:15-17) அவர் நினைவு கூர்ந்தார்.

பேதுரு தண்டனையை எதிர்பார்த்திருந்த போதிலும், அவர் பெற்றதெல்லாம் மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்பு மட்டுமே. இயேசு, பேதுரு தன்னை மறுதலித்ததைக் குறிப்பிடவில்லை, மாறாக கிறிஸ்துவின் மீதான தனது அன்பை மீண்டும் உறுதிப்படுத்தவும் அவரைப் பின்பற்றுபவர்களைக் கவனித்துக்கொள்ளவும் அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் (யோவான் 21:15-17). பேதுரு அவரை மறுதலிக்கும் முன், இயேசு சொன்ன வார்த்தைகள் நிறைவேறிக் கொண்டிருந்தன: " நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து" (லூக்கா 22:32).

ராஜ், அதே மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்புக்காகத் தேவனிடம் கேட்டார், இன்று அவர் இயேசுவுடன் நெருக்கமாக நடப்பது மட்டுமல்லாமல் ஒரு தேவாலயத்தில் சேவைசெய்து மற்ற விசுவாசிகளையும் ஆதரிக்கிறார். நாம் தேவனிடமிருந்து எவ்வளவு தூரம் விலகியிருந்தாலும், அவர் நம்மை மன்னிக்கவும், நம்மை மீண்டும் வரவேற்கவும் மட்டுமல்ல, நம்மை மீட்டெடுக்கவும் தயாராக இருக்கிறார், அதனால் நாம் அவரை நேசிக்கவும், சேவை செய்யவும், மகிமைப்படுத்தவும் முடியும். நாம் ஒருபோதும் தேவனிடமிருந்து வெகுதொலைவில் இல்லை. அவருடைய அன்பான கரங்கள் நமக்காகவே திறந்திருக்கிறது.

இது ஓர் அடையாளமா?

அந்த வேலைவாய்ப்பு நன்றாக இருந்தது, பீட்டருக்குத் தேவையானதும்  அதுவே. பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு அந்த இளம் குடும்பத்தின் வேலைசெய்யும் இந்த ஒரே நபராக வேலைக்காகத் தீவிரமாக ஜெபித்தார். "நிச்சயமாக இது உன்  ஜெபங்களுக்கான தேவனின் பதில்" என்று அவரது நண்பர்கள் குறிப்பிட்டனர்.

இருப்பினும், வருங்கால முதலாளியைப் பற்றிப் படித்தறிந்த பின்னர் , ​​பீட்டர் சங்கடமாக உணர்ந்தார். அந்த நிறுவனம் சந்தேகத்திற்கிடமான வணிகங்களில் முதலீடு செய்திருந்தது மற்றும் ஊழல் குற்றச்சாட்டப்பட்டிருந்தது. வேதனையாக இருப்பினும் இறுதியில் பீட்டர் அந்த வாய்ப்பை நிராகரித்தார். "நான் சரியானதைச் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புவதாக நம்புகிறேன், அவர் என் தேவையைச் சந்திப்பார் என்று நம்பினால் போதும்" என்று என்னிடம் பகிர்ந்தார்.

தாவீது சவுலை ஒரு குகையில் சந்தித்த செய்தி பீட்டருக்கு நினைவுக்கு வந்தது. தாவீதை கொல்ல துடித்த மனிதனைக் கொல்ல அவருக்குச் சரியான வாய்ப்பாக தோன்றியது, ஆனால் தாவீது மறுத்தார். “கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு கர்த்தர் என்னைக் காப்பாராக” (1சாமுவேல் 24:6) என்று காரணம் சொன்னார். சம்பவங்களைக் குறித்த தன் சொந்த கண்ணோட்டத்திற்கும், தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சரியானதைச் செய்வதற்கும் இடையேயான வித்தியாசத்தை தாவீது கவனமாகப் பகுத்தறிந்தார்.

சில சூழ்நிலைகளில் எப்போதும் "அடையாளங்களை" தேடுவதற்குப் பதிலாக, நமக்கு முன்னால் என்ன இருக்கிறது என்பதைப் பகுத்தறிவதற்கான ஞானம் மற்றும் வழிகாட்டுதலுக்காகத் தேவனையும் அவருடைய சத்தியத்தையும் கண்ணோக்குவோம். அவருடைய பார்வையில் சரியானதைச் செய்ய அவர் நமக்கு உதவுவார்.

உன் பங்கு, தேவனுடைய பங்கு

என்னுடைய சிநேகிதி ஜேனிஸ், அவளுடைய வேலை பார்க்கும் அலுவலகத்தில், ஒரு துறையைப் பொறுப்பேற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டாள். ஆனால் அதைச் செய்வதற்கு அவள் பயந்தாள். தேவனிடம் ஜெபித்தாள். தேவன் அந்த பொறுப்பை ஏற்கும்படி அவளுக்கு உணர்த்தினார். ஆனாலும், அந்த பொறுப்பை ஏற்பதைக் குறித்த பயம் அவளிடம் காணப்பட்டது. சொற்ப அனுபவமுள்ள நான் எப்படி அந்த பொறுப்பை ஏற்பது? என்று தேவனிடம் கேட்டாள். “என்னை ஏன் இந்த ஸ்தானத்திற்கு ஏற்படுத்தினீர், நான் தோற்கப்போகிறேன்” என்று புலம்பினாள்.
பின்பாக ஒரு நாள், ஜேனிஸ் ஆதியாகமம் 12ஆம் அதிகாரத்தை வாசித்து, அதில் “நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ...அவன் புறப்பட்டுப்போனான்” என்ற ஆபிரகாமின் பங்களிப்பை அறிந்தாள் (வச.1,4). பண்டைய நாட்களில் யாரும் இது போல் செய்ததில்லை என்பதினால், இது ஒரு துணிச்சலான முயற்சி. ஆனால் எல்லாவற்றையும் பின்னாக தள்ளிவிடும்படியும், எல்லாவற்றையும் தான் பார்த்துக்கொள்வதாகவும் அறிவித்து, தன்னை நம்பும்படிக்கு தேவன் கட்டளையிட்டார். அங்கீகாரம்? உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்; ஆசீர்வாதம்? உன்னை ஆசீர்வதிப்பேன்; மதிப்பு? உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நோக்கம்? பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும். அவனுடைய வழியில் ஆபிரகாம் சில பெரிய தவறுகளைச் செய்திருந்தாலும், “விசுவாசத்தினாலே ஆபிரகாம்... கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்”(எபிரெயர் 11:8).
இந்த புரிந்துகொள்ளுதல் ஜேனிஸின் இருதயத்தில் பெரிய பாரத்தை நீக்கியது. அவள் பின்பாக என்னிடத்தில் சொன்னபோது,“என்னுடைய வேலையில் நான் வெற்றிபெற்றவளாய் இருக்கக் கவலைப்பட வேண்டியதில்லை. அந்த வேலையை நான் செய்வதற்குத் தேவன் மீது நம்பிக்கை வைப்பதில் என் கவனத்தை செலுத்த வேண்டும்.” என்று சொன்னாள். நமக்குத் தேவையான விசுவாசத்தை தேவன் அருளும்போது, நம்முடைய எல்லாவற்றிலும் அவரை நம்புவோம்.

ஓடுங்கள்

ஜப்பானின் பாரம்பரிய தற்காப்புக் கலையான அகிடோவின் முதல் படி நமக்கு வியப்பூட்டும். நம்மை யாராவது தாக்க வந்தால், முதலாவது நாம் ஓட வேண்டும் என்று அதின் ஆசிரியர் (சென்ஸெய்) எங்களுக்கு சொன்னார். “உங்களால் ஓட முடியவில்லை என்றால் மட்டும் சண்டை போடுங்கள்” என்று கண்டிப்பாய் சொன்னார். 

ஓட வேண்டுமா? நான் சற்றுத் தடுமாறினேன். இந்த அளவிற்கு திறமையான தற்காப்பு பயிற்சியாளர் நம்மை ஏன் ஓடச்சொல்லுகிறார்? இது சற்று முரணாக தென்பட்டது. ஆனால், சண்டையை தவிர்ப்பதே நம்மை தற்காக்கும் முதற்படி என்று அவர் விளக்கமளித்தார். ஆம் அது உண்மைதான்!

இயேசுவை கைது செய்ய பலர் வந்தபோது, பேதுரு நம்மை போலவே தன் பட்டயத்தை உருவி அதில் ஒருவனை தாக்குகிறான் (மத்தேயு 26:51; யோவான் 18:10). அதை கீழே போடச் சொன்ன இயேசு, “அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும்” (மத்தேயு 26:54) என்று கேட்கிறார்.

நியாயம் என்பது முக்கியம் என்றாலும், அதேபோல தேவனுடைய இராஜ்யத்தையும், நோக்கதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது நம்முடைய சத்துருக்களை நேசிக்கும்படியாகவும், தீமைக்கு நன்மை செய்யும்படியாகவும்(5:44) நம்மை அழைக்கும் தலைகீழான இராஜ்யம். இது உலகத்தின் சுபாவத்திற்கு நேர்மறையானது. ஆனால் அதைத்தான் தேவன் நமக்குள் உருவாக்க விரும்புகிறார். 

பேதுரு காயப்படுத்திய மனிதனின் காதை இயேசு மீண்டும் குணமாக்கினார் என்று லூக்கா 22:51 கூறுகிறது. இதுபோன்ற கடினமான தருணங்களை இயேசு கையாண்டதைப்போல, நாமும் எப்போதும் சமாதானத்தையும், புதிதாக்குதலையும் நாடுகையில், நமக்கு தேவையானதை தேவன் அருளுவார். 

வாகன நிறுத்துமிடத்தில் சண்டை

சங்கடத்தைத் தவிர்த்து, வாகனம் நிறுத்துமிடத்தில் அந்த காட்சி நகைச்சுவையாக இருந்திருக்கும். இரு வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்கள் ஒன்றையொன்று வழிமறித்துக் கொண்டிருப்பதை குறித்து சத்தமாக வாதிட்டனர், கடுமையான வார்த்தைகளும் வெளிப்பட்டன.
இங்கே வேடிக்கையென்னவென்றால், இந்த சண்டை ஒரு சபையின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்தது. அந்த இருவரும் இப்போதுதான் அன்பு, பொறுமை, மன்னித்தல் குறித்த பிரசங்கத்தைக் கேட்டிருக்கக்கூடும். ஆனால் கோபத்தில் அனைத்தும் மறக்கப்பட்டன.

இதைப் பார்த்தமாத்திரத்தில் நான் சற்று சலிப்படைந்தேன். ஆனால் நானும் உத்தமன் இல்லை என்பதை உடனே உணர்ந்துகொண்டேன். பலமுறை நான் வேதத்தை வாசித்தப் பின்பும், சில நிமிடங்களிலேயே பாவமான சிந்தனைகளில் வீழ்ந்தேன்? “கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்” (யாக்கோபு 1:23–24) அப்படிப்பட்ட நபரைப்போல் நான் எத்தனை முறை நடந்துகொண்டேன்?
யாக்கோபு தன் வாசகர்களை, திருவசனத்தை கேட்டு தியானிக்க மட்டுமல்லாமல் அதின்படி செய்ய அழைக்கிறார் (வச. 22). வசனத்தை அறிந்து, அதை நடைமுறைப்படுத்துவதே முழுமையான விசுவாசம் எனக் குறிப்பிடுகிறார்.

வேதவசனம் வெளிப்படுத்துவதை செயல்படுத்த வாழ்வின் சூழல் தடைபண்ணலாம். ஆனால், நாம் நம் தகப்பனிடம் கேட்டுக்கொள்கையில், அவருடைய வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படியவும், அவருக்கு பிரியமாய் நாம் நடக்கவும், நமக்கு நிச்சயம் உதவுவார்.

ஒரு புதிய துவக்கம்

எங்குமுள்ள தமிழ் குடும்பங்களால் கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு, பருவங்களின் மாற்றத்தோடு தொடர்புடையது. பொதுவாக ஜனவரி மாதத்தின் மத்தியில் வரும் இந்த காலம், குடும்பங்களை ஒன்றிணைக்கும் பல பாரம்பரியங்களை உடையது - அவற்றில் சில மிகவும் குறிப்பிடத்தக்கவை. புத்தாடைகளை வாங்கி அணிதல், நம்முடைய வீடுகளை தூய்மைப்படுத்துதல், மேலும் வீட்டில் தயாரித்த உணவு பண்டங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் என்று இவ்வாறு உறவுகள் பின்னப்படுகின்றன. துடைக்கப்பட்ட எழுத்துப் பலகை போல கடந்தகாலத்தை நமக்கு பின்பாக எறிந்துவிட்டு, வருடத்தை புதிதாக ஆரம்பிக்க இது நமக்கு நினைவூட்டுகிறது.

இந்தப் பாரம்பரியங்கள் கிறிஸ்துவுக்குள்ளான நமது புதிய வாழ்வையும் எனக்கு நினைப்பூட்டுகின்றன. நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தோம் அல்லது என்னவெல்லாம் செய்தோம் என்பதை பொருட்படுத்தாமல் அனைத்தையும் நமக்கு பின்பாக எறிந்திட முடியும். இயேசுவின் சிலுவை மரணத்தினால் நாம் முற்றிலும் மன்னிக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிந்தவர்களாக நம்முடைய கடந்தகாலத்தை நினைத்து வருந்துவதை நாம் நிறுத்தி, குற்ற உணர்வு நீங்கினவர்களாக நம்மால் இருக்க முடியும். மேலும் இயேசுவைப் போல மறுரூபமாக, பரிசுத்த ஆவியானவரை நாம் அனுதினமும் சார்ந்துகொண்டு புதிதாக துவங்கலாம்.

எனவேதான் பவுல், விசுவாசிகளுக்கு "பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின." (2 கொரிந்தியர் 5:17)

என நினைப்பூட்டுகிறார். நாமும் கூட இதை சொல்லலாம், ஏனெனில் எளிமையான ஆனால் வல்லமையான சத்தியமானது: "தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி" (வ.19) என்பதே.

நம்மை சுற்றியுள்ள மற்றவர்கள், நம் கடந்தகால தவறுகளை மறக்க மனமில்லாதிருக்கலாம், ஆனால் தேவனுடைய பார்வையில் நமக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை (ரோமர் ) என்பதால் தைரியம் கொள்வோம். இயேசுவின் மூலமாக தேவன் நமக்களித்த புதிய துவக்கத்தை நாம் சுகமாய் அனுபவிப்போம்.

நியாயமான காத்திருத்தல்

மிகக்கடினமாய் நடத்தக்கூடிய முதலாளி அமைந்ததால், நீண்டநேரம் மனச்சோர்வோடு வேலைசெய்யக்கூடிய நிலைமை அபினவ்க்கு ஏற்பட்டது. தன் வேலையை விட்டுவிட எண்ணினார். ஆனால் அவனுடைய கடன், மனைவி, இளம்பிள்ளை ஆகிய பொறுப்புகள் அவருக்கிருந்தது. இருந்தாலும் வேலையை விட்டுவிடுவதற்கு அவர் முயற்சித்தார். அவருடைய மனைவி அவரிடத்தில், “நாம் காத்திருக்கலாம், தேவன் நமக்கு என்ன தருகிறார் என்று பார்க்கலாம்” என்றாள். 

பல மாதங்கள் கழித்து அவர்களுடைய ஜெபம் கேட்கப்பட்டது. அபினவ்க்கு புதிய வேலை கிடைத்தது. தன் குடும்பத்தினரிடம் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. “அத்தனை மாதங்கள் என்பது நீண்ட காலம், ஆனால் தேவனுடைய குறித்த நேரத்தில் வெளிப்படும் அவருடைய திட்டத்திற்காக காத்திருந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

பாடுகளுக்கு மத்தியில் தேவனுடைய குறித்த காலத்திற்காக காத்திருப்பது கடினம். அத்தருணத்தில் நம்முடைய திட்டத்தை அரங்கேற்ற தூண்டப்படுவோம். இஸ்ரவேலர்களும் அதையே செய்தனர்: சத்துருக்களின் அச்சுறுத்தல்களிலிருந்து தங்களை காத்துக்கொள்வதற்கு தேவனிடத்தில் திரும்பாமல், எகிப்து தேசத்திடம் உதவி கோரினர் (ஏசாயா 30:2). ஆனால் தேவன் அவர்களிடம், நீங்கள் மனந்திரும்பி என்னை நம்பினால், நீங்கள் பலப்பட்டு, மீட்பைப் பெறுவீர்கள் என்று எச்சரிக்கிறார் (வச. 15). “ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்” (வச. 18) என்றும் கூறுகிறார். 

தேவனுக்காக காத்திருப்பதற்கு விசுவாசமும் பொறுமையும் தேவைப்படுகிறது. ஆனால் தேவனுடைய பதிலை நாம் பெற்றுக்கொள்ளும்போது, காத்திருந்தது நியாயமானது என்பதை நாம் ஒத்துக்கொள்வோம்: “அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” (வச. 18). நாம் அவரிடத்திற்கு திரும்புவோம் என்று தேவன் நமக்காக காத்திருப்பதே அதைக்காட்டிலும் ஆச்சரியமானது.

ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அங்கீகரிக்கப்பட்டதும்

ஒரு குழந்தையாய், டென்னி பாதுகாப்பற்றவனாய் உணர்ந்தான். அவன் தன் தந்தையின் ஒப்புதலைப் பெற முயன்றான். ஆனால் அதை அவனால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் பள்ளியிலோ அல்லது வீட்டிலோ என்ன செய்தாலும் அதை நேர்த்தியாய் செய்வதில்லை. அவன் வளர்ந்தபோதும் அந்த குற்றவுணர்வு அவனுக்குள் இருந்தது. நான் சிறந்தவனா?. என்ற கேள்வி அவனுக்குள் எப்பொழுதும் இருந்தது.

டென்னி, இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட பின்பே பாதுகாப்பாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாகவும் உணர ஆரம்பித்தான். அவனை படைத்த ஆண்டவர் அவனை நேசித்து தன்னுடைய பிள்ளையாக்கிக்கொண்டார் என்பதைக் கற்றுக்கொண்டான். கடைசியாக, அவன் மதிப்புமிக்கவன், பாராட்டுக்குரியவன் என்னும் நம்பிக்கையோடு தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான். 

ஏசாயா 43:1-4ல், தேவன் தான் தெரிந்துகொண்ட மற்றும் உருவாக்கின இஸ்ரவேலிடம், அவர்களை தன்னுடைய பெலத்தினாலும் அன்பினாலும் மீட்டுக்கொள்வதாக அறிவிக்கிறார். “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்” என்று அறிவிக்கிறார். அவர் அவர்களை நேசித்தபடியினால், அவர்களின் சார்பில் நின்று செயலாற்றுவதாக அறிவிக்கிறார் (வச. 4).

அவர் நேசிக்கிறவர்கள் மீது உண்டாகும் மதிப்பானது எதிலிருந்தும் கிடைப்பதில்லை, அவர் நம்மை அவருடையவர்களாய் தெரிந்துகொண்டார் என்னும் எளிமையான, வலிமையான சத்தியத்திலிருந்தே கிடைக்கிறது. 

ஏசாயா 43ஆம் அதிகாரத்தில் உள்ள இந்த வார்த்தைகள் டென்னிக்கு வெறும் பாதுகாப்பை மட்டும் கொடுக்கவில்லை, தேவன் அவனை அழைத்த அழைப்பிற்கு தன்னால் இயன்றவரை உண்மையாய் செயல்படவேண்டும் என்ற உத்வேகத்தை அவனுக்குள் ஏற்படுத்தியது. இன்று அவர் ஒரு போதகராய், “நாங்கள் இயேசுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டோம்” என்னும் வாழ்வளிக்கும் செய்தியைக் கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறார். இன்று இந்த சத்தியத்தை நாமும் உறுதியாய் நம்பி ஜீவிக்கலாம்.