எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கிரிஸ்டன் ஹொம்பெர்க்கட்டுரைகள்

வெளிச்சம் உண்டாகக்கடவது

என் மகளுடைய ஆரம்ப நாட்களில், அவள் பார்த்த பொருட்களின் பெயர்களையெல்லாம் நான் அவளுக்கு சொல்லிக்கொடுப்பது வழக்கம். அவளுக்கு தெரியாத ஒரு புதிய பொருளைத் தொடச்செய்து, அந்த பொருளின் பெயரையும் அவளுக்குக் கற்றுக்கொடுப்பேன். குழந்தையாயிருந்தபோது முதன்முறையாக அவள் “அம்மா, அப்பா” என்று உச்சரிப்பாள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவள் “டைட்” என்ற ஒரு மிட்டாயின் பெயரையே முதன்முறையாக உச்சரித்தாள். அதை அவள் உச்சரிக்கும்போது அவளுக்கு நான் சமீபத்தில் கற்றுக்கொடுத்திருந்த வெளிச்சம் என்று பொருள்படும் “லைட்” என்ற ஆங்கில வார்த்தையையே தவறி உச்சரித்தாள்.
வெளிச்சம் என்பது, தேவன் வேதத்தில் பேசின முதல் வார்த்தைகளில் ஒன்றாக நமக்காக பதிவாகியுள்ளது. தேவ ஆவியானவர் இருளின்மேல் அசைவாடி ஒழுங்கின்மையும், வெறுமையுமாயிருந்த பூமியில், “வெளிச்சம் உண்டாகக்கடவது” (ஆதியாகமம் 1:3) என்று தேவன் தம் சிருஷ்டிப்பிற்கு வெளிச்சத்தை அறிமுகப்படுத்துகிறார். அதை அவர் நல்லது என்றும் சொன்னார். வேதம் அதை முழுமையாய் ஆமோதிக்கிறது: தேவனுடைய வார்த்தை பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான் (சங்கீதம் 119:130). “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்றும், தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஜீவ ஒளியைத் தருவதாகவும் இயேசு அறிவிக்கிறார் (யோவான் 8:12).
சிருஷ்டிப்பு பணியில், தேவன் முதலாவது வெளிச்சம் உண்டாகவே பேசினார். அவருடைய வேலையை செய்வதற்கு வெளிச்சம் தேவை என்பதினால் அல்ல; மாறாக, அது நமக்காக படைக்கப்பட்டது. அவரைப் பார்ப்பதற்கும், அவர் கைவண்ணத்தை நம்மை சுற்றியுள்ள சிருஷ்டியில் பார்க்கவும், தீமையிலிருந்து நன்மையை அடையாளப்படுத்துவதற்கும், மேலும் இந்த பரந்த உலகில் இயேசுவை பின்பற்றுவதற்கும் நமக்கு ஒளி அவசியப்படுகிறது.

எது முக்கியம்?

என் தோழியின் சக விசுவாசியும் உடன் பணியாளருமாகிய ஒருவர் அவளிடம், நீங்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்று குறிப்பாகக் கேட்டதை நினைவுகூர்ந்தார். அவர்களின் சமூகத்தை பிரிக்கும் எவ்வளவு காரியங்களில் இருவரும் ஒத்துப்போகிறார்கள் என்று தெரிந்துகொள்ளவே அவர் அவ்வாறு கேட்டார். அக்கேள்விக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, இருவருக்குள்ளும் இருக்கும் ஒற்றுமையை முக்கியத்துவப்படுத்தும் முயற்சியில் “நாம் இருவருமே விசுவாசிகளாதலால், கிறிஸ்துவுக்குள் இருக்கும் நம் ஒற்றுமையையே நான் அதிக முக்கியத்துவப்படுத்துகிறேன்” என பதிலளித்தாளாம்.

பவுலின் காலத்திலும், ஜனங்கள் பல்வேறு பிரச்சனைகளுக்காய் பிரிந்திருந்தனர். எத்தகைய உணவுகளை சாப்பிடலாம்? எந்த நாட்கள் விசேஷித்தவைகள்? போன்ற காரியங்களில் ரோமாபுரியில் இருந்த கிறிஸ்தவர்களுக்குள் பல கருத்துவேறுபாடுகள் இருந்தன. தங்களுடைய கருத்துக்களில் அவரவர் மனதிலே முழு நிச்சயத்தை உடையவர்களாய் இருந்தாலும், பவுல் அவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றை நினைவூட்டுகிறார். இயேசுவுக்கென வாழ்வதே அந்த தீர்மானம் (ரோமர் 14:5–9). ஒருவரையொருவர் குறை சொல்லுவதை விட்டுவிட்டு, “சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும்” (வச. 19) நாடுமாறு அவர்களை ஊக்குவிக்கிறார்.

சிறிய மற்றும் பெரிய காரியங்களைக் குறித்து தேசங்களும், சபைகளும், சமூகங்களும் பிரிந்துகிடக்கும் இந்த காலகட்டத்தில், நம்மை ஒன்றாக்கும் கிறிஸ்துவின் சிலுவை முயற்சிக்கு நேரே நாம் ஒருவரையொருவர் திருப்பி, அவருடனான நித்திய வாழ்க்கையை பத்திரப்படுத்தலாம். நம்முடைய தனிப்பட்ட கருத்துக்களையே பிடித்துக்கொண்டு, “தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே” (வச. 20) என்று 2௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னான பவுலின் எச்சரிக்கை, அக்காலத்தை போலவே இக்காலத்திற்கும் பொருந்தும். ஒருவரையொருவர் நியாயந்தீர்ப்பதை விட்டுவிட்டு, அன்பில் அனைத்தையும் செய்து, நம் சகோதர சகோதரிகளை கௌரவிக்கும் வகையில் வாழ்வோம்.

நம்மைப்போல, நமக்காக

தன் மகள், அவளுடைய புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது தன் தலைமுடியை இழந்ததால் அதை மறைக்க தொப்பி அணிந்திருப்பதையும், வெளியே தன்னோடு பேரங்காடிக்கு வந்திருக்கும்போதும் அதை கழற்ற அவள் சங்கடப்பட்டதையும் ப்ரீத்தி கவனித்தாள். தன் மகளுக்கு உதவ தீர்மானித்த ப்ரீத்தி, தன் நீண்ட, செழுமையான கூந்தலை மழித்து தன் மகளைப்போலவே தானும் மாறி, அவளின் வலியை அனுபவிக்க தெரிந்துகொண்டாள்.

ப்ரீத்தி தன் மகளுக்கு காட்டிய அன்பு, தேவன் தம் பிள்ளைகளுக்கு காட்டும் அன்பை பிரதிபலிக்கிறது. ஏனெனில் அவருடைய பிள்ளைகளாகிய நாம், “மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்கள்" (எபிரெயர் 2:14) என்பதினால், இயேசு நம்மைப்போல மனிதனாகி, நம்மை மரணத்தின் வல்லமையிலிருந்து மீட்கும்பொருட்டு, “மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” (வச. 14). நம்மை தேவனோடு ஒப்புரவாக்க, அவர் “எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது" (வச. 17).

ப்ரீத்தி, தன் மகளின் தாழ்வு மனப்பான்மையை மேற்கொள்ளுவதற்கு அவளுக்கு உதவ விரும்பினாள். எனவே அவளும் தன் மகளைப் “போலவே” மாறினாள். ஆனால் அதைக்காட்டிலும் பெரிய பிரச்சனையான மரணத்தின் பிடியிலிருந்து நம்மை மீட்க இயேசு நமக்கு உதவினார். அவர் நம்மைப்போலவே மாறி, நம் பாவத்தின் விளைவை தன் மீது ஏற்றுக்கொண்டு, நாம் மரிக்க வேண்டிய இடத்தில் அவர் மரித்து, மரணத்தை நமக்காக மேற்கொண்டார்.

நம்மைப் போல் மனிதனாக இயேசு கொண்டிருந்த விருப்பம், தேவனுடனான நம்முடைய உறவை உறுதிபடுத்தியது. அதுமட்டுமின்றி நம்முடைய கடினமான நேரங்களில் அவரை நம்பச்செய்தது. சோதனைகளையும், கஷ்டங்களையும் நாம் எதிர்கொள்கையில், பெலத்திற்கும், ஆதரவிற்கும் அவரை அண்டிக்கொள்ளலாம். ஏனெனில், அவர் “உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்” (வச. 18). ஒரு அன்பான தகப்பனைப் போல நம்மைப் புரிந்துகொண்டு, நம் மீது அக்கறை கொள்கிறார்.

நிரந்தர முகவரி

எங்கள் பழைய வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளியிருந்த புதிய வீட்டிற்கு சிலநாளைக்கு முன்புதான் வந்தோம். அதிக தூரமில்லை என்றபோதும், எங்கள் சாமான்களையெல்லாம் வண்டியிலேற்றி பண பரிமாற்றம் முடியும்வரை அங்கேயே காத்திருந்தோம். பழைய வீட்டை விற்று, புதிய வீட்டை வாங்கும் இடைப்பட்ட நேரமுழுதும் எங்கள் குடும்பமும், சாமான்களும் தற்காலிக குடியிருப்பாக அந்த வண்டியிலிருந்தோம். நாங்கள் எங்கள் வீட்டிற்குள் இல்லையென்றாலும், நான் அதிகம் நேசிக்கும் குடும்பம் என்னோடு இருந்ததால் என்னை அப்பிரிவு பாதிக்கவில்லை என்பதை அச்சமயத்தில் தான் புரிந்துகொண்டேன்.

தன் வாழ்வில் அநேக நாட்கள் தாவீது வீட்டைவிட்டு பிரிந்திருந்தார். சவுல் ராஜாவிடமிருந்து தப்பியோடுவதே அவர் வாழ்வின் பெரும்பகுதி. தன் சிங்காசனத்திற்கு தேவனால் நியமிக்கப்பட்ட வாரிசு என்றும், தன் பதவிக்கு தாவீது பெரும் அச்சுறுத்தல் என்றும் சவுல் உணர்ந்ததால், அவரை கொல்லப் பார்த்தான். தாவீது தன் வீட்டை விட்டோடி, அடைக்கலம் கிடைக்கும் இடங்களிலெல்லாம் படுத்துறங்கினார். தாவீதின் கூட்டாளிகள் எப்போதும் அவரோடு இருந்தபோதிலும், “கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்" (சங்கீதம் 27:4) என்று தாவீது தன்னுடைய வாஞ்சையை தெரிவிக்கிறார்.

“என் வீடு” என்று நாம் எவ்விடத்தில் உணர்ந்தாலும், இயேசுவே நமது நித்திய கூட்டாளி. இக்கால பாடுகளில் அவர் நம்மோடு இருக்கிறார். மேலும், நாம் அவரோடு என்றென்றும் வாழ நமக்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்துகிறார் (யோவான் 14:3). இப்பூமியின் குடிமக்களாக நாம் நிச்சயமற்றவர்களாக, எத்தகைய மாற்றங்களை அனுபவித்தாலும், நாம் எப்போதும், எங்கேயும், அவருடைய உறவில் நிரந்தரமாக தங்கலாம்.

தேவனின் நல்ல பசை

சமீபத்தில் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மிகவும் வலிமையான, அதேநேரம் பிரித்தெடுக்கக்கூடிய புதிய வகை பசையை கண்டுபிடித்தனர். வறட்சியான இடங்களில் ஒட்டிக்கொண்டு, ஈரமான இடங்களில் எளிமையாய் விலகிக் கொள்ளும் நத்தையின் திரவமே அவர்கள் வடிவமைப்பிற்கு உந்துதல். நத்தையின் இந்த மாறும் தன்மை ஈரப்பதமான இடங்களிலும் எளிதாக நகரவும், பாதுகாப்பாய் இருக்கவும், நகர்வது ஆபத்தாய் தோன்றும் அபாயமான இடங்களில் உறுதியாய் தன்னை நிறுத்திக் கொள்ளவும் ஏதுவாயிருக்கிறது. 

இயற்கையில் இருக்கும் இந்த ஒட்டும் பசை மாதிரி, விஞ்ஞானி ஜோன்ஸ் கெப்லர் புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடிக்க உறுதுணையாயிருந்தது. அவர் தேவனுடைய சிருஷ்டிப்புகளை நினைவு கூறுவதாகச் சொல்லுகிறார். வேதம், தேவன் வானத்தையும் பூமியையும் அதிலுள்ள யாவையும் சிருஷ்டித்ததாக சொல்லுகிறது: பூமியின் தாவரங்கள் (ஆதியாகமம் 1:12); சமுத்திரத்திலுள்ள நீர்வாழ் ஜந்துக்கள் மற்றும் ஆகாயத்துப் பறவைகள் (வச. 21); பூமியில் ஊரும் பிராணிகள் (வச.25); தேவசாயலில் உண்டாக்கப்பட்ட மனிதன் (வச.27) என்று தேவனுடைய சிருஷ்டிப்பு பட்டியல் நீளுகிறது. ஒரு தாவரத்தை அல்லது உயிரினங்களின் விசேஷமான சுபாவத்தைக் கண்டு நாம் ஆச்சரியப்பட நேர்ந்தால், தேவன் அதை வடிவமைத்த விதத்தைக் கண்டு நாம் தேவனுடைய படைப்பின் அடுச்சுவடுகளை பின்பற்றுகிறோம் என்று அர்த்தம்.

சிருஷ்டிப்பின் ஒவ்வொரு நாளின் இறுதியிலும், தேவன் தன்னுடைய கரத்தின் கிரியையை பரிசீலனை செய்து அதை “நல்லது” என்று காண்கிறார். தேவனுடைய படைப்புகளைக் குறித்து நாம் கற்றுக்கொள்ளும் போதும், கண்டுபிடிக்கும் போதும், அதின் வியக்கத்தக்க சுபாவங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அதை பராமரிக்கவும் அதின் மேன்மையை பறை சாற்றவும் செய்யலாம். 

அழகான பாதங்கள்

ஜான் நாஷ் என்பவருக்கு கணிதத்தில் அவருடைய முன்னோடிப் பணியை பாராட்டி 1994இல் பொருளாதாரத்திற்கான நோபல்பரிசுகொடுக்கப்பட்டது. அவரது சமன்பாடுகள், வணிகத்தில் போட்டி மனப்பான்மையைக் குறித்து புரிந்துகொள்வதற்கு உலகெங்கிலும் உள்ள வணிகங்களில் பரவலாய் பயன்படுத்தப்படுகிறது. “அழகான மூளை” (a beautiful mind) என்ற தலைப்பில் அவருடைய வாழ்க்கை புத்தகமாக்கப்பட்டு, திரைக்காவியமாக்கப்பட்டது. அவருடைய மூளை விசேஷமான திறன் கொண்டது இல்லையெனினும் அதைக் கொண்டு அவர் என்ன சாதித்தார் என்பதே இங்ஙனம் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. 

பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியான ஏசாயா, சுவிசேஷகனுடைய பாதங்களை அழகு என்று வர்ணிக்கிறார். அதின் மாம்சரீதியான அமைப்பை விவரிப்பதற்காய் இல்லை; மாறாக, அவர்கள் செய்கிற செய்கையை அழகு என்று வர்ணிக்கிறார். “சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன” (ஏசாயா 52:7). கர்த்தருக்கு உண்மையில்லாமல் வாழ்ந்ததின் விளைவாய் எழுபது ஆண்டுகள் சிறையிருப்பிற்குள் பிரவேசித்த இஸ்ரவேலர்களுக்கு “கர்த்தர் … எருசலேமை மீட்டுக்கொண்டார்” (வச. 9) என்னும் அவர்களின் சுயதேசம் திரும்பும் நற்செய்தியானது கர்த்தருடைய ஸ்தானாதிபதிகளின் மூலம் அறிவிக்கப்பட்டது. 

இஸ்ரவேலின் இராணுவ பராக்கிரமத்தையோ அல்லது எந்த மாம்சீக முயற்சியையோ நற்செய்தி என்று அறிவிக்கவில்லை. மாறாக, அவர்களுக்காய் வெளிப்பட்ட “பரிசுத்த புயத்தை” (வச.10) நற்செய்தி என்று அழைக்கிறது. கிறிஸ்துவின் தியாகத்தினால் நம்முடைய ஆவிக்குரிய எதிரியோடு போராடி வெற்றியை ருசிபார்க்கும் நமக்கு இன்றும் அது உண்மையாகவே இருக்கிறது. அதின் விளைவாய் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு சமாதானத்தையும், நற்செய்தியையும், இரட்சிப்பையும் அறிவிக்கும் நற்செய்தியின் ஸ்தானாதிபதிகளாய் நாம் மாற்றப்பட்டுள்ளோம். அதை அழகான பாதங்களுடன் செயல்படுத்துகிறோம்.

படைப்பின் வியப்பு

அலாஸ்க்காவில் நடைபயணம் மேற்கொண்டிருந்த டிம், இதுவரை பார்த்திராத ஒன்றை அன்று சந்தித்தான். டிம், தொழில்ரீதியாகவும் கூட பனிப்பாறைகளை குறித்து படித்திருந்தாலும், அவைகளின் மேல் அதிகளவிலான பாசி உருண்டைகள் (ஒருவித செடி) படர்ந்திருப்பது அவனுக்கு முற்றிலும் புதியது. பல ஆண்டுகள் இந்த பிரகாசிக்கும் பச்சை நிற உருண்டைகளை கவனமாக ஆராய்ந்த பின், டிம்மும் அவன் சகாக்களும், இவ்வகையான பனிப்பாறை பாசியானது, மரங்களில் காணப்படும் பாசி உருண்டைகளை போல ஒன்றோடொன்று இணைக்கப்படாமல் இருப்பதையும், இன்னும் ஆச்சரியமாக இவை ஒரு மந்தையைப்போலவும், கூட்டமாகவும் ஒற்றுமையாக நகர்வதை கண்டுபிடித்தனர். முதலில், டிம்மும் அவன் சகாக்களும் இவைகள் காற்றினால் நகர்கின்றனவோ அல்லது  மலையில் கீழ்நோக்கி சறுக்கி விழுகின்றனவோ என்று சந்தேகித்தனர் ஆனால் அவர்களின் ஆராய்ச்சி அத்தகைய யூகங்களை பொய்யாக்கியது.

அந்த பாசி உருளைகள் எவ்வாறு நகர்கின்றன என்று இன்னும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. இத்தகைய மர்மங்கள் தேவனுடைய படைப்பாற்றலின் மகுடங்கள். அவருடைய சிருஷ்டிப்பின் பணியில், தேவன் நிலத்தை மரங்களும், செடிகளும் முளைக்கும் "தாவரங்களின் விளைச்சலுக்காக" நியமித்தார்  (ஆதியாகமம் 1:11). "பனிப்பாறை எலிகள்" என்ற இவ்வகை பாசிகளையும் அவரே வடிமைத்தார்.  அவைகளுக்கு ஏற்ற சூழலை அளிக்கும் பனிப்பாறைகளை நாம் நேரில் பார்க்கும்வரை, நம்மில் அநேகர் இதை பார்த்திருக்க முடியாது.

1950களில் கன்டுபிடிக்கப்பட்ட முதற்கொண்டு இந்த "பனிப்பாறை எலிகள்", தங்கள் தெளிவற்ற பச்சை படிவத்தினால் விஞ்ஞானிகளுக்கு களிப்பூட்டி வருகின்றன. தேவன், தான் படைத்த தாவரங்களை பார்த்து "அது நல்லது என்று கண்டார்." (வ.12), நாம் தேவனின் தாவரவியல் வடிவமைப்புகளால் சூழப்பட்டுள்ளோம் அவை ஒவ்வொன்றும் அவரின் படிப்பின் வல்லமைகளை நிரூபித்து, அவரை தொழுதுகொள்ள நம்மை அழைக்கிறது. அவர் படைத்த ஒவ்வொரு மரத்தின்பேரிலும், செடியின்பேரிலும் நாம் மகிழலாம் ஏனெனில் அவைகள் நல்லது.

தேவனிடமிருந்து ஒளித்துக்கொள்ளுதல்

நான் கண்ணாமூச்சி விளையாடியபோது என் கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தேன். என் சிநேகிதிகள் ஒளிந்துகொள்ள இடத்தைத் தேடி சென்றனர். மணிக்கணக்காய் அலமாரி, டிரங்க் பெட்டி, குளியலறை என்று தேடியும் ஒரு சிநேகிதியையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் அவள், கூரையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த செடியின் பின்னாலிருந்து குதித்தபோது நான் சற்று முட்டாள்தனமாய் உணர்ந்தேன். அவள் ஒளிந்துகொண்டபோது, அவளின் தலையை மட்டுமே அந்த செடி மறைத்திருந்தது, அவள் உடல் முழுவதும் பார்க்கக்கூடிய வகையில் வெளியரங்கமாகவே இருந்தது.

தேவன் அனைத்தும் அறிந்தவர். ஆதலால் ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் ஒளித்துக்கொண்டபோதும், அவர்கள் அவரின் தெளிவான பார்வையில் (ஆதியாகமம் 3:8) இருந்தனர்.  அவர்கள் திடீரென்று ஏற்பட்ட விழிப்புணர்வாலும், அவமானத்தாலும், தாங்கள் செய்த தவறான செயலுக்காகவும், தேவன் உண்ணக்கூடாது என்று விலக்கி வைத்த மரத்தின் கனியைப் புசித்ததினாலும் தங்களை ஒளித்துக்கொண்டனர்.

ஆதாமும் ஏவாளும் தேவனுக்குக் கீழ்ப்படியாததால் அவரை விட்டு விலகினர். கோபத்தில் அவர்களை விட்டுவிடாமல் “நீ எங்கே இருக்கிறாய்” என்று அவர் வெளியே கொண்டுவர முயன்றார். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று அவருக்கு தெரியாது என்று அர்த்தமில்லை; அவர் தாம் அவர்கள் மீது கொண்டிருக்கிற அக்கறையை அவர்கள் அறியவேண்டும் என நினைத்தார் (வச. 9).

என் சிநேகிதி மறைந்திருந்ததை நான் காணவில்லை; ஆனால் தேவன் எப்போதும் நம்மைக் காண்கிறார். நாம் அவருடைய தெளிவான பார்வையில் இருக்கிறோம். அவர் ஆதாம் ஏவாளை பின்தொடர்ந்தது போல, “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8). நாம் இனி ஒளிந்துகொள்ளத் தேவையில்லை.

நெருக்கமாகிறோம்

கொரோனா வைரஸ் வந்த பிறகு வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து ஒன்றை எடுக்க முன்பைவிட அநேக விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வங்கி பெட்டகத்திற்குள் நுழைவதற்கு முன்னால், ஏற்கனவே முன் அனுமதி வாங்கி, என்னுடைய அடையாள அட்டை மற்றும் கையெழுத்தை பரிசோதித்து, வங்கி ஊழியர் ஒருவர் காவலுக்கு வந்து பெட்டகத்திற்கு அழைத்துச் செல்லும் வரை நான் காத்திருக்க வேண்டியுள்ளது. உள்ளே நுழைந்ததும், எனக்குத் தேவையானவற்றை என் பெட்டகத்திலிருந்து நான் எடுக்கும் வரைக்கும் அந்த உறுதியான கதவுகள் பூட்டியிருக்கும். இந்த ஒழுங்கை நான் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே என்னால் வங்கியில் நுழைய முடியும். 

பழைய ஏற்பாட்டில் தேவன், உடன்படிக்கைப் பெட்டி வைத்திருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே நுழைய சில ஒழுங்குமுறைகளை வைத்திருந்தார் (யாத்திராகமம் 26:33). பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும் அந்த சிறப்பான திரைக்குப் பின்னே பிரதான ஆசாரியன் மாத்திரம் வருஷத்துக்கு ஒரு தரம் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார் (எபிரெயர் 9:7). ஆரோனும் பிரதான ஆசாரியர்களும் ஜலத்திலே ஸ்நானம் பண்ணி, பரிசுத்த வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டு பலிகளுடன் உட்பிரவேசிக்க வேண்டும் (லேவியராகமம் 16:3-4). தேவனுடைய கட்டளைகள் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்குமான வழிமுறைகள் அல்ல; மாறாக, நம்முடைய பாவ மன்னிப்பின் தேவையுடன் பரிசுத்த தேவனை எவ்வாறு நெருங்குவது என்பதை வலியுறுத்துவதற்காக கொடுக்கப்பட்டது.  

இயேசுவின் மரணம் அந்த திரைச்சீலையை இரண்டாகக் கிழியச் செய்தது (மத்தேயு 27-51), இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும் என விசுவாசிக்கிறவர்கள் எவரும் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழையலாம் என்பதை அது வெளிப்படுத்தியது. உடன்படிக்கைப் பெட்டியின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்த அந்த நிகழ்வு நம்முடைய நித்திய மகிழ்ச்சிக்கு காரணமாகியது. நான் எப்போது வேண்டுமானாலும் தேவனிடத்தில் நெருங்கலாம் என்பதை இயேசு சாத்தியமாக்கினார்.