கடந்த வசந்த காலத்தில், திடீரென்று ஒரு நாள் இரவில் வீசிய பயங்கரமான காற்றினிமித்தம் வீட்டின் முற்றத்திலிருந்த மேப்பிள் மரத்தின் விதைகள் சிதறி, எங்கள் வீட்டு புல்வெளியில் விழுந்தது. அடுத்த நாள் காலையில் சிதறியிருந்த குப்பைகளை எந்திரத்தின் துணையோடு அகற்ற முயற்சித்தபோது, அந்த சின்னஞ்சிறிய விதைகள் மண்ணுக்குள் ஆழ்த்தப்பட்டது. இரண்டு வாரங்களில், நூற்றுக்கணக்கான மேப்பிள் செடிகள் எங்கள் புல்வெளியில் முளைத்து ஒரு மேப்பிள் காடு உருவாக ஆரம்பித்திருந்தது. 

ஒரே பெரிய மரத்திலிருந்து இத்தனை சிறிய மரங்கள் உருவானதைக் குறித்து நான் ஆச்சரியப்பட்டேன். அந்த சிறிய மரங்கள் ஒவ்வொன்றும் கிறிஸ்துவில் நான் பெற்றுக்கொண்ட புதுவாழ்வையும், என்னிலிருந்து அநேகருக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கும் மாதிரியாகவும் நான் பார்த்தேன். நமக்கு கிடைக்கும் எண்ணற்ற வாய்ப்புகளை நாம் நேர்த்தியாய் பயன்படுத்தி, நமக்குள்ளிருக்கிற அந்த நம்பிக்கையைக் குறித்து… உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருப்போம் (1 பேதுரு 3:15). 

நீதியினிமித்தம் நாம் பாடுகளை சகிக்கும்போது (வச. 14), அதை இயேசுவை இதுவரை ஏற்றுக்கொள்ளாத மக்கள் வெளிப்படையாய் பார்க்கும்போது, அது அவர்களின் ஆர்வத்தை தூண்டும். அந்த ஆர்வத்தோடு அவர்கள் நம்மை அணுகும்போது, தேவன் நமக்கு அருளிய புதுவாழ்வை அவர்களுக்கு நாம் கொடுக்க எப்போதும் ஆயத்தமாயிருப்போம். ஆவிக்குரிய பலத்த காற்று வீசும் தருவாயில் அவைகளை ஒரேயடியாய் எல்லோருக்கும் நாம் பிரசங்கிக்கவேண்டியதில்லை. மாறாக, ஏற்றுக்கொள்ள பக்குவப்பட்டிருக்கும் இருதயத்தில் மென்மையாகவும் மரியாதையுடனும் விசுவாசத்தின் விதையை நாம் விதைக்க பிரயாசப்படுவோம்.