2020ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, பிரேசிலின் புகழ்பெற்ற “மீட்பராகிய கிறிஸ்து” என்னும் கிறிஸ்துவின் சிலையில் கிறிஸ்துவுக்கு மருத்துவர் ஆடை உடுத்தப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பல முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த சித்தரிப்பானது, இயேசுவே நம்முடைய பரம வைத்தியர் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது (மாற்கு 2:17). 

இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் பல பிணியாளிகளுக்கு சுகம் கொடுத்திருக்கிறார். பர்திமேயு குருடன் (10:46-52); குஷ்டரோகி (லூக்கா 5:12-16); திமிர்வாதக்காரன் (மத்தேயு 9:1-8) என்று சில உதாரணங்களைக் கூறமுடியும். அவரைப் பின்பற்றி வருகிற மக்கள் மீதான அவருடைய கரிசனையை, அவர் அப்பங்களை பெருகச் செய்து அனைவரையும் போஷித்த சம்பவத்தின் மூலம் அறிந்துகொள்ளமுடியும் (யோவான் 6:1-13). அந்த அற்புதங்கள் அனைத்தும் இயேசுவின் பராக்கிரமத்தையும் ஜனங்கள் மீதான அவருடைய தெய்வீக அன்பையும் வெளிப்படுத்துகிறது. 

அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாய் அவருக்கு கிடைத்த சுகமாக்குகிற வல்லமையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்திருக்கிறார். அது, நாம் பாவத்தினால் தேவனிடத்திலிருந்து முற்றிலுமாய் பிரிக்கப்பட்ட சூழ்நிலையின் மத்தியிலும் “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்பதே (ஏசாயா 53:5). இயேசு நம்முடைய அனைத்து சரீர சுகவீனங்களையும் சுகமாக்கவில்லையெனினும், தேவனோடு உறவுகொள்ளும் நம்முடைய தேவையை அவர் பூர்த்திசெய்கிறவராயிருக்கிறார்.