எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கேரன் உல்ப்கட்டுரைகள்

தேவனை அறியும் அறிவு

எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்தே ஒரு தாயாக வேண்டும் என்று அதிகமாய் வாஞ்சித்தேன். திருமணமாகும், கருத்தரிப்பேன், குழந்தை பிறக்கும், கையிலெடுத்து கொஞ்சுவேன் என்றெல்லாம் கனவு காண்பேன். ஒருவழியாக எனக்கு திருமணமும் ஆனது. நானும் என் கணவரும் கர்ப்பத்தின் கனி பிறக்க ஆவலாய் இருந்தோம். ஆனாலும், ஒவ்வொரு முறையும் கர்ப்பப் பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக வரும்போது, மலட்டுத்தன்மையோ என்னவோ? என்று பயந்தோம். மாதக்கணக்கில் மருத்துவமனை சந்திப்புகளுக்குப்பின் அடுத்தடுத்து மிஞ்சியது கண்ணீரே. சூறாவளிக்குள் இருந்தது போன்ற உணர்வு. இந்த நிலையை ஜீரணிக்கமுடியாத எங்களுக்கு தேவனுடைய நன்மை மற்றும் உண்மையின் மேல் இருந்த விசுவாசம் தடுமாறியது.

எங்களுடைய பயணத்தைப் பார்க்கும்போது, யோவான் 6-ஆம் அதிகாரத்தில், புயலின் நடுவே சிக்கின சீடர்களின் கதை தான் ஞாபகம் வருகிறது. புயல்வீசும் இரவில் அலைமோதும் படகில் அவர்கள் தவிக்கையில், எதிர்பாராதவிதமாக கொந்தளிக்கும் அலைகளின்மேல் இயேசு அவர்களிடமாய் நடந்துவந்தார். தம்முடைய பிரசன்னத்தின் மூலம் அவர்களை அமைதியாக்கி, “நான்தான், பயப்படாதிருங்கள்” என்றார் (வச. 20).

சீடர்களைப் போன்றே, எங்களுடைய வாழ்க்கையில் வீசிக்கொண்டிருந்த இந்தப் புயலின் நடுவே என்ன நடக்குமென்றும் அறியாதிருந்தோம். ஆனாலும், எப்போதும் சத்தியம் நிறைந்தவராய், உண்மையுள்ளவராய் அவரை இன்னும் ஆழமாக அறிந்துகொண்டோம். ஒருவேளை எங்களுடைய எதிர்பார்ப்பின்படி எங்களுக்கென்று ஒரு குழந்தை இல்லாதுபோனாலும், எங்களுடைய எல்லா போராட்டங்களிலும் எங்களை அமைதிப்படுத்தும் அவருடைய வல்ல பிரசன்னத்தை உணர்ந்திடமுடியும் என்பதை புரிந்துகொண்டோம். எங்களுடைய வாழ்க்கையில் அவர் வல்லமையாய் இடைபடுவதால், நாங்கள் கலங்கவேண்டியதில்லை.

கவலைக்கு மருந்து

என் கணவனின் வேலைக்காகப் புது இடத்திற்குப் போவது உற்சாகமூட்டியது. ஆனால், அது அறியாத இடம், அங்குள்ள சவால்கள் என்னைக் கவலைப்பட வைத்தது. பொருட்களை வேண்டியது, வேண்டாதது என்று பிரித்துக் கட்ட வேண்டும், அங்கு வசிக்க ஒரு இடம் கண்டுபிடிக்க வேண்டும், எனக்கொரு வேலை தேட வேண்டும், புது நகரத்தில் ஒரு வழியும் தெரியாது, எப்படிக் குடியிருக்கப் போகிறேனோ என்று கவலைப்பட்டுக் கலங்கினேன். நான் செய்ய வேண்டிடும் என்ற பட்டியலைப் பார்த்தபொழுது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. கவலைப்படாதே ஜெபம் பண்ணு (பிலி. 4:6-7).

தனக்கு என்ன நேரிடும் என அறியாத நிலையில், எதிரிட இருக்கும் சவால்களையும் அறியாதநிலையில், கவலைப்பட வேண்டிய ஒரு மனிதன் உண்டானால் அது பவுலாகத்தான் இருக்கும். கப்பற்சேதம் ஏற்பட்டது, அடிக்கப்பட்டார், சிறையிலடைக்கப்பட்டார். பிலிப்பி சபையில் தங்களுக்கு நேரிடப் போகும் காரியங்களை அறியாமலிருந்த தன் நண்பர்களை உற்சாகப்படுத்த “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து, உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (வச. 6) என்றெழுதினார்.

பவுலின் வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தின. வாழ்க்கை எதிர்பாராத, நம்பமுடியாத சம்பவங்களைக்கொண்டது. அது வாழ்க்கையைத் தலைகீழாக்குகிற பெரிய மாற்றமாயிருக்கலாம், குடும்பப் பிரச்சனைகளாயிருக்கலாம், உடல் நலக்கேடாயிருக்கலாம் அல்லது பொருளாதார நெருக்கடியாயிருக்கலாம், இவையெல்லாவற்றிலுமிருந்து நாம் கற்றுகொள்வதென்னவென்றால் தேவன் நம்மைக் கரிசனையோடு விசாரிக்கிறார். அறியாதவைகளைக்குறித்த பயத்தை விட்டுவிட்டு அதை அவரிடம் கொடுத்துவிட அழைக்கிறார். நாம் அதைச் செய்யும்பொழுது, எல்லாவற்றையும் அறிந்த தேவன், “அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச. 7) என்கிறார்.

எது வரைக்கும்?

எனக்கு திருமணம் ஆனவுடனேயே எனக்கு குழந்தைகள் பிறந்துவிடும் என்று எண்ணினேன். உடனே குழந்தைகள் பிறக்கவில்லை. குழந்தை பெறுவதற்கு இயலாத என்னுடைய நிலைமையினால் ஏற்பட்ட மனவேதனை குழந்தை பேற்றுக்காக தேவனிடம் மன்றாட எனக்கு வழிவகுத்தது. நான் அடிக்கடி தேவனிடம் “எவ்வளவு காலம்?” என்று முறையிடுவேன். எனது சூழ்நிலைகளை தேவனால் மாற்றி அமைக்க இயலும். என்று அறிவேன். ஆனால், அவர் ஏன் மாற்றவில்லை?

நீங்கள் தேவனுக்கு காத்திருக்கிறீர்களா? நாம் வாழும் இப்பூமியிலே நியாயம் நிலை நிறுத்தப்பட எவ்வளவு காலம் ஆகுமென்று கேட்கிறீர்களா? கேன்சர் நோய் சுகமாகக் கூடிய காலம் எப்பொழுது வரும் என்று கேட்கிறீர்களா? நான் கடனில் விழுந்து விடாமல் இருக்க எவ்வளவு காலம் ஆகுமென்று கேட்கிறீர்களா?

ஆபகூக் என்ற தீர்க்கன் அதுபற்றி தெளிவான எண்ணம் கொண்டிருந்தான். “கர்த்தாவே நான் எது வரைக்கும் உம்மை நோக்கி கூப்பிடுவேன். நீர் கேளாமல் இருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எது வரைக்கும் உம்மை நோக்கி கூப்பிடுவேன். நீர் என்னை இரட்சியாமல் இருக்கிறீரே. நீர் எனக்கு அக்கிரமத்தை காண்பித்து என்னை தீவினையை பார்க்கப் பண்ணுகிறது என்ன?” (ஆப. 1:2-3) என்று அவன் தேவனை நோக்கிக் கதறினான். நீதியும் வல்லமையுமுள்ள தேவன், பொல்லாப்பு அநீதி, சீர்கேடு ஆகியவற்றை எவ்வளவு காலம் தொடர தேவன் அனுமதிப்பார் என்று அவன் அங்கலாய்த்தான். ஏன் தேவன் இடைப்படவில்லை. ஏதும் செயல்படவில்லை என்ற கேள்விகளைக் குறித்து ஆபகூக் அதிகமாக சிந்தித்தான்.

நாமும் இவ்விதமாக தேவன் ஏன் செயல்படாமலிருக்கிறாரென்று எண்ணுகிற நாட்கள் உண்டு. ஆபகூக்கைப் போல “எது வரை?” என்று தேவனிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆயினும் நான் தனிமையாக இல்லை. ஆபகூக்கின் குரலைக் கேட்டவர் நம்முடைய பாரங்களைப் பற்றியும் விசாரிக்கிறவராயிருக்கிறார். அவர் நம்மை விசாரிக்கிறவரானபடியினால் நமது பாரங்களை அவர்மேல் வைத்துவிட வேண்டும். தேவன் நமது விண்ணப்பங்களை கேட்கிறார். அவரது நேரத்தில் அவர் அவைகளுக்குப் பதிலளிப்பார்.

தடைகளை அகற்றுதல்

முன்னால் கைதிகள் மீண்டும் சமுதாயத்தோடு இணைந்து வாழ உதவும் ஒரு அமைப்பாகச் செயல்படும் அந்த இல்லத்தைப் பார்வையிடும் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் நான் மேரியைப் பார்ப்பதுண்டு. என்னுடைய வாழ்வு அவளுடைய வாழ்க்கையை விட வித்தியாசமானது. அவள் இப்பொழுதுதான் சிறையை விட்டு வெளியே வந்தவள். போதையிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய மகனிடமிருந்து பிரிக்கப்பட்டுவிட்டாள். இப்படியாக அவள் சமுதாயத்தின் ஓர் ஓரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள்.

மேரியைப் போன்று சமுதாயத்தின் ஓரத்தில் வாழ்வதென்றால் என்னவென்று அடிமையான ஒநேசிமுக்குத் தெரியும். ஒநேசிமு தன்னுடைய கிறிஸ்தவ எஜமான் பிலேமோனுக்குத் துரோகம் இழைத்த காரணத்தினால், இப்பொழுது சிறையில் இருக்கிறான். அங்கிருக்கையில் அவன் பவுலைச் சந்தித்து, இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கையுள்ளவனாகிறான் (வச. 10). மனம்மாறியவனாக இருந்த போதிலும் ஒநேசிமு ஒரு அடிமை. பவுல் அவனை மீண்டும் பிலேமோனிடம் ஒரு கடிதத்தோடு அனுப்புகிறான். அதில் ஒநேசிமுவை “இனிமேல் அவன் அடிமையானவனாக அல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும், பிரியமுள்ள சகோதரனாகவும் இருக்கும்படிக்கு (பிலே. 1:15) ஏற்றுக் கொள்ளும்படி எழுதுகிறான்.

பிலேமோன் இப்பொழுது ஒநேசிமுவை அடிமையாகவா? அல்லது கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனாகவா? எதைத் தேர்வு செய்யப் போகிறான்? நானும் இப்பொழுது எதைத் தேர்ந்து கொள்ளப் போகிறேன்? மேரியை ஒரு முன்னாள் குற்றவாளி, போதையின் அடிமைத் தனத்திலிருந்து மீண்டு வருபவளாகவா? அல்லது இயேசு கிறிஸ்துவின் வல்லமையினால் முழுவதும் மாற்றப்பட்டவளாகவா? மேரி கிறிஸ்துவுக்குள் என்னுடைய சகோதரி எங்களுடைய விசுவாசப் பயணத்தில் இருவரும் இணைந்து நடக்கும் பாக்கியம் பெற்றவள்.

நம்முடைய சமுதாய பொருளாதார நிலைகள், பரிவுகள், கலாச்சார வேறுபாடுகள் நம்மை எளிதில் பிரித்துவிடலாம். ஆனால், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் இந்த அனைத்துத் தடைகளையும் அகற்றி நம் வாழ்வையும் உறவுகளையும் நிரந்தரமாக மாற்றி நம்மைப் புதிப்பிக்கும்.

பயத்திலிருந்து விசுவாசத்துக்கு!

மருத்துவரின் சொற்கள் அவளது இருதயத்;தை அதிரவைத்தது. அது புற்று நோய். அவளது கணவரையும் பிள்ளைகளையும் நினைத்தபோது அவளது உலகமே நின்றது போலிருந்தது. வேறு விதமான முடிவை வேண்டி அவர்கள் கருத்தாய் ஜெபித்தார்கள். இப்போது அவர்கள் என்ன செய்யக்கூடும்? கன்னங்களில் நீர் கொட்ட அவள் மென்மையாய் ஜெபித்தாள், “தேவனே, இது எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது தயவுசெய்து நீர் எங்கள் பெலனாயிரும்.”

நமது முன்கணிப்பு, நம்பிக்கையைச் சிதறடிப்பதாகவும் நமது சூழ்நிலைகள் நமது கட்டுப்பாட்டிற்கு மீறினதாகவும் இருக்கும்போது நாம் என்ன செய்கிறோம்? நமது எதிர்காலம் நம்பிக்கையற்றதாய்த் தோன்றும்போது நாம் எங்கே நோக்குகிறோம்?

தீர்க்கதரிசியாகிய ஆபகூக்கின் நிலைமை அவரது கட்டுப்பாட்டில் இல்லை, அவர் மிகவும் திகிலடைந்தார். வருகின்ற நியாயத்தீர்ப்பு பேரழிவைக் கொண்டுவருவதாயிருந்தது (ஆபகூக் 3:16-17) என்ற போதிலும், வரப்போகின்ற குழப்பங்களின் மத்தியில் தன் விசுவாசத்தில் நிலைகொண்டிருக்க (ஆபகூக் 2:4) ஆபகூக் தெரிந்துகொண்டார். தேவனில் மகிழத் தீர்மானித்தார் (3:18). தனது சூழ்நிலைகளின் மேல் தனது நம்பிக்கையையும் விசுவாசத்தையம் வைக்காமல், தேவனுடைய நற்குணம் மற்றும் வல்லமையைச் சார்ந்துகொள்ள முடிவு செய்தார். தேவன் மேலுள்ள தனது நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தினார்: “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான் கால்களைப் போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப் பண்ணுவார்” (3:19)

வியாதிகள், குடும்பப் பிரச்சனை, நிதி நெருக்கடி போன்ற கடின சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும்போது நாம் நமது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் தேவனில் வைக்க வேண்டும். அவர் எந்தச் சூழ்நிலையிலும் நம்மோடு இருக்கிறார்.

தலை சிறந்த மேன்மை

நான் ஜமைக்காவில் வளர்ந்த பொழுது என் பெற்றோர் என்னையும், என் சகோதரியையும் “நன் மக்களாக” இருக்கத்தக்கதாக எங்களை வளர்த்தார்கள். பெற்றோருக்கு கீழ்ப்படிதல், உண்மையைச் சொல்லுதல், பள்ளியிலும் மற்ற வேலைகளிலும் தலை சிறந்துவிளங்குதல். கிறிஸ்மஸ் அல்லது ஈஸ்டர்காவது ஆலயத்திற்குச் செல்லுதல், இவைகளே நல்லவர்கள் என்பதின் அடையாளமாக எனது வீட்டில் இருந்தது. நான் மேலே கூறிய விளக்கமே எல்லா நாட்டிலும் நல்லவர்கள் என்பதற்கு சரியான விளக்கமாக இருக்குமென்று நான் கற்பனை செய்கிறேன். உண்மையில் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியர் 3ஆம் அதிகாரத்தில் நல்லவர் என்ற பதத்திற்கு கொடுத்துள்ள விளக்கமானது, அதைவிட மேலான ஒரு காரியத்தை குறிப்பதாக இருக்கிறது .

பவுல் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தியுள்ள யூதனாக நியாயப்பிரமாண விதிகளை ஒழுங்காக கைக்கொண்டு வந்தார். அவர் மிகச் சிறந்த குடும்பத்தில் பிறந்து, மிகச் சிறந்த கல்வியை கற்று, சிறந்த மதத்தை கைக் கொண்டு வந்தார். யூத பழக்க வழக்கங்களை கைக் கொண்டு நடப்பதில் பவுல் உண்மையாகவே நல்ல மனிதனாக விளங்கினார். அவர் விரும்பினால், அவருடைய மேன்மையான குணங்களைப்பற்றி அவர் மேன்மை பாராட்டலாம் என்று வசனம் 4இல் கூறுகிறார். அவர் மிக நல்லவர்தான் ஆயினும் நல்லவராக இருப்பதைவிட மேலான ஒரு காரியம் உள்ளதென்று, அவருடைய நிருபத்தை வாசிப்பவர்களுக்கு (நமக்கும்) கூறியுள்ளார். நல்லவராக கருப்பதும் தேவனுக்குப் பிரியமாக வாழ்வதும் ஒரே காரியம் அல்ல என்பதை பவுல் அறிந்திருந்தார்.

இயேசுவை பிரியப்படுத்துவது என்பது, இயேசுவை அறிந்து கொள்வதுதான் என்று வசனம் 7,8ல் பவுல் எழுதியுள்ளார். இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வதும், இயேசு கிறிஸ்துவின் மேன்மைகளைய ஒப்பிடும் பொழுது, அவருடைய மேன்மைகள் எல்லாம் குப்பை என்று கருதினார். நாம், நமது மேன்மையை நம்பாமல், நமது நம்பிக்கையும், விசுவாசமும் கிறிஸ்துவில் மட்டுமே இருக்கும் பொழுது, நாம் நல்லவர்களாக இருக்கிறோம், தேவனை பிரியப்படுத்துகிறோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?

 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).

 

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார்.