நம்மைக் காண்பவர்
என்னுடைய மனைவி சமையல் அறைக்குள் நுழைந்தவுடன், “ஓ, இல்லை!” என சத்தமிட்டாள், அதே நேரத்தில், 90 பவுண்டு எடை கொண்ட “மேக்ஸ்” என்று நாங்கள் அழைக்கும் லேப்ரடார் வகை நாய் சமையல் அறையை விட்டு வெளியேறியது.
சமையல் அறை மேசையின் விழிம்பில் வைக்கப்பட்டிருந்த கறித்துண்டுகள் காணாமல் போய் விட்டன. மேக்ஸ் அதைச் சாப்பிட்டு விட்டது, வெறும் பாத்திரம் மட்டுமேயுள்ளது. மேக்ஸ் கட்டிலின் அடியில் ஒளிந்து கொள்ள முயற்சிக்கின்றது, ஆனால் அதனுடைய தலையும், தோள் பகுதிமட்டும் தான் மறைக்கப்பட்டுள்ளது, நான் அதனைத் தேடிச் சென்ற போது, அதனுடைய உடலும், வாலும் வெளியே தெரிந்து அதனைக் காட்டிக் கொடுத்து விட்டது.
“ஓ, மேக்ஸ், உன்னுடைய பாவம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்” என்றேன். இஸ்ரவேலரின் இரண்டு கோத்திரத்தாரை, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வாக்கிற்குச் செவிகொடுக்குமாறு எச்சரித்த போது, மோசே பயன்படுத்திய வார்த்தைகள் இவை. அவன், “நீங்கள் இப்படிச் செய்யாமல் போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்” (எண். 32:23) என்றான்.
ஒரு கணத்திற்குப் பாவம் இனிமையானதாகத் தோன்றலாம், ஆனால் அது நம்மை தேவனிடமிருந்து பிரிக்கின்றது. மோசே இஸ்ரவேலரிடம் தேவனுக்கு மறைவானது ஒன்றுமில்லை என எச்சரிக்கின்றார். வேதாகம எழுத்தாளர் ஒருவர், “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்” (எபி. 4:13) என்கின்றார்.
எல்லாவற்றையும் காண்கின்ற பரிசுத்த தேவன், நாம் பாவங்களை அறிக்கை செய்யும்படி அன்போடு நம்மை அழைக்கின்றார், பாவத்திற்காக மனம் வருந்தி, அதை விட்டுவிடு, தேவனோடு கூட நட ( 1 யோவா.1:9). இந்நாளிலிருந்து அன்போடு நாம் அவரைப் பின்பற்றுவோம்.
இரட்சிப்பவர்
“உயிரோடு இருப்பவர்களில் மிகவும் தைரியமானவர்” என்று டெஸ்மாண்ட் அழைக்கப் பட்டார். ஆனால் மற்றவர்கள் எதிர்பார்ப்பதைப் போன்று அவர் இருந்ததில்லை. அவர் துப்பாக்கியை கையில் ஏந்த மறுத்த ஓர் இராணுவ வீரர். மருத்துவத் துறையைச் சார்ந்த அவர், தனிமனிதனாக, ஒரு யுத்தத்தின் போது, எழுபத்தைந்து காயமடைந்த வீரர்களை பதுகாப்பாக மீட்டார், அதில், அவரைக் கோழை என அழைத்தவர்களும், அவருடைய நம்பிக்கையை ஏளனம் செய்தவர்களும் அடங்குவர். இந்த வீரர், அதிகமான துப்பாக்கிச் சூடு நடைபெறும் பகுதியினுள் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே ஓடி, “தேவனே, இன்னும் ஒருவரைக் காப்பாற்ற உதவியருளும்” என்றார். அவருடைய வீரத்தைப் பாராட்டி, அவருக்கு கெளரவ பதக்கம் வழங்கப்பட்டது.
இயேசுவை அநேகர் புரிந்து கொள்ளவில்லை என வேதாகமம் கூறுகின்றது. சகரியா முன்னுரைத்தபடி (9:9) ஒரு நாளில், இயேசு எருசலேம் நகரத்திற்கு கழுதையின் மீது ஏறி, செல்கின்றார், மக்கள் கூட்டம் மரக் கிளைகளை அசைத்து, “ஓசன்னா!” (“இரட்சிப்பு” என்று அர்த்தம் கொள்ளும் ஆராதிக்கும் ஒரு வார்த்தை) என்று ஆர்ப்பரிக்கின்றது. சங்கீதம் 118:26ல் கூறப்பட்டுள்ள படி, அவர்கள், “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்!” என்று ஆர்ப்பரித்தார்கள் (யோவா.12:13). இந்தச் சங்கீதத்தின் அடுத்த வசனம் பலியைக் கொண்டுவருதலைக் குறிக்கின்றது (சங். 118:27). யோவான் 12ல் குறிப்பிட்டிருந்த கூட்டம், அவர்களை ரோமர்களிடமிருந்து விடுவிக்கும் ஒரு புவியாளும் மன்னனை எதிர்பார்த்தது, ஆனால் இயேசுவோ அதற்கும் மேலானவர், அவர் ராஜாதி ராஜா, நமக்காக பலியாக வந்தவர், தேவன் மாம்சத்தில் வந்தார், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காக, மனப்பூர்வமாக சிலுவையை ஏற்றுக் கொண்டார், அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பாக தீர்க்க தரிசனமாக உரைக்கப்பட்டதை நிறைவேற்றினார்.
“இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை” என யோவான் எழுதுகின்றார். ஆனால் பின்பு, “இப்படி அவரைக் குறித்து எழுதியிருக்கிறதையும்……நினைவுகூர் ந்தார்கள்” (யோவா.12:16). அவருடைய வார்த்தையின் வெளிச்சத்திலே தேவனுடைய நித்திய நோக்கம் அவர்களுக்குத் தெளிவானது. நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பும் அளவுக்கு, அவர் நம்மை நேசிக்கின்றார்!
முழுவதும் அறியப்பட்டிருக்கிறோம்
“நீ இங்கே இப்பொழுது இருக்கக் கூடாது, அங்கே மேலே ஒருவர் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்” என்று அந்த பெரிய வண்டியின் ஓட்டுனர் என் தாயாரிடம் கூறினார், செங்குத்தான மலையின் விளிம்பில் ஒரு குறுகிய இடுக்கில் சிக்கிக் கொண்ட என்னுடைய தாயாரின் காரைத் தன்னுடைய பெரிய வாகனத்தின் உதவியால் இழுத்த அந்த ஓட்டுனர், இந்த இடர்பாட்டுக்குள் இழுத்துச் சென்ற கார் டயரின் தடங்களை ஆய்வு செய்தபடியே இவ்வாறு கூறினார். என்னுடைய தாயார் அப்பொழுது என்னைத் தன் கருவில் சுமந்தவராய் இருந்தார். நான் வளர்ந்து வந்த போது, இந்தக் கதையை அவ்வப்போது எனக்கு கூறி, தேவன் அந்த நாளில் எங்கள் இருவரின் உயிரையும் எப்படி காப்பற்றினார் என அடிக்கடி நினைவு படுத்துவார். நான் பிறப்பதற்கு முன்பாகவே தேவன் என்னை கவனித்தார் என்பதை உறுதியாகக் கூறினார்.
எல்லாவற்றையும் அறிந்திருக்கிற நம்முடைய படைப்பின் கர்த்தாவின் கண்களுக்கு மறைவாக நம்மில் ஒருவரும் இல்லை. 2500 ஆண்டுகளுக்கு முன்பு எரேமியா தீர்க்கதரிசியிடம் தேவன், “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்” (எரே.1:5) என்றார். வேறு எவரும் அறிந்திராத வண்ணம், தேவன் நம்மை மிக நுணுக்கமாக அறிந்துள்ளார். அவராலேயே நம் வாழ்விற்கு ஒரு நோக்கத்தையும், அர்த்தத்தையும் கொடுக்க முடியும். அவர் தம்முடைய வல்லமையாலும், ஞானத்தாலும் நம்மைப் படைத்ததுமல்லாமல், நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நம்மைத் தாங்குகின்றார், நாம் அறியாமலே நமக்குள் ஏற்படுகின்ற ஒவ்வொரு தனிப்பட்ட அசைவையும் அவர் அறிவார், நம்முடைய இருதய துடிப்பு முதல் மூளையின் மிக நுணுக்கமான செயல்களையும் அவர் அறிவார். நாம் உயிரோடு இருப்பதற்கு காரணமான யாவற்றையும் தம் கரத்தில் வைத்துள்ள நம் பரலோகத் தந்தையின் வல்லமையை வியந்து, தாவீது, “தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்” (சங். 139:17) என்கின்றார்.
நம்முடைய மூச்சைக் காட்டிலும் மிக அருகில் இருப்பவர் நம் தேவன். அவரே நம்மைப் படைத்தார், நம்மை அறிந்திருக்கிறார், நம்மை நேசிக்கிறார், நாம் ஆராதிக்கவும், போற்றவும் தகுந்தவரும் அவரே.
மிகக் கடினமான இடங்கள்
ஜெஃப் என்பவர் வாலிபர்களுக்கான போதகர். அவர் எந்தப் பட்டணத்தில் போதைக்கு அடிமையாயிருந்தாரோ, அதே பட்டணத்திலேயே, இப்பொழுது போதகராயிருக்கிறார். தேவன் அவருடைய இருதயத்தையும், சூழல்களையும் பிரமிக்கத்தக்க வகையில் மாற்றினார். “சிறுவர்கள், நான் செய்த அதே தவற்றைச் செய்யாதபடியும், நான் பட்ட வேதனைகளின் வழியாக அவர்களும் செல்லாதபடியும் அவர்களைத் தடுக்க விரும்புகிறேன்” என்றார் ஜெஃப். “தேவன், அவர்களுக்கு உதவி செய்வார்” என்றார். சில நாட்களுக்கு முன்பு தேவன் அவரைப் போதையின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார், அவருடைய கடந்த காலம் மோசமானதாயிருந்தாலும், தேவன் அவருக்கு ஒரு முக்கியமான ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார்.
நாம் நம்பிக்கை யிழந்த சூழல்களிலிருந்தும், எதிர்பாராத நன்மையைக்கொண்டு வர தேவனுக்குத் தெரியும். யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டு, எகிப்துக்கு கொண்டு போகப்பட்டான், அங்கு தவறாக குற்றம் சாட்டப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான், அநேக ஆண்டுகளாக அவனை யாரும் தேடவும் இல்லை. ஆனால் தேவன் அவனை மீட்டார், அவனைப் பார்வோனுக்கு அடுத்தபடியான உயர் அதிகாரியாக வைத்தார். அதன் மூலம், அநேகருடைய ஜீவனைக் காத்தான், தன்னை கைவிட்ட சகோதரர்களின் ஜீவனையும் காத்தான். யோசேப்பு எகிப்திலேயே திருமணம் செய்தான், குழந்தைகளைப் பெற்றான். அவனுடைய இரண்டாவது மகனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான். (எபிரேய பாஷையிலே இரட்டிப்பான பலன் என அர்த்தம்) ஏனெனில், “நான் சிறுமைப் பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப் பண்ணினார்” (ஆதி. 41:52) என்றான்.
ஜெஃப் மற்றும் யோசேப்பின் கதைகள் நடைபெற்ற காலங்களுக்கிடையே ஏறத்தாள மூவாயிரம் முதல் நான்காயிரம் ஆண்டுகள் இடைவெளியிருந்த போதும், தேவனுடைய உண்மை மாறவில்லை. நம் வாழ்வின் கடினமான இடங்களையும் விளை நிலங்களாக மாற்றி, அநேகருக்குப் பயன்படும்படி செய்ய, தேவனாலே கூடும். நமது இரட்சகரின் அன்பும், வல்லமையும் ஒரு நாளும் மாறாது. அவர் மீது நம்பிக்கையாயிருக்கிறவர்களுக்கு அவர் எப்பொழுதும் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்.
அன்பினைப்பெற வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை
சிலவேளைகளில் என்னுடைய நாய், என்னுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக, எனக்குச் சொந்தமான எதையாகிலும், தன்னுடைய வாயில் கவ்விக்கொண்டு, எனக்கு முன்பாக நடந்துவரும். ஒரு நாள், நான் என்னுடைய அறையில் எழுதிக் கொண்டிருந்த போது, எனக்குப் பின் புறமாக வந்த மாக்ஸ் என்ற என்னுடைய நாய், என்னுடைய பணப்பையை கவ்விக் கொண்டு வெளியேறியது. ஆனால் நான் அந்தக் காரியத்தை கவனிக்கவில்லை என்று மாக்ஸ் தெரிந்து கொண்டபோது, அது, பணப்பையைக் கவ்வியபடியே திரும்பி வந்து தன் மூக்கினால் என்னைத்தொட்டது, உற்சாகத்தில் அதன் கண்கள் உருண்டன, வாலை ஆட்டியது, அதனோடு விளையாட வரும்படி என்னைக் கடிந்து கொண்டது.
மாக்ஸின் இந்தச் செயல் எனக்கு சிரிப்பை உண்டாக்கினாலும், எல்லா நேரங்களிலும், முக்கியமாக நான் மற்றவர்களோடு நேரம் செலவிடும் போது, அது அவ்வாறு இருப்பதில்லை. நான் அதிக நேரத்தை என்னுடைய குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் செலவிட வேண்டுமென விரும்புவதாலும், மற்றும் சிலவேலைகள் என்னுடைய மனதில் இடம் பிடித்திருப்பதாலும், எப்படியாகிலும் அந்த நாள் முடிவதற்குள் என்னுடைய அன்பு நாயிடம் சிறிது நேரம் செலவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு எனக்குள் இருந்து கொண்டேயிருக்கும்.
நம்முடைய பரலோகத் தந்தை, சர்வ வல்லவர், நம் ஒவ்வொருவரையும் மிக நெருக்கமாகச் சந்தித்து வருகின்றார். நம்முடைய நுரையீரலுக்குள் செல்லும் ஒவ்வொரு மூச்சையும், நம்முடைய வாழ் நாள் முடியும் மட்டும் தாங்கிப் பிடிக்கின்றார் என்பதைத் தெரிந்து கொள்ளும் போது, எத்தனை ஆறுதலாகவுள்ளது. அவர் தம் பிள்ளைகளுக்கு, “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், சுமப்பேன், தப்புவிப்பேன்” (ஏசா.46:4) என்று வாக்களிக்கின்றார்.
தேவன் நமக்கென்று எப்பொழுதும் நேரம் செலவிடுகின்றார். நம்முடைய ஒவ்வொரு சூழ்நிலைகளையும் அவர் புரி ந்துகொள்கின்றார். அது எத்தனை கடினமானதாயினும், சிக்கலானதாயினும், நாம் ஜெபத்தில் கூப்பிடும் போது அவர் அங்கேயிருக்கிறார். நமது இரட்சகரின் எல்லையில்லா அன்பினைப்பெற நாம் வரிசையில் காத்திருக்க அவசியமில்லை.
ஜெபிக்கும்படி தூண்டப்படல்
“அநேக ஆண்டுகளுக்கு முன்பு, உனக்காக ஜெபிக்கும் படி, நான் அடிக்கடி தூண்டப்பட்டேன். ஏன் என்று தெரியாமல் ஆச்சரியப்பட்டேன்.” இந்தச் செய்தியின் வார்த்தைகள், என்னுடைய ஒரு பழைய சிநேகிதியிடமிருந்து வ ந்தது. அத்தோடு, அவளுடைய வேதாகமத்தில் வைத்துள்ள ஒருஜெபக்குறிப்பின் புகைப்படத்தையும் அனுப்பியிருந்தாள். “ஜேம்ஸ்ஸுக்காக ஜெபி, அவனுடைய மனது, எண்ணங்கள், வார்த்தைகளுக்காக ஜெபி.” என்றிருந்தது. என்னுடைய பெயருக்கு அருகில், அவள் மூன்று தனித் தனியான வருடங்களைக் குறிப்பிட்டிருந்தாள்.
நான் அந்த வருடங்களைப் பார்த்த போது, திகைத்துப் போனேன். நான் மீண்டும் அவளிடம், எந்த மாதத்திலிருந்து ஜெபிக்கத் துவங்கினாள் எனக் கேட்டேன். அவள், “ஏறத்தாள ஜுலை மாதத்திலிருந்து,” என பதிலளித்தாள்.
அந்த மாதத்திலிருந்து தான், நான் உயர் கல்விக்காக, வெளிநாட்டிற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அங்கு, நான் அறிமுகமில்லாத கலாச்சாரத்தையும், மொழியையும் சந்திக்க வேண்டும். எப்பொழுதும் இல்லாத அளவுக்கு, என்னுடைய விசுவாசத்தில் மிகவும் சோர்ந்து போயிருந்தேன். நான் அந்த ஜெபக் குறிப்பை பார்த்தபோது, விலையேறப்பெற்ற ஈவாகிய ஜெபத்தைப் பெற்றுள்ளேன் என்பதை உணர்ந்தேன்.
என்னுடைய சிநேகிதியின் கரிசனை, மற்றும் ஒருவர் ஜெபிக்கத் “தூண்டுவதை,” எனக்கு நினைப்பூட்டியது. இளம் ஊழியரும் நண்பருமான தீமோத்தேயுவுக்கு பவுல் ஆலோசனை கூறும் போது,” நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனின், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும்,வேண்டுதல்களையும், ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்.”(1 தீமோ 2:1).இதில் “பிரதானமாய்” என்ற சொல், மிக முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறியும் அறிவை அடையவும், தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார்.”(வ.4) என பவுல் இயேசுவைக் குறித்து விளக்குவதால், நம்முடைய ஜெபங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை எனத் தெரிகின்றது.
விசுவாசமுள்ள ஜெபத்தின் மூலம், தேவன் எண்ணற்ற வழிகளில் பிறரைச் சந்தித்து, உற்சாகப்படுத்தி, அவர்களைத் தம்மண்டை இழுத்துக்கொள்கின்றார். சிலரைக் குறித்து நினைவு வரும் போது, அவர்கள் எத்தகைய சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் அறியோம், ஆனால் தேவன் அறிவார். நாம் அவர்களுக்காக ஜெபிக்கும் போது, தேவன் அந்த நபருக்கு உதவி செய்வார்!
கொடுப்பதில் வளருதல்
“நான் உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன்” என்று என்னுடைய இரண்டு வயது பேரன், மகிழ்ச்சியில் கத்திக் கொண்டே, என்னுடைய கரங்களில் ஒரு பெட்டியைத் திணித்தான். “அவனே அதைப் தெரிந்தெடுத்தான்” என்று என்னுடைய மனைவி சிரித்துக்கொண்டே சொன்னாள்.
அந்தப் பெட்டியைப் பிரித்த போது, அங்கு அவனுக்குப் பிடித்தமான கார்டூன் அங்கத்தினரின் உருவம், கிறிஸ்மஸ் பரிசாக வைக்கப்பட்டிருந்தது. “நான் பார்க்கலாமா?” என்று ஆவலோடு கேட்டான். பின்னர் அவன் அந்த, “என்னுடைய” பரிசை வைத்து அந்த நாள் முழுவதும் விளையாடினான், நான் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டேன்.
கடந்த காலங்களில், நான் விரும்பியவர்களுக்குக் கொடுத்த பரிசுகளை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டேன். நான் உயர் நிலைப் பள்ளியில் படித்த போது, என்னுடைய மூத்த சகோதரனுக்கு இசை ஆல்பம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தேன், அதைக் கேட்பது எனக்கு மிகவும் விருப்பமாயிருக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்னும் தாராளமாகக் கொடுக்கும்படி, தேவன் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார் என்று நினைத்துப் பார்த்தேன்.
கொடுப்பது என்பது நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பண்பு. “மற்றெல்லாக் காரியங்களிலும் நீங்கள் பெருகியிருக்கிறது போல, இந்த தர்மக் காரியத்திலும் பெருகவேண்டும்” என்று பவுல் எழுதுகின்றார்
(2 கொரி. 8:7). நம்மிடம் இருப்பவையெல்லாம் தேவன் தந்தவை என்று எண்ணி, நாம் கொடுக்கும் போது கிருபை பெருகும். ஏனெனில், “வாங்குகிறதைப் பார்க்கிலும், கொடுக்கிறதே பாக்கியம்” என்று இயேசு கூறியிருக்கிறாரே. (அப். 20:35).
தேவன் மிகச் சிறந்த தன்னலமற்ற ஈவை, நமக்காகத் தந்துள்ளார். தன்னுடைய ஒரேகுமாரனை, நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும்படி ஒப்புக்கொடுத்து, பின்னர் அவரை உயிரோடு எழுப்பினார். இந்த விலையேறப்பெற்ற ஈவைப் பெற்றுக்கொண்டவர்கள், அளவற்ற செல்வத்தைப் பெற்றுக் கொண்டவர்கள். நம்முடைய இருதயம் தேவனுக்கு நேராகத் திருப்பப்படும் போது, நம்முடைய கரங்கள் அன்போடு மற்றவர்களுக்குக் கொடுக்கும்.
எச்சரிப்பு வட்டங்கள்
ஆப்ரிக்கா தேசத்தின் வெளிமான்கள் திறந்த புல் வெளிகளில் ஓய்வு எடுக்கும் போது, தங்கள் உள்ளுணர்வு தூண்டுதலின் படி “எச்சரிப்பு வட்டங்களை” ஏற்படுத்திக் கொள்கின்றன. அவை, கூட்டமாகச் சேர்ந்து, ஒவ்வொன்றும் வெளிநோக்கிய திசையில், சற்றே மாறுபட்ட கோணத்தில் படுத்திருக்கும். இதன் மூலம் அவைகளால் 360 டிகிரி கோணத்தில் சுற்றுப்புறம் முழுவதையும் கண்காணித்து, வருகின்ற ஆபத்துகளைக் குறித்து மற்றவர்களுக்கு எச்சரிக்க முடியும்.
தங்களை மட்டும் பாதுகாத்துக் கொள்ள நினைக்காமல், தங்களுடைய குழுவிலுள்ள அனைவரின் மீதும் கரிசனை கொள்கின்றன. இயேசுவைப் பின் பற்றுபவர்களுக்கு தேவன் தரும் ஆலோசனையும் இதுவே. “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடி வருதலை… விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்” (எபி. 10:24-25).
எபிரெயர் நிருபத்தை எழுதியவர், கிறிஸ்தவ வாழ்வு தனிமையானதல்ல என்று விளக்குகிறார். இணைந்து வாழும் போது நாம் வலிமை பெறுகிறோம், ஒருவருக்கொருவர் புத்தி சொல்ல முடிகிறது (வச. 25). “எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்ய திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” (2 கொரி. 1:4) தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள், ஏனெனில், “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்” (1பேது. 5:8).
நாம் ஒருவரையொருவர் தாங்குவதன் நோக்கம் தப்பிப் பிழைப்பதற்கு மட்டுமல்ல. நம்மை இயேசுவைப் போல மற்றுவதற்கும், இவ்வுலகில், அன்பினால் தேவனுக்குப் பணிசெய்யவும், அவருடைய ராஜியத்தின் வருகையை நம்பிக்கையோடு, விசுவாசிகளோடு இணைந்து எதிர்பார்க்கவுமே. ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவது, நம் அனைவருக்குமே தேவை. நாம் அன்பினால் மற்றவர்களுக்கு உதவ, தேவன் நமக்கு உதவுவார். நாம் இணைந்து தேவனை நெருங்கி வாழுவோம்.
மிகவும் பாதுகாப்பான இடம்
வடக்கு கரோலினாவில் வில்மிங்க்டன் என்ற இடத்தை பிளாரன்ஸ் என்ற புயல், பேரழிவை ஏற்படுத்தும் வலிமையோடு தாக்கிய போது, என்னுடைய மகள் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேற ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். புயலின் வலிமை தணிந்து விடும் என்று எண்ணி, கடைசி நேரம் வரை, அவள் தாமதித்துக் கொண்டேயிருந்தாள். இப்பொழுது வேக வேகமாய் சில முக்கிய பொருட்களை எடுக்க எண்ணி, எடுக்கலாம் எனத் திணறிக் கொண்டு, “வீட்டை விட்டு வெளியேறுவது இத்தனை கடினமானது என்று நான் நினைக்கவில்லை, நான் மீண்டும் இங்கு வரும் போது ஏதாகிலும் மீதி இருக்குமா என்றும் தெரியவில்லை” என்றாள்.
நம் வாழ்விலும் அநேக வழிகளில் புயல் நம்மைத் தாக்குகின்றது சூறாவளி, சுழல் காற்று, நிலநடுக்கம், வெள்ளம் என எதிர் பாராத பிரச்சனைகள் நம்முடைய திருமண வாழ்வை, குழந்தைகளை, உடல் நலத்தை, அல்லது பொருளாதாரத்தைத் தாக்கலாம். நாம் மிக விலையேறப் பெற்றதாகக் கருதுபவை, ஒரு நொடிப் பொழுதில் மறைந்து போகலாம்.
இத்தனை புயலின் மத்தியிலும், வேதாகமம் நமக்கொரு பாதுகாப்பான இடத்தைக் காட்டுகின்றது.”தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துனையுமானவர். ஆகையால் பூமி நிலை மாறினாலும், மலைகள் நடுச் சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும்,… நாம் பயப்படோம்” (சங். 46:1-3).
இந்த சங்கீதத்தை எழுதியவரின் முன்னோர்கள், ஆரம்பத்தில் தேவனுக்கு உண்மையாய் பணிசெய்தனர், பின்னர், கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணினதால் பூமி அதிர்ச்சியில் அழிந்து போயினர் (எண். 26:9-11). இதன் விளைவாக, அவர்கள் தாழ்மையையும், தேவனுடைய மகத்துவத்தையும், அவருடைய இரக்கத்தையும், நம்மை மீட்கும் அவருடைய அன்பையும் பற்றி புரிந்து கொண்டனர்.
துன்பங்கள் வரும், ஆனால் நம் தேவன் அவை எல்லாவற்றையும் விட நீடித்திருப்பவர். அவரிடம் ஓடி, அடைக்கலம் புகுவோர் அவரை யாராலும் அசைக்க முடியாது என்பதைக் கண்டு கொள்வர். என்றும் நிலைத்திருக்கும் அவருடைய அன்பின் கரத்தினுள்ளே சமாதானமாக தங்கும் இடத்தை நாம் கண்டு கொள்வோம்.