கிறிஸ்மஸ் பிரசன்னம்
‘’அவருடைய வருகையை எந்தக் காதும் கேட்காது, ஆனால் இந்த பாவ உலகத்தில், சாந்தகுணமுள்ள ஆத்துமாக்கள் அவரை ஏற்றுக்கொள்ளும் காலகட்டத்தில் அன்பான இயேசு பிறக்கிறார்." எல்லோராலும் நேசிக்கப்பட்ட “ஓ லிட்டில் டவுன் ஆஃப் பெத்லெஹேம்" என்ற பாடலின் வரிகள் கிறிஸ்மஸ்ஸின் மைய கருத்தை சுட்டிக்காட்டுகிறது. நம்மை பாவத்திலிருந்து மீட்கவும், தம்மை விசுவாசிக்கிற அனைவருக்கும் தேவனோடு ஒரு புதிய மற்றும் முக்கியமான உறவை ஏற்படுத்தவும் இயேசு கிறிஸ்து, உடைந்துபோன இந்த உலகத்திற்கு வந்தார்.
இந்தப் பாடல் எழுதிய பல வருடங்களுக்குப்பின், இந்த பாடலாசிரியர் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அனுபவித்த இந்த உறவைப் பற்றி 'இது எனக்கு எவ்வளவு தனிப்பட்டதாக வளர்கிறது என்று கூற முடியாது. அவர் இங்கே இருக்கிறார். அவர் என்னை அறிந்திருக்கிறார், நானும் அவரை அறிந்திருக்கிறேன். இது வெறும் வார்த்தை அல்ல. உலகத்தில் இது மிக உண்மையானது, மற்றும் ஒவ்வொரு நாளும் இதை அதிக உண்மையாக்கி கொண்டே இருக்கிறது. வருடங்கள் செல்லும்போது இது எப்படி வளரும் என்று ஆச்சரியப்பட வைக்கிறது" என்று விவரிக்கிறார்.
தன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய பிரசன்னத்தை உறுதியாய் கூறுவது, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்ட பெயர்களில் ஒன்றான 'ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்" (ஏசாயா 7:14) என்பதை பிரதிபலிக்கிறது. மத்தேயு எழுதின சுவிஷேத்தில் எபிரேய மொழியில் இம்மானுவேல் என்பதற்கு 'தேவன் நம்மோடிருக்கிறார்" என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது (12:23)
தேவன், நாம் எப்போதும் அவரை தனிப்பட்ட முறையில் அறிந்துக்கொள்ள, இயேசுவின் மூலமாக நம்மிடம் வந்தார். அவர் நம்முடன் இருப்பதே நம் அனைவருக்கும் கிடைத்த மிகப் பெரிய பரிசு.
எல்லாவற்றையும் கேட்கும் தேவன்
உலகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிக நேரமெடுத்து போய் சேர்ந்தடைந்த அஞ்சல் 89 வருடம் கழித்து பெறுநரிடம் போய் சேர்ந்தது. 2008ஆம் ஆண்டில் யுகேவை சேர்ந்த ஒருவருக்கு, அவர் முகவரியில் குடியிருந்தவருக்கு, 1918ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ஒரு விருந்து அழைப்பிதல் வந்தது. "ராயல் மெயில்" முழுமையாக அனுப்பப்பட்ட இந்த அஞ்சல் இத்தனை வருடம் தாமதமான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
உலகத்தின் தலைசிறந்த தொடர்புகொள்ளும் முறைகள் கூட நம்மை சில நேரங்களில் கைவிடலாம். ஆனால் வசனம் நமக்கு தெளிவாக கூறுவது என்னவென்றால் விசுவாசிகளின் ஜெபத்தை தேவன் கேட்காமல் போவதில்லை. யெகோவா தேவனுக்கும், பாகாலுக்குமுள்ள வித்யாசத்தை தெளிவாக எலியா 1 இராஜாக்கள் 18'ல் நிரூபித்தான். அங்கு உண்மையான தேவன் யார் என்று நிரூபிக்கும் பாகால் தீர்க்கதரிசிகளின் நீண்ட நேர ஜெபத்தை பார்த்து எலியா கேலி செய்தான். "உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்" (வச. 27). அதன் பிறகு எலியா, அந்த மக்கள் விசுவாசத்திற்கு திரும்பும்படியாக தேவன் அவனுக்கு பதிலளிக்கும்படியாக ஜெபித்தான். அவர் வல்லமை மிகவும் தெளிவாக அங்கு விளங்கினது.
நம் ஜெபங்கள் எலியாவின் ஜெபத்தைபோல் உடனடியாக பதிலளிக்கப்படவில்லை என்றாலும், அவைகளை தேவன் கேட்டுகொண்டியிருக்கிறார் என்று நிட்சயித்துகொள்வோம் (சங். 34:17). பரிசுத்தவான்களுடைய ஜெபங்களை, பொற்கலசங்களிலுள்ள தூபவர்கங்களைப் போல அவர் நம் ஜெபங்களை பொக்கிஷிமாக கருதுகிறார் (வெளி. 5:8) என்று வாசிக்கிறோம். தேவன் நம் ஜெபங்களை தம்முடைய சொந்த வழியிலும், விலைமதிப்பற்ற ஞானத்தினாலும் தகுந்த சமயத்தில் பதிலளிக்கிறார். பரலோகத்துக்கு அனுப்பின எந்த கடிதமும் தொலைந்துபோவதில்லை.
நட்சத்திரங்களுக்கு அப்பால் கேட்பது
கைப்பேசி, அருகலை (Wi-Fi), தடங்காட்டி (GPS), ஊடலை (Bluetooth) சாதனங்கள், மற்றும் நுண்ணலைஅடுப்பு (microwave) இல்லாத வாழ்க்கையை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். மேற்கு விர்ஜினியா மாகாணத்தில் உள்ள Green Bank என்னும் ஊரில் இவைகள் எல்லாமே கிடையாது. அமெரிக்காவிலேயே மிக நிசப்தமான ஊர் என்று சொல்லப்படுகிறது. இங்கே தான் உலகத்திலேயே மிகப்பெரிய ‘திசைமாற்றக் கூடிய வானொலி தொலைநோக்கி’ கொண்ட Green Bank Observatory இருக்கிறது. இந்த தொலைநோக்கிக்கு அமைதி முக்கியம்; அப்பொழுதுதான் விண் வெளியில் காணும் pulsars மற்றும் galaxies உமிழும் இயற்கையான வானொலி அலைகளை உணர முடியும்.. அந்த தொலைநோக்கியினுடைய பரப்பு கால்பந்து மைதானத்தை விட அதிகம்.. அது மின்னணுக்கள் அதன் துல்லிய உணர்திறனில் குறுக்கிடாத ஒரு இடத்தில், 13,000 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட ’தேசிய வானொலி அமைதி மண்டலத்தில்’ இருக்கிறது.
இவ்விதமான அமைதியில் தான் விஞ்ஞானிகள் கோட்களின் இசையை கேட்க முடியும். இந்த பிரபஞ்சத்தை உண்டாக்கின சிருஷ்டிகரின் சத்தத்தை கேட்க வேண்டும் என்றால் நாமும் நம்மை இவ்விதமாக அமைதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.. வழிதவறிய, எளிதாக கவனம் சிதற கூடிய மக்களுக்கு இறைவன் ஏசாயா மூலமாக இவ்விதம் பேசினார்: “உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்... உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.( ஏசா. 55: 3) அவரை நாடி அவருடைய மன்னிப்பை தேடுகிறவர்களிடத்தில் நிச்சயமாக அன்பு கூறுவார்.
வேத வாசிப்பின் மூலமாகவும் ஜெபத்தின் மூலமாகவும் நாம் கருத்தாக இறைவனை நோக்கலாம். அவர் தூரத்தில் அல்ல. நாம் அவரை இம்மையிலும் மறுமையிலும் முதன்மையாக வைத்து, அன்றாடம் அவருக்கு நேரம் ஒதுக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார்.
நம்முடைய ஜெபத்தின் மூலம் மற்றவர்களை நேசித்தல்
1450 ல் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவர் தன்னுடைய அச்சகத்தை நகர்த்தக்கூடிய முறையில் இணைத்து, மேற்கத்திய வெகுஜன தொடர்பின் சகாப்தத்தின்போது இதை பயன்படுத்தி, கற்றலை புதிய சமூக பகுதிகளுக்கு பரப்பினார், உலகமுழுவதும் கல்வியறிவு அதிகரித்தது. புதிய யோசனைகள் சமூக மற்றும் மத சூழலில் விரைவான மாற்றத்தை கொண்டு வந்தது. குட்டன்பெர்க், வேதாகமத்தின் முதல் அச்சிடப்பட்ட பதிப்பை தயாரித்தார். இதற்கு முன்பு, வேதாகமம் மிகுந்த சிரத்தையோடு, எழுத்தாளர்களால் ஒரு வருடம் வரை கைநகலெடுக்கப்பட்டது.
பல நூற்றாண்டுகளக, அச்சகத்தின் மூலமாக நீங்களும் நானும் வேதத்தை நேரடியாக அணுகமுடிகிறது. நம்மிடத்தில் மின்னணு பதிப்புகள் இருந்தாலும், அனேகர் அவருடைய கண்டுபிடிப்பாகிய அச்சிடப்பட்ட வேதாகமத்தையே நம் கரங்களில் வைத்திருக்கிறோம், வேதாகமத்தின் செலவு மற்றும் அதை நகலெடுக்கும் நேரத்தைக் கொண்டு, ஒரு காலத்தில் அணுகமுடியாமல் இருந்த வேதாகமம் இன்று நம் விரல் நுனியில் உள்ளது.
தேவனுடைய சத்தியத்தை அணுகுவது ஒரு ஆச்சர்யமான சிலாக்கியம். நீதிமொழிகளை எழுதியவர் நாம் வேத வசனங்களில் அவருடைய கட்டளைகளை, நேசிக்க வேண்டிய ஒன்றாக, கண்மணியைப் போல (நீதி. 7:2) கருதவேண்டும் என்று குறிப்பிடுகிறார். அவைகளை விரல்களில் கட்டி, இருதய பலகையில் எழுதிக்கொள்ளவும் (வச. 3) குறிப்பிடுகிறார். நாம் வேதத்தை புரிந்துக்கொண்டு அதன் ஞானத்தின்படி வாழ முயலும்போது, நாம், எழுத்தாளர்களைப் போல, தேவனுடைய சத்தியத்தை, நாம் எங்கு சென்றாலும் எடுத்து செல்ல, விரல்களிலிருந்து இருதயத்திற்குள் இழுக்கிறோம்.
மிகச் சிறந்த அலை
“அலையை” ஏற்படுத்த மக்கள் விரும்புவர். உலகெங்கும் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும், இசைக் கச்சேரிகளிலும் ஒரு சில மக்கள் எழுந்து நின்று, தங்கள் கைகளை உயர்த்தி அசைக்கின்றனர், இதுவே ஆரம்பம், சில நொடிகளில், அவர்களின் அருகில் அமர்ந்திருப்பவர்களும் எழுந்து அதனையே செய்கின்றனர். இலக்கு என்னவெனில், ஓர் அசைவு தொடர்ச்சியாகப் பரவி, முழு அரங்கையும் அசையச் செய்வதேயாகும். அது அரங்கத்தின் கடைசி முனையை எட்டியதும், அதனைத் தொடங்கியவர் சிரித்து ஆர்ப்பரிக்கின்றார், தொடர்ந்து அசைவுகளை போய்க் கொண்டிருக்கச் செய்கின்றார்.
முதல் முதலாக பதிவு செய்யப்பட்ட அலை நிகழ்வு, 1981 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு விளையாட்டு நிகழ்வில் ஏற்படுத்தப் பட்டது. இத்தகைய அலையில் பங்கு பெற நான் விரும்புகின்றேன், ஏனெனில் அது வேடிக்கையாக இருக்கும். இந்த அலையைச் செய்யும் போது, நமக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியும், ஒன்றிணைவதும் சுவிசேஷத்தைப் பிரதிபலிக்கின்றது- இயேசுவில் நாம் பெறுகின்ற இரட்சிப்பு என்கின்ற நற்செய்தி, எங்கும் உள்ள விசுவாசிகள் அனைவரையும் அவரைப் போற்றுவதிலும் நம்பிக்கையிலும் ஒன்றிணைக்கின்றது. இந்த “முழுமையான அலை” இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எருசலேமில் துவங்கியது. கொலோசே சபை அங்கத்தினர்களுக்கு பவுல் எழுதும் போது, இதனைக் குறித்து, “அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன் தருகிறது போல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவக் கிருபையைச் சத்தியத்தின்படி அறிந்து கொண்ட நாள் முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாயிருக்கிறது” (கொலோ.1:6) என்கின்றார். இந்த நற்செய்தி தருகின்ற பலன் என்னவெனின், பரலோகத்தில் உங்களுக்காக (நமக்காக) வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம் பெற்றுள்ள, கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசமும் அன்பும் ஆகும் (வ.3-4).
இயேசுவின் விசுவாசிகளாகிய நாம், சரித்திரத்திலேயே மிகப் பெரிய அலையில் பங்கெடுக்கின்றோம். அதனைத் தொடர்ந்து செய்வோம்! நாம் அனைவரும் அதனை நிறைவேற்றி முடிக்கும் போது, அதைத் துவக்கியவரின் முகத்தில் ஏற்படும் சிரிப்பைக் காண்போம்.
ஒரு நோக்கத்தோடு வாழ்தல்
நாங்கள் எங்கள் வீட்டின் வெளியேயுள்ள பாதையில், பயணத்தைத் துவக்கிய போது, என்னுடைய மனைவி உற்சாகத்தோடு, எங்களின் மூன்று வயது பேரன் அஜயிடம், “நாம் ஒரு விடுமுறையைச் செலவிடச் செல்கின்றோம்” என்று கூறினாள். சிறுவன் அஜய், சிந்தனையோடு அவளைப் பார்த்து, “நான் விடுமுறைக்காகச் செல்லவில்லை, நான் ஒரு பணிக்காகச் செல்கின்றேன்” என்றான்.
“ஒரு பணிக்காக”ச் செல்கிறோம் என்ற கருத்தை, என்னுடைய பேரன் எங்கிருந்து கற்றுக் கொண்டான் என்பதை நாங்கள் அறியாவிட்டாலும், நான் விமான நிலையம் நோக்கி காரை ஓட்டிச் செல்லும் போது, அவன் கூறியது எனக்குள் ஒரு சிந்தனையைத் தந்தது. நான் இந்த விடுமுறையில், என்னுடைய வேலையிலிருந்து ஓர் இடைவெளியில், சில நாட்களைச் செலவழிக்கச் சென்றாலும், என்னுடைய மனதில், நான் இன்னும் “பணியில் இருக்கிறேன்; ஒவ்வொரு மணித்துளியையும் தேவனுக்காக, தேவனோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடிருக்கிறேனா? நான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், தேவனுக்குப் பணி செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்கின்றேனா?” என கேட்டுக் கொண்டேன்.
ரோமப் பேரரசின் தலை நகரான ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளை உற்சாகப் படுத்துவதற்காக, அப்போஸ்தலனாகிய பவுல், “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்” (ரோம. 12:11) என்கின்றார். இயேசுவுக்குள் நம் வாழ்வு, ஒரு நோக்கத்தோடும், உற்சாகத்தோடும் வாழும்படியே கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றார். நாம் உலகப் பிரகாரமான காரியங்களில் ஈடுபட்டிருக்கும் போதும், நாம் தேவனை எதிர்பார்ப்போடு நோக்கிப் பார்த்து அவருடைய நோக்கத்திற்காக வாழும் போது, புதிய அர்த்தத்தைப் பெற்றுக் கொள்வோம்.
நாங்கள் இரயில் வண்டியில், எங்களின் இருக்கைகளில் அமர்ந்த போது, “தேவனே, நான் உம்முடையவன், இந்த பயணத்தில் நான் என்ன செய்ய விரும்புகிறீர் என்பதை, தவறாமல் செய்ய எனக்கு உதவியருளும்” என்று ஜெபித்தேன்.
ஒவ்வொரு நாளும் நாம் தேவனோடு, அழியாத முக்கியத்துவம் வாய்ந்த பணியை நிறைவேற்றுகின்றோம்!
ஊர்ந்து செல்!
உலகம் கவனிக்கத் தவறுகின்ற மக்களை தேவன் பயன்படுத்த விரும்புகின்றார். வில்லியம் கேரி என்பவர் ஒரு சிறிய கிராமத்தில், 1700 ஆண்டுகளில் வளர்ந்தார், அவர் குறைந்த அளவே அடிப்படை கல்வியைப் பெற்றிருந்தார். அவர் தான் தெரிந்து கொண்ட வியாபாரத்தில், குறைந்த அளவு வருமானம் தான் ஈட்ட முடிந்ததால், வறுமையில் வாழ்ந்தார். தேவன் அவருக்கு, சுவிசேஷத்தைப் பரப்புவதில் தீராத தாகத்தைக் கொடுத்தார், அவரை சுவிசேஷப் பணிக்கு அழைத்தார். கேரி, கிரேக்கு, எபிரேயு, லத்தீன் மொழிகளைக் கற்றுக் கொண்டார். புதிய ஏற்பாட்டை முதன்முறையாக பெங்காலியில் மொழிபெயர்த்தார். இப்பொழுது அவர், “நவீன சுவிசேஷப் பணியின் தந்தை” என்று கெளரவிக்கப் படுகின்றார். அவர் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய திறமைகளைக் குறித்து, “நான் மெதுவாகத் தொடர்கின்றேன், நான் தொடர்ந்து செய்வேன்” என்று பணிவோடு தெரிவித்தார்.
தேவன் ஒரு வேலையைச் செய்யும்படி நம்மை அழைக்கும் போது, அந்த வேலையை முடிப்பதற்குத் தேவையான பெலனையும் தருகின்றார், நம்முடைய குறைகளை அவர் பார்ப்பதில்லை. கர்த்தருடைய தூதனானவர் கிதியோனுக்கு தரிசனமாகி, “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” (நியா.6:12) என்றார், மேலும் அந்த தூதனானவர் அவனிடம், அவர்களின் பட்டணத்தையும், பயிர்களையும் கொள்ளையிடுகின்ற மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரை மீட்கும்படியும் கூறுகின்றார். ஆனால் கிதியோன் “பராக்கிரமசாலி” என்ற பட்டத்தைப் பெற்றிருக்கவில்லை. அவன் தன்னைத் தாழ்த்தி, “ நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்…என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன்” (வ.15) என்கின்றான். ஆயினும் தேவன், தன்னுடைய ஜனங்களை ரட்சிக்க கிதியோனைப் பயன்படுத்தினார்.
கிதியோனின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்த வார்த்தைகள் “கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” (வ.12) என்பன. நாமும் தாழ்மையுடன் நமது இரட்சகரோடு நடந்து, அவருடைய பெலனைச் சார்ந்து கொள்வோமாகில், அவர் நம்மை பெலப் படுத்தி, அவர் மூலமாக மட்டும் நடத்தக் கூடிய காரியங்களை நிறைவேற்றித்தருவார்.
ஆபத்தில் உதவும் நண்பன்
கருத்து வசனம்: பவுலோ, அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து, நம்மோடே கூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக் கொண்டு போகக் கூடாது என்றான். அப்போஸ்தலர் 15:38
1939 ஆம் ஆண்டு, நவம்பர் 27 ஆம் நாள், புதையல்களைத் தேடும் மூன்று பேர், புகைப்பட நபர்களோடு, “ஹாலிவுட்” என்ற பிரசித்திப் பெற்ற திரைபடம் தயாரிக்கும் இடத்திற்கு வெளியேயுள்ள குப்பைகளைத் தோண்ட ஆரம்பித்தனர். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அவ்விடத்தில் பொன்னும், வைரமும் முத்துக்களும் நிறைந்த பொக்கிஷம் புதையுண்டு போயிற்று என்ற பேச்சை நம்பி, அவர்கள் இந்த வேலையில் இறங்கினர்.
ஆனால் அவர்கள் அதனைக் கண்டுபிடிக்கவில்லை. 24 நாட்கள் தோண்டிய பின்னர், ஒரு கடின பாறையால் தடுக்கப் பட்டு, வேலையை நிறுத்தினர். 90 அடி அகலமும், 42 அடி ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தைத் தான் அவர்களால் தோண்ட முடிந்தது. ஏமாற்றம் அடைந்தவர்களாய் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.
தவறு செய்வது மனித இயல்பு. நாம் அனைவருமே ஏதாவது ஒரு இடத்தில் தோல்வியைச் சந்திப்போம். ஊழியப் பிரயாணத்தில், இளைஞனான மாற்கு, பவுலையும் பர்னபாவையும் விட்டுப் பிரிந்தான், அதன் பின்னர் அவர்களோடு, அதிக நாட்கள் பணிசெய்யவில்லை என வேதாகமத்தில் காண்கின்றோம். இதனாலேயே, அவனுடைய அடுத்த பயணத்தில் அவனை அழைத்துச் செல்ல வேண்டாம் என பவுல் கூறுகின்றார் (15:38). இதனால், பவுலுக்கும் பர்னபாவுக்கும் மன வேறுபாடு தோன்றுகின்றது. ஆனாலும் அவனுடைய ஆரம்ப தோல்வியையும் தாண்டி, பல ஆண்டுகளுக்குப் பின்னர், வியத்தகு வகையில் செயல்பட்டதைக் காண்கின்றோம். பவுல் தன்னுடைய கடைசி காலத்தில் சிறையில், தனிமையில் இருந்தபோது, மாற்குவை அழைக்கின்றார். “மாற்குவை உன்னோடே கூட்டிக் கொண்டு வா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனம் உள்ளவன்” (2 தீமோ. 4:11) என்கின்றார். தேவன் மாற்குவைத் தூண்டி, அவனுடைய பெயரால் ஒரு சுவிசேஷத்தையும் எழுதவைக்கின்றார்.
நாம் தவறுகளையும், தோல்விகளையும் தனியே சந்திக்கும்படி தேவன் நம்மை விடமாட்டார் என்பதை மாற்குவின் வாழ்வு நமக்குக் காட்டுகின்றது. எல்லாத் தவறுகளையும் விட மேலான நண்பனாகிய தேவன் நமக்கு இருக்கின்றார். நாம் நமது இரட்சகரைப் பின்பற்றும் போது, அவர் நமக்குத் தேவையான பெலனையும், உதவியையும் தருவார்.
விடுவிக்கும் நம்பிக்கை
இந்த மனிதன் விடுவிக்கப் பட கூடாதவனாக காணப்படுகின்றான். அவனது குற்றப் பட்டியலில், எட்டு முறை துப்பாக்கி சுடுதல்(ஆறு பேர் கொல்லப்பட்டனர்) 1970 ஆம் ஆண்டு நியுயார்க் பட்டணத்தை அச்சுறுத்தும் வகையில் ஏறத்தாள 1500 நெருப்புகளை ஏற்படுத்தினான். அவனுடைய குற்றச்செயல் நடைபெறும் இடத்தில் காவல் துறையை திட்டி கடிதங்களை வைத்தான். ஆனால், ஒரு நாள் பிடிபட்டான். அவன் செய்த ஒவ்வொரு கொலைக்கும் தொடர்ந்து சிறைத்தண்டனை வழங்கப்பட்டு ஆயுள் கைதியானான்.
ஆனாலும், தேவன் இந்த மனிதனுக்கு இரங்கினார். இன்று இவன் கிறிஸ்துவின் விசுவாசி, அனுதினமும் தேவனுடைய வார்த்தைகளில் நேரத்தைச் செலவிடுகிறான். தன்னால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தான், அவர்களுக்காக ஜெபிக்கின்றான். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இந்த மனிதன் மீட்கப்பட வாய்ப்பேயில்லை என்றிருந்த போதும், அவன் தேவனிடத்தில் நம்பிக்கையைப் பெற்றான். அவன், “என்னுடைய விடுதலையை இயேசு என்ற ஒரே ஒரு வார்த்தையில் பெற்றேன்” என்றான்.
மீட்பு என்பது தேவனுடைய அற்புத செயல். சில கதைகள் இன்னும் வினோதமாக இருக்கின்றது. ஆனால் எல்லாவற்றிலும் உள்ள அடிப்படை உண்மை ஒன்றுதான். இயேசு வல்லமையுள்ள இரட்சகர்! அவருடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள நாம் ஒருவருமே தகுதியானவர்கள் அல்ல. அவர், “தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களை……….முற்று முடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபி.7:25).