முடிவில்லா அன்பு
எப்போதெல்லாம் தாத்தா என்னை கடற்கரைக்கு அழைத்துச் செல்லுகிறாரோ, அப்போதெல்லாம் தன்னுடைய கைக்கடிகாரத்தை கழற்றி வைத்து விடுவார்” என்று பிரியங்கா நினைவுகூர்ந்தாள். “ஏன்? என்று ஒரு நாள் அவரைக் கேட்டேன்.”
“அதற்கு அவர் புன்னகையுடன், ஏனென்றால் உன்னோடு நான் செலவு செய்யும் தருணங்கள் எவ்வளவு முக்கியம் என்று நீ அறிய வேண்டும்; காலம் செல்வது தெரியாமல் நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன்" என்று அவர் பதிலளித்தார்.
இந்த ஞாபகங்களை, பிரியங்கா அவளுடைய தாத்தாவின் இறுதிச் சடங்கின்போது பகிர்ந்தார். இது அவளுடைய மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று. மற்றவர்கள் நமக்காக நேரம் செலவிடும்போது, அதை நாம் எவ்வளவு மதிப்பாய் உணர்கிறோம் என்பதை நான் பிரதிபலித்தபோது, அது தேவனின் அன்பின் அக்கறையை வெளிப்படுத்தும் வேத வசனங்களை நினைவுபடுத்துகிறது.
தேவன் எப்போதும் நம்மோடு நேரம் செலவிடுகிறார். “நீர் உமது கையை திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தி ஆக்குகிறீர். கர்த்தர் தம் வழிகளில் எல்லாம் நீதி உள்ளவரும், தமது கிரியைகளில் எல்லாம் கிருபை உள்ளவருமாய் இருக்கிறார். கர்த்தர் சமீபமாய் இருக்கிறார்” (வச. 16-18) என்று சங்கீதம் 145ல் தாவீது வேண்டுதல் செய்கிறார்.
நம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியும், தேவனுடைய நன்மையும் அக்கறையும் நம்மைத் தாங்கி, நமக்கு சுவாசிக்க காற்றும் உண்ண உணவும் அளிக்கிறது. அவர் அன்பில் நிறைந்தவராய், நுட்பமான விஷயங்களையும் தன்னுடைய கிருபையினால் படைத்தார்.
தேவனுடைய அன்பு ஆழமானது; அவர் அளிக்கும் நன்மையும் கிருபையும் முடிவில்லாதது. அவர் நித்திய வாழ்விற்கு போகும் வாசலைக் காட்டுகிறார். அவருடைய பிரசன்னத்தில் நாம் களிகூருவோம். “நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்; நேரம் போவதே தெரியாமல், நித்திய காலமாய் நான் உன்னோடு இருக்க விரும்புகிறேன்.”
சிங்கம், ஆடு, இரட்சகர்!
நியூயார்க் பொது நூலகத்தின் வாயிலை கவனிப்பதுபோன்று இரண்டு கல்லால் ஆன சிங்கங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். மார்பிள் கற்களால் செதுக்கப்பட்ட அந்த சிங்கங்கள், 1911ஆம் ஆண்டு நூலகம் நிறுவப்பட்டதிலிருந்து அங்கிருக்கிறது. அந்த நூலகத்தின் ஸ்தாபகர்களை கனப்படுத்தும் விதத்தில், துவக்கத்தில் அந்த சிங்கங்களுக்கு லியோ லெனாக்ஸ் என்றும் லியோ அஸ்டர் என்று பெயரிடப்பட்டது. ஆனால் நியூயார்க்கின் கடினமான ஒரு காலகட்டத்தில், அதின் மேயர் ப்யோரெல்லா லகார்டியா, அந்த சிங்கங்களுக்கு வலிமை மற்றும் பொறுமை என்று பெயர் மாற்றினார். நியூயார்க் மக்களுக்கு அவை இரண்டு அந்த சவாலான தருணத்தில் அவசியம் என்று கருதினார். அந்த சிங்கங்கள் இன்னும் வலிமை மற்றும் பொறுமை என்றே அழைக்கப்படுகிறது.
வேதாகமம் ஜீவனுள்ள, வலிமையான, கடினமான தருணங்களில் உற்சாகத்தை கொடுக்கும் சிங்கத்தைப் பற்றி நமக்கு அறிவிக்கிறது. அந்த சிங்கம் பல நாமங்களால் அறியப்பட்டுள்ளது. தன்னுடைய பரலோக தரிசனத்தில் அப்போஸ்தலர் யோவான், தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் மீட்பையும் கொண்டுள்ள யாராலும் திறக்ககூடாத ஒரு முத்திரை புஸ்தகத்தைப் பார்க்கிறார். அப்போது, “நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்” என்று யோவானுக்கு சொல்லுகிறார் (வெளி. 5:5).
அடுத்த வசனத்தில் யோவான் புதிதான ஒன்றை காண்கிறார்: “இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கு... மத்தியிலே நிற்கக்கண்டேன்” (வச. 6). சிங்கமும் ஆட்டுக்குட்டியும் ஒரே நபர்: இயேசு. அவரே வெற்றிசிறக்கும் ராஜா. அவரே “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” (யோவான் 1:29). அவருடைய பெலத்தினாலும் சிலுவையினாலும் நாம் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்கிறோம். எனவே அவர் நித்தியமானவர் என்னும் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் நாம் வாழலாம்.
பள்ளத்தாக்கில் நம்மோடு
ஹான்னா வில்பர்போர்ஸ் (பிரபல அமெரிக்க அரசியல்வாதி ஒருவரின் உறவினர்) மரண படுக்கையில் இருந்தபோது, அவர் எழுதிய கடிதத்தில், அவருடைய சக விசுவாசி ஒருவரின் மரணத்தைக்குறித்து சொல்லுகிறார்: “மகிமைக்கு சென்ற இந்த நபருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்; அவர் இதுவரை காணாமல் நேசித்த இயேசுவோடு இருக்கிறார். என் இருதயம் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறது.” அதன் பின், “நான் நலமாயிருந்தாலும் அல்லது மோசமான நிலையில் இருந்தாலும், இயேசு எப்போதுமே நல்லவராகவே இருக்கிறார்” என்று தன்னுடைய நிலையை விவரித்தார்.
அவர்களுடைய வார்த்தை சங்கீதம் 23ல் “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடத்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்” என்னும் தாவீதின் வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்தியது (வச.4). தாவீது அதுபோன்ற மரணத்தின் பள்ளத்தாக்கில் நின்றுகொண்டு தன் இருதயத்தின் ஆழத்தில் இருந்து அந்த வார்த்தைகளைக் கூறுகிறார்;. “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்” (வச.1) என்று தன் சங்கீதத்தைத் துவக்கும் தாவீது, “தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்” (வச.4) என்று பின்பாக அவரிடத்தில் நேரடியாய் பேசுகிறார்.
பூமியையும் உலகத்தையும் உண்டாக்கிய (சங்.90:2) சர்வ வல்லமையுள்ள தேவன், நம்முடைய கடினமான சூழ்நிலைகளில் இரக்கமுள்ளவராய் நம்மோடு நடந்து வருகிறார் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறார். நம்முடைய சூழ்நிலை சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ, எப்படி இருப்பினும், நாம் நம்முடைய மேய்ப்பரும் இரட்சகரும் சிநேகிதருமாகிய தேவனிடத்தில் திரும்புவது நன்மையான ஆசீர்வாதம். அது மரணத்தையும் ஜெயித்து, “கர்த்தருடைய வீட்டில் நீடித்த நாட்களாய்” (23:6) நம்மை நிலைக்கப்பண்ணும்.
குழப்பத்திலிருந்து ஒரு நற்செய்தி
டேரில் ஒரு பிரபலமான பேஸ்பால் விளையாட்டு வீரர். அவர் போதைப் பொருட்களால் தன்னுடைய வாழ்க்கையை அழித்தார். ஆனால் இயேசு அவரை விடுதலையாக்கி, அவர் பல ஆண்டுகளாக தூய்மையானவராய் இருக்கிறார். இன்றைக்கு அவர் இப்படிப்பட்ட அடிமைத்தனத்தில் இருக்கும் பலருக்கு உதவிசெய்து அவர்களை விசுவாசத்திற்குள் நடத்துகிறார். தன்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, தனது குழப்பத்திலிருந்து தேவன் தன்னை ஒரு செய்தியாக மாற்றியதை உறுதி செய்கிறார்.
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. கலிலேயாக் கடலில் புயலடித்த ஒரு இரவுக்குப் பின், இயேசு தன்னுடைய சீஷர்களுடன் கடற்கரை அருகிலுள்ள கல்லறையினிடத்திற்கு வந்தபோது, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு எதிர்கொண்டான். இயேசு அவனுக்குள் இருந்த பிசாசுகளிடம் பேசி, அவைகளைத் துரத்திவிட்டு, அவனை விடுதலையாக்கினார். இயேசு அவ்விடம் விட்டுப் பறப்படும்போது, தான் அவரோடே கூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். ஆனால் இயேசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை - ஏனென்றால் அவருக்காக அவன் செய்யவேண்டிய வேலை இருந்தது. “நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப் போய் கர்த்தர் உனக்கு செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவி” (மாற்கு 5:19) என்று சொன்னார்.
மீண்டும் அந்த மனிதனைப் பற்றி ஒன்றும் எழுதப்படவில்லை. அனால் அவனைப் பற்றி புதிரான சிலவற்றை வேதாகமம் காட்டுகிறது. அந்தப் பகுதியில் இருந்த மனிதர்கள் இயேசுவை தங்கள் எல்லையை விட்டுப் போகும்படி பயத்தோடே வேண்டிக்கொண்டார்கள் (வச. 17). ஆனால் மீண்டும் அவர் அந்த இடத்திற்கு வந்தபோது திரளான ஜனங்கள் கூடிவந்தார்கள் (8:1). அந்த மனிதனை தேவன் அனுப்பினதால் இந்த திரள்கூட்ட மக்கள் வந்திருப்பார்களோ?
ஒரு காலத்தில் இருளின் ஆதிக்கத்தில் இருந்தவர், முதல் ஊழியக்காரரர்களில் ஒருவராக இருந்தவர், இயேசுவின் இரட்சிக்கும் வல்லமையை திறம்பட தெரிவித்ததினாலோ?
பரலோகத்தின் இந்தப் பகுதியை நாம் ஒருபோதும் அறிய முடியாது. ஆனால் இது மட்டும் தெளிவாயிருக்கிறது. தேவன் அவருடைய ஊழியத்தைச் செய்ய நம்மை விடுவிக்கும்போது, நம்முடைய குழப்பமான கடந்தக் காலத்தை, அன்பு மற்றும் நம்பிக்கையின் செய்தியாக மாற்றமுடியும்.
கிருபையும் இரக்கமும்
தேசிய நெடுங்சாலையின் நடுவில் இருந்த திட்டில் ஒரு சூரியகாந்தி பூ ஒன்று தனித்து ஓங்கி வளர்ந்திருந்தது. அதுவும் வேகப்பாதையின் மிக அருகாமையில் வளர்ந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை எந்த சூரியகாந்தி பூவும் தென்படாத பட்சத்தில், இந்த ஒற்றைப் பூவைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். நெடுஞ்சாலையின் நடுவில் இப்படியொரு செடியை தேவனால் மட்டுமே வளர்க்கமுடியும். அவ்வழியாய் அவசர அவசரமாய் கடந்து செல்லும் பயணிகளை புன்முறுவலோடு வரவேற்று, மென்மையாய் வழியனுப்பிக் கொண்டிருந்தது.
அதைப்போன்று ஆச்சரியப்படும் நேர்மையான ஓர் யூதேய ராஜாவைக் குறித்து பழைய ஏற்பாடு அறிவிக்கிறது. அவனுடைய தகப்பனும் தாத்தாவும் விக்கிரக வழிபாட்டில் திளைத்திருந்தனர். யோசியா ஆட்சிக்கு வந்து எட்டு வருடங்களில், “தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட” ஆரம்பித்தான் (2 நாளாகமம் 34:3). “ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு” கட்டளையிட்டான். பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆலயத்திலிருந்து நியாயப்பிரமாண புத்தகத்தை கண்டெடுக்கின்றனர் (பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள்) (வச. 14). பின்பு தேவன் யோசியாவின் ஆவியை எழுப்பி, தேசத்தின் மக்களை அவர்களின் முற்பிதாக்களின் தேவனுக்கு நேராய் திரும்பும்படி செய்தார். யோசியா “உயிரோடிருந்த நாளெல்லாம்” (வச. 33) மக்கள் கர்த்தரை சேவிக்கும்படி செய்தான்.
கற்பனை செய்துபார்க்க முடியாத இரக்கங்களினால் நிரப்பகிறவர் நம் தேவன். வாழ்க்கையின் சாத்தியமில்லாத சூழ்நிலைகளில் சிறப்பான நன்மை ஒன்றை ஆச்சரியப்படும் வகையில் பூக்க வைக்க அவரால் முடியும். அவரை நோக்கிப் பாருங்கள். அதை இன்றும் அவரால் செய்யமுடியும்.
கேட்பது முக்கியம்
“சீக்கிரம் வாருங்கள், நாங்கள் பனிப்பாறையை மோதிவிட்டோம்.”RMSகார்பாத்தியா கப்பலின் செய்தித் தொடர்பாளர் ஹெரால்ட் காட்டம், 1912 ஏப்ரல் 15ஆம் தேதி, காலை 12:25க்கு, மூழ்கிக்கொண்டிருந்த டைட்டானிக் கப்பலிலிருந்து பெற்றுக்கொண்ட முதல் செய்தி இதுவே. அந்த பேரிடரிலிருந்து டைட்டானிக் கப்பலை விரைந்து சென்று அதில் பயணம்செய்த 706 உயிர்களை காப்பாற்றிய முதல் கப்பல் இந்த கார்பாத்தியா தான்.
சில நாட்கள் கழித்து, அமெரிக்காவின் சட்டசபை உறுப்பினர்கள் கேட்க, கார்பாத்தியாவின் கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரான், “இவை அனைத்துமே ஆச்சரியமாய் நடந்தேறிய தெய்வீகச் செயல்” என்றாராம். “வயர்லஸ் கருவியை இயக்கும் கருவி அந்த நேரத்தில் தன்னுடைய கேபினில் இருந்தது... அவர் சாதாரணமாய் உடை மாற்றும்போதே அந்த தகவலை கேட்க நேர்ந்தது... இன்னும் பத்து நிமிடத்தில் அவர் தன் படுக்கைக்கு போயிருந்திருப்பார்.. அந்த செய்தியை கேட்க முடியாமல் போயிருந்திருக்கும்.”
கேட்பது அவசியம்; குறிப்பாய் தேவனுடைய சத்தத்தை கேட்பது மிக அவசியம். சங்கீதம் 85ன் ஆசிரியர் கோராகின் புத்திரர்கள், “கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன் ; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக. நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது” (வச. 8-9) என்று கீழ்ப்படிதலுக்கு வலியுறுத்துகின்றனர். அவர்களுடைய எச்சரிக்கை கடுமையானது. ஏனென்றால் அவர்களின் முற்பிதாவாகிய கோராகு தேவனுக்கு விரோதமாய் முரட்டாட்டம் பண்ணி வனாந்திரத்தில் அழிந்துபோனவர் (எண். 16:1-35).
டைட்டானிக் மூழ்கிய அன்றிரவு அருகிலிருந்த வேறொரு கப்பலின் வயர்லெஸ் செய்தி தொடர்பாளர் தூங்கச் சென்றுவிட்டார். அவர் அந்த செய்தியை கேட்டிருந்தால் இன்னும் அதிகமான உயிர்களை காப்பாற்றியிருந்திருக்கக்கூடும். கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு கீழ்ப்படிவோமாகில் இன்றும் கடினமான வாழ்க்கைப் பாதையினூடாய் கடந்துபோகும் நம்மை அவர் திசைதிருப்புவார்.
ஜெபமும் மணலும் நட்சத்திரங்களும்
அதீதியும் ஆகாஷும் குழந்தைக்காய் ஏங்கினர். ஆனால் அவர்களுடைய மருத்துவர் அது சாத்தியமில்லை என்று கூறிவிட்டார். அதீதி தன் சிநேகிதியிடம் “நான் தேவனோடு நேர்மையாக பேசவிரும்புகிறேன்” என்றாள். அவ்வாறு பேசியதின் விளைவாய், அவளும் ஆகாஷும் அவர்களின் போதகரை சந்தித்து, சபையில் குழந்தை தத்தெடுக்கும் ஊழியத்தைத் துவங்க ஆலோசித்தார்கள். சரியாய் ஒருவருடம் கழித்து, அவர்கள் ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்தனர்.
ஆதியாகமம் 15இல், ஆபிராமுக்கும் தேவனுக்கும் இடையில் நேர்மையான உரையாடல் ஒன்று நிகழ்கிறது. தேவன் அவனிடம், “ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்கு… மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்” (வச. 1). ஆனால் தன் எதிர்காலத்தைக் குறித்து நிச்சயமில்லாதிருந்த ஆபிராம், “கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே” என்று வெளிப்படையாய் பேசுகிறான் (வச. 2).
ஆபிராமுக்கு ஏற்கனவே தேவன், “உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்” என்று வாக்குப்பண்ணியிருக்கிறார் (13:16). தற்போது தேவன் அதை மீண்டும் அவனுக்கு நினைவுபடுத்துகிறார். இங்ஙனம் தேவனுடைய பதிலைப் பாருங்கள்: தேவன் அவனை வானத்தை அண்ணாந்து பார்க்கும்படி செய்து, “நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு” என்று சொல்லி, அதைப்போலவே எண்ணக்கூடாத அளவு அவனுடைய சந்ததி இருக்கும் என்று குறிப்பிடுகிறார் (15:5).
பின்பாக, தேவன் அவனுடைய பெயரை ஆபிரகாம் (ஜாதிகளுக்கு தகப்பன்) என்று மாற்றுகிறார். ஆபிரகாமைப் போல் நீங்களும் நானும் நேர்மையாய் நம்மை வெளிப்படுத்தி, நமக்கும் மற்றவர்களுக்கும் அவர் நன்மை செய்வார் என்று பூரணமாய் நம்புவோம்.
தேவனை மட்டும் நம்புதல்
சிலர் நம்மைப் பார்த்து, “இந்த அதிர்ஷ்டம் தான்” எனக்கு நன்மையைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம். சில குறிப்பிட்ட மீன் வகைகள், நாணயங்கள், குடும்ப வாரிசுகள், அல்லது மங்களகரமான நாள் என்று பல காரியங்களை தங்கள் அதிர்ஷ்டமாய் கருதலாம். அதிர்ஷ்டத்தைக் கொடுக்கிறது என்று நம்பப்படும் பொருட்கள் மக்களுடைய கவனத்தை அதிகமாய் ஈர்க்கிறது.
அதிர்ஷ்டத்தை நம்புகிற இந்த நம்பிக்கை உலகத்தின் எல்லா கலாச்சாரத்திற்கும் பொதுவானது. அது நம்மை தேவனை நம்புவதிலிருந்து வழிவிலகச்செய்து, பணத்தையோ, மனித பெலத்தையோ, மார்க்க சடங்காச்சாரங்களையோ நம்புவதற்குத் தூண்டுகிறது. இஸ்ரவேலர்கள் அசீரியர்களால் அச்சுறுத்தப்படும்போது, தேவனிடத்திற்கு திரும்புவதற்கு பதிலாக, எகிப்தின் உதவியை நாடின தன்னுடைய ஜனத்திற்கு தேவன் இதை எச்சரிக்கிறார்: “நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்; அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள்!” (ஏசாயா 30:15-16).
தேவன் சொன்னதுபோல அவர்களின் ஓட்டம் முடிந்துவிட்டது; யூதேயா அசீரியாவினால் மேற்கொள்ளப்பட்டது. “ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்” என்றும் தேவன் தன் ஜனத்திற்கு வாக்களித்துள்ளார். நம்முடைய கொஞ்சத்தில் தேவனை நம்பும்போது, தேவன் தன்னுடைய கரங்களை விரித்து நம்மிடத்திற்கு திரும்புகிறார். “அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” (வச. 18).
நீதியின் தேவன்
வரலாற்றின் மிக பிரபலமான “பலிமாடு” அநேகமாக இவளாகத்தான் இருக்கவேண்டும். அவளின் பெயர் டெய்சி, மேட்லின், அல்லது க்வெண்டோலின் (ஒவ்வொரு பெயரும் பரிந்துரைக்கப்பட்டது) போன்றவற்றில் எதுவென்று சரியாய் தெரியவில்லை. ஆனால் 1871ஆம் ஆண்டு சிகாகோ நகரத்தின் மூன்றில் ஒரு பங்கு மக்களை வீடில்லாதவர்களாய் மாற்றிய பெரும் தீ விபத்திற்கு காரணம், ஒ லிரி என்பவருக்கு சொந்தமான இந்த பசுமாடுதான் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. வீசிய காற்றினால் மளமளவென்று மரவீடுகளில் பரவிய நெருப்பு, மூன்று நாட்கள் எரிந்து, முன்னூறுபேரை பலியாக்கியது.
மாட்டுக்கொட்டகையில் இருந்த விளக்கை இந்த பசுமாடு தட்டிவிட்டதினால்தான் தீ பற்றிக்கொண்டது என்று பல ஆண்டுகளாய் நம்பப்பட்டு வந்தது. மேற்படியான விசாரணையில், 126 ஆண்டுகள் கழித்து, இந்த பசுமாடும் அதின் உரிமையாளரும் குற்றமற்றவர்களென்று நிருபிக்கப்பட்டனர். அவர்களின் பக்கத்து வீட்டிலிருந்தே தீ பரவியுள்ளது என்று நகரத்தின் தீயணைப்பு மற்றும் காவல் துறையினரால் கண்டறியப்பட்டது.
நீதி, உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. அது எவ்வளவு கடினம் என்பதை வேதாகமமும் ஒப்புக்கொள்கிறது. சங்கீதம் 13இல் “எதுவரைக்கும்?” என்னும் கேள்வி மீண்டும் மீண்டும் நான்கு தரம் இடம்பெற்றுள்ளது: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனை பண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?” (வச. 1-2). தன்னுடைய புலம்பலின் இடையில் விசுவாசிப்பதற்கும் நம்புவதற்குமான காரணத்தை தாவீது கண்டறிகிறார்: “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்;. உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.” (வச. 5).
நீதி தாமதித்தாலும், தேவனுடைய கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை. அவரை நம்பி அவரில் நாம் தற்காலிகமாய் அல்ல, நிரந்தரமாய் இளைப்பாறுதலடையலாம்.