எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜேம்ஸ் பேங்க்ஸ்கட்டுரைகள்

வல்லமைக்குள் அடிவைத்தல்

“நாம் ஏதாகிலும் பாம்புகளைப் பார்க்க முடியுமா?” நாங்கள் எங்கள் வீட்டின் அருகிலுள்ள ஆற்றின் ஓரமாக நீண்ட நடை பயணத்தை ஆரம்பிக்கும் போது எங்கள் அருகில் வசிக்கும் ஆலன் என்ற சிறுவன் இந்தக் கேள்வியைக் கேட்டான். “இதற்கு முன்னால் பார்த்ததில்லை ஆனால், ஒருவேலை நாம் பார்க்கலாம் என பதிலளித்தேன். எனவே, தேவன் நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அவரிடம் ஜெபிப்போம்” என சொல்லி, நாங்கள் நின்று அனைவரும் இணைந்து ஜெபித்துவிட்டு நடக்கலானோம்.

பல நிமிடங்களுக்குப் பின்னர் என் மனைவி கேரி வேகமாகப் பின்னோக்கி நகர்ந்தாள்;. “காப்பர்ஹெட்” என்று ஒரு விஷபாம்பு அவளது காலுக்கு முன் சுருண்டு படுத்திருந்தது. கேரி தன்னைப் பாதுகாத்துக்கொண்டதைக் கண்டேன். அது லேசாக நகர்ந்து அதன் பாதையில் சென்று மறையும் வரை காத்திருந்தோம். பின்பு நாங்கள் நின்று எங்களுக்கு பாதிப்பு ஏதும் நேராது காத்த தேவனுக்கு நன்றி செலுத்தினோம். நாங்கள் எதிர் நோக்கியிருந்த ஆபத்திற்கு எங்களைத் தாயாராக்கவும் எங்கள் ஜெபத்தின் மூலம் அவருடைய உன்னத பாதுகாப்பை பெற்றுக் கொள்ளவும் ஆலனின் கேள்வி உதவியது என நம்புகிறேன்.

நாங்கள் ஆபத்தை நெருங்கிய அந்த மாலை நிகழ்வு தாவீதின் வார்த்தைகளை என் மனதிற்குள் கொண்டு வருகிறது. “கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள். அவர் சமூகத்தை நித்;தமுமு; தேடுங்கள்” (1 நாளா. 16:11). இந்த ஆலோசனை இஸ்ரவேலர் உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்கு திரும்ப எடுத்துச் செல்லும் போது பாடிய ஆர்ப்பரிப்பின் சங்கீதத்தின் ஒரு பகுதி. தேவன் தம் பிள்ளைகளின் துன்பங்களின் மத்தியில் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்பதை சரித்திரம் கூறுகிறது. இதனை நினைவில் கொண்டு நாம் எப்பொழதும் அவரைப் போற்றவும் அவருக்கு முன்பாகச் சத்தத்தை உயர்த்தி கூப்பிடவும் கடவோம் (வச. 35).

தேவனுடைய முகத்தை தேடுங்கள் என்பதன் பொருள் என்ன? அதாவது உலகக்காரியங்களிலும் நமது இருதயத்தை அவருக்கு நேராகத் திருப்ப வேண்டும் என்பதே. சில வேளைகளில் நம் ஜெபங்களுக்கான பதில் நாம் கேட்பதற்கு சற்று மாறுபட்டிருக்கலாம். எதுவந்தாலும் தேவன் உண்மையுள்ளவர் நம் நல்ல மேய்ப்பன், நம் பாதையை நமக்குக் காட்டி நம்மை அவருடைய கிருபை, வல்லமை, அன்பிற்குள் வைத்துக் கொள்ளுவார். நாம் அவரையே சார்ந்திருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவோம்.

சமாதானமும் நம்பிக்கையும்!

எனக்கு ஆறு வயதிருக்கும்போது எனது அண்ணன்களோடு சேர்ந்து ரோல்லர் கோஸ்டர் எனப்படும் அதி விரைவு ராட்டினத்தில் சவாரி செய்தேன். மிக வேகமாக ஒரு வளைவில் அது திரும்பியபோது “இதை உடனே நிறுத்துங்கள்! நான் கீழே இறங்க விரும்புகிறேன்” என அலற ஆரம்பித்தேன். அந்த ராட்டினம் நிற்கவில்லை. அது நிற்கும்வரை மிக இறுக்கமாக கையைப் பிடித்தவாறு நான் உட்கார வேண்டியதாயிற்று.

கொண்டை ஊசி வளைவுகளும் கீழ்நோக்கிய திடீர் இறக்கங்களும் கொண்ட, விரும்பப்படாத ரோலர் கோஸ்டர் சவாரியைப்போல நாம் சில சமயங்களில் நமது வாழ்வில் உணரலாம். எதிர்பாராத நெருக்கடிகள் நேரிடும்போது, நமது நம்பிக்கையைத் தேவனில் வைப்பதுதான் நமது சிறந்த துணையாதாரம் என வேதாகமம் நமக்கு நினைவூட்டுகிறது. அந்நியர் படையெடுப்பினால் தனது நாட்டுக்கு பயமுறுத்தல் இருந்த போராட்டமான காலத்தில், ஆவியானவரால் ஏவப்பட்ட ஏசாயா தீர்க்கதரிசி தேவன் அளித்த இந்த வல்லமைமிக்க வாக்குத்தத்தத்தை உணர்ந்து கொண்டார். “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா. 26:3).

அவர் பக்கம் நாம் திரும்பும்போது, நமது இரட்சகர் அளிக்கும் சமாதானம் “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்” (பிலி. 4:7) ஆகும். மார்பகப் புற்றுநோயில் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் வார்த்தைகளை நான் எப்போதும் நினைப்பேன். ஒரு நாள் சாயங்காலம் எங்களது சபையைச் சார்ந்த ஒரு குழுவினர் அவளுக்காக ஜெபித்து முடித்த பிறகு அவள் சொன்னாள், “என்ன நடக்குமென்பது எனக்குத் தெரியாது, ஆனால், நான் நன்றாக இருப்பேன் என்று எனக்கு தெரியும். ஏனெனில் இன்றிரவு தேவன் நம்மோடு இருக்கிறார்.” வாழ்க்கையில் பல கஷ்டங்கள் உண்டு ஆனாலும் வாழ்வைக் காட்டிலும் அதிகமாக நம்மை நேசிக்கும் ஆண்டவர் நமது கஷ்டங்களைவிடப் பெரியவர்.

இயேசுவிற்கு இடம் கொடுத்தல்

இப்ஸ்விச், மாசசூட்டஸ் மலையின் அருகிலிருந்த ஓர் ஆலயத்தின் பக்கத்தில் ஒரு கருங்கலில் மனித காலடித் தடம் போன்ற பதிவு காணப்படுகிறது. உள்ளுர் மக்கள் அந்த தடத்தை “பிசாசின் காலடித் தடம்” என்று கூறுகிறார்கள். 1740ல் இலையுதிர் காலத்தில் ஜார்ஜ் ஒயிட்பீல்டு என்ற பெயர் பெற்ற சுவிசேஷகர் அந்த ஊரில் மிகுந்த வல்லமையோடு பிரசங்கித்தார். அவருடைய வல்லமையான பிரசங்கத்தைக் கேட்ட பிசாசானவன், அந்த ஆலயத்தின் கோபுர உச்சியிலிருந்து அந்த மலைப் பாறையில் குதித்து அந்த ஊரைவிட்டு வெளியே ஒடிப்போனான். அப்பொழுது அந்தக் கல்லில் ஏற்பட்ட பிசாசின் காலடி தடம் தான் அது என்று உள்ளுர் மக்கள் கூறுகிறார்கள்.

அது ஒரு புனைக் கதையாக இருந்தாலும் அந்தக் கதை தேவனுடைய வார்த்தையிலிருந்து ஊக்கமளிக்கக்கூடிய ஓர் உண்மையை நமக்குக் கூறுகிறது. “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசிற்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.” என்று யாக்கோபு 4:7 நமக்கு நினைப்பூட்டுகிறது.

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளையும், நமது எதிராளியாகிய சாத்தானையும் எதிர்த்து நிற்கத் தேவையான பெலனை தேவன் நமக்கு கொடுத்துள்ளார். தேவனுடைய அன்பின் கிருபையினால் இயேசு கிறிஸ்துவின்மூலமாக அவருடைய கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் “பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது”, என்று ரோமர் 6:14ல் வேதம் நமக்குக் கூறுகிறது. சோதனை வரும்பொழுது, நாம் இயேசுவண்டை ஓடினால் அவர் தம்முடைய பெலத்தை நமக்கு அருளி சோதனையை எதிர்த்து நிற்க பெலன் தருகிறார். “அவர் உலகத்தை ஜெயித்ததினால்”, (யோவா. 16:33) இந்த உலக வாழ்வில் நம்மால் எதிர்த்து நிற்க இயலாத சோதனைகள் எதுவுமே கிடையாது.

நமது இரட்சகருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்பொழுது, நாம் நமது சித்தத்தை உடனே முழுவதுமாக அவருக்கு ஒப்புவித்து, தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடப்பதால் அவர் நமக்கு உதவி செய்கிறார். சோதனைகளுக்கு இடங்கொடுப்பதற்குப் பதிலாக, அவரே நமது சோதனையை எதிர்த்து நமக்காக யுத்தம்பண்ணுகிறார்.

தேவனுடைய அழைப்பு

ஒரு காலை வேளையில், என் மகள், தன்னுடைய பதினோறு மாதக் குழந்தையை மகிழ்விக்க எண்ணி, அவள் கைப்பேசியை அவனிடம் கொடுத்தாள். பின்பு ஒரு நிமிடத்திற்குள்ளாக என்னுடைய தொலைப்பேசி ஒலித்தது. அந்த அழைப்பை எடுத்தபொழுது மறுமுனையில் என் பேரனின் மழலைக் குரலைக் கேட்டேன். அவனிடமிருந்த கைபேசியிலுள்ள என்னுடைய தொலைபேசி எண்ணுக்குரிய "விரைவு எண்ணை" எப்படியோ அவன் அழுத்திவிட்டதால், நான் அவனோடு "உரையாட" நேர்ந்தது. அந்த "உரையாடலை" நான் மறவேன். என்னுடைய பேரனுக்கு ஓரிரு வார்த்தைகள்தான் தெரியும், ஆனால் அவன் என்னுடைய குரலை அறிந்திருந்தபடியால், நான் பேசியபோது பதிலளித்தான். ஆகவே நான் அவனை எவ்வளவாய் நேசிக்கிறேன் என்பதை அவனிடம் கூறினேன்.

என் பேரனின் குரலை நான் கேட்டபொழுது எனக்குள் உண்டான சந்தோஷம், தேவன் நம்மிடம் ஐக்கியம் கொள்ள மிகுந்த ஆசையாய் இருக்கிறார் என்பதை எனக்கு நினைவூட்டியது. ஆதி முதலாகவே தேவன் நம்மை தீவிரமாக பின்தொடர்ந்துகொண்டிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து, பயந்துபோய், ஏதேன் தோட்டத்திலே மறைந்து கொண்ட பொழுது, "தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு,  நீ எங்கே இருக்கிறாய்," என்றார் (ஆதி. 3:9).

இன்றும் தேவன், இயேசுவின் மூலம் மனுக்குலத்தை கிட்டிச் சேர்த்துக்கொள்ளும்படி நம்மை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறார். தேவன் நம்மோடு ஐக்கியம் கொள்ள விரும்புவதால், நமது தண்டனை நீங்கும்படி சிலுவையிலே தம்முடைய ஜீவனையே கொடுத்தார். “தம்முடைய ஒரே பேறான குமாரனையே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது... நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி இயேசுவே” (1 யோவா. 4:9-1௦).

தேவன் நம்மை இவ்வளவாய் நேசிக்கிறார் என்பது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதோடுகூட நாமும், இயேசுவின் மூலம் அவருடைய அன்பிற்கு மறுமொழி கூறவேண்டும் என தேவன் விரும்புகிறார். நாம் அவரிடம் என்ன பேசுவது என புரியாமல் இருக்கும் நேரம் கூட ஏதாவது நாம் அவரிடம் பேச மாட்டோமோ என ஆசையோடு காத்துக்கொண்டிருக்கிறார்!

நொறுங்குண்ட நிலையின் அழகு!

கின்ட்சூகி (Kintsugi) என்பது உடைந்த மண்பாண்டங்களை சீரமைக்கும் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஒரு ஜப்பானிய கலை ஆகும். குங்கிலியம் (Resin) என்னும் ஒரு பிசின் வகையோடு பொன்துகள்களை கலந்து, உடைந்த துண்டுகளை அக்கலவையைக்கொண்டு ஒட்டிவிடுவார்கள். விரிசல்களிலும் இதை நிரப்பிடுவார்கள். விளைவு, மிக உறுதியான ஒரு இணைப்பு. உடைந்து போன மண்பாண்டத்தில் ஏற்பட்ட சேதத்தை வெறுமனே மறைப்பதற்கு பதில் ஒரு அற்புதமான கலையைக் கொண்டு அதை அழகான பாண்டமாக மாற்றிவிடுவார்கள். 

அதைப்போலவே, நாம் செய்த பாவத்திற்காக உண்மையாகவே மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பும் பொழுது, அந்நொறுங்குண்ட நிலையை தேவன் மிக உயர்வாகக் காண்கிறார் என்று வேதம் கூறுகிறது. தாவீது பத்ஷேபாளோடு விபசாரத்தில் ஈடுபட்டதுமன்றி அவளுடைய கணவனைத் திட்டமிட்டு கொலை செய்தான். இதைக்குறித்து தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதை எதிர்கொண்டு விசாரித்த பொழுது, தாவீது மனந்திரும்பினான். “பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்,” என்று பின்பு தாவீது செய்த ஜெபத்தின் மூலம், நாம் பாவம் செய்வோமானால் தேவன் எதை நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம் (சங். 51:16-17). 

பாவத்தினால் நம்முடைய இருதயம் உடைந்து போயிருக்கும்பொழுது, சிலுவையிலே நமது இரட்சகரால் நமக்கு மிக தாராளமாய் அளிக்கப்பட்ட விலையேறப்பெற்ற மன்னிப்பைக் கொண்டு தேவன் நம் இருதயத்தை சீர்ப்படுத்துவார். நாம் அவரிடம் நம்மை தாழ்த்தி அர்ப்பணிக்கும் பொழுது, அன்புடன் நம்மை வரவேற்று கிட்டிச் சேர்த்துக்கொள்வார் 

தேவன் எவ்வளவாய் இரக்கமுள்ளவர்! தாழ்மையுள்ள இருதயத்தையே தேவன் விரும்புவதாலும், அவருடைய இரக்கங்கள் மகாசவுந்தர்யமுள்ளதாய் இருப்பதாலும், “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும்: என்னை சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்,” என்னும் இன்னொரு வேதாகம ஜெபம் இன்று நமதாகட்டும் (சங். 139:23-24).

வெளிவர வழியைக் கண்டுபிடித்தல்!

கலிபோர்னியாவிலுள்ள சாண்டா பார்பரா (Santa Barbara) என்னும் ஊரில் “சால்ஸிபுடெஸ்” (Salsipuedes) என்னும் விசித்திர பெயர் கொண்ட ஒரு தெரு உண்டு. அதன் அர்த்தம் “முடிந்தால் சென்று விடுங்கள்,” என்பதே. அப்பகுதியை ஒட்டி சதுப்பு நிலம் இருந்ததால் சில சமயம் வெள்ள அபாயம் ஏற்படுவதுண்டு. ஆகவே அப்பட்டணத்தை திட்டமிட்டு கட்டிய ஸ்பானிஷ் மொழி பேசும் நபர்கள் மக்களை எச்சரிக்கும் விதமாக வெளிப்படையாக அப்படியொரு பெயரை அத்தெருவிற்கு சூட்டினார்கள். 

“அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே, அதை விட்டு விலகிக் கடந்துபோ”, என்று பாவமும் சோதனைகளும் நிறைந்த “தவறான பாதையை” விட்டு விலகி இருக்குமாறு தேவனுடைய வார்த்தை நம்மை எச்சரிக்கிறது (நீதி. 4:15). ஆனால் “உங்களால் முடிந்தால் அவ்வழியில் செல்லாதே” என வேதம் கூறவில்லை. மாறாக, “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட, அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்,” என வேதம் நமக்கு நம்பிக்கையளித்து தேவனையே நோக்கச் செய்கிறது (1 கொரி. 10:13). 

நம்முடைய திராணிக்கு மேலாக தேவன் ஒருபோதும் நம்மைச் சோதிக்க மாட்டார் என்கிற வாக்குத்தத்தம் நமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. நாம் சோதனையை எதிர் கொள்ளும்பொழுது தேவனையே நோக்கினால் நாம் அச்சோதனையின்று தப்பிக்கொள்ளும்படி உதவிட ஆவலாய் இருக்கிறார்.

“நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்(கூடிய) பிரதான ஆசாரியர் நமக்கு(உண்டு)”, என்று இயேசுவைக் குறித்து வேதம் உறுதியளிக்கிறது (எபி. 4:15). அவர் “எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராய் இருப்பதனால் எல்லா சோதனையினின்றும் தப்பித்துக்கொள்ளும் வழியை அவர் அறிவார். ஆகவே அவரிடம் நாம் செல்லும்பொழுது தப்பிச்செல்ல வழியைக் காண்பித்தருளுவார்!

இருளிலும் துதிப்போம்

என்னுடைய நண்பன் மிக்கி(Mickey) தனது கண் பார்வையை இழந்து கொண்டிருந்த நிலையிலும், “நான் தேவனை தினந்தோறும் போற்றித் துதிக்கப் போகிறேன். ஏனெனில் அவர் எனக்காக அநேக காரியங்களை செய்துள்ளார்” என்று சொன்னான். 

முடிவில்லா துதியை ஏறெடுப்பதற்கான அற்புதமான காரணத்தை இயேசு நமக்கும் மிக்கிக்கும் தந்துள்ளார். சிலுவையில் அறையப்படுவதற்கு முந்திய நாள் இரவு, இயேசு தமது சீஷர்களோடு பஸ்கா உணவு உண்பதை மத்தேயு 28ஆம் அதிகாரத்தில் காணலாம். உணவருந்தி முடிந்ததும், “அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடி பின்பு ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்” என்று 30ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இரவு அவர்கள் ஏதோ ஒரு பாடலைப் பாடவில்லை – அது ஒரு துதிப் பாடலாகும். பல நூற்றாண்டுகளாக, ‘ஹல்லேல்’(Hallel) என்று குறிப்பிடப்பட்ட சில சங்கீதங்களை பஸ்கா பண்டிகையின்போது எபிரேயர்கள் பாடி வந்தனர் (எபிரேய மொழியில் ஹல்லேல் என்றால் “துதி” என்று அர்த்தம்). சங்கீதம் 113-118ல் இடம்பெற்றுள்ள ஹல்லேல் பாடல்கள், நமது இரட்சிப்பாகிய தேவனை கனம்பண்ணுவதை காணலாம் (118:21). தள்ளப்பட்ட கல் மூலைக்கல் ஆனதையும் (வச. 22) தேவனுடைய நாமத்தில் வருபவரைப் பற்றியும் இந்தப் பாடல்கள் குறிப்பிடுகின்றன (வச. 26). அப்படியென்றால், “இது கர்த்தர்  உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்” என்று அவர்கள் அந்த இரவிலே பாடியிருக்கவேண்டும் (வச. 24). 

இயேசுவும் அவரது சீஷர்களும் பஸ்கா இரவில் தேவனைப் பாடித் துதித்ததின் மூலம், நாம் நம்முடைய சூழ்நிலைகளை விட்டு நமது கண்களை திருப்பி தேவனையே நோக்கும்படி நம்மை அழைக்கிறார். தேவனுடைய முடிவில்லா அன்பையும் நம்பிக்கையையும் நாம் என்றென்றும் போற்றும்படியாக அவர் நமக்கு முன் சென்று அன்றிரவு பாடித் துதித்தார்.

எப்பொழுதும் கேட்டுக்கொண்டிருக்கிறார்

என்னுடைய தந்தை அதிகமாகப் பேசமாட்டார். இராணுவத்தில் வேலை செய்ததினால் அவருக்கு காது சரியாக கேட்காமல், காதுகேட்கும் கருவியை உபயோகித்து வந்தார். ஓர் மத்தியான வேளையில், நானும் எனது தாயாரும் அளவுக்கதிகமாய் பேசிவிட்டது போல் உணர்ந்த அவர், விளையாட்டாய் “எப்போதெல்லாம் எனக்கு அமைதியும் சமாதானமும் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் ஒரே ஒரு காரியத்தை நான் செய்தால் போதும்” என்று சொல்லி இரண்டு கைகளையும் உயர்த்தி, அவரது காதில் இருந்த கேட்கும் கருவிகளை எடுத்துவிட்டு, கைகளை தன் தலையின் பின்னால் கட்டிக்கொண்டு, கண்களை மூடி அமைதியாக புன்னகைத்தார். 

நாங்கள் சிரித்தோம். அவரைப் பொறுத்தமட்டில் கலந்துரையாடல் முடிவடைந்துவிட்டது! 

எனது தந்தையின் செய்கைகள் தேவனுக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசத்தை நன்றாக உணர்த்தியது. தேவன் எப்போதும் தமது பிள்ளைகளின் குரலை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறார். வேதத்தில் இருக்கும் மிகச் சிறிய ஜெபமே இதற்கு உதாரணமாகும். பெர்சியா ராஜாவாகிய அர்தசஷ்டாவின் ஊழியக்காரனான நெகேமியா, ராஜாவின் சந்நிதானத்தில் ஒரு நாள் கவலையுடன் காணப்பட்டான். ஏன் என்று கேட்ட ராஜாவிடம், தனது முன்னோர்களின் பட்டணமாகிய எருசலேம் பாழடைந்து கிடப்பதை குறித்த கவலையை பயத்துடன் எடுத்துரைத்தான் - “அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: ‘நீ கேட்கின்ற காரியம் என்ன என்றார்’. அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி; ராஜாவைப் பார்த்து......” (நெகே. 2:4–5). 

நெகேமியாவின் ஜெபம் நொடிப்பொழுதில் முடிவடைந்துவிட்டது. ஆனால் தேவன் அதை கேட்டார். எருசலேமை குறித்து நெகேமியா ஏற்கனவே ஜெபித்துவிட்டார். அவர் செய்த அனைத்து ஜெபங்களுக்கும் தேவன் வைத்திருந்த இரக்கமுள்ள பதிலை அந்த சிறிய ஜெபம் பெற்றுத்தர ஆரம்பித்தது. அந்த தருணத்தில், பட்டணத்தை சீரமைக்க வேண்டும் என்ற நெகேமியாவின் விண்ணப்பத்திற்கு அர்தசஷ்டா உடனடியாக பதில் கொடுத்தார். 

மிகச் சிறிய ஜெபத்திலிருந்து மிக நீளமான ஜெபம் வரை – நம்முடைய எல்லா ஜெபத்தினையும் தேவன் கரிசனையுடன் கேட்கின்றார் என்பதை அறியும்போது எவ்வளவு ஆறுதலாய் இருகின்றதல்லவா?

நமது சிறந்த தோழர்!

நான் 12 வயதாய் இருந்த பொழுது பாலைவனப் பகுதியில் உள்ள ஒரு நகரத்திற்கு எங்கள் குடும்பம் குடிபெயர்ந்தது. புதிய பள்ளியில், அனல் காற்றடிக்க உடற்பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு நாங்கள் அனைவரும் குடிநீர்க் குழாய்க்கு நேராய் விரைந்து ஓடுவோம். என் வகுப்பு பிள்ளைகளோடு ஒப்பிடும்பொழுது நான் அவர்களைவிடச் சிறியவனாகவும் மெலிந்தும் இருப்பதினால், வரிசையில் நிற்கும்பொழுது அநேகந்தரம் பிறர் என்னைத் தள்ளி விட்டு முன்சென்று விடுவார்கள். ஒருநாள், தன் வயதிற்கு மிஞ்சிய உடற் கட்டும் பெலனும் கொண்ட என் நண்பன் ஜோஸ் (Jose) இதைக் கண்டு, என் அருகில் வந்து தன் பலத்த கரத்தை விரித்து ஒருவனும் என்னை வந்து தள்ளாதபடி எனக்கு அரணாய் நின்றுகொண்டு, “ஏய், முதலில் பாங்க்ஸ் (Banks) தண்ணீர் குடிக்க வழிவிடுங்கள்”, என உரத்த சத்தமிட்டான். அன்றைய தினத்திற்கு பிறகு ஒரு நாளும் தண்ணீர் குடிக்க எனக்கு பிரச்சனை ஏற்பட்டதே இல்லை. 

பிறர் நம்மை ஈவிரக்கமின்றி நடத்தும்பொழுது நாம் படும் வேதனையை இயேசு நன்கு அறிவார். ஏனெனில் நம் எல்லோரைக் காட்டிலும் மிக அதிகமாக அதை எதிர்கொண்டவர் அவரே. “அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்...,” என அவரைக்குறித்து வேதம் கூறுகிறது (ஏசா. 53:3). ஆனால் அவர் பாடுகளினால் பாதிக்கப்பட்ட வராய் மாத்திரம் இருந்துவிடாமல், இன்று நமக்காக பரிந்துபேசி வழக்காடுபவராகவும் இருக்கிறார். நாம் தேவனோடு ஒரு புதிய ஐக்கியத்திற்குள் பிரவேசிக்கும்படியாய், அவர் தமது ஜீவனையே நமக்காக தந்தருளி “புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை” நமக்கு உண்டு பண்ணியுள்ளார் (எபி 10:19). நம்மை நாமே இரட்சித்துக்கொள்ள முடியாதபடியினால், அவர் மீது விசுவாசம் வைத்து, நம்முடைய பாவத்திலிருந்து மனந்திரும்பினால், இலவசமாய் அவர் நமக்களித்துள்ள ஈவாகிய இரட்சிப்பை பெற்றுக்கொள்ளலாம். 

நமக்குக் கிடைக்கக்கூடிய உற்ற நண்பர் இயேசு ஒருவரே. அவர், “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை”, எனக் கூறியுள்ளார் (யோவா. 6:37). மற்றவர்கள் நம்மை எப்பொழுதும் ஓரடி தூரத்திலேயே வைக்கலாம் அல்லது முழுவதும் ஒதுக்கியே விடலாம், ஆனால் சிலுவையில் நமக்காக தன் கரங்களை விரித்த தேவன் இன்றும்கூட நம்மை அழைக்கிறார். நம்முடைய இரட்சகர் எவ்வளவு வல்லமையானவர்!