இப்ஸ்விச், மாசசூட்டஸ் மலையின் அருகிலிருந்த ஓர் ஆலயத்தின் பக்கத்தில் ஒரு கருங்கலில் மனித காலடித் தடம் போன்ற பதிவு காணப்படுகிறது. உள்ளுர் மக்கள் அந்த தடத்தை “பிசாசின் காலடித் தடம்” என்று கூறுகிறார்கள். 1740ல் இலையுதிர் காலத்தில் ஜார்ஜ் ஒயிட்பீல்டு என்ற பெயர் பெற்ற சுவிசேஷகர் அந்த ஊரில் மிகுந்த வல்லமையோடு பிரசங்கித்தார். அவருடைய வல்லமையான பிரசங்கத்தைக் கேட்ட பிசாசானவன், அந்த ஆலயத்தின் கோபுர உச்சியிலிருந்து அந்த மலைப் பாறையில் குதித்து அந்த ஊரைவிட்டு வெளியே ஒடிப்போனான். அப்பொழுது அந்தக் கல்லில் ஏற்பட்ட பிசாசின் காலடி தடம் தான் அது என்று உள்ளுர் மக்கள் கூறுகிறார்கள்.

அது ஒரு புனைக் கதையாக இருந்தாலும் அந்தக் கதை தேவனுடைய வார்த்தையிலிருந்து ஊக்கமளிக்கக்கூடிய ஓர் உண்மையை நமக்குக் கூறுகிறது. “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசிற்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.” என்று யாக்கோபு 4:7 நமக்கு நினைப்பூட்டுகிறது.

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளையும், நமது எதிராளியாகிய சாத்தானையும் எதிர்த்து நிற்கத் தேவையான பெலனை தேவன் நமக்கு கொடுத்துள்ளார். தேவனுடைய அன்பின் கிருபையினால் இயேசு கிறிஸ்துவின்மூலமாக அவருடைய கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் “பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது”, என்று ரோமர் 6:14ல் வேதம் நமக்குக் கூறுகிறது. சோதனை வரும்பொழுது, நாம் இயேசுவண்டை ஓடினால் அவர் தம்முடைய பெலத்தை நமக்கு அருளி சோதனையை எதிர்த்து நிற்க பெலன் தருகிறார். “அவர் உலகத்தை ஜெயித்ததினால்”, (யோவா. 16:33) இந்த உலக வாழ்வில் நம்மால் எதிர்த்து நிற்க இயலாத சோதனைகள் எதுவுமே கிடையாது.

நமது இரட்சகருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்பொழுது, நாம் நமது சித்தத்தை உடனே முழுவதுமாக அவருக்கு ஒப்புவித்து, தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடப்பதால் அவர் நமக்கு உதவி செய்கிறார். சோதனைகளுக்கு இடங்கொடுப்பதற்குப் பதிலாக, அவரே நமது சோதனையை எதிர்த்து நமக்காக யுத்தம்பண்ணுகிறார்.