ஞானத்தினால் ஆச்சரியம்
'நான் அதிகமாக முதிர்வடையும்போது மிகவும் ஞானமுள்ளவளாகிறேன். சில சமயங்களில் நான் என் மகனிடத்தில் பேசும்பொழுது, உம்முடைய வார்த்தைகளே என் வாயிலிருந்து வருகிறது", என என் மகள் கூறினாள்.
என் மகளின் கள்ளங்கபடமற்ற இந்த பேச்சு என்னை சிரிக்க வைத்தது. இதேபோல என் பிள்ளைகளை வளர்க்கும்போதும், என் பெற்றோர்கள் என்னிடத்தில் உபயோகித்த வார்த்தைகளையே நானும் உபயோகித்தேன். நான் ஒரு தகப்பனாக மாறினபொழுது, என் பெற்றோர்களின் ஞானத்தைக்குறித்த எனது கருத்துக்கள் மாறியது. ஒரு சமயத்தில் 'முட்டாள்தனமானது", என்று நான் ஒதுக்கித் தள்ளினவைகள் எல்லாம் நான் நினைப்பதற்கும் மேலான ஞானமுள்ளது என்பதை இப்பொழுது அறிந்து கொண்டேன். இவைகளை நான் முதலில் அறிந்து கொள்ள முடியவில்லை.
வேதாகமம், 'தேவனுடைய பைத்தியமானது உலகில் மிகப்பெரிய ஞானமாயிருக்கிறது", என போதிக்கிறது (1 கொரி. 1:25)." தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று (வச. 21).
நம்மை ஆச்சரியப்பட வைக்கும் வழிகளை தேவன் நமக்காக எப்பொழுதும் வைத்திருக்கிறார். ஒரு வெற்றியுள்ள ராஜா இந்த உலகத்திற்கு வருவதற்கு பதிலாக, தேவனுடைய குமாரன் ஒரு பாடுகளுள்ள வேலையாளாக வந்து, தன்னை மிகவும் தாழ்மையான சிலுவைமரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். அவர் மகிமைக்குள் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன் இவை நடந்தன.
தேவனுடைய ஞானத்தில், தாழ்மையானது பெருமைக்கும் மேல் மதிப்பிடப்படுகிறது. அன்பானது தகுதியில்லாத இரக்கம் மற்றும் கனிவிற்க்கு மேலாக மதிப்பிடப்படுகிறது. சிலுவையின் மூலமாக, நம்முடைய ஜெயிக்க முடியாத மேசியா, நம்மை மீட்கும்படி பிரதானமான பலியாக மாறினார் (எபி. 7:25).
இதனால், இரட்சிக்கப்படுகிறவர்கள் அவருக்குள்ளாக தங்கள் விசுவாசத்தை வைக்கக்கூடும்.
துன்பத்தில் இயேசு
என்னுடைய மகன் ஜெஃப் ஒரு 'வீடில்லாத ஏழைகளின்" செயல்முறைத் திட்டத்தில் பங்கேற்றான். அவன் அந்த நகரத்தில் உள்ள தெருக்களில் மூன்று பகல் மற்றும் இரண்டு இரவுகளைக் கழித்தான். உறைந்த குளிரின் நடுவில் வெட்டவெளியில் தூங்கினான். உணவு இல்லாமல், பணமும், பாதுகாப்பான உறைவிடமும் இல்லாமல், புதிய மனிதர்களின் இரக்கத்தைச் சார்ந்து ஒரு நாள் தன் அடிப்படைத் தேவைகளை சந்திக்கும்படி வாழ்ந்தான். அவனுடைய ஆகாரமானது ஒரு பிரட் சாண்ட்விச் மட்டும் தான். அதுவும், அவன் ஒரு உணவு விடுதியில் மீதமுள்ள ரொட்டித்துண்டுகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் போது, அதைக் கேட்ட ஒரு மனிதன் அந்த சாண்ட்விச்சை வாங்கி கொடுத்தார்.
பிற்பாடு, ஜெஃப் என்னிடத்தில் இதைப்போன்ற கஷ்டமான காரியம் வேறொன்றுமில்லை என்று கூறினான். ஆனால், இது அவனுடைய வாழ்க்கையில் மற்றவர்கள் மேலிருக்கும அபிப்பிராயத்தினை அதிகப்படுத்தியது. இந்த வீடில்லாத ஏழைகளின் செயல் முறைத் திட்டத்திற்குப் பிறகு அவன் வீடில்லாத ஏழைகளைத் தேடிச்சென்று அவர்களை சந்தித்தான். யாரெல்லாம் தான் தெருவில் வாழ்ந்த போது தனக்கு உதவி செய்தனரோ, அவர்களுக்குத் தன்னாலான சில உதவிகளைச் செய்தான். அந்த ஏழைகள், அவன் உண்மையான ஏழை இல்லை என்றும், அந்த ஏழைகளின் பார்வையின் மூலம் வாழ்க்கையைப் பார்க்க விரும்பின அவனுடைய நல்ல எண்ணங்களுக்கு நன்றியுள்ளவர்களாய் மாறினார்கள்.
என் மகனின் அனுபவமானது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை என் மனதிற்குள் கொண்டு வந்தது. 'வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத். 25:36,40) என்பார்.
அது ஒரு உற்சாகப்படுத்துதலின் வார்த்தையாகவோ, அல்லது ஒரு மூட்டை தானியமாகவோ இருக்கலாம். தேவன் நம்மை மற்றவர்களின் தேவைகளை சந்திக்கும்படி அன்புடன் அழைக்கிறார். நாம் மற்றவர்களின் மேல் காட்டக்கூடிய கனிவானது தேவனுக்குக் காட்டக்கூடிய கனிவாகும்.
கண்ணியில் சிக்கிவிடாதீர்கள்
வட கரோலினாவில் எங்களுடைய வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் மணல்பாங்கான ஒரு சிறு ஈரநிலப்பகுதியில்தான் வீனஸ் என்கிற பூச்சுண்ணி தாவரத்தை முதன்முதலாகக் கண்டுபிடித்தார்கள். ஊனுண்ணியான இந்தத் தாவரத்தைப் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
வீனஸ் பூச்சுண்ணி தாவரங்கள் பார்ப்பதற்கு விரிந்த ஒரு பூ போலத் தெரியும். ஆனால் அது ஒரு கண்ணியமைப்பு. மணமிக்க தேன் போன்ற திரவம் அதனுள்ளே சுரக்கும். பூச்சிகள் அதற்குள்ளாக ஊர்ந்துசெல்லும்போது அதன் வெளிப்புற விளிம்போரங்களில் உள்ள சென்சார்கள் தூண்டப்படும், பொறியின் கதவுகள் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் இறுக மூடிக்கொள்ளும். இரை உள்ளே மாட்டிக்கொள்ளும். அந்தப் பொறியானது இரையை மேலும் இறுக்கி, நொதி திரவங்களை வெளியிட்டு, அந்த இரையை கொஞ்சம் கொஞ்சமாக உணவாக்கிவிடும். அந்த மணல்பாங்கான பகுதியில் கிடைக்காத ஊட்டச்சத்தை இவ்வாறு பெற்றுக்கொள்ளும்.
நாம் எதிர்பாராத நேரத்தில் நம்மைச் சிக்கவைக்கும் வேறொரு பொறி பற்றி வேதாகமம் கூறுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் தன் சீடனான தீமோத்தேயுவுக்குச் சொல்லும் புத்திமதியில் அதைக் காணமுடிகிறது: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.” மேலும், “சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்” (1 தீமோ. 6:9-10).
பணமும் பொருட்களும் சந்தோஷத்திற்கு உத்தரவாதமளிப்பது போலத் தோன்றலாம், ஆனால் வாழ்க்கையில் அவற்றிற்கு முதலிடம் கொடுத்துவிட்டால், அது பொறியில் கால்வைப்பதற்கு சமமாகும். இயேசுவின் மூலம் தேவன் நமக்குச் செய்திருக்கிற நன்மையை மட்டுமே எண்ணி, நன்றியும் தாழ்மையும் நிறைந்த இருதயங்களோடு வாழும்போது இந்தப் பொறியிலிருந்து தப்பலாம். ஏனென்றால், “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.”
தேவன் தருகிற மனரம்மியத்தை இந்த உலகத்தின் தற்காலிக பொருட்களால் தரவே முடியாது. அவரோடு நாம் உறவு வைத்தால்தான் மெய்யான, நிலையான மனநிம்மதியைக் காணமுடியும்.
தேவனிடம் உண்மையாய் இருப்பது
என் பேரனுக்கு மூன்று வயது. அன்றைக்கு ஆரம்பமே மோசமாக இருந்தது. அவனுக்குப் பிடித்தமான சட்டையைக் காணவில்லை. அவன் விரும்பி அணிகிற ஷூக்கள் (காலணிகள்) சூடாக இருந்தன. தன் கோபத்தை எல்லாம் தன் பாட்டியின் மேல் கொட்டினான். பிறகு உட்கார்ந்து அழத்தொடங்கினான்.
“எதற்காக இப்படி அழுகிறாய்?” என்று அவனிடம் கேட்டேன். சிறிது நேரம் அவனிடம் பேசினேன். அவன் அமைதியான பிறகு, நான் அவனிடம் அன்பாக, “பாட்டியிடம் நல்ல பிள்ளையாக நடந்துகொண்டாயா?” என்று கேட்டேன். ஏதோ யோசனையில் தன் ஷூக்களையே பார்த்துக்கொண்டு, “இல்லை. கெட்டபிள்ளையாக நடந்து கொண்டேன். மன்னியுங்கள்” என்று சொன்னான்.
அவன்மேல் எனக்கு பரிதாபம் உண்டானது. தான் செய்ததை மறுக்காமல், நேர்மையோடு ஒத்துக்கொண்டான். அதன்பிறகு ஜெபித்தோம், நாங்கள் தவறு செய்யும்போது எங்களை மன்னிக்கவும், நல்லவர்களாக வாழ்வதற்கு எங்களுக்கு உதவிசெய்யவும் தேவனிடம் வேண்டிக்கொண்டோம்.
ஏசாயா 1 தம்முடைய மக்கள் செய்த தவறுகளை எல்லாம் சொல்லி, அவர்களை தேவன் கண்டிக்கிறார். நீதிமன்றங்களில் பரிதானமும் அநீதியும் தலைவிரித்தாடின; உலக ஆதாயத்திற்காக திக்கற்றோரையும் விதவைகளையும் கொள்ளையிட்டார்கள். அப்படியிருந்தும் அவர்களிடம் தேவன் இரக்கத்தோடு நடந்து கொண்டார், யூதாவின் ஜனங்கள் தாங்கள் செய்த தவறுகளை அறிக்கைபண்ணி, அவற்றிலிருந்து திரும்பும்படிச் சொன்னார்: “வழக்காடுவோம் வாருங்கள் . . . உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்” (ஏசா.1:18).
நம்முடைய பாவங்களை நாம் மறைக்காமல் தேவனிடம் சொல்ல அவர் விரும்புகிறார். நாம் மனநேர்மையுடன், மனந்திரும்பும்போது, அன்போடு அவர் மன்னிக்கிறார்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவா. 1:9). நம் தேவன் இரக்கமுள்ளவர், புதிதாக நாம் வாழ்க்கையைத் துவங்குவதற்கு அவர் உதவுகிறார்!
பொக்கிஷ வேட்டை
மேரியும் ஜானும் தங்களுடைய நாயைக் கூட்டிக்கொண்டு, தங்களுக்குச் சொந்தமான இடத்தில் நடந்துகொண்டிருந்தார்கள். சமீபத்தில் பெய்திருந்த மழையில் மண் கரைந்திருந்ததால், உள்ளே புதைந்திருந்த துருப்பிடித்த தகர டப்பா ஒன்று ஓரிடத்தில் வெளியே தெரிந்தது. அந்த டப்பாவை அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அதைத் திறந்து பார்த்தபோது, ஒரு நூற்றாண்டு பழைமை வாய்ந்த சில தங்க நாணயங்கள் உள்ளே இருந்தன! அந்தத் தம்பதியர் மீண்டும் அந்த இடத்திற்கு வந்து தேடிப்பார்த்தபோது அதேபோல ஏழு டப்பாக்களை எடுத்தார்கள். அவற்றில் மொத்தம் 1,427 தங்க நாணயங்கள் இருந்தன. பிறகு, அவற்றையெல்லாம் வெவ்வேறு இடங்களில் மீண்டும் புதைத்துவைத்துப் பாதுகாத்தார்களாம்.
சேடில் ரிட்ஜ் ஹோர்ட் (Saddle Ridge Hoard) என்று அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய பொக்கிஷ வேட்டையாக அது கருதப்படுகிறது. அந்த தங்க நாணயங்களின் மதிப்பு 10 மில்லியன் டாலராகக் கணக்கிடப்பட்டுள்ளது. இயேசு சொன்ன உவமை ஒன்றை இந்தச் சம்பவம் அதிகமாக நினைவூட்டுகிறது. “பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.” மத்தேயு 13:44.
பொக்கிஷ வேட்டைகள் குறித்த கற்பனை கதைகளுக்கும் பஞ்சமில்லை; ஆனால் உண்மையிலேயே அப்படி நடப்பது அபூர்வம்தான். ஆனால் இயேசு சொல்கிற பொக்கிஷத்தை எல்லாருமே பெறலாம். அதற்கு அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, அவரை ஏற்றுக்கொண்டு, அவரைப் பின்பற்ற வேண்டும். யோவான் 1:12.
அந்தப் பொக்கிஷம் அள்ள அள்ள குறையாதது. நாம் நம்முடைய பழைய வாழ்க்கையை விட்டு, தேவனையும் அவருடைய நோக்கங்களையும் நாடும்போது, அவர் எவ்வளவு விலையேறப் பெற்றவர் என்பதைக் காணலாம். “கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தின்” மூலமாக, நம் கற்பனைக்கும் எட்டாத பொக்கிஷங்களைத் தருகிறார். எபே 2:6. அவருடைய மகன்களும் மகள்களுமாக நாம் புதுவாழ்வைப் பெறுவதும், வாழ்க்கையில் புதிய நோக்கங்களைக் கண்டுகொள்வதும், அவரோடு நித்தியத்தில் வாழும் மகிழ்ச்சியைப் பெறுவதும் அந்தப் பொக்கிஷத்தில் அடங்கும்.
நீண்ட கால ஜெபம்
நீண்ட கால ஜெபம்
கடனாகப் பெறப்பட்ட ஆசீர்வாதங்கள்
மதிய உணவிற்கு முன்பாக நாங்கள் அனைவரும் ஜெபத்திற்காக தலை வணங்க, ஜெஃப் ஜெபித்தான். “அப்பா, நாங்கள் உம்முடைய காற்றைச் சுவாசிக்கவும், உம்முடைய உணவை உண்ணவும் எங்களுக்குதவியதால் உமக்கு எங்களது நன்றியை கூறிக் கொள்கின்றோம்” என்றான். ஜெஃப் இப்பொழுது தனது வேலையை இழந்து கஷ்டங்களின் மத்தியில் இருக்கின்றான். ஆனால், அவனுடைய இருதயம் தேவன் மீதுள்ள நம்பிக்கையோடிருப்பதால், எல்லாம் தேவனுடையது என்பதைக் கண்டு கொண்டான். அது என்னை ஆழமாகத் தொட்டது. என்னுடைய அனுதினவாழ்வில் நான் பயன்படுத்தும் அடிப்படை காரியங்களிலிருந்து எல்லாம் தேவனுடையவையே என்பதை நான் உண்மையாகத் தெரிந்து கொண்டுள்ளேனா? தேவனே அவற்றை பயன்படுத்த என்னை அனுமதித்துள்ளார்.
தாவீது ராஜா, எருசலேம் தேவாலயத்தைக் கட்ட, இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து காணிக்கைகளைச் சேகரித்தபோது அவனும் ஜெபித்தான். “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது. உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்… எல்லாம் உம்முடையது” (1 நாளா. 29:14,16) என்று ஜெபித்தான்.
நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையானவற்றையெல்லாம் தேவனே தருகின்றார். “அவரே ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (1 நாளா. 8:18) என வேதாகமம் சொல்லுகிறது. நாம் வைத்திருப்பதெல்லாம் கடனாகப் பெறப்பட்டவை என்பதை நினைத்து, உலகப் பொருளோடு நமக்கிருக்கின்ற பிடிப்பைத் தளர்த்திக் கொண்டு திறந்த கரங்களோடும், திறந்த உள்ளத்தோடும் தாராளமாகப் பகிர்ந்து கொள்வோம். ஏனெனில், நாம் தேவனிடமிருந்து அனுதினமும் பெறுகின்ற இரக்கத்திற்காக நன்றியுள்ளவர்களாயிருப்போம்.
தேவன் தாராளமாகக் கொடுக்கின்ற தயாள பிரபு. அவர் அன்பினால் தன்னுடைய குமாரனையே நமக்காகத் தந்தார் (ரோம. 8:32). நாம் மிக அதிகமாகப் பெற்றுள்ளோம். நாம் பெற்றுள்ள சிறிதும், பெரிதுமான அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும் நம்முடைய உள்ளம் நிறைந்த நன்றியை அவருக்குச் செலுத்துவோம்.
பிறரோடு ஒப்பிடாதே
'ஒரு நாள் நான் எல்லாவற்றையும் குறித்து முகநூலில் பதிவிடப் போகிறேன் - நல்லவைகளை மட்டுமல்ல!" என என்னுடைய சிநேகிதி ஸ்யூ தன்னுடைய கணவனோடு உணவுவேளையில் பேசிக்கொண்டிருக்கையில் தெரிவித்தாள். இதனைக் கேட்ட நான் சத்தமாக சிரித்ததோடு, சிந்திக்கவும் ஆரம்பித்தேன். சமூக ஊடகங்கள் நல்லவைதான். நாம் பலமைல்களுக்கப்பாலுள்ள நண்பர்களோடு பல ஆண்டுகள் கழித்து தொடர்பு கொள்ளவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் உதவுகின்றன. ஆனால், நாம் அவற்றை கவனத்தோடு பயன்படுத்தாவிடில், வாழ்வைப் பற்றிய ஒரு மாயையை உருவாக்கிவிடும். ஒருவர் தம் வாழ்விலுள்ள மிகச் சிறந்த காரியங்களையே முகநூலில் பதிப்பதால், இதனைக் காணும் நாம் அவர்கள் வாழ்வில் பிரச்சனைகளேயில்லை எனவும், நம்முடைய வாழ்வு மட்டும் எங்கோ தவறுதலாகப் போய்க்கொண்டிருக்கிறது எனவும் நினைக்கும்படிச் செய்கின்றது.
நம்முடைய வாழ்வைப் பிறருடைய வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மகிழ்ச்சியைக் குலைக்கும் ஒரு செயல். இயேசுவின் சீடர்களும் ஒருவரோடொருவர் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தபோது (லூக். 9:46;22:24), இயேசு உடனே அதனைத் தடுத்தார். இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் பேதுருவிடம், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் பொருட்டு அவர் எவ்வளவாய் பாடுபட வேண்டுமென தெரிவித்தார். உடனே அவன் யோவான் பக்கமாய் திரும்பி, 'ஆண்டவரே, இவன் காரியம் என்ன?" என்று கேட்டான். அதற்கு இயேசு 'நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா" என்றார் (யோவா. 21:21-22).
தேவையற்ற ஒப்பிட்டுப் பார்த்தலை பேதுரு தவிர்க்கும்படி, இயேசு வழிகாட்டுகின்றார். நம்முடைய இருதயமும், தேவன் மீதும் அவர் நமக்குச் செய்துள்ளவற்றின் மீதும் மட்டும் திருப்பப்படுமாயின் தன்னலமான எண்ணங்கள் தானாக விலகிவிடும், நாம் இயேசுவைப் பின்பற்ற விரும்புவோம். போட்டிகளின் அழுத்தத்தாலும் பளுவினாலும் நாம் இழுக்கப்படுவதற்குப் பதிலாக, அவர் நமக்கு அவருடைய அன்பு பிரசன்னத்தையும் சமாதானத்தையும் தருவார். தேவன் தரும் சமாதானத்திற்கு ஒப்பானது எதுவுமில்லை.
ஜெபமும் வளர்ச்சியும்
என்னுடைய நண்பன் டேவிட்டின் மனைவி அல்சைடன் (நினைவை இழத்தல்) வியாதியினால் தாக்கப்பட்ட போது அவனுடைய வாழ்வு பெரிதும் பாதிப்புக்குள்ளானது. அவன் தன் மனைவியை கவனிக்கும்படி தன் வேலையிலிருந்து கட்டாய ஓய்வு வாங்க வேண்டியதாயிற்று. அந்த வியாதி மேலும் மேலும் அதிகரிக்க, அவளுக்கு இன்னும் அதிக கவனம் தேவைப்பட்டது.
''நான் தேவன் மீது கோபத்திலிருக்கின்றேன்" என்றான். ''நான் எவ்வளவுக்கதிகமாக ஜெபிக்கின்றேனோ, அவ்வளவுக்கதிகமாய், தன்னலத்தோடு வாழ்கின்ற என்னுடைய இருதயத்தைக் குறித்துக் காண்பிக்கின்றார்" என்றான். கண்ணீர் அவனுடைய கண்களைக் குளமாக்கின. 'அவள் பத்து ஆண்டுகளாக சுகவீனமாக இருக்கின்றாள். தேவன் என்னை காரியங்களை வேறு விதமாகப் பார்க்கச் செய்கின்றார். நான் இப்பொழுது எல்லாவற்றையும் அன்பினாலேயே செய்கின்றேன். மேலும் அவற்றை இயேசுவுக்காகச் செய்கின்றேன். அவளை கவனிப்பதே என் வாழ்வின் மிகப் பெரிய கொடையாகவுள்ளது" என்றான்.
சில வேளைகளில் தேவன் நம்முடைய ஜெபங்களில் நாம் கேட்கின்றவற்றின் பதிலை கொடுக்காமல் நம்மை மாற்றும்படியாகச் செயல்படுகின்றார். தேவன் பொல்லாப்பு நிறைந்த நினிவே பட்டணத்தை அழிக்காமல் விட்டபோது தீர்க்கதரிசி யோனாவிற்கு கோபம் வந்தது. தேவன் யோனாவிற்கு நிழல் தரும்படி ஓர் ஆமணக்குச் செடியை முளைக்கச் செய்தார் (யோனா 4:6). பின்னர் அதனை காய்ந்து போகச் செய்தார். யோனா அதனைக் குறித்து குற்றம்சாட்டிய போது தேவன், 'நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ?" என்றார். யோனா தன்னைக் குறித்து மட்டுமே சிந்திக்கின்றான். எனவே ''நல்லது" என்கின்றான். ஆனால், தேவன் அவனைப் பிறரைக் குறித்துக் சிந்திக்கச் செய்கின்றார். பிறர் மீது கரிசனைகொள்ளச் செய்கின்றார்.
தேவன் சில வேளைகளில் நம்முடைய ஜெபங்களை, நாம் எதிர்பாராத விதமாக பதிலளித்து, நாம் இந்த மாற்றத்தை திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்வோம், ஏனெனில், அவர் நம்மை அவருடைய அன்பினால் மாற்ற விரும்புகின்றார்.