எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவ் பிரானன்கட்டுரைகள்

கிறிஸ்துவில் ஐக்கியம்

எங்கள் ஞாயிறு காலை ஆராதனைக்குப் பிறகு விளக்குகளை அணைப்பதற்கும் தேவாலயத்தைப் பூட்டுவதற்கும் யார் பொறுப்பு என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த நபரைப் பற்றி எனக்கு ஒன்று தெரியும்: ஞாயிற்றுக்கிழமை இரவு உணவை அவர் தாமதமாகவே உண்ண நேரிடும். ஏனென்றால், பல விசுவாசிகள் ஆராதனைக்கு பின்னர், தேவாலயத்தில் சுற்றித் திரிவதை விரும்புகிறார்கள். அவர்களின் வாழ்க்கை தீர்மானங்கள், இதய பிரச்சினைகள், அனுதின போராட்டங்கள் மற்றும் பலவற்றைப் பற்றி பேசுகிறார்கள். ஆராதனை முடிந்து சபையில் ஒவ்வொருவரையும் பார்த்து ஐக்கியங்கொள்ளும் அந்த தருணம் மிகவும் மகிழ்ச்சிகரமானது.

ஐக்கியம் என்பது கிறிஸ்துவைப் போல் வாழும் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். சக விசுவாசிகளுடன் நேரத்தை செலவழிப்பதன் மூலம் வரும் ஐக்கியம் இல்லாமல், ஒரு விசுவாசியாக இருந்தால் பல நன்மைகளை நாம் வாழ்க்கையில் இழக்க நேரிடும்.

உதாரணமாக, “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:11) என்று பவுல் வலியுறுத்துகிறார். எபிரெயரின் ஆசிரியர், சபைக்கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் (10:25) என்று கூறுகிறார். ஏனென்றால் “ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்” என்றும் ஆலோசிக்கிறார். மேலும் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து” (வச. 24) செயல்படும்படிக்கு அறிவுறுத்துகிறார்.

இயேசுவுக்காக வாழ அர்ப்பணிக்கப்பட்ட மக்களாக, “பலவீனரை தாங்குங்கள்” என்னும் ஆலோசனையை ஏற்று, நீடிய சாந்தமாய் இருக்கும்போது, விசுவாசத்திற்கும் தேவனுடைய ஊழியத்திற்கும் நாம் நம்மை தகுதிப்படுத்துகிறோம் (1 தெசலோனிக்கேயர் 5:14). தேவனுடைய துணையோடு அவ்வாறு வாழும்போது, மெய்யான ஐக்கியத்தை அனுபவிக்கவும், “உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்போதும் நன்மை செய்ய” நாம் நாடலாம் (வச. 15).

தேவனுக்கு முன் சமம்

விடுமுறை நாட்களில், நானும் எனது மனைவியும் அதிகாலையில் பைக் சவாரி செய்து மகிழ்ந்தோம். ஒரு பாதை எங்களை பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வீடுகளின் சுற்றுப்புறத்தின் வழியாக அழைத்துச் சென்றது. பல்வேறு நபர்களை நாங்கள் பார்த்தோம்: குடியிருப்பாளர்கள் தங்கள் நாய்களுடன் நடந்து செல்வது, சக பைக் ஓட்டுபவர்கள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் புதிய வீடுகளை கட்டுவது அல்லது நன்கு பராமரிக்கப்பட்ட நிலப்பரப்புகளை பராமரிப்பது. பலதரப்பட்ட மக்களை நான் பார்க்க நேரிட்டபோது, ஒரு மதிப்புமிக்க உண்மை எனக்கு நினைவூட்டப்பட்டது. நமக்குள் நிஜமாகவே எந்த வேறுபாடும் இல்லை. பணக்காரன் அல்லது ஏழை, முதலாளி அல்லது தொழிலாளி வர்க்கம் போன்று எந்த வேறுபாடும் இல்லை. அன்று காலை அந்தத் தெருவில் நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருந்தோம். “ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்” (நீதிமொழிகள் 22:2). நமக்கும் வேறுபாடுகள் இருப்பினும், நாம் அனைவரும் தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம் (ஆதியாகமம் 1:27).

அதுமட்டுமின்றி, தேவனுக்கு முன்பாக நாம் அனைவரும் சமமாக இருக்கிறோம் என்பது, நம்முடைய பொருளாதார, சமூக மற்றும் இன வேறுபாடுகளைக் களைந்து, நாம் எல்லோரும் பாவிகளாய் இருக்கிறோம் என்பதிலும் ஒரு ஒற்றுமை வெளிப்படுகிறது: “எல்லோரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி” (ரோமர் 3:23). நாமெல்லாரும் கீழ்படியாமையினிமித்தம் பாவஞ்செய்து, அவருக்கு முன்பாக குற்றவாளிகளாய் இருக்கிறோம். நமக்கு இயேசு தேவை.

நாம் அடிக்கடி பல்வேறு காரணங்களுக்காக மக்களை குழுக்களாக பிரிக்கிறோம். ஆனால், உண்மையில், நாம் அனைவரும் மனித இனத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். பாவிகளுக்கும் இரட்சகர் அவசியம் என்பதினால் நாம் அனைவரும் ஒரே சூழ்நிலையில் இருந்தாலும், அவருடைய கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம் (வச. 24).

முகவரி அட்டையும் ஜெபமும்

சமீபத்தில் விதவையான பெண் ஒருவள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தாள். இன்ஷ_ரன்ஸ் பாலிசியில் இருந்து சில முக்கிய நிதிகளைச் சேகரிக்க, கணவரின் உயிரைப் பறித்த விபத்து பற்றிய முக்கிய தகவல்கள் அவளுக்குத் தேவைப்பட்டன. அவளுக்கு உதவுவதாகக் கூறிய ஒரு போலீஸ் அதிகாரியிடம் அவள் பேசினாள். ஆனால் அவள் அவருடைய முகவரி அட்டையை தொலைத்துவிட்டாள். அதனால் அவள் உதவிக்காக தேவனிடம் மன்றாடி ஜெபித்தாள். சிறிது நேரம் கழித்து, அவள் தேவாலயத்தின் வெளிப்புறமாக நடந்துசென்றுகொண்டிருக்கையில் தேவாலயத்தின் ஜன்னல் ஒன்றில் ஒரு முகவரி அட்டையைப் பார்த்தாள். ஆம், அவள் தொலைத்த அதே போலீஸ்காரரின் அட்டை. அது எப்படி அங்கு வந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை, ஆனால் அது ஏன் அங்கு வந்தது என்பது அவளுக்குத் தெரியும்.

அவள் ஜெபத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டாள். ஏன் கூடாது? தேவன் நம் விண்ணப்பங்களுக்கு செவிசாய்க்கிறார் என்று வேதம் கூறுகிறது. பேதுரு சொல்லும்போது “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதல்களுக்குக் கவனமாயிருக்கிறது” (1 பேதுரு 3:12) என்று கூறுகிறார். 

ஜெபத்திற்கு தேவன் எவ்வாறு பதிலளித்தார் என்பதற்கு வேதாகமம் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறது. அதில் வியாதிப்பட்ட யூதேயாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் ஒருவர். அவர் மரித்துவிடுவார் என்று ஏசாயா தீர்க்கதரிசியே தீர்க்கதரிசனம் சொல்லிவிட்டார். ஆனால் ராஜாவே என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்திருந்தான். “அவன் கர்த்தரை நோக்கி... விண்ணப்பம்பண்ணினான்” (2 இராஜ. 20:2). உடனே தேவன் ஏசாயா தீர்க்கதரிசியை நோக்கி, “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்” (வச. 5) என்று அவனிடம் சொல்லும்படிக்கு சொன்னார். எசேக்கியாவுக்கு மேலும் பதினைந்து ஆண்டுகள் ஆயுள் கூட்டப்பட்டது.

ஜன்னலில் அட்டை தென்பட்டதுபோல தேவன் எப்போதும் நமக்கு பதிலளிப்பதில்லை. ஆனால் கடினமான சூழ்நிலைகள் எழும்போது, அவற்றை நாம் தனியாக எதிர்கொள்ள மாட்டோம் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார். தேவன் நம்மைப் பார்க்கிறார், அவர் நம்முடன் இருக்கிறார் - நம் ஜெபங்களைக் கேட்கிறார்.

ஜீவனைக் கண்டடைதல்

வேதாகமக் கல்லூரியில் சேர்ந்து வேதத்தைக் குறித்து படிப்பது என்பது, பிரெட் எடுத்த இயல்பான தீர்மானம். அவன் தன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் - பள்ளி, வீடு, திருச்சபை என்று கிறிஸ்தவர்களால் சூழப்பட்டே வாழ்ந்திருக்கிறான். மேலும் அவன் தன்னுடைய கல்லூரிப் படிப்பையும் கிறிஸ்தவ ஊழியத்தைக் குறித்தே படிக்கிறான். 

ஆனால் அவனுடைய இருபத்தியோராம் வயதில், ஒரு திருச்சபையின் சிறிய கூட்டத்தில் 1 யோவான் நிருபத்திலிருந்து போதகர் பிரசங்கிக்க, ஒரு புதிய காரியத்தைக் கண்டுபிடித்தான். அவன் அறிவைச் சார்ந்தும் மார்க்கத்தின் பிடியில் சிக்கியிருந்ததையும் அறிந்து, தான் இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்பதை உணர்ந்தான். அன்று இயேசு அவனுடைய இருதயத்தில், “நீ இன்னும் என்னை அறியவில்லை!” என்று மெல்லிய சத்தத்தோடு பேசுவதை உணார்ந்தான். 

யோவானின் செய்தி தெளிவாக உள்ளது: “இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்” (1 யோவான் 5:1). கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் மட்டுமே நம்மால் உலகத்தை ஜெயிக்கமுடியும் என்று யோவான் சொல்லுகிறார் (வச. 4). வெறும் அறிவினால் மட்டும் அது சாத்தியமல்ல. மாறாக, அவர் நமக்காய் சிலுவையில் செய்த தியாகத்தின் மீதான நேர்த்தியான விசுவாசத்தினால் அது சாத்தியமாகக்கூடும். அந்நாளிலே, பிரெட் கிறிஸ்துவை மாத்திரம் நம்பப்பழகிக்கொண்டார். 

இன்று கிறிஸ்துவின் மீதான பிரெட்டின் பாரத்தைக் குறித்தும் அவருடைய இரட்சிப்பைக் குறித்தும் மறைவானது ஒன்றுமில்லை. அவர் பிரசங்கபீடத்தில் ஒவ்வொரு முறை நின்று கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கிக்கும்போது, அது தெளிவாக பிரதிபலிக்கிறது. 

“தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்” (வச. 11-12). கிறிஸ்துவில் மறுவாழ்வு பெற்ற நம் அனைவரையும் தேற்றக்கூடிய நேர்த்தியான ஆறுதல் இது. 

ஏதாகிலும் கேள்வி?

ஆன், பல ஆண்டுகளாக அறிந்திருந்த வாய்வழி அறுவை சிகிச்சை நிபுணரை ஆரம்ப பரிசோதனைக்காக சந்தித்தார். அவர் அவளிடம், “உனக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா?” என்று கேட்டார். அவள், “ஆம்! கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்குச் சென்றீர்களா?” என்று கேட்டாள். அவளுடைய கேள்வி அவரை குற்றப்படுத்தும் நோக்குடன் கேட்கப்பட்டதில்லை, மாறாக, விசுவாசத்தைக் குறித்த உரையாடலைத் துவக்குவதற்காக கேட்கப்பட்ட கேள்வியாயிருந்தது. 

அந்த மருத்துவரின் திருச்சபை அனுபவங்கள் அந்த அளவிற்கு சொல்லும்படியாக இருக்கவில்லை. ஆனின் உரையாடலுக்கு பின்னர், அவருடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் பங்களிப்பையும் திருச்சபையின் முக்கியத்துவத்தையும் அறிய நேரிட்டது. அதன் பின்பு, அந்த மருத்துவரின் பெயர் பதிக்கப்பட்ட வேதாகமத்தை ஆன் அவருக்கு பரிசாகக் கொடுத்தபோது, அவர் கண்கலங்கினார். 

சில நேரங்களில் நாம் விவாதிக்கவோ அல்லது நம் விசுவாசத்தை ஆக்ரோஷமாக பகிர்ந்து கொள்வதையோ விரும்புவதில்லை. ஆனால் இயேசுவைப் பற்றி அறிவிப்பதற்கு ஒரு நேர்த்தியான வழி இருக்கிறது – கேள்வி கேட்டு உரையாடலைத் துவக்குங்கள். 

அனைத்தும் அறிந்த தேவனாய் இருந்த ஒரு மனிதனாய் இயேசு அநேக கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அவருடைய நோக்கங்கள் நமக்குத் தெரியாவிட்டாலும், அவருடைய கேள்விகள் மற்றவர்களை பதிலளிக்கத் தூண்டியது என்பது தெளிவாகிறது. அவர் தனது சீஷனான அந்திரேயாவிடம், “என்ன தேடுகிறீர்கள்” (யோவான் 1:38) என்று கேட்கிறார். பார்வையற்ற பர்திமேயுவிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்” (மாற்கு 10:51; லூக்கா 18:41) என்று கேட்கிறார். அவர் வியாதியஸ்தனிடம், “சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா” (யோவான் 5:6) என்று கேட்கிறார். இயேசு இந்த ஆரம்ப கேள்விகளைக் கேட்ட அத்தனை பேருடைய வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுகிறது.

யாரிடத்தில் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள்? சரியான கேள்விகளை அவர்களிடத்தில் கேட்கும் ஞானத்தை தேவனிடம் கேளுங்கள்.

வித்தியாசமான செய்கை

மேரி ஸ்லெஸர், 1800களின் பிற்பகுதியில் ஆப்பிரிக்க நாடான கலாபருக்கு (தற்போதைய நைஜீரியா) கப்பலில் சென்றபோது, மறைந்த டேவிட் லிவிங்ஸ்டோனின் மிஷனரிப் பணியைத் தொடர ஆர்வமாக இருந்தார். ஆனால் சக மிஷனரிகளின் பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் பணியே அவளுக்குக் கொடுக்கப்பட்ட முதல் ஊழியம். அவள் அதை எதிர்பார்க்காததால் சோர்ந்துபோனார். ஆகையால் அவள் ஒரு துணிச்சலான காரியத்தை செய்ய முன்வந்தாள். அவள் ஊழியம் செய்யும் மக்கள் வாழும் இடத்திற்கே குடியேறினாள். அவர்களுடைய மொழியை கற்றுக்கொண்டு, அவர்களுடைய வாழ்க்கைமுறையை தத்தெடுத்துக்கொண்டு, அவர்களின் உணவையே உண்ண நேரிட்டது. ஆதரவற்ற எண்ணற்ற குழந்தைகளை பராமரித்தாள். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக, அந்த மக்களுக்கு அவள் நம்பிக்கையையும் நற்செய்தியையும் பிரஸ்தாபப்படுத்தினாள்.

நம்மை சுற்றிவாழும் மக்களின் தேவைகளை சந்தித்தலின் முக்கியத்துவத்தை பவுல் அப்போஸ்தலர் நன்கு அறிந்திருந்தார். 1 கொரிந்தியர் 12:4-5இல், “வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே” என்று குறிப்பிடுகிறார். ஆகையால் மக்களின் தேவையை அறிந்து அவர் ஊழியம் செய்தார். ஒரு கட்டத்தில், பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன் (9:22) என்று சொல்லுகிறார். 

நான் அறிந்த ஒரு தேவாலயம் சமீபத்தில், ஊனமுற்றவர்களும் இலகுவாய் ஆராதிக்கும்படியாக “அனைத்து திறன்” ஊழியம் ஒன்றைத் துவங்கியது. இது சுவிசேஷத்தை சமுதாயத்திற்கு இலகுவாய் கொண்டுசெல்லும் பவுல் அப்போஸ்தலரின் அணுகுமுறைக்கு ஒத்தது.

நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு முன்பாக நம்முடைய விசுவாசத்தை வெளிப்படுத்தும்போது, புதுப்புது வழிகளில் அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்த தேவன் நம்மை வழிநடத்துவார்.

இருளில் இருந்து ஒளிக்கு

ஆகாஷை அவனது இருண்ட மன அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டு வர முடியவில்லை. லாரி விபத்தில் பலத்த காயமடைந்த அவன் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு மிஷனரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். எட்டு அறுவை சிகிச்சைகள் மூலம் அவனது உடைந்த எலும்புகள் சரி செய்யப்பட்டன. ஆனால் அவனால் சாப்பிட முடியவில்லை. அவன் மனச்சோர்வில் இருந்தான். அவனைச் சார்ந்திருந்த அவன் குடும்பத்திற்கு உதவ முடியாமல் போனதால், அவனுக்கு உலகமே இருண்டது.

 

ஒரு நாள் ஒரு பார்வையாளர் ஆகாஷிடம் யோவானின் நற்செய்தியை அவனது மொழியில் வாசித்து, அவனுக்காக ஜெபம் செய்தார். இயேசுவின் மூலம் தேவனின் இலவச ஈவுகளாகிய மன்னிப்பு மற்றும் இரட்சிப்பின் நம்பிக்கையை உணர்ந்தபடியால் அவர் மீது தன் நம்பிக்கையை வைத்தான். அவனது மனச்சோர்வு விரைவில் விலகியது. அவன் வீடு திரும்பியதும், புதிதாகக் கண்டறிந்த தன் நம்பிக்கையைக் குறித்து சொல்ல முதலில் பயந்தான். கடைசியாக, அவன் தன் குடும்பத்தாரிடம் இயேசுவைப் பற்றி சொன்னான். அவர்களில் ஆறு பேரும் அவரை நம்பினார்கள்!

 

யோவானின் நற்செய்தி, இருள் சூழ்ந்த உலகிற்கான ஒளியின் கலங்கரை விளக்கமாகும். அதில், “]தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (3:16) என்று வாசிக்கிறோம். “[இயேசுவின்] என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு” (5:24) என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். ”ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான்” (6:35) என்று இயேசு  கூறுவதை கேட்கிறோம். உண்மையில், “சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்”.(3 :21)

 

நாம் சந்திக்கும் பிரச்சனைகள் பெரியதாக இருக்கலாம், ஆனால் இயேசு அவைகளிக்காட்டிலும் மிக பெரியவர். அவர் நமக்கு ”ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்(தார்)” (10:10). ஆகாஷைப் போலவே, இவ்வுலகில் உங்கள் நம்பிக்கையை மனிதகுலம் அனைத்துக்கும் ஒளியாகிய இயேசுவின் மீது வைப்பீர்களாக.                                                                

பிரிவு வார்த்தைகள்

ஜான் பெர்கின்ஸ், மரிப்பதற்கு முன்பாக அவருடைய ஆதரவாளர்களுக்கு ஒரு செய்தியை விட்டுச் செல்கிறார். இன நல்லிணக்கத்தின் போராளியாக அறியப்பட்ட பெர்கின்ஸ், “மனந்திரும்புதலே தேவனிடம் திரும்புவதற்கான ஒரே வழி. நீங்கள் மனந்திரும்பாவிட்டால், நீங்கள் அனைவரும் அழிந்து போவீர்கள்” என்று தன் கடைசி வார்த்தைகளை பதிவுசெய்கிறார். 

இதே வார்த்தைகளை வேதாகமத்தில் இயேசுவோடு சேர்த்து அநேகர் பயன்படுத்தியிருக்கின்றனர். இயேசு, “நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்” (லூக்கா 13:3) என்று சொல்லுகிறார். பேதுரு, “உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்” (அப்போஸ்தலர் 3:20) என்று சொல்லுகிறார். 

வேதாகமத்தில் வெகுகாலத்திற்கு முன்பாகவே அனைத்து ஜனங்களின் மனந்திரும்புதலை விரும்பிய ஒரு மனிதர் இருக்கிறார். தீர்;க்கதரிசியும், ஆசாரியனும், நியாயாதிபதியுமாயிருக்கிற சாமுவேல், “இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி” (1 சாமுவேல் 12:1) சொன்னது என்னவென்றால், “பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பெல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரைவிட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்” (வச. 20) என்று சொல்லுகிறார். தீமையிலிருந்து விலகி முழுஇருதயத்தோடும் தேவனை தேடச்செய்வதே அவருடைய மனந்திரும்புதலின் செய்தி. 

நாமெல்லாரும் பாவம் செய்து தேவனை விட்டு வழிவிலகிப்போனோம். நாமெல்லாருக்கும் மனந்திரும்புதல் அவசியப்படுகிறது. அதாவது, பாவத்தை விட்டு வழிவிலகி, நம்மை மன்னித்து வழிநடத்தும் இயேசுவிடம் திரும்புவது. தேவன் தன்னுடைய நாமத்தை கனப்படுத்தும் மனிதர்களுடைய வாழ்க்கையில் செயல்படுத்தும் மனந்திரும்புதலின் வல்லமையை அறிந்த ஜான் பெர்கின்ஸ் மற்றும் சாமுவேல் என்னும் இந்த இரண்டு மனிதர்களுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுப்போம்.

நட்சத்திரங்களை ஆராய்தல்

2021 ஆம் ஆண்டில், ஒரு பன்னாட்டு முயற்சியானது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை ஏவுவதற்கு வழிவகுத்தது. இது பிரபஞ்சத்தை சிறப்பாக ஆராய பூமியிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மைல்கள் தூரம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த விசித்திரமான தொலைநோக்கியானது, ஆழமான விண்வெளியில் ஊடுருவி நட்சத்திரங்களையும் மற்ற வான அதிசயங்களையும் ஆராய்ச்சி செய்யும். 

இது உண்மையில் ஆச்சரியமான ஒரு வானியல் தொழில்நுட்பம். இது நேர்த்தியாய் வேலை செய்தால், அற்புதமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை நமக்குக் கொடுக்கும். ஆனால் அதன் பணி புதியது அல்ல. ஏசாயா தீர்க்கதரிசி நட்சத்திரங்களை அண்ணாந்து பார்த்து, “உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே” (ஏசாயா 40:26) என்று விவரிக்கிறார். “இரவுக்கு இரவு” (சங்கீதம் 19:2) அவைகள் அனைத்தும் இந்த ஆச்சரியமான அண்டசராசங்களை சிருஷ்டித்த தேவனுடைய புகழையும், இரவு வானத்தை ஒளிரச்செய்யும் ஒளிக்கீற்றுகளைக் குறித்தும் விவரித்துக்கொண்டிருக்கின்றன (வச. 3). 

ஒளிரக்கூடிய இதுபோன்ற நட்சத்திரங்கள் அனைத்தையும் அவர் தொகையிடுகிறார்: “அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்” (சங்கீதம் 147:4). சில நேர்த்தியான கண்டுபிடிப்புகளை மனிதன் கண்டுபிடித்து அவற்றை ஆகாயத்திற்கு ஆராய்ச்சி செய்யும்பொருட்டு அனுப்பிவைப்பதின் மூலம், வசீகரிக்கும் ஆச்சரியங்களை அறிய நேரிடுகிறது. அவைகள் அனைத்தும் அவற்றை உண்டாக்கியவரின் மகிமையை விளங்கப்பண்ணுகிறது. ஆம்! “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது” (19:1), நட்சத்திரங்களும் வெளிப்படுத்துகிறது.