எங்கள் ஞாயிறு காலை ஆராதனைக்குப் பிறகு விளக்குகளை அணைப்பதற்கும் தேவாலயத்தைப் பூட்டுவதற்கும் யார் பொறுப்பு என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த நபரைப் பற்றி எனக்கு ஒன்று தெரியும்: ஞாயிற்றுக்கிழமை இரவு உணவை அவர் தாமதமாகவே உண்ண நேரிடும். ஏனென்றால், பல விசுவாசிகள் ஆராதனைக்கு பின்னர், தேவாலயத்தில் சுற்றித் திரிவதை விரும்புகிறார்கள். அவர்களின் வாழ்க்கை தீர்மானங்கள், இதய பிரச்சினைகள், அனுதின போராட்டங்கள் மற்றும் பலவற்றைப் பற்றி பேசுகிறார்கள். ஆராதனை முடிந்து சபையில் ஒவ்வொருவரையும் பார்த்து ஐக்கியங்கொள்ளும் அந்த தருணம் மிகவும் மகிழ்ச்சிகரமானது.

ஐக்கியம் என்பது கிறிஸ்துவைப் போல் வாழும் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். சக விசுவாசிகளுடன் நேரத்தை செலவழிப்பதன் மூலம் வரும் ஐக்கியம் இல்லாமல், ஒரு விசுவாசியாக இருந்தால் பல நன்மைகளை நாம் வாழ்க்கையில் இழக்க நேரிடும்.

உதாரணமாக, “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:11) என்று பவுல் வலியுறுத்துகிறார். எபிரெயரின் ஆசிரியர், சபைக்கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் (10:25) என்று கூறுகிறார். ஏனென்றால் “ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்” என்றும் ஆலோசிக்கிறார். மேலும் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து” (வச. 24) செயல்படும்படிக்கு அறிவுறுத்துகிறார்.

இயேசுவுக்காக வாழ அர்ப்பணிக்கப்பட்ட மக்களாக, “பலவீனரை தாங்குங்கள்” என்னும் ஆலோசனையை ஏற்று, நீடிய சாந்தமாய் இருக்கும்போது, விசுவாசத்திற்கும் தேவனுடைய ஊழியத்திற்கும் நாம் நம்மை தகுதிப்படுத்துகிறோம் (1 தெசலோனிக்கேயர் 5:14). தேவனுடைய துணையோடு அவ்வாறு வாழும்போது, மெய்யான ஐக்கியத்தை அனுபவிக்கவும், “உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்போதும் நன்மை செய்ய” நாம் நாடலாம் (வச. 15).