எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பில் கிரவுடர்கட்டுரைகள்

பெரிய உலகம், அதைவிடப் பெரிய கர்த்தர்

வடக்கு மிச்சிகன் வழியாக காரில் நாங்கள் செல்லும்பொழுது, பூமத்திய ரேகைக்கும் வடதுருவத்திற்கும் நடுவிலிருக்கும் 45ம் அட்சரேகையைக் குறிக்கும் அடையாளத்தைக் கடந்தபொழுது, மார்லின் “நம்பவே முடியவில்லை, உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது!” என்று வியந்தாள். நம்முடைய உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறதென்றும், நாம் எவ்வளவு சிறியவர்களாயிருக்கிறோம், என்பதைக் குறித்துப் பேசினோம். இருந்தும் அண்டசராசரத்துடன் ஒப்பிடும்போது, நமது சிறிய பூமி தூசிபோன்ற புள்ளியாகத்தான் காணப்படுகிறது. நம்முடைய பூமி பெரியதும் அண்டசராசரங்கள் மிகப்பெரியதுமாக இருந்தால் இவற்றை தமது வல்லமையால் சிருஷ்டித்த கர்த்தர் எவ்வளவு பெரியவர்? அவருக்குள் (இயேசுவுக்குள்) சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது (கொலோ. 1:16).

இது ஒரு நற்செய்தி, ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நித்தியம் வரைக்கும் நம்மைப் பாவத்திலிருந்து மீட்க வந்த இந்த இயேசுதான் சகலத்தையும் சிருஷ்டித்தவர். தாம் மரிப்பதற்கு முந்தின இரவு “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” என்று இயேசு சொன்னார் (யோவா. 16:33).

வாழக்கையின் சிறிய, பெரிய சவால்களைச் சந்திக்கும்பொழுது சராசரங்களைப் படைத்தவரை நோக்கிக் கூப்பிடுவோம். அவரே மரித்து உயிர்த்தெழுந்தவர். அவரே நொறுக்கப்பட்ட உலகத்தை நமக்காக ஜெயித்தவர். நமது இக்கட்டான சமயங்களில் அவர் வல்லமையுடன் தமது சமாதானத்தை நமக்குத் தருகிறார்.

சந்தோஷமும் நீதியும்

நான் ஆசியாவில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட பொழுது வந்த சில மணி நேரங்களுக்குள் என் கண்களைத் திறந்த இரண்டு உரையாடல்களைக் கேட்டேன். முதலாவதாக தன்மீது தவறாகச் சாட்டப்பட்ட கொலைக்குற்றத்திற்காக பதினொரு ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டதையும், பின்பு குற்றமற்றவன் என்று விடுதலையானதையும் ஒரு போதகர் கூறினார். அடுத்து ஒருசில குடும்பங்கள் தங்கள் தங்கள் சொந்த தாய் நாட்டிலேயே மத வேற்றுமையினால் வந்த உபத்திவத்திலிருந்து தங்களைக் காப்பாற்ற ஒரு கூட்டத்தினருக்கு அதிகமான பணம் கொடுத்தும் அவர்கள் தங்களை  காட்டிக்கொடுத்தாகவும், அதனால் அகதிகள் முகாமில் பலஅண்டுகள் அடைக்கப்பட்டு தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்புவோம் என்கிற நம்பிக்கையை இழந்ததாகவும் கூறினார்கள்.

இந்த இரண்டிலுமே நீதி அற்றுப் போனதால் அப்பாவிகள் உபத்திரவத்திற்குள்ளானார்கள். இது உலகம் அநீதியானது என்பதற்கோர் எடுத்துக்காட்டு. அனால், இந்த நீதியற்ற நிலைமை நிரந்தரமானதல்ல!

சங்கீதம் 67 நம்மைத் துன்புறுத்தும் உலகிற்கு தேவனை அறிவிக்க தேவனுடைய ஜனங்களை அழைக்கிறது. அதன் விளைவு, மகிழ்ச்சி தேவனுடைய அன்பினால் மட்டுமல்ல, அவருடைய நீதியினாலும் உண்டாகும் சந்தோஷமாயிருக்கும். தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர், ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள்” என்று சங்கீதக்காரன் கூறுகிறார் (வச. 4). நிதானமும் நீதியும் நேர்மையும் தேவனுடைய அன்பின் முக்கிய பகுதி என்பதை வேதத்தின் ஆசிரியர்கள் அறிந்திருந்தாலும் அது வருங்காலத்தில்தான் முற்றிலும் உணரப்படும்; என்றும் அறிந்திருந்து அதுவரை… வரக்கடவது (ஆமோ. 5:24). அதுவரை, நம் அநீதி நிறைந்த உலகிற்கு நம்முடைய தேவனின் நீதியை சுட்டிக்காட்டும் பணியைத் தொடர்வோமாக. நம்முடைய தேவனின் தேவ நீதியை அறிவிக்கும் பணியைத் தொடர்வோமாக. அவர் வரும்போது, “நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது (ஆமோ. 5:24).

பிள்ளைகள் மீது அன்பு!

தாமஸ் பர்னாடோ கி.பி. 1865ல் லண்டன் மருத்துவமனை மருத்துவப் பள்ளியில் சேர்ந்தார். சீனாவுக்கு மருத்துவ அருட்பணியாளராக செல்ல வேண்டுமென்பது அவரது கனவு மிக விரைவில் தான் இருக்கும் பகுதியிலேயே பெரிய தேவையிருப்பதை அவர் உணர்ந்தார். வீடற்று அநேக சிறு பிள்ளைகள் லண்டன் தெருக்களில் வசித்தனர், சிலர் மரித்துவிட்டனர். இந்த அபாயகரமான சூழ்நிலையை மாற்ற தாம் ஏதாவது செய்ய வேண்டுமென பர்னாடோ முடிவு செய்தார். லண்டனின் கிழக்கு எல்லையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லங்களை உருவாக்கி சுமார் 60,000 சிறுவ சிறுமியரை வறுமையிலிருந்தும் மரண அபாயத்திலிருந்தும் தப்புவித்தார். போதகரும் இறையில் அறிஞருமான ஜான் ஸ்டாட் “இன்று பர்னாடோவை தெரு பிள்ளைகளின் பாதுகாவலன் பரிசுத்த பர்னாடோ என அழைக்கலாம்!”

இயேசு கூறினார், “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களை இந்தக் குழந்தைகளைப் போல இருப்பவர்களுக்குத்தான் பரலோக ராஜ்யம் சொந்தமாகும்” (மத். 19:14). இவ்வாறு இயேசுவானவர் முழங்கியபோது இயேசுவின் சீஷர்களும் அங்கிருந்த திரள் கூட்டத்தாரும் எவ்வளவு ஆச்சரியப்பட்டிருப்பார்கள் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். பண்டைய உலகில், பிள்ளைகளுக்கு குறைந்த மதிப்பே வழங்கப்பட்டது. வாழ்வின் ஓரப் பகுதிகளுக்கு பிள்ளைகள் தள்ளப்பட்டார்கள். ஆயினும், இயேசுவானவர் பிள்ளைகளை வரவேற்றார். ஆசீர்வதித்தார், மதித்தார்.

புதிய ஏற்பாட்டில் யாக்கோபு கிறிஸ்துவைப் பின்பற்றுவோருக்கு அறைகூவல் விடுக்கிறார், “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறது… பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது” (யாக். 1:27). இந்நாட்களில், அந்த முதல் நூற்றாண்டுக் குழந்தைகளைப் போலவே, அலட்சியப் போக்காலும், மனிதர்களைக் கடத்துவதாலும், தவறான பயன்பாட்டாலும், போதை மருந்துகளினாலும் பல்வேறு இனத்தைச் சேர்ந்த அனைத்து நாட்டுப் பிள்ளைகளும் ஆபத்தான சூழ்நிலையில் வசிக்கின்றனர். நம்மை நேசிக்கின்ற நமது பிதாவானவரை நாம் எவ்வாறு கனப்படுத்தக்கூடும்? இயேசுவானவர் வரவேற்கிற சிறுவர் சிறுமியரின் மீது நமது அக்கறையை செலுத்துவதன் மூலமே!

உயிர்ப்பிக்கப்பட்டு

என் தந்தை வாலிபனாக இருந்தபோது, வெளியூரில் நடக்கும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியைக் காண தன் நண்பர்களுடன் காரிலே சென்றார். அப்பொழுது, மழையினால் நனைந்திருந்த சாலையிலே கார் டயர் சறுக்கி  விபத்திற்குள்ளானது. மிக மோசமான அவ்விபத்திலே என் தந்தையின் ஒரு நண்பர் இறந்து போனார், மற்றொருவருக்கு கைகால்கள் செயலிழந்து போயிற்று. என் தந்தையும் இறந்துவிட்டதாக கருதி சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டார். அப்பொழுது அவரை அடையாளம் காட்டும்படி, மிகுந்த அதிர்ச்சியோடும் துயரத்தோடும் அவருடைய பெற்றோர் அங்கு சென்றபோது, ஆழ்ந்த கோமாவிலிருந்து என் தந்தை சுயநினைவிற்கு திரும்பினார். அவர்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறியது.

நாம் “கிறிஸ்து அன்றி அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாய் இருந்தோம்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் 2ஆம் அதிகாரத்தில் நமக்கு நினைவூட்டுகிறார் (வச. 1). ஆனால், “தேவனோ இரக்கத்தில் ஐஸ்வரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாய் இருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார்” (வச. 4-5). இயேசு கிறிஸ்துவின் மூலம் மரணத்திலிருந்து நாம் உயிர்ப்பிக்கப்பட்டோம். அப்படியென்றால், ஒருவகையில் நம் அனைவருடைய வாழ்வும் பரம பிதாவிற்கு சொந்தமானதே. பாவத்தில் மரித்துப்போயிருந்த நமக்கு, தேவன் தம் அளவற்ற அன்பினால், தம்முடைய குமாரன் மூலம் நாம் ஜீவனையும் வாழ்வளிக்கும் நோக்கத்தையும் பெற்றுக்கொள்ள கிருபை அளித்துள்ளார்.

ஒரு சிறிய நெருப்பு

அது செப்டம்பர் மாதத்தின் ஓர் ஞாயிற்றுக்கிழமை இரவு. அநேகர் உறங்கிக்கொண்டிருந்த பொழுது, புட்டிங் தெருவிலுள்ள (Puding Lane) தாமஸ் ஃபாரினர் (Thomas Forriner) பேக்கரியில் சிறிய நெருப்பு பற்றியது. ஆனால் சீக்கிரத்தில் ஒவ்வொரு வீடாய் தீப்பற்றி முழு லண்டன் மாநகரமும் நெருப்பில் மூழ்கியது. 1666ஆம் ஆண்டின் மகா பெரிய நெருப்பில், எழுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்தனர்.
அத்தீ அப்பட்டணத்தின் ஐந்தில் நான்கு பங்கு பகுதியை அழித்துப்போட்டது. ஒரு சிறிய நெருப்பிலிருந்து எவ்வளவு பெரிய அழிவு!

இதைப்போலவே பலத்த அழிவை உண்டாக்கக்கூடிய வேறு ஒரு சிறிய நெருப்பைக் குறித்து வேதம் நம்மை எச்சரிக்கிறது. “அப்படியே, நாவானதும் சிறிய அவயமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!” (யாக். 3:5) என யாக்கோபு எழுதிய பொழுது, கட்டிடங்களை எண்ணி இதை அவர் எழுதவில்லை, மாறாக நம்முடைய வாழ்க்கையையும், உறவுகளையும் மனதில் வைத்தே இதை எழுதினார்.

ஆனால் நம்முடைய வார்த்தைகள் பிறரை எழுப்பி கட்டுகிறதாகவும் இருக்கலாம். “இனிய சொற்கள்
தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும் எலும்புகளுக்கு ஓளஷதமும்” என நீதிமொழிகள் 16:24 நமக்கு நினைப்பூட்டுகிறது. அப்போஸ்தலனாகிய பவுலும் “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” எனக் கூறுகிறார் (கொலோ. 4:6). உப்பானது நம்முடைய உணவிற்கு சுவையூட்டுவது போல, கிருபையான வார்த்தைகள் பிறரை பெலப்டுத்தி எழுப்பிக் கட்டுகிறது. 

துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கூறவும், விசுவாசத்தில் வளர விரும்புகிறவர்களை உற்சாகப் படுத்தவும் அல்லது இரட்சகரண்டை வரவேண்டியவர்களை வழிநடத்தவும் ஏற்ற வார்த்தைகளை நாம் உபயோகிக்க பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.

உருவப்படத்தை வரைதல்

இங்கிலாந்து தேசத்தின் லண்டன் மாநகரிலுள்ள தேசிய புகைப்படக்கூடத்தில் பல நாற்றாண்டுகளுக்குரிய உருவப்படங்கள் உள்ளன. வின்ஸ்டன் சர்ச்சிலின் (Winston Churchill) 166 உருவப்படங்களும், வில்லியம் ஷேக்ஸ்பியரின் (William Shakespeare) 94 உருவப்படங்களும், ஜார்ஜ் வாஷிங்டனின் (George Washington) 20 உருவப்படங்களும் உண்டு. இந்தப் பழைய உருவப் படங்களைப் பார்க்கும்பொழுது, ‘உண்மையாகவே இவர்களெல்லோரும் இப்படித்தான் இருந்தார்களா?’ என எண்ணத் தோன்றும்.

உதாரணத்திற்கு, ஸ்காட்லாந்து (Scotland) தேசபக்தர் வில்லியம் வாலஸின் (William Wallace கி. பி. 1270-1305) 8 உருவப்படங்கள் இங்கு உள்ளன. ஆனால் அவற்றின் நேர்த்தியை ஒப்பிட்டுப் பார்க்க அவரது வேறு புகைப்படங்கள் நம்மிடம் இல்லை. அப்படியிருக்க, அவ்வோவியர்கள் வாலஸ்சை துல்லியமாக வரைந்துள்ளார்களா இல்லையா என நமக்கு எப்படித் தெரியும்?

இயேசுவின் சாயலைப் பிரதிபலிக்கும் விஷயத்திலும் இதுதான் நடக்கிறது என்று கூறலாம். நம்மை அறியாமலேயே இயேசுவை விசுவாசிக்கிறவர்களாகிய நாம் இயேசுவை குறித்து ஒரு கருத்துப்பதிவை அல்லது இயேசுவை பற்றிய ஒரு உருவகத்தை பிறரிடம் ஏற்படுத்திவிடுகிறோம். இதை வர்ணங்களினால் அல்ல மாறாக நம்முடைய அணுகுமுறை, செய்கைகள் மற்றும் உறவுகளின் மூலமே தீட்டுகிறோம்.

ஆனால், இயேசுவின் இருதயத்தை அவ்வண்ணமே பிரதிபலிக்கும் ஓவியத்தைத் தீட்டுகிறோமா? இதுதான் அப்போஸ்தலனாகிய பவுலின் அக்கறையுள்ள கேள்வியும் கூட. “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” என அவர் எழுதியுள்ளார் (பிலி. 2:5). இயேசுவை மிகத் துல்லியமாக பிரதிபலிக்க விரும்பிய பவுல், அவரை பின்பற்றுகிறவர்களாகிய நாம் அனைவரும் இயேசுவின் தாழ்மையையும், தன்னலமற்ற தியாகத்தையும், இரக்கத்தையும் பிரதிபலிக்கும்படி அன்பாய் நம்மை தூண்டுகிறார்.

“ஒருவேளை தங்கள் வாழ்வில் சிலர் காணும் இயேசு நாமாக மாத்திரமே இருக்கக்கூடும்,” என ஒரு கூற்றுண்டு. “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (வச. 3) என்கிற வசனத்தின்படி நடப்போமானால் இயேசுவின் இருதயத்தையும், மனதையும் இவ்வுலகிற்கு அவ்வண்ணமே பிரதிபலிப்போம்.

முழுமையாய் நெருங்கிச் சேருதல்

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு கால்ஃப் (Golf) போட்டியைக் காணும்படி என்னுடைய நண்பர் என்னையும் தன்னோடு அழைத்துச் சென்றார். முதல் முறை என்பதால் அங்கு எதை எதிர்பார்ப்பது என்று கூடத் தெரியவில்லை. அங்கு வந்து சேர்ந்த பொழுது, சில பரிசுப்பொருட்கள், தகவல் அட்டை, கால்ஃப் மைதான வரைபடம் ஆகியவற்றை கொடுத்த பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவ்விளையாட்டின் 18வது நிலையில், முக்கிய பிரமுகர்கள் கண்டுகளிக்கும் கூடாரத்திற்கு அனுமதி கிடைத்தது. அங்கு எங்களுக்கு அமர இருக்கைகளும் இலவச உணவும் கிடைத்தது. நான் தனியாக வந்திருந்தால் இந்தக் கூடாரத்திற்கு வர எனக்கு அனுமதி கிடைத்திருக்காது. ஆனால் இப்பொழுது அது கிட்டியதற்கு காரணம் என் நண்பர். அவர் மூலம் தான் எனக்கு முழுமையான அனுமதி கிட்டியது.

எந்த உதவியுமின்றி நாம் விடப்பட்டிருந்தால், நாம் அனைவரும் பரிதாபத்திற்குரிய நிலையில் தேவனை விட்டு துண்டிக்கப்பட்டே இருந்திருப்போம். ஆனால், நம்முடைய தண்டனையை இயேசு ஏற்றுக்கொண்டதால், அவருடைய ஜீவனையே நமக்களித்து, தாம் தேவனிடம் கிட்டிச்சேர அனுமதி அளித்துள்ளார். “அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும்” (எபே. 3:10) என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியுள்ளார். கிறிஸ்து இயேசுவுக் குள்ளாக யூதனையும், கிரேக்கனையும் ஒன்றாக இணைத்த இந்த ஞானம், நாம் அனைவரும் பிதாவாகிய தேவனை கிட்டிச்சேர வழிவகுத்துள்ளது. “அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது” (வச. 12).

நாம் இயேசுவின் மீது விசுவாசம் வைக்கும் பொழுது, நம்மோடு ஐக்கியம் கொள்ளப் பிரியப்படும் தேவனிடம், அளவற்ற அன்பு செலுத்தும் தேவனிடம் கிட்டிச்சேர உதவும் ஒப்பற்ற நெருக்கத்தை நாம் பெற்றுக்கொள்ளுகிறோம்.

நாளைய தினத்தை இன்று பார்ப்பது

மேகங்களற்ற நீல நிற வானத்தை கூர்ந்து பார்ப்பது எனக்குப் பிடிக்கும். நம்முடைய சிருஷ்டிகரின் மகிமையான படைப்புகளில் ஓர் அழகிய பகுதி இந்த வானம். இது நம்முடைய சந்தோஷத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வானத்தைக் கண்டு விமான ஓட்டிகள் எவ்வளவாய் மகிழ்ந்திருப்பார்கள்! அவர்கள் பறப்பதற்கு ஏற்ற சிறந்த வான்வெளியை பல அடைமொழிகளைக் கொண்டு விவரிப்பார்கள். அதில் எனக்கு மிகவும் பிடித்தது, “நாளைய தினத்தை நீ இன்றே பார்ப்பது.”

“நாளைய தினத்தை இன்றே பார்ப்பது” என்பது நமது பார்வைக்கு அப்பாற்பட்டது. சொல்லப் போனால் இன்று நம்மை நோக்கி வரும் காரியங்களைக்கூட சில சமயங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே” என்று வேதாகமம் கூறுகிறது (யாக். 4:14).

ஆனால் வரையறைக்குட்பட்ட நம்முடைய பார்வை விரக்தியை உண்டாக்கத் தேவையில்லை. மாறாக நாம் மகிழ்ந்திருக்கலாம். ஏனெனில் நம்முடைய எதிர்காலத்தை முற்றும் காண்கிற தேவன் மேல் நாம் விசுவாசம் வைத்துள்ளோம். அதின் ஒவ்வொரு நாளிலும் நாம் எதிர்கொள்ள போகும் சவால்களையும் அதன் தேவைகளையும் அவர் அறிந்திருக்கிறபடியால், நாம் கலங்கத் தேவையில்லை. இதை அப்போஸ்தலனாகிய பவுல் நன்கு அறிந்துள்ளார். ஆகவேதான், “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்”
(2 கொரி. 5:6) என்று நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளினால் அவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார்.

இன்றைய தினத்தையும், நாம் காணாத எதிர்காலத்தையும் நம்பிக்கையோடு தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கும்பொழுது, நம் வாழ்வை எதிர்நோக்கி வரும் எக்காரியங்களைக் குறித்தும் நாம் கவலைப்படத் தேவையில்லை. நாம் தேவனோடு நடக்கிறோம். நமக்கு முன் இருப்பவைகளை அவர் அறிந்திருக்கிறார். அவற்றைக் கையாள அவர் பெலமுள்ளவராய், ஞானம் உள்ளவராய் இருக்கிறார்.

நான் அனைத்தையும் அறிவேன்

எங்களுடைய மகன் மற்றும் மருமகளுக்கு திடீரென ஒரு நெருக்கடியான நிலை ஏற்பட்டது. எங்கள் பேரன் கேமரன் (Cameron) நிமோனியா மற்றும் மூச்சுக் குழாய் வியாதியினால் அவதிப் பட்டுக்கொண்டிருந்ததால், அவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியிருந்தது. ஆகவே, அவர்களது மற்றொரு மகனாகிய ஐந்து வயது நாதனை (Nathan) பள்ளியிலிருந்து அழைத்து வரும்படி  கேட்டனர். மார்லீனுக்கும், எனக்கும் அவனை அழைத்து வருவதில் மிக்க மகிழ்ச்சி.

எங்களுடைய காரில் நாதன் ஏறியவுடன், மார்லீன் அவனைப் பார்த்து, “இன்று நாங்கள் உன்னை அழைத்துச் செல்ல வந்தது உனக்கு ஆச்சரியமளிக்கிறதா?” என்று கேட்டதற்கு, “இல்லை!” என பதில் கூறினான். ஏன் அவனுக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனக் கேட்டதற்கு, “ஏனென்றால் எனக்கு எல்லாம் தெரியும்!” எனக் கூறினான்.

ஒரு ஐந்து வயது சிறுவன் தனக்கு எல்லாம் தெரியும் எனக் கூறலாம். ஆனால் சற்று வயதான நமக்கு அப்படிக் கூறுவது முடியாத காரியம் எனத் தெரியும். சொல்லப்போனால் அநேக சமயங்களில் பதில்களைக் காட்டிலும் கேள்விகளே நமக்குள் அதிகம் எழும்புகிறது. எல்லாவற்றையும் குறித்து நாம் அறியாததால் எதற்கு, எப்படி, எப்பொழுது என்று வாழ்க்கையைக் குறித்து எண்ணிக்கொண்டிருக்கும் நாம் அநேகந்தரம் எல்லாம் அறிந்த தேவனை மறந்து விடுகிறோம்.

எல்லாவற்றையும் அறிந்த தேவன் நம்மை முற்றிலும் அறிந்தவராய் நம்முடைய உள்ளந்திரியங்களையும் அறிந்தவராய் இருக்கிறார் என்று சங்கீதம் 139:1, 3 கூறுகிறது. “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்,” என தாவீது கூறுகிறான். தேவன் நம்மை பரிபூரணமாய் நேசிக்கிறார். இன்று நாம் எதிர்கொள்ளும் அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஆகவே நம்முடைய சூழ்நிலைகளில் நமக்கு ஏற்ற உதவியை செய்திடுவார் என்கிற அறிவு நமக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கிறது.

நம்முடைய அறிவு எப்பொழுதும் ஒரு எல்லைக்குட்பட்டது. ஆனால் கர்த்தரை அறிவதே பிரதானமானது. அவரின் மீது நம்முடைய விசுவாசத்தை வைக்கலாம்.