லூயிஸ் காரோல் படைத்த (Alice in wonderland)) “அற்புததேசத்தில் ஆலிஸ்” எனும் கற்பனைக் கதையில் நாயகி ஆலிஸ் “என்றென்றும் என்றால் எதுவரையில்?” என்றதொரு கேள்வி எழுப்புவாள். அதற்கு அக்கதையில் வரும் வெள்ளை முயல், “சிலவேளைகளில் அது ஒரேயொரு வினாடியாகவும் இருக்கும்” என்று கூறும்.

என்னுடைய சகோதரன் டேவிட் திடீரென்று மரித்தபோது என் காலம் ஸ்தம்பித்ததாகவே உணர்ந்தேன். மரணத்திலிருந்து அவனுடைய நினைவுகூறலின் நாள்மட்டும், இழப்பும் துக்கவுணர்வும் அதிகரிக்கும் விதத்தில், நாட்கள் ஆமையைப் போல் நகர்ந்தன. ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகமாய் தோன்றியது.

மற்றுமொரு டேவிட் (தாவீது) இதே உணர்வுகளை தன் பாட்டினில் பதியவைக்கிறார். “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்? (சங். 13:1-2). இரண்டு வசனங்களிலே நான்கு தடவை அவர் ஆண்டவரை பார்த்து “எது வரைக்கும்?” என்று வினவுகிறார். சில சமயம், வாழ்க்கையில் நாம் படும் பாடுகளுக்கு முடிவே இல்லையா என்றுகூட தோன்றும்.

இந்த மனவேதனையின் நடுவில்தான் நம் பரம தந்தையின் சமூகமும் கரிசனையும் நம்மை தாங்குகிறது. தாவீது ராஜாவைப்போல் நாமும் நம்முடைய வேதனை மற்றும் இழப்புகளுடன், கர்த்தர் நம்மைவிட்டு விலகுவதில்லை, நம்மைக் கைவிடுவதில்லை (எபி. 13:5) எனும் வாக்குத்தத்தின்மேல் நம்பிக்கை வைத்து அவரை அணுகலாம். சங்கீதக்காரனும் இதை அறிந்திருந்ததினால், தன் புலம்பலின் பாடலை நம்பிக்கையின் வெற்றிமுழக்கமாக மாற்றுகிறார்: “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும் (சங். 13:5).

முடிவுக்கே வராது என்று தோன்றும் போராட்ட பாதைதனில் அவருடைய அளவில்லா அன்பு நம்மை சுமந்து செல்லும். அவருடைய இரட்சிப்பில் நாம் களிகூரலாம் (சங். 13:5).