எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆனி சிட்டாஸ்கட்டுரைகள்

இப்பொழுதே ஆரம்பிக்கலாம்

2017, பெப்ரவரி மாதம் என்னுடைய மூத்த சகோதரிக்கு புற்றுநோய் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்தது. உடனே நான் என் நண்பர்களிடம், “கரோலினுடன் நான் அதிக நேரம் செலவிடவேண்டும், இப்பொழுதிலிருந்தே ஆரம்பிக்கப் போகிறேன்” என்று சொன்னேன். நான் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப் படுவதாக சிலர் சொன்னார்கள். ஆனால், பத்து மாதங்களுக்குள் அவள் இறந்துபோனாள். அவளோடு நான் பல மணி நேரம் செலவிட்டிருந்தபோதிலும், நாம் ஒருவரை அதிகமாக நேசிக்கும்போது அவருடன் எவ்வளவுதான் நேரம் செலவிட்டாலும் நம் அன்பைப் பொழிவதற்கு நேரம் போதாது என்றே நினைக்கிறேன்.

ஆதிகால சபையிலிருந்த இயேசுவின் சீடர்களிடம், “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” என்று சொல்கிறார் அப்போஸ்தலனாகிய பேதுரு (1 பேது. 4:8). அவர்கள் உபத்திரவத்திற்கு ஆளாகியிருந்தார்கள். கிறிஸ்தவ குடும்பத்தின் சகோதர சகோதரிகளுடைய அன்பு முன்பைவிட அவர்களுக்கு அதிகமாக தேவைப்பட்டது. தேவன் தாமே தம்முடைய அன்பை அவர்களுடைய இருதயங்களில் ஊற்றியிருந்ததால், அதே அன்பை அவர்கள் மற்றவர்கள்மேல் காட்ட விரும்பினார்கள். ஜெபம், விருந்தோம்பல், அன்பும் உண்மையுமான பேச்சு போன்றவற்றின் மூலம் அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினார்கள். தேவன் கொடுத்த அன்பினாலே அவ்வாறு செய்ய விரும்பினார்கள். வசனங்கள் 9-11. தேவனுடைய தயவுள்ள நோக்கங்களுக்காக, தியாக மனப்பான்மையோடு ஒருவருக்கொருவர் சேவைசெய்கிற வரத்தை தேவன் அவர்களுக்குக் கொடுத்திருந்தார். அவருடைய கிருபையின்மூலம் அது சாத்தியமாகியிருந்தது. எனவே, “எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக” (வச. 11). இதுதான் தேவனுடைய வல்லமையான திட்டம், நம் மூலமாக அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிற திட்டம்.

நமக்கு மற்றவர்கள் தேவை, அவர்களுக்கு நாம் தேவை. அன்புகாட்டுவதற்கு தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற நேரத்தையும், வளங்களையும் நாம் பயன்படுத்துவோம். அதை இப்பொழுதே ஆரம்பிப்போம்.

ஓய்வாக இருக்கலாமா?

சிகிச்சைக்காக உடற்பயிற்சி நிபுணரைச் சந்தித்தார் டார்னெல். விபத்திலிருந்து சில மாதங்களுக்கு முன் குணமடைந்திருந்தார். எனவே, உடற்பயிற்சி நிபுணர் கொடுக்கும் பயிற்சிகளின்போது அதிகமாக வலிக்கும் என்பது சந்தேகமின்றி தெரிந்தது. பலநாட்களாக நீட்டி, மடக்காதிருந்த பகுதிகளை நிபுணர் நீட்டி, மடக்கிவிட்டு, “இப்போது ஓய்வு எடுங்கள்” என்று சொன்னார். அந்த அனுபவம் பற்றிச் சொல்லும்போது, குறைந்தபட்சம் ஐம்பது முறையாவது “சரி, இப்போது ஓய்வு எடுங்கள்” என்று நிபுணர் சொல்லியிருப்பாரென்று கூறினார். 

தன்னுடைய மொத்த வாழ்க்கைக்கும் அந்த வார்த்தைகள் பொருந்தக்கூடியவை என்று டார்னெல் கூறுகிறார். கவலைப்படுவதை விட்டுவிட்டு, தேவன் நல்லவர், உண்மையுள்ளவர் என்பதை உணரும்போது அவரால் ஓய்வு எடுக்க முடிந்ததாம்.

சிலுவை மரணம் நெருங்கியிருந்த நிலையில், தம்முடைய சீடர்கள் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வது அவசியமென இயேசு உணர்ந்தார். அவருடைய மரணத்திற்கு பிறகு சீடர்கள் பல உபத்திரவங்களையும் துயரங்களையும் சந்திக்கவேண்டியிருக்கும் என்று அறிந்து, அவர்களோடு வாசம்பண்ணவும், தாம் போதித்ததை அவர்களுக்கு நினைவூட்டவும் பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதாகச் சொல்லி, இயேசு அவர்களை ஊக்கப்படுத்தினார் (யோவா. 14:26). “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; ... உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக” என்றும் சொன்னார் (வச. 27).

நம் அனுதின வாழ்வில் நமக்கு இக்கட்டுகளை ஏற்படுத்துகிற விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால்  தேவனை அதிகமாக நம்பவேண்டும். அப்போது தம்முடைய ஆவியானவர் நமக்குள் வாசஞ்செய்வதையும், அவர் தம்முடைய சமாதானத்தை நமக்கு அருளுவதையும் அவர் நமக்கு நினைவூட்டுவார். தேவனிடமிருந்து நாம் பெலனைப் பெற்றுக்கொள்ளும்போது, அந்த உடற்பயிற்சி நிபுணர் சொன்னதுபோல “சரி, இப்போது நீ ஓய்வு எடுக்கலாம்” என்று அவர் சொல்வதை நாம் கேட்கலாம்.

நான் பார்க்க முடிந்ததெல்லாம்

ஒரு குளிர்ந்த நாளில், உறையும் பனியில், ஓர் ஏரிக்கரையில் பனியினால் மூடப்பட்ட கலங்கரை விளக்கின் அழகினை கிறிஸ்டா பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய அலைபேசியை எடுத்து இந்தக் காட்சியைப் படம் பிடிக்க முயற்சித்தபோது, அவளுடைய கண்ணாடி பனிப் படலத்தால் மூடப்பட்டது. அவளால் அதன் வழியே ஒன்றும் பார்க்க முடியவில்லை. எனவே அவள் தன்னுடைய கேமராவை அந்தக் கலங்கரை விளக்கிற்கு நேராகத் திருப்பி மூன்று படங்களை, வெவ்வேறு கோணங்களில் எடுத்தாள். பின்பு அவள் அந்தப் படங்களைப் பார்த்த போது தான் அவளுடைய கேமரா ''செல்பி" நிலையிலிருந்திருக்கின்றதை உணர்ந்தாள். அவள் சிரித்துக் கொண்டே, ''என்னுடைய கவனம் என்மீது, என்மீதேயிருந்திருக்கின்றது. நான் பார்க்க முடிந்ததெல்லாம் என்னையே" என்று கூறினாள். கிறிஸ்டாவின் படங்கள் என்னை அத்தகைய ஒரு தவறினைக் குறித்துச் சிந்திக்கத் தூண்டின. நாம் நம்மீதே கவனம் செலுத்தும் போது, தேவனுடைய திட்டத்தினைக் குறித்த பெரிய காட்சியைக் காணத் தவறிவிடுகின்றோம்.

இயேசுவின் உறவினனான யோவான் தன் மீது கவனம் செலுத்தும்படி தான் வரவில்லையென்பதை தெளிவாகத் தெரிந்து கொண்டான். ஆரம்பத்திலிருந்தே அவன் தன்னுடைய அழைப்பு, பிறரை தேவக்குமாரனான இயேசுவிடம் திருப்புவதேயென்பதை நன்கு கண்டறிந்து கொண்டார். இயேசுவும் அவருடைய சீடர்களும் தன்னிடம் வரக்கண்ட யோவான், ''இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" (யோவா. 1:29) எனத் தெரிவிக்கின்றார். அத்தோடு, "இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக நான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்க வந்தேன்" என்றார் (வச. 31). யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து, அநேகர் இயேசுவைப் பின்பற்றிச் செல்கின்றனர் எனத் தகவல் கொடுத்த போது, யோவான் அவர்களிடம், 'நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்... அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்" (3:28-30) என்று கூறினார்.

நம்முடைய வாழ்வின் முழுகவனமும் இயேசுவின் மீதும் அவரை முழுமனதோடும் அன்பு செய்வதிலேயுமே இருக்கட்டும்.

இவர் எப்படிப்பட்ட இரட்சகர்?

கடந்த ஆண்டில் என் நண்பர்களும் நானும் புற்றுநோயோடு போராடிக் கொண்டிருந்த மூன்று பெண்மணிகளின் சுகத்திற்காக ஜெபித்தோம். தேவன் இதைச் செய்ய வல்லமையுடையவர் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே தேவன் செயல்படுமாறு அனுதினமும் ஜெபித்துவந்தோம். கடந்த நாட்களில் தேவன் செயல்பட்டதைக் கண்டிருக்கின்றோம். எனவே அவ்வாறு மீண்டும் செய்வாரென விசுவாசிக்கிறோம். ஒவ்வொருவரும் அநேக நாட்கள் போராட்டத்திற்குப்பின், உண்மையிலேயே சுகம் பெற்றதாகத் தோன்றியது. நாங்கள் மகிழ்சியடைந்தோம். ஆனால், அவர்கள் மூவரும் சில நாட்களுக்குப் பின் மரித்துப் போயினர். எங்கள் மகிழ்ச்சியும் விழுந்துபோனது. சிலர் இதனை, “நித்திய சுகம்" எனக் கூறினர். ஒரு வகையில் அப்படித்தான். ஆனாலும் அந்த இழப்பு எங்களை வெகுவாகப் பாதித்தது. தேவன் அவர்களை குணப்படுத்த வேண்டுமென விரும்பினோம். ஆனால், எந்த அற்புதமும் நடைபெறாதது, ஏனென்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

சில ஜனங்கள் இயேசுவை அவர் செய்த அற்புதங்களுக்காகப் பின்பற்றினர். தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பின்பற்றினர் (யோவா. 6:2,26). சிலர் அவரை ஒரு தச்சனின் மகனாகப் பார்த்தனர் (மத். 13:55-58) வேறு சிலர் அவரை தங்களின் அரசியல் தலைவராக எதிர்பார்த்தனர் (லூக். 19:37-38) சிலர் அவரை சிறந்த போதகராகப் பார்த்தனர் (மத். 7:28-29) அவருடைய உபதேசம் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தபடியால் மற்றவர்கள் அவரைவிட்டுப் பின் வாங்கினர் (யோவா. 6:66).

நாம் எதிர்பார்க்கின்றவற்றை இயேசு இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆனாலும் அவர் நாம் நினைப்பதையும் விட மேலாகச் செய்கின்றவர். அவரே நித்திய வாழ்வைத் தருபவர் (யோவா. 6:47-48). அவர் நல்லவரும் ஞானமுள்ளவருமாயிருக்கிறார். அவர் நம்மை நேசிக்கின்றார், மன்னிக்கின்றார், நம்மருகில் இருக்கின்றார், நமக்கு ஆறுதலைத் தருகின்றார். நாம் அவரின் மீது சாய்ந்து இளைப்பாறி, தொடர்ந்து அவரைப் பின்பற்றுவோம்.

நம்பிக்கை எங்கே கிடைக்கும்

எலிசபெத் போதை மருந்துப் பழக்கத்துக்கு அடிமையாகி நீண்ட நாட்கள் அவஸ்தைப்பட்டாள். அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டபோது, அவள் மற்றவர்களுக்கு உதவ நினைத்தாள். சிறு குறிப்புகளை எழுதி, தன் பெயர் போடாமல், தன் ஊரில் வெவ்வேறு இடங்களில் வைத்துவிடுவாள். கார்களின் முன்புறம் சொருகி வைப்பதோடு, பூங்காக்களில் உள்ள கம்பங்களில் ஒட்டி வைப்பாள். முன்பு அவள் நம்பிக்கை தரும் வார்த்தைகளைத் தேடுவாள். அதனால் தன்னைப்போல் தேடும் மற்றவர்களுக்காக அவற்றை எழுதி வைக்கிறாள். அவள் எழுதிய குறிப்பு ஒன்று “அன்புடன், நம்பிக்கையை அனுப்புகிறேன்” என்ற வார்த்தைகளோடு முடிந்தது.

 

நம்பிக்கை, அன்பு – இதையே இயேசு தருகிறார். அவர் ஒவ்வொரு நாளும் தம் அன்பைத் தருவதோடு, நம்பிக்கையால் நம்மை பலப்படுத்துகிறார். அவரது அன்பு துளித்துளியாக அளந்து கொடுக்கப்படாமல், அவரது இருதயத்திலிருந்து பெருக்கெடுத்து நமது இருதயங்களில் ஊற்றப்படுகிறது. மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோமர் 5:5). நமது கஷ்டங்களின்மூலம் பொறுமையையும், நற்பண்புகளையும் நாம் பெற்றுக்கொள்ள அவர் விரும்புவதோடு, நமக்கு நம்பிக்கை மிகுந்த திருப்தியான வாழ்க்கையைத் தர விரும்புகிறார். நாம் அவரைவிட்டு தூரமாயிருந்தாலும், அவர் நம்மை நேசிக்கிறார் (வச. 6-8). 

 

நீங்கள் நம்பிக்கை தரும் அடையாளங்களைத் தேடுகிறீர்களா? அவருடனான உறவில் வளர, நம்மை அழைப்பதன்மூலம், கர்த்தர் நமக்கு நம்பிக்கையையும், அன்பையும் தருகிறார். நிறைவான வாழ்க்கை வேண்டும் என்ற நம் நம்பிக்கை, நம்மை எப்போதும் கைவிடாத அவர் அன்பில் வேரூன்றி இருக்கிறது.

சிலுவையின் வழியே

என்னுடன் பணிபுரியும் டாம் தன்னுடைய மேசையின் மீது 8’’க்கு12’’ அளவு கொண்ட கண்ணாடியினாலான சிலுவையொன்றறை வைத்திருக்கின்றார். அவனுடைய நண்பன் பில்லும் டாமைப் போன்று புற்று நோயிலிருந்து மீண்டவன். அவன் இந்தச் சிலுவையை, அதன் வழியே எல்லாவற்றையும் பார்க்க உதவியாயிருக்கும் எனக் கூறி, அதை டாமுக்குக் கொடுத்தான். அந்தக் கண்ணாடியினாலான சிலுவை அவனுக்கு தேவனுடைய அன்பையும், தேவன் அவனுக்கு வைத்திருக்கும் நல்ல நோக்கங்களையும் நினைவுபடுத்துவதாகக் கூறினான்.

இயேசுவின் விசுவாசிகள் அனைவருக்கும் தங்களுடைய கஷ்டமான நேரங்களில் இது ஒரு சவாலானத் திட்டமாக இருக்கின்றது. தேவனுடைய அன்பின் மீது நமது நோக்கத்தைச் செலுத்துவதைவிட நம்முடைய பிரச்சனைகளின் மீது நம் எண்ணங்களைச் செலுத்துவது யாவருக்கும் எளிதானது.

பவுல் அப்போஸ்தலனின் வாழ்வு சிலுவை வடிவிலான ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். அவர் துன்பப்படும் நேரங்களில் தான், “துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படவில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை”
(2 கொரி. 4:9) என்கின்றார். மேலும் “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது” (வச. 17-18) என்கின்றார்.

காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு என்பது நம்முடைய பிரச்சனைகளை குறைத்துக் கொண்டோம் என்பதல்ல. பவுல் பார்நெட் என்பவர் இப்பகுதியைக் குறித்து “தேவன் நமக்கு வைத்திருக்கும் உறுதியான நோக்கத்தின் மீதுள்ள நம்பிக்கையோடு வாழ வேண்டும் அல்லது நாம் அமைதலோடு ஏற்றுக்கொண்டு நம்முடைய வேதனையை நம்பிக்கை கலந்த வலியோடு வெளிப்படுத்த வேண்டும்” என விளக்குகின்றார்.

இயேசு அவருடைய வாழ்வையே நமக்காகத் தந்தார். அவருடைய அன்பு ஆழமும், தியாகமும் நிறைந்தது. நாம் நம் வாழ்க்கையை சிலுவையின் வழியாய் பார்க்கும் போது அவருடைய அன்பையும், உண்மையையும் காண முடியும். அவர் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையும் வளரும்.

நேரமெடுத்தல்

சமீபத்தில் அமெரிக்கா தேசத்திற்கு குடிபெயர்ந்த ரிமா என்ற சிரியாவைச் சேர்ந்த பெண்மணி, தன்னுடைய பயிற்சியாளரிடம் தனக்குத் தெரிந்த சிறிய ஆங்கிலம் மற்றும் சைகையின்மூலம் தான் வருத்தத்திலிருப்பதற்கான காரணத்தை விளக்கினாள். அவள் தான் செய்து வைத்திருந்த மாமிசம், பால்கட்டி, மற்றும் கீரைகள் அடங்கிய ரொட்டியை, ஒரு தட்டில் அழகாக அடுக்கி வைத்து எடுத்து வந்த போது, அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அருகிலுள்ள தேவாலயத்தின் ஜனங்கள் அநேகர் ரிமாவின் வீட்டிற்கு வருவதாயிருந்தது. எனினும் ஒரேயொரு மனிதன் அவள் வீட்டிற்கு வந்தார். அவரும் மிக வேகமாக உள்ளே வந்து, ஒரு பெட்டி நிறைய சாமான்களைக் கொடுத்து விட்டு அவசரமாக வெளியேறினார். அவர் வேகமாக ஒரு கடமையை முடித்தார். ஆனால் ரிமாவும், அவள் குடும்பத்தினரும் தனிமையில் சுற்றத்தாரின் அன்பிற்காகவும் அவர்கள் தங்களோடு நட்பினைப் பகிர்ந்து கொள்வார்களெனவும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஜனங்களுக்காக நேரத்தைச் செலவிட்டார் இயேசு. அவர் ஜனங்களோடு உணவருந்தினார். ஜனக்கூட்டத்திற்குக் கற்றுக் கொடுத்தார், போதனை செய்தார், தனி நபர்களோடு உறவாடினார். ஒரு மனிதனின் வீட்டிற்கு வருவதாகக் கூறினார். சகேயு வரி வசூலிப்பவன். அவன் ஒரு மரத்தின் மேலேறி இயேசுவைப் பார்க்க விரும்பினான். இயேசு அவனைப் பார்த்து ‘‘நீ சீக்கிரமாய் இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்க வேண்டும்” (லூக். 19:1-9) என்று கூறினார். அன்றைக்கே சகேயுவின் வாழ்க்கை முற்றிலும் மாறியது.

நமக்குள்ள வேலைப் பளுவின் மத்தியில் நாம் பிறருக்கு நேரம் செலவிட முடியாதவர்களாகி விடுகின்றோம். ஆனால் நாம் அதற்கென சற்று நேரம் ஒதுக்கும்போது, பிறரோடு சிறிது நேரத்தைச் செலவிடும் பாக்கியத்தைப் பெறுவோம். இதன் மூலம் தேவன் அவர்களோடு செயல்பட ஆரம்பிப்பார்.

மென்னோசை வார்த்தைகள்

ஒரு மனிதன் தன்னுடைய விமானத்தின் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் போது, அமைதியற்ற நிலையில் கால்களை ஆட்டிக் கொண்டேயிருந்தான். அவனுடைய கண்கள் விமானத்தின் ஜன்னலைப் பார்ப்பதும் திரும்புவதுமாக இருந்தன. பின்னர் அவன் தன் கண்களை மூடி, தன்னை அமைதிப்படுத்தும்படி பெருமூச்செடுத்தான். ஆனால், இவையொன்றும் அவனை அமைதிப்படுத்த முடியவில்லை. விமானம் மேலேறி பறந்தபோது, அவன் மெதுவாக முன்னும் பின்னுமாக அசைந்து கொண்டிருந்தான். அவனருகில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, தன் கரத்தை அவன் புயத்தின் மீது வைத்து, அவனுடைய மன அழுத்தத்திலிருந்து அவனைத் திருப்பும்படியாக, மெதுவாக அவனோடு உரையாட ஆரம்பித்தாள். ‘‘உன்னுடைய பெயரென்ன?” ‘‘நீ எங்கேயிருந்து வருகிறாய்?” “நமக்கு எல்லாம் சரியாகிவிடுவோம்”, “நீ நன்றாக இருக்கின்றாய்” என்பன அவளுடைய மென்மையான வார்த்தைகள். அவனுடைய நடத்தையால் அவள் எரிச்சலடைந்திருக்கலாம் அல்லது அவனை அவள் உதாசினப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவள் அவனைத் தொட்டு அவனோடு சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டாள். இது ஒரு சிறிய காரியம்தான். ஆனால் மூன்று மணி நேரம் கழித்து அவர்கள் இறங்கிய போது, எனக்கு உதவியதற்கு மிக்க நன்றி” என்று கூறினான்.

இத்தகைய இளகிய மனதுடைய செயல்களைப் பார்ப்பது அரிது. அநேகருக்கு இரக்கம் என்பது தானாக வருவதில்லை. நம்முடைய முதல் கவனம் எப்பொழுதும் நம்மைப் பற்றியேயிருக்கும். ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் ‘‘ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயுமிருங்கள்” என்கிறார். (எபே. 4:32) இக்குணம் ஒவ்வொருவரையும் சார்ந்தது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது தாம் பெற்றுக் கொண்ட புது வாழ்வில் ஆவியானவர் மாற்றங்களைக் கொண்டு வருகிறார். ஆவியானவர் நம்முடைய எண்ணங்களையும் நடத்தையையும் புதிப்பிக்கும் போது நாம் இரக்க குணத்தைப் பெற்றுக் கொள்கிறோம் (வச. 23).

இரக்கத்தின் தேவன் நம் இருதயங்களில் கிரியை செய்து, நம்முடைய மென்மையான, ஊக்குவிக்கும் வார்த்தைகளால் பிறர் வாழ்வைத் தொடும்படி நம்மில் செயல்படுகிறார்.

அது அணுகுமுறையில் உள்ளது

ரெஜினா தன் வேலையிலிருந்து வீட்டிற்கு ஊக்கமும், ஆற்றலும் இழந்து சோர்வுடன் திரும்பிக் கொண்டிருந்தாள். அந்த நாள் அவருடைய நண்பரொருவரிடமிருந்து வந்த ஒரு துயரச் செய்தியோடு ஆரம்பமானது. அவள் தன் சக பணியாளர்களோடு பங்கு பெற்ற கூட்டத்திலும் அச்செய்தி அவளை வட்டமிட்டுக் கொண்டேயிருக்க, அவளுடன் பணி புரிபவர்கள் அவளுடைய கருத்துக்களோடு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். ரெஜினா தேவனோடு பேச ஆரம்பித்தபோது, அவள் அந்நாளின் மன அழுத்தத்தையெல்லாம் தள்ளிவிட்டு சில மலர்களோடு, காப்பகத்தில் இருக்கும் தன் நண்பர் ஒருவரை எதிர்பாராத விதமாக பார்க்கச் சென்றாள். தேவன் எவ்வளவு நல்லவராக இருக்கிறார் என்று மரியா அவளோடு பகிர்ந்து கொண்டபோது ரெஜினாவின் ஆவியும் உற்சாகமடைந்தது மரியா “எனக்கு என்னுடைய சொந்த படுக்கை, நாற்காலி, ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு, செவிலியரின் உதவி எல்லாம் இருக்கிறது. தேவன் அவ்வப்போது என் அறைக்கு சில முக்கியஸ்தர்களைக் கொண்டு வருகிறார், ஏனெனில் நான் அவர்களை நேசிக்கிறேன், அவர் என்னை நேசிக்கிறார்.” என்று கூறினார்.

அணுகுமுறை, கண்ணோட்டம் என்று சொல்லும் போது, வாழ்க்கையில் 10 சதவீதம் தான் நமக்கு நடப்பவை, மீதி 90 சதவீதம் நாம் அதில் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதேயாகும” துன்ப காலங்களில் சிதறடிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களுடைய துன்பங்களை அவர்கள் எப்படிப் பார்க்க வேண்டுமென யாக்கோபு எழுதுகிறார்,

“நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது… அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக். 1:2-3).

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில், கடினமான சூழல்களில் தேவனை நம்பும்படி கற்றுக் கொள்கிறோம். நாம் நம்முடைய போராட்டங்களை, தேவன் நாம் விசுவாசத்தில் வளர்வதற்கான சந்தர்ப்பங்களாக்குகின்றார் என பார்க்கக் கற்றுக் கொள்ளும்போது, யாக்கோபு கூறிய மகிழ்ச்சி நிரம்பிய கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்வோம்.