இருளும் ஒளியும்
நான் நீதிமன்றத்தில் இருந்தபோது, உலகத்தினால் உடைக்கப்பட்ட பல பிரச்சனைகளை பார்த்திருக்கிறேன்: தாயிடமிருந்து பிரிந்த மகள்; அன்பைத் தொலைத்துவிட்டு கசப்பை மட்டுமே பகிரும் கணவன் மனைவி; பிள்ளைகளுடன் மீண்டும் இணைய மனைவியுடன் சமரசமாக ஏங்கும் கணவன். தேவனுடைய அன்பு மேம்பட அவர்களுக்கு மாற்றப்பட்ட இருதயங்களும், சுகமாகிய தழும்புகளும் தேவைப்படுகிறது.
சில நேரங்களில், நம்மைச் சுற்றியுள்ள உலகம் இருளையும், சோர்வையும் பற்றியிருக்கும்போது நாமும் நம்பிக்கையின்மையில் வாழ்கிறோம். இயேசு அந்த முறிவிற்காகவும் வலிக்காகவும் தான் மரித்தார் என்னும் உயரிய சத்தியத்தை அந்த தருணங்களில் பரிசுத்த ஆவியானவர் (யோவான் 14:17) நமக்கு விளங்கப்பண்ணுகிறார். இயேசு மனிதராய் இந்த உலகத்திற்கு வந்தபோது அவர் இருளிலே ஒளியைக் கொண்டுவந்தார் (1:4-5; 8:12). இயேசுவுக்கும் நிக்கொதேமுக்கும் நடைபெற்ற உரையாடலில் இதை நாம் காணமுடியும். நிக்கொதேமு இருளின் மறைவிலே இரகசியமாக வந்து ஒளியை உணர்ந்துகொண்டான் (3:1-2; 19:38-40).
இயேசு நிக்கொதேமுவுக்கு, “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று போதிக்கிறார் (3:16).
இயேசு ஒளியையும் அன்பையும் இவ்வுலகிற்கு கொண்டுவந்தாலும், பலர் பாவ இருளில் தொலைந்துவிட்டனர் (வச. 19-20). நாம் அவரைப் பின்பற்றினால், இருளை அழிக்கும் ஒளி நம்மிடம் இருக்கம். தேவன் நம்மை அவரின் அன்பின் கலங்கரை விளக்கமாக உருவாக்க நாம் நன்றியுடன் ஜெபிப்போம் (மத்தேயு 5:14-16).
பராக்கிரமசாலி
1940இல் ஜெர்மானியர்கள் ஊடுருவிய தருணத்தில், நேசிப்பதிலும், வேலைசெய்வதிலும், குடும்பத்தோடும் நண்பர்களோடும் நேரம் செலவழிப்பதிலும் தன் வாழ்க்கையை நடத்திய டயட் ஈமன், கூச்ச சுபாவம் கொண்ட ஒரு சாதாரணமான பெண். “உங்கள் வீட்டிற்கு ஒரு அபாயம் என்றால், ஒரு நெருப்புக் கோழி தன் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொள்வதுபோல செயல்படவேண்டும்” என்று டயட் பின் நாட்களில் எழுதுகிறாள். ஜெர்மானிய கலகக்காரர்களை எதிர்த்து நிற்கும் அழைப்பை தேவன் தனக்கு தந்துள்ளதாக எண்ணிய இவள், தன்னுடைய ஜீவனை பணயம் வைத்து, யூதர்களையும் பாதிக்கப்பட்ட மற்ற ஜனங்களையும் ஜெர்மானியர்களின் கண்ணில்படாத வகையில் ஒளித்துவைத்தாள். அடையாளம் தெரியாத இந்த இளம்பெண் தேவனுடைய யுத்தவீராங்கனையாய் மாறினாள்.
டயட்டைப் போன்றே சற்றும் பொருந்தாத சில கதாப்பாத்திரங்களை தேவன் பயன்படுத்திய பல சம்பவங்களை வேதத்தில் நாம் பார்க்கமுடியும். உதாரணத்திற்கு, தேவதூதன் கிதியோனை சந்தித்தபோது, “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” என்றான் (நியாய. 6:12). கிதியோன் பராக்கிரமசாலியாகவே தென்பட்டான். அப்போது அவன், இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த மீதியானியரின் கைக்கு தப்புவிக்கும்பொருட்டு, கோதுமையை இரகசியமாய் போரடித்துக்கொண்டிருந்தான் (வச. 1-6,11). அவன் இஸ்ரவேலில் மனாசே கோத்திரத்தில் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் தகப்பன் வீட்டிலுள்ள எல்லோரைக்காட்டிலும் சிறியவன் (வச. 15). அவன் தேவனுடைய அழைப்பை நம்பாமல், அதை உறுதிப்படுத்த பல அடையாளங்களை கேட்கிறான். ஆனாலும் தேவன் அவனைக் கொண்டு மீதியானியரை முறியடித்தார் (7ஆம் அதி. பார்க்க).
தேவன் கிதியோனை பராக்கிரமசாலியாகப் பார்த்தார். தேவன் கிதியோனோடு இருந்து அவனை ஊக்கப்படுத்தியதுபோல, அவர் நம்மை அவருடைய பிரியமான பிள்ளைகளாய் ஏற்று (எபேசியர் 5:1) சிறிய மற்றும் பெரிய வழிகளில் அவருக்காக வாழ்ந்து, ஊழியம் செய்யும்பொருட்டு நமக்குத் தேவையான அனைத்தையும் நமக்கு அருளுகிறார்.
புதிய அழைப்பு
ஒரு அடாவடி இளைஞர் கும்பலின் தலைவன் கேசியும் அவனுடைய கூட்டமும் வீடுகள், கார்கள், கடைகள் என்று கொள்ளையடிப்பதையும் மற்ற அடாவடி கும்பலுடன் சண்டையிடுவதையுமே வாடிக்கையாய் கொண்டிருந்தனர். அதின் விளைவாய் கேசி கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான். அங்கே சிறைக் கலவரத்தின்போது கத்திகளை விநியோகித்த நபராய் மாறினான்.
சில நாட்களுக்கு பின் தனி சிறையில் அடைக்கப்பட்டான். ஓரு நாள் அவனுடைய அறையில் கனவு காணும்போது, அதில் அவனுடைய வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களையும், இயேசு சிலுவையிலறையப்படுதலையும், அத்துடன் இயேசு இவனைப் பார்த்து “இதை உனக்காகவே செய்தேன்” என்று சொல்லுவதாகவும் கண்டான். கண்டமாத்திரத்தில், தரையில் முகங்குப்புற விழுந்து, தன் பாவத்தை அறிக்கையிட்டு அழ ஆரம்பித்தான். பின்பாக ஒருநாள் அதை அங்கிருந்த சிற்றாலய ஊழியரிடம் சொல்ல, அவர் அவனுக்கு இயேசுவைக் குறித்து சொல்லி, வேதாகமத்தை பரிசாகக் கொடுத்தார். “அது தான் என்னுடைய விசுவாச பயணத்தின் துவக்கம்” என்று கேசி சொல்லுகிறான். அவனுடைய தனிமையான சிறையிலிருந்து மீண்டும் பிரதான சிறைக்கு மாற்றப்பட்டான். அங்கே அவனுடைய விசுவாசத்தினிமித்தம் தவறாக நடத்தப்பட்டாலும், அங்குள்ள மற்ற கைதிகளுக்கு இயேசுவைக் குறித்து சொல்லுவதின் மூலம் தான் புதிய அழைப்பைப் பெற்றுக்கொண்டதாக மகிழ்ச்சியடைந்தான்.
தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய நிருபத்தில், வாழ்க்கையை மாற்றும் கிறிஸ்துவின் வல்லமையைக் குறித்து பேசுகிறார்: பாவ வாழ்க்கையிலிருந்த நம்மை தேவன் அழைத்து கிறிஸ்துவை பின்பற்றவும் அவருக்கே ஊழியம் செய்யும்படியாகவும் ஏற்படுத்துகிறார் (2 தீமோத்தேயு 1:9). அவரை நாம் விசுவாசித்து ஏற்றுக்கொண்டால், கிறிஸ்துவின் அன்பின் ஜீவனுள்ள சாட்சிகளாய் நாம் மாறுகிறோம். உபத்திரவத்தின் மத்தியிலும் சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார் (வச.8). கேசியைப் போலவே நம்முடைய புதிய அழைப்பின் ஜீவியத்தை வாழுவோம்.
புயலின் மத்தயில் நடத்துதல்
ஸ்காட்லாந்து மிஷ்னரி அலெக்ஸாண்டர் டஃப், 1830ஆம் ஆண்டு இந்தியாவிற்கு முதல் சுற்றுப்பயணம் வந்தபோது, தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட புயலினால் அவர் பயணம்செய்த கப்பல் சேதத்திற்குள்ளாக்கப்பட்டது. அவரும் அவரோடு சேர்ந்து கப்பலில் பயணித்த சகபயணிகளும் அருகில் இருந்த ஒரு சிறிய தீவில் கரையொதுங்கினர். கொஞ்ச நேரத்தில் அலெக்ஸாண்டர் டஃப்க்கு சொந்தமான வேதாகமத்தின் பிரதி ஒன்று கரையொதுங்கியதைக் கண்டெடுத்தனர். அது காய்ந்த பின், டஃப் சங்கீதம் 107ஐ எடுத்து வாசித்து, சகபயணிகளை தைரியப்படுத்தினார். கடைசியாக அவர் மீட்கப்பட்டு, மேலும் ஒரு கப்பற்சேதத்தை சந்தித்த பின்னரே இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்.
கர்த்தர் இஸ்ரவேலர்களை மீட்டுக்கொண்ட வழிகளைக் குறித்து சங்கீதம் 107 வரிசைப்படுத்துகிறது. டஃப்பும் அவருடைய சகபயணிகளும் சந்தேகமேயில்லாமல், “கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள் ; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்” (வச. 29-30) என்ற வார்த்தையில் ஆறுதலடைந்திருக்கவேண்டும். இஸ்ரவேலர்களைப் போல “கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து” (வச. 31) இவர்களும் நன்றி சொல்லியிருப்பர்.
சங்கீதம் 107க்கு இணையான ஒரு சம்பவத்தை புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கமுடியும் (மத்தேயு 8:23-27; மாற்கு 4:35-41). பெருங்காற்று அடிக்கும்போது இயேசுவும் அவருடைய சீஷர்களும் படகில் இருக்கின்றனர். சீஷர்கள் பயத்தில் நடுங்கினர். அவர்களோடு மாம்சத்தில் இருந்த ஆண்டவர் காற்றை அமர்த்துகிறார். நம்முடைய இரட்சகரும் வல்லமையுள்ள தேவனும் புயலின் மத்தியிலும் நம்முடைய அழுகையின் கூக்குரலைக் கேட்டு நம்மை தேற்றுவார் என்று நம்மை தைரியப்படுத்திக்கொள்ளலாம்!
தேவ கிருபையில் வளருதல்
பிரபல ஆங்கில பிரசங்கியார், சார்லஸ் ஸ்பர்ஜன் (1834-1892) தன்னுடைய வாழ்க்கையை “முழு மூச்சில்” வாழ்ந்துள்ளார். தன் 19ஆம் வயதில் போதகரானார். வெகுவிரைவிலேயே பெரிய நற்செய்திக் கூட்டத்தில் பிரசங்கித்தார். தன்னுடைய எல்லா பிரசங்கங்களையும் தானே தொகுத்து, அவைகளை 63 பதிப்புகளாய் வெளியிட்டார். அத்துடன் பல்வேறு விளக்கவுரைகள், ஜெபத்தைக் குறித்த புத்தகங்கள் மற்றும் பல படைப்புகளையும் கொடுத்துள்ளார். வாரத்திற்கு ஆறு புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருடைய ஒரு குறிப்பிட்ட பிரசங்கத்தில், “ஒன்றும் செய்யாமலிருப்பதே பாவத்திலும் பெரிய பாவம், அது பலரையும் பாதிக்கிறது... கொடூரமான செயலற்ற தன்மை! தேவனே எங்களை பாதுகாப்பீராக!” என்று எச்சரிக்கிறார்.
சார்லஸ் ஸ்பர்ஜன் புத்தி கூர்மையோடு வாழ்ந்திருக்கிறார். அப்படியென்றால், “அதிக ஜாக்கிரதையுள்ளவராய்” (1 பேதுரு 1:5) கிருபையில் வளர்ந்து தேவனுக்காய் வாழ்ந்திருக்கிறார் என்று அர்த்தம். நாம் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாயிருந்தால், “அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்... இச்சையடக்கத்தையும்... பொறுமையையும்... தேவபக்தியையும்” நம்மில் ஏற்படுத்தி கிறிஸ்துவைப் போல் வளரும் வாஞ்சையையும் அதற்கான வாய்ப்பையும் தேவன் ஏற்படுத்தித் தருகிறார்.
வாழ்க்கையின் நோக்கம், திறமைகள், ஆற்றல் அகியவற்றில் நாம் அனைவரும் ஒருவரிலிருந்து மற்றவர் வித்தியாசப்படுகிறோம் என்பதினால் ஸ்பர்ஜனைப் போல் நாம் இருக்கமுடியாது. ஆனால் இயேசு நமக்காய் செய்ததை புரிந்துகொள்ளும்போது ஜாக்கிரதையாகவும் உண்மையாகவும் வாழ நாம் தூண்டப்படுகிறோம். அவருக்காய் வாழவும் அவரையே சேவிக்கவும் தேவன் நமக்குக் கொடுத்த ஆதாரங்களினால் நாம் பெலப்படுத்தப்படுகிறோம். சிறியதோ, பெரியதோ, நம்முடைய முயற்சிகளை தேவன் தம்முடைய ஆவியானவராலே அதிகாரப்பூர்வமாய் அங்கீகரிக்கிறார்.
அனைத்து ஆறுதலின் தேவன்
டிம்மி ஒரு குட்டி பூனை, அதின் உரிமையாளர் அது குணமடைய இயலாதவாறு நோயுற்றிருப்பதாக நினைத்து அதை விலங்குள் காப்பகத்தில் விட்டார், அந்த பூனைக்குட்டி மீண்டும் ஆரோக்கியம் பெறும்படியாக கவனிக்கப்பட்டு, கால்நடை மருத்துவரால் தத்தெடுக்கப்பட்டது. பின்னர் அது முழுநேர காப்பகவாசியாக ஆனது, இப்போது தனது நாட்களை அறுவை சிகிச்சையிலிருந்து அல்லது ஒரு நோயிலிருந்து மீண்டுவரும் பூனைகள் மற்றும் நாய்களுக்கு "ஆறுதலளிக்கும்" வகையில் – தனது நாட்களை செலவிடுகிறது.
இந்த கதை, நம்முடைய அன்பான தேவன் நமக்காக என்ன செய்கிறார் என்பதற்கும், அதற்கு பதிலாக மற்றவர்களுக்காக நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கும் ஒரு சிறிய உதாரணம். நம்முடைய நோய்களிலும் போராட்டங்களிலும் அவர் நம்மைக் கவனித்துக்கொள்கிறார், மேலும் அவர் தம்முடைய பிரசன்னத்தினால் நம்மைத் ஆறுதல்படுத்துகிறார். 2 கொரிந்தியரில் அப்போஸ்தலனாகிய பவுல் நம் தேவனை “இரக்கத்தின் பிதா, சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவர்” என்று அழைக்கிறார் (1:3). நாம் ஊக்கம் இழக்கும்போது, மனச்சோர்வில் உள்ளபோது அல்லது தவறாக நடத்தப்படும்போது, அவர் நமக்காக இருக்கிறார். நாம் ஜெபத்தில் அவரிடம் திரும்பும்போது, அவர் “சகல உபத்திரவங்களிலேயும் அவரே நமக்கு ஆறுதல்செய்கிறவர்” (வச.. 4).
ஆனால் 4 வது வசனம் அங்கு முடியவில்லை. கடுமையான துன்பங்களை அனுபவித்த பவுல் தொடர்கிறார், "எந்தவொரு பிரச்சனையிலும் இருப்பவர்களை நாம் தேவனிடமிருந்து பெறும் ஆறுதலால் ஆறுதல்படுத்த முடியும்." நமது பிதா நம்மை ஆறுதல்படுத்துகிறார், அவருடைய ஆறுதலை நாம் அனுபவிக்கிறபோது, மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்க நாம் திராணியுள்ளவர்களாக்கப்டுகிறோம்.
நமக்காக துன்பப்பட்ட இரக்கமுள்ள இரட்சகர், நாம் அவதிப்படுகிற துன்பத்தை விட அதிகமாக நம்மை ஆறுதல்படுத்துகிறார் (வச.. 5). அவர் நம்முடைய வலியில் நமக்கு உதவுகிறார், மற்றவர்களுக்கும் அவ்வாறே செய்ய நம்மை தயார்படுத்துகிறார்.
தோட்டத்தில்
என் அப்பா பழைய பாமாலைகளைப் பாடுவதை விரும்பினார். அவருக்கு மிகவும் பிடித்தவற்றுள் ஒன்று "இன் த கார்டன் (தோட்டத்தில்)". சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது அடக்கத்தில் நாங்கள் அதைப் பாடினோம். அனுபல்லவி எளிதானது: "அவர் என்னுடன் நடக்கிறார், அவர் என்னுடன் பேசுகிறார், நான் அவருடையவன் என்று அவர் என்னிடம் கூறுகிறார், நாங்கள் அங்கே தங்கியிருக்கும்போது நாங்கள் பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சி வேறு யாரும் அறிந்திருக்கவில்லை."அந்த பாடல் என் அப்பாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது – அது எனக்கு கொடுத்தது போலவே.
யோவானின் நற்செய்தியின் 20 ஆம் அதிகாரத்தைப் படித்த பிறகு 1912-ன் வசந்த காலத்தில் இந்த பாமாலையை எழுதியதாக ஸ்தோத்திரப் பாடல் எழுத்தாளர் சி. ஆஸ்டின் மைல்ஸ் கூறுகிறார்.“அன்று நான் அதைப் படிக்கும்போது, நானும் அந்த காட்சியின் ஒரு பகுதியாகத் தெரிந்தேன். மரியாளின் வாழ்க்கையில் அந்த வியத்தகு தருணத்திற்கு அவள் தனது இறைவனுக்கு முன்பாக மண்டியிட்டு, ‘ரபூனி [போதகர்]’ என்று அழுத அந்த காட்சியின் மெளன சாட்சியாக மாறினேன்.
யோவான் 20-ல், மகதலேனா மரியாள் இயேசுவின் வெறுமையான கல்லறைக்கு அருகில் அழுதுகொண்டிருப்பதைக் காண்கிறோம். அவள் ஏன் அழுகிறாள் என்று கேட்ட ஒரு மனிதனை அங்கே சந்தித்தாள். அது தோட்டக்காரர் என்று நினைத்து, உயிர்த்தெழுந்த மீட்பருடன் பேசினார் - இயேசுவே! அவளுடைய துக்கம் மகிழ்ச்சியாக மாறியது, சீடர்களிடம், “நான் கர்த்தரைக் கண்டேன்!” என்று சொல்ல ஓடினாள். (வச. 18).
இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற உறுதி நமக்கும் இருக்கிறது! அவர் இப்போது பிதாவுடன் பரலோகத்தில் இருக்கிறார், ஆனால் அவர் நம்மை தனியாக விட்டுவிடவில்லை. கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு அவருடைய ஆவியானவர் அவர்களுக்குள் இருக்கிறார், அவர் மூலமாக அவர் நம்முடன் இருப்பதையும் நாம் “அவருடையவர்கள்” என்பதை அறிந்து கொள்வதிலும் நமக்கு உறுதியும் மகிழ்ச்சியும் இருக்கிறது,
என்னை கவனி!
என் தேவதை நடனத்தை பாருங்கள் பாட்டி! என்று என் மூன்று வயது பேத்தி மகிழ்ச்சியுடன் அழைத்தாள். முகத்தில் ஒரு பெரிய சிரிப்புடன் எங்கள் அறையின் முற்றத்தை சுற்றி அவள் ஓடினாள். அவளுடைய “நடனம்” புன்னகையைக் கொண்டு வந்தது; மற்றும் “அவள் நடனமாடவில்லை, ஓடுகிறாள்” என்ற அவளுடைய பெரிய சகோதரனுடைய கடினமான வார்த்தைகள், குடும்பத்துடன் விடுமுறையில் இருப்பதில் அவள் கொண்டிருந்த மகிழ்ச்சியைக் குறைக்கவில்லை.
முதல் குருத்தோலை ஞாயிறு என்பது உயர்வு மற்றும் தாழ்வின் நாள். இயேசு கழுதை மீதேறி எருசலேமுக்குச் சென்றபோது திரளான ஜனங்கள்: “கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்!” (மத்தேயு 21: 9) என்று உற்சாகமாக ஆர்ப்பரித்தார்கள். ஆயினும் கூட்டத்தில் இருந்த பலரும் மேசியா அவர்களை ரோமர்களிடமிருந்து விடுவிப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அதே வாரத்தில் அவர்கள் செய்த பாவங்களுக்காக மரிக்கவிருக்கும் இரட்சகரை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அந்த நாளின் பிற்பகுதியில் இயேசுவின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தி பிரதான ஆசாரியர்கள் கோபத்திலிருந்தபோதிலும் அத்தேவாலயத்திலிருந்த குழந்தைகள் “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என ஆர்ப்பரித்து தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினர் (வச.15). ஒருவேளை முற்றத்தை சுற்றி ஓடும்போது குதித்து பனை ஓலைகளை அசைக்கலாம். அவர்களால் அவரை ஆராதிக்காமல் இருக்க முடியவில்லை, இயேசு கோபமாக இருந்த தலைவர்களிடம், “குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் (உம்முடைய) துதி உண்டாகும்படி செய்தீர்” (வச. 16) என்றார். அவர்கள் இரட்சகருடைய பிரசன்னத்தில் இருந்தார்கள்.
அவர் யார் என்பதற்காக அவரைக் காணவும் இயேசு நம்மை அழைக்கிறார். சந்தோஷத்தில் நிரம்பி வழியும் குழந்தையைப்போல நாமும் செயல்படும்போது நிச்சயமாக அவர் பிரசன்னத்தில் மகிழ்ந்திருப்போம்.
ஒரு நெருக்கடி நிலை குறிகையை அனுப்புகிறது
அலாஸ்காவின் ஒரு மலைப்பிரதேசத்தில் குடியேறியவரின் குடிசையில் தீப்பிடித்தபோது, அமெரிக்காவின் குளிரான மாநிலத்தில் சில வசதிகளே இருந்தன. ஒரு விறைப்பான குளிர் காலத்தின் நடுவில், குடியேறியவருக்கு போதுமான தங்குமிடம் இல்லாமல் இருந்தது.. மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஒரு விமானம் பறந்து, பனியில் அவரால் முத்திரை குத்தப்பட்ட மற்றும் புகைக்கறியால் கருமையாக்க பட்ட பெரிய நெருக்கடி நிலை குறிகையை அவர்கள் உளவு பார்த்தபோது, அந்த நபர் இறுதியாக மீட்கப்பட்டார்.
சங்கீதக்காரர் தாவீது நிச்சயமாக மிகுந்த நெருக்கடியில் இருந்தார். பொறாமை கொண்ட சவுல் அவரைக் கொல்ல முயன்றார். எனவே அவர் காத் நகரத்திற்கு ஓடினார், அங்கு அவர் தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக பைத்தியக்காரனாக நடித்தார் (1 சாமு. 21ஐப் பார்க்கவும்). அந்த நிகழ்வுகளில் 34 சங்கீதம் வெளிவந்தது, அங்கு தாவீது தேவனிடம் ஜெபத்தில் கூப்பிட்டு சமாதானத்தைக் கண்டார் (வச. 4, 6). கர்த்தர் அவருடைய வேண்டுகோளைக் கேட்டு அவரை விடுவித்தார்.
நீங்கள் ஒரு அவநம்பிக்கையான சூழ்நிலையில் இருக்கிறீர்களா, உதவிக்காக அழுகிறீர்களா? இன்றும் நம்முடைய அவநம்பிக்கையான ஜெபங்களுக்கு தேவன் செவிசாய்த்து பதிலளிப்பார் என்பதில் உறுதியாக இருங்கள். தாவீதுக்கு செய்தது போலவே, அவர் நம்முடைய துயர அழைப்புகளை கவனித்து, நம்முடைய அச்சங்களை நீக்குகிறார் (வச. 4) - மேலும் சில சமயங்களில் “இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சிப்பார். (வச. 6). “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்.” (சங். 55:22) என்று வேதாகமம் நம்மை அழைக்கிறது. நம்முடைய கடினமான சூழ்நிலைகளை நாம் தேவனிடம் ஒப்படைக்கும்போது, அவர் நமக்குத் தேவையான உதவியை வழங்குவார் என்று நம்பலாம். அவருடைய திறமையான கைகளில் நாம் பாதுகாப்பாக இருப்போம்.