Archives: அக்டோபர் 2026

அதை சமப்படுத்து

இந்தியாவின் சில பகுதிகளில் உள்ள பதினேழாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பரங்கியர் என்று அழைக்கப்பட்டனர், இது மதம் மாறியவர்களை அவர்களின் போர்த்துகீசிய எஜமானர்களுடன் இணைத்து "கீழ் சாதி" என்றழைக்கும் இழிவான வார்த்தையாகும். ராபர்ட் டி நோபிலி தனது இத்தாலிய அந்தஸ்தைப் பயன்படுத்தி இந்தியக் கிறிஸ்தவர்களை "உயர் சாதியினர்" மத்தியில் அங்கீகாரம் பெற முயன்றார். அவர் தனது கறுப்பு நிற ஆசாரிய உடையை, ஒரு பூசாரியின் காவி நிற உடையாக மாற்றிக் கொண்டார், சரளமாகத் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் கற்றார், ஒரு பிராமண சமையல்காரரை வேலைக்கு அமர்த்தினார் மற்றும் இந்நாட்டவரைப் போல மர காலணிகள் அணிந்தார். ஆர்வத்துடன், பலர் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த "வெள்ளை சாமியாரின்" வார்த்தைகளைக் கேட்கத் தேடி வந்தனர்.

நியாயசாஸ்திரிகளும் பரிசேயர்களும் பங்கேற்ற ஒரு கலவையான கூட்டத்தில், இயேசு தம் சீடர்களையும் தம்மைப் பின்பற்றுபவர்களையும் தங்கள் தலைவர்களைப் போலிருக்க வேண்டாமென்று எச்சரித்தார் (வ.3). வரலாற்று ரீதியாக, இந்த தலைவர்கள் எல்லோரையும் விட தங்களைச் சிறந்தவர்களாகக் கருதினர். ஜனங்கள் தங்களைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வித்தியாசமாக உடையும் அணிந்தனர். ஆனால் இயேசு, “நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்; நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்" (வ.8) என்று கூறி சமதளத்தை ஏற்படுத்தினார். சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தினார். நாம் பெரும்பாலும் சமூக அந்தஸ்தை நம்மை அறியாமலேயே பின்பற்றுகிறோம். ஆனால் நமது பிறப்பு, கல்வி, செல்வம், பாலினம் அல்லது வயது காரணமாக நாம் கூறும் உயர்ந்த நிலை கிறிஸ்துவில் எடுபடாது. பவுல் எழுதுவது போல், “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்" (கலாத்தியர் 3:28). நமது பின்னணி நம் அடையாளத்தைத் தீர்மானிக்காது, கிறிஸ்துவே தீர்மானிக்கிறார். ஏனென்றால், பிலிப்பியர் 3:8-ல் நாம் வாசிக்கிறபடி, கிறிஸ்துவை அறிவதே நம்முடைய மிகப் பெரிய ஆதாயம். வேறு எதுவும் முக்கியமில்லை. 

 

பொறுமையில் படிப்பினைகள்

பாப் சலம் தனது மூக்கின் மூலம் (அல்லது ஒரு கரண்டியைத் தனது முகத்தில் இணைத்துக்கொண்டு) ஒரு வேர்க்கடலையை ‘பைக்’ சிகரத்தின் மேலே நகர்த்திய வேகச் சாதனையைப் படைத்துள்ளார். சுற்றுலாப் பயணிகளின் இடையூறு ஏற்படாமல் இருக்க, இரவில் உழைத்து ஏழு நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த வித்தையை முடிக்கும் நான்காவது நபர் பாப், அதாவது இன்னும் மூன்று பேர் இதைப் பொறுமையாகச் செய்திருக்கிறார்கள்

அவர்களின் பொறுமைக்கான தேவை சுயமாக ஏற்படுத்தப்பட்டது என்று நாம் கூறலாம், ஆனால் வாழ்க்கையில் பெரும்பாலும் அவ்வாறு இருக்காது. நமக்குப் பொறுமை வேண்டும். இது ஆவியின் கனியாகும் (கலாத்தியர் 5:22) மேலும் “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி” (யாக்கோபு 1:4) ஆக இதுவே அத்தியாவசியமான நற்பண்பு. சுற்றியுள்ள அனைவரும் முழு பீதியில் இருக்கும்போது பொறுமைசாலிகளோ அமைதி காப்பர் . அவர்களும் நிலைமை சீராக விரும்புவர், அது சீராகாவிடினும் அவர்களுக்குக் கவலையில்லை. விவேகமாய் செயல்பட ஞானத்திற்காகத் தேவனை நம்பி, அவர்கள் நிலையான போக்கில் பயணிப்பர் (வ. 5).

பொறுமையிலுள்ள பிரச்சனை என்னவென்றால், அதைக் கற்றுக்கொள்ள ஒரே ஒரு வழிதான் உண்டு. யாக்கோபு கூறுகிறார் “உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று” (வ. 3). இத்தகைய பரீட்சையானது பெரிய மற்றும் சிறிய வழிகளில் வருகிறது. விமான நிலையத்திலிருந்து இதை எழுதுகிறேன். எனது இரவு 11:00 மணி விமானம் 2:00 மணி வரை தாமதமானது, பின்னர் ரத்து செய்யப்பட்டது. ஒரு இரவு தூக்கம் இல்லாமல், நான் காபி குடித்துக்கொண்டிருக்கிறேன், எப்போதாவது வீட்டிற்கு வருவேன் என்று நம்புகிறேன். விமான நிலையத்தில் ஒரு நாள் முழுவதையும் தூக்கத்தில் கழிப்பது எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் என் அன்பான தகப்பன் எனக்குப் பொறுமையைக் கற்றுக்கொடுக்கிறார்.

இன்றைய நாளுக்கான எனது படிப்பினை முடிந்திட ஜெபிக்கிறேன், ஆனால் யார் அறிவார்? அடுத்த விமானத்திற்கான காத்திருப்புப் பட்டியலைச் சரிபார்க்கும் நேரம் இது. 

 

நம்பிக்கையின் வஸ்திரம்

ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவுளி துறை மாணவர்கள், தெற்கு குஜராத்தின் பாரம்பரிய ரோகன் கலையைப் பயன்படுத்தி, ஊக்கமான வாசகங்களைக் கொண்ட டீ-ஷர்ட்களை சுவாரஸ்யமாக வடிவமைத்திருந்தனர். இந்த கலைஞர்கள் எண்ணெய் மற்றும் காய்கறி சாயங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்துகின்றனர், மேலும் ஒரு தூரிகை மூலம் அவர்கள் விசித்திரமான வடிவங்களை வரைகிறார்கள். குணமாகுதலைக் கருப்பொருளாகக் கொண்டு, இந்த நவீன டி-ஷர்ட்களின் தொகுப்பு அந்த பண்டைய கலை வடிவத்தைக் குறிப்பாகக் கவலை, மன அழுத்தம் அல்லது மனசிதைவிற்கு உள்ளானவர்களுக்காக பயன்படுத்தினர். அவற்றை அணிந்தவர்கள் தங்கள் நம்பிக்கையின்மைக்கு மத்தியில் நம்பிக்கை பெறுவார்கள் என்றெண்ணினர்.

ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சிக்குப் பிறகு அவர்களது நிர்வாணத்தை மூடி முதலில் உடுத்துவித்ததின் மூலம் அவர்களின் நம்பிக்கையற்ற சூழ்நிலைக்குத் தேவனும் பதிலளித்தார். சர்ப்பத்தினால் தவறாக வழிநடத்தப்பட்ட அவர்கள், தடைசெய்யப்பட்ட பழத்தை புசிக்கத்தக்கதாக கண்டனர் (வ.6). விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியது. அது அவர்களின் கண்களைத் திறந்து, அவர்களின் பாவத்தை அவர்களுக்கு உணர்த்தியது. பயம், குற்ற உணர்வு மற்றும் அவமானம் போன்ற உணர்வுகளை முதன்முறையாக அனுபவித்ததால், அத்தி இலைகளின் ஆடைகளால் அவர்களின் நிர்வாணத்தை போதுமான அளவு அவர்களால் "மறைக்க" முடியவில்லை (வ.7). எனவே, தேவன் தம் கிருபையால் அவர்கள் அணிவதற்கு "தோல் உடைகளை" உண்டாக்கினார் (வ.21). அவர்களின் உடனடித் தேவையைச் சந்தித்தார்.

தேவன் நம் அனைவருக்கும் என்ன செய்தார் என்பதற்கு இது ஒரு அடையாளம். நம்முடைய பாவம் வெளிப்பட்டபோது, தேவன் கிருபையாக தம்முடைய குமாரனாகிய இயேசுவைத் தம்முடைய “இரட்சிப்பின் வஸ்திரங்களாலும்” அவருடைய “நீதியின் சால்வையை” கொண்டும் (ஏசாயா 61:10) நம்மை மூடிக்கொள்ளும்படி நம்மிடம் அனுப்பினார். பயம், துக்கம், குற்ற உணர்வு, அவமானம் அல்லது சீர்கேடு போன்ற உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளும்போது, தேவன் நமக்கு ஏற்கனவே செய்ததை நாம் நினைவில் கொள்வோம். அவருடைய தியாகத்தால் நாம் மூடப்பட்டுள்ளோம். எனவே, நாம் அவரில் வஸ்திரம் தரித்து பூரணமாக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிந்து நம்பிக்கை கொள்ளலாம்.

 

பின் இருக்கையில் வேதாகமங்கள்

ஆண்ட்ரூவின் கார் நிறுத்தப்பட்டது, காவலர்கள் கடந்து வந்தனர். அவர் முன்பு பலமுறை செய்ததுபோல இப்போதும், “தேவனே, நீர் பூமியிலிருந்தபோது குருடர்களைப் பார்க்கச் செய்தீர். இப்போது, தயவு செய்து இந்த பார்வையைக் குருடாக்கும்” என்று ஜெபித்தார். பாதுகாவலர்கள் காரைச் சோதனையிட்டனர், சாமான் பைகளிலிருந்த வேதாகமங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆண்ட்ரூ எல்லையைத் தாண்டி, வேதாகமத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள முடியாதவர்களிடம் அதனை எடுத்துச் சென்றார்.

ஆண்ட்ரூ வான் டெர் பிஜில், அல்லது சகோதரர் ஆண்ட்ரூ. கிறிஸ்தவத்தைச் சட்டவிரோதமாக்கிய நாடுகளுக்கு வேதத்தை எடுத்துச் செல்லவேண்டும் என்ற சாத்தியமற்றது போல் தோன்றிய பணிக்காகத் தேவன் அவரை அழைத்தபோது தேவனின் வல்லமையை நம்பியிருந்தார். “நான் மிகவும் சாதாரணமானவன்” என்று அவர் தனது குறுகிய கல்வியறிவு மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் குறிப்பிட்டார். “நான் செய்ததை, யார் வேண்டுமானாலும் செய்யலாம்” என்றவரது இன்றைய ஸ்தாபனம்தான் ஓபன் டோர்ஸ் இன்டர்நேஷனல், உலகம் முழுவதும் உபாத்திரவப்படும் இயேசுவின் விசுவாசிகளுக்கு ஊழியம் செய்கிறது.

யூதாவின் ஆளுநரான செருபாபேல், யூதர்களின் சிறையிருப்பிற்குப் பின், ஆலயத்தை மீண்டும் கட்டுவது சாத்தியமற்றதாக தோன்றியபோது, அவர் ஊக்கம் இழந்தார். ஆனால் தேவன் மனித பலத்தையோ பராக்கிரமத்தையோ நம்பாமல், தம்முடைய ஆவியின் மீது நம்பிக்கை வைக்கும்படி அவருக்கு நினைவூட்டினார் (சகரியா 4:6). சகரியா தீர்க்கதரிசிக்கு அருகாமையில் உள்ள ஒலிவ மரங்களிலிருந்து எண்ணெய் கொண்டு வரப்பட்ட விளக்குகளின் தரிசனத்தின் மூலம் அவர் அவரை ஊக்கப்படுத்தினார் (வ. 2-3). தொடர்ச்சியான எண்ணெய் விநியோகத்தின் காரணமாக விளக்குகள் எரிவது போல, செருபாபேலும் இஸ்ரவேலர்களும் தேவனின் தொடர்ச்சியான வல்லமையை நம்பி அவருடைய வேலையைச் செய்ய முடியும்.

நாம் தேவனைச் சார்ந்திருக்கும்போது, நாம் அவரை நம்பி, அவர் நாம் செய்யும்படி அழைப்பதைச் செய்வோம். 

 

நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு

மிகவும் சிரமப்பட்டு, மருத்துவ மாணவியான கிருபா, ஒரு கிராமத்தைச் சேர்ந்த சூம்பின விரல்களுடைய ஒரு மூதாட்டியை மருத்துவ முகாமுக்கு வரும்படி சம்மதிக்க வைத்தாள். அங்கு ஒரு மூத்த மருத்துவர் அவளைப் பார்த்து, சில மருந்துகளைக் கொடுத்தனுப்பினார். அவள் பின்னர் கிருபாவைத் தனியாக அழைத்து, “அவர்களுடைய குறைபாடுகள் மிகவும் கடுமையானவை, நாம் ஒன்றும் செய்ய முடியாது. மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முன் ஏதாவது செய்ய முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.

சீரடைவதற்கான நம்பிக்கை மருத்துவத்தில் எப்போதும் இல்லை என்ற கசப்பான உண்மையை கிருபா படித்துக்கொண்டாள். ஆனால் இந்த நம்பிக்கையின்மைக்கு மத்தியிலும் கூட, இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவகிருபையில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

ஆவிக்குரிய நோயின் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இஸ்ரவேல் இருந்தபோது, ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்தார். நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுவதால் இஸ்ரவேல் அழிக்கப்படும் என்றும், ஜனங்கள் சிறைப்பட்டுப்போவார்கள் என்றும் கூறினார் (வ.12). கிமு 722 இல் இஸ்ரவேல் ஜனங்கள் அசீரியாவுக்கு சிறைப்பட்டுப் போனபோது ஆமோஸின் தீர்க்கதரிசனம் நிறைவேறியது (2 இராஜாக்கள் 17:6). இருப்பினும், ஆமோஸ் அழிவை முன்னறிவித்தபோது, அவர் நம்பிக்கையையும் அளித்தார். “கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்” (வ.6) என்றார். எப்படி என்பதை விளக்க, “நீங்கள் தீமையை வெறுத்து நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்” (வ.15) என்றார். அவர்கள் இதைச் செய்தால், அவர்கள் பிழைப்பார்கள், தேவனின் பிரசன்னம் மற்றும் இரக்கத்தை அனுபவிப்பர் என்று ஆமோஸ் கூறினார் (வ.15-16).

ஆமோஸ் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்வது போல், நாமும் தேவனைச் சார்ந்து, அவரைத் தேடி, நன்மை செய்வோம், அதனால் நாமும் அவருடைய நன்மையை அனுபவிப்போம். நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து நன்மை செய்யும்போது, நம்முடைய மிகவும் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளைக் கூட அவர் அற்புதமாக மாற்றுவார் (ஆதியாகமம் 50:20). உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும், நினைவில் கொள்ளுங்கள்: தேவனில் இன்னும் நம்பிக்கை உண்டு.