Archives: ஆகஸ்ட் 2026

மனந்திரும்பும் இருதயம்

ஒரு நண்பர் தனது திருமண உறுதிமொழியை மீறினார். அவரே தனது குடும்பத்தை அழிப்பதைப் பார்ப்பது வேதனையாக இருந்தது. அவர் தனது மனைவியுடன் சமரசம் செய்ய முயன்றபோது, என்னிடம் ஆலோசனை கேட்டார். அவர் வார்த்தைகளில் அல்ல செயல்களில் காட்ட வேண்டுமென்றும்; தனது மனைவியை நேசிப்பதிலும் பாவத்தின் எந்த வடிவத்தையும் அகற்றுவதில் முனைப்புடன் இருக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன்.

கர்த்தருடன் செய்த உடன்படிக்கையை மீறி அந்நிய தேவர்களைப் பின்பற்றியவர்களுக்கு எரேமியா தீர்க்கதரிசி இதே போன்ற ஆலோசனை வழங்கினார். அவரிடம் திரும்புவது நல்ல துவக்கமாக இருந்தாலும், அது மட்டும் போதாது (எரேமியா 4:1). அவர்கள் சொல்லோடு அவர்கள் செயல்களையும் இசைவாகச் சீரமைக்க வேண்டும். அது அவர்களின் “அருவருப்பான விக்கிரகங்களை” அகற்றுவதைக் குறிக்கிறது (வ. 1). எரேமியா, அவர்கள் “உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும்” அர்ப்பணித்தால், தேவன் தேசங்களை ஆசீர்வதிப்பார் என்றார் (வ. 2). மக்கள் வெற்று வாக்குறுதிகளை அளிப்பதுதான் பிரச்சனை. அவர்களின் இருதயம் அதிலே இல்லை.

தேவனுக்கு வெறும் வார்த்தைகள் வேண்டாம்; அவருக்கு நம் இருதயங்கள் வேண்டும். இயேசு கூறியது போல், “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” (மத்தேயு 12:34). அதனால்தான், எரேமியா தனக்குச் செவிகொடுப்பவர்களை “நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்” (எரேமியா 4:3) என்று ஊக்கப்படுத்துகிறார்.

கவலைப்படத்தக்கதாக, பலரைப் போலவே, எனது நண்பரும் சரியான வேதாகம அறிவுரைகளுக்குச் செவிசாய்க்கவில்லை, அதன் விளைவாக அவரது திருமண வாழ்வை இழந்தார். நாம் பாவம் செய்யும்போது, அதை ஒப்புக்கொண்டு அதிலிருந்து திரும்ப வேண்டும். தேவனுக்கு வெற்று வாக்குறுதிகள் வேண்டாம்; அவருடன் உண்மையிலேயே இசைந்திருக்கும் ஒரு வாழ்க்கையை விரும்புகிறார். 

 

தேவனுடைய தட்டில் வைத்துவிடுங்கள்

பல ஆண்டுகளாக, ஒரு தாய் வியாதிப்பட்டிருந்த தனது வாலிப மகளுக்கு மருத்துவ ரீதியாக உதவி, நல்ல ஆலோசனை மற்றும் சிறந்த மருந்துகளைப் பெற்றுத் தந்து, அவளுக்காக ஜெபித்துக் கொண்டுமிருந்தாள். மகளுடைய சரீரத்தின் ஏற்ற தாழ்வான நிலையற்ற தன்மை, அம்மாவின் இதயத்தை நாளுக்கு நாள் கணமூட்டியது. அடிக்கடி சோகத்தால் சோர்வடைந்து, தனக்கும் பராமரிப்பு வேண்டும் என்பதை உணர்ந்தாள். ஒரு நண்பர் அவளது கவலைகளையும், தன்னால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களையும் சிறிய காகிதத் துண்டுகளில் எழுதி, “தேவனுடைய தட்டில்” வைத்து அவளது படுக்கையில் வைக்குமாறு பரிந்துரைத்தார். இந்த எளிய நடைமுறை அனைத்து மன அழுத்தத்தையும் அகற்றவில்லை, ஆனால் அந்தத் தட்டைப் பார்க்கும்போது அவளுக்கு அந்த கவலைகள் தேவனுடைய தட்டில் இருப்பதை நினைவூட்டுகிறது, அவை அவளுடையது அல்ல.

ஒரு விதத்தில், தாவீதின் பல சங்கீதங்கள் அவனுடைய உபத்திரவங்களைப் பட்டியலிட்டு, அவற்றை ‘தேவனுடைய தட்டில்’ வைப்பதற்கான வழியாக இருந்தன (சங்கீதம் 55:1, 16-17). அவரது மகன் அப்சலோமின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியானது இங்கே விவரிக்கப்பட்டிருக்குமானால், தாவீதின் “நெருங்கிய நண்பன்” அகித்தோப்பேலும் உண்மையில் அவருக்குத் துரோகம் செய்து அவரைக் கொல்லும் சதித்திட்டத்தில் ஈடுபட்டான் (2 சாமுவேல் 15-16). எனவே “அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் (தாவீது) கூக்குரலிட்டார்” தேவன் அவருடைய ஜெபத்தைக் கேட்டார் (சங்கீதம் 55:1-2, 16-17). அவர் “கர்த்தர்மேல் பாரத்தைவைத்துவிட” தெரிந்துகொண்டார் மற்றும் அவரது பராமரிப்பை அனுபவித்தார் (வ. 22).

கவலைகளும் பயங்களும் நம் அனைவரையும் பாதிக்கின்றன என்பதை நாம் உண்மையாக ஒப்புக் கொள்ளலாம். தாவீதைப் போன்ற எண்ணங்கள் நமக்கும் இருக்கலாம்: “ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்” (வ. 6). தேவன் அருகில் இருக்கிறார், சூழ்நிலைகளை மாற்றும் ஆற்றல் உள்ளவர் அவரே. அனைத்தையும் அவரது தட்டில் வையுங்கள்.

 

நான்கு வார்த்தைகளில் வாழ்க்கை

ஜேம்ஸ் இந்நெல் பேக்கர், ஜே. ஐ. பேக்கர் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார். 2020 இல் தனது தொண்ணூற்றுநான்காவது பிறந்தநாளுக்கு ஐந்து நாட்களே இருந்த நிலையில் மரித்தார். அறிஞரும் எழுத்தாளருமான அவருடைய சிறந்த புத்தகமான, நோயிங் காட், வெளியிடப்பட்டு 15 இலட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளன. வேதாகமத்தின் அதிகாரம் மற்றும் சீடர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் மிகவும் தேர்ச்சிபெற்ற பேக்கர், எல்லா இடங்களிலும் உள்ள கிறிஸ்துவின் விசுவாசிகளை இயேசுவுக்காக வாழ்வதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். அவரது மரண தருவாயில், சபைக்கான அவரது இறுதி வார்த்தைகளைக் கேட்டனர்; பேக்கர் கூறிய ஒரு வரி, வெறும் நான்கு வார்த்தைகள் மட்டுமே: “கிறிஸ்துவை எல்லா வழிகளிலும் மகிமைப்படுத்துங்கள்”.

அந்த வார்த்தைகள் அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன, அவரது வியத்தகு மனமாற்றத்திற்குப் பிறகு, அவருக்கு நியமிக்கப்பட்ட பணியை உண்மையுடன் செய்யத் தொடங்கினார் மேலும் அதன் விளைவுகளைத் தேவனிடம் விட்டுவிட்டார். முழு புதிய ஏற்பாட்டிலும் ரோமர் புத்தகத்தில் காணப்படும் பவுலின் வார்த்தைகள் மிகவும் இறையியல் ரீதியாக நிரம்பியவையாகும். மேலும் பேக்கர், அப்போஸ்தலன் எழுதியதை போலவே, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு” (15:6 ) என்று கிட்டத்தட்ட இவரும் சுருக்கமாகக் கூறுகிறார்.

பவுலின் வாழ்க்கை நமக்கு ஒரு உதாரணம். நாம் பல வழிகளில் தேவனை மகிமைப்படுத்தலாம் (கனப்படுத்தலாம்), அதில் ஒன்று நமக்கு முன் வைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதன் மூலமும் அதன் முடிவுகளைத் தேவனின் மாறாத கரங்களில் விட்டுவிடுவதும் ஆகும். புத்தகங்களை எழுதுவதோ அல்லது மிஷனரிகளாக செல்வதோ அல்லது சிறுவர்களுக்குப் பாடம் கற்பிப்பதோ அல்லது வயதான பெற்றோரைப் பராமரிப்பதோ, எதுவாயினும் ஒரே நோக்கம்: கிறிஸ்துவை எல்லா வழிகளிலும் மகிமைப்படுத்துங்கள். நாம் ஜெபித்து, வேதத்தை வாசிக்கும்போது அர்ப்பணிப்புள்ள கீழ்ப்படிதலுடன் வாழவும், நாம் சொல்கிற, செய்கிற எல்லாவற்றிலும் இயேசுவைக் கனம்பண்ணும் வகையில் நம்முடைய அன்றாட வாழ்க்கையைத் தொடர தேவன் நமக்கு உதவுகிறார். 

 

பிறர் மீதுண்டாக்கும் தாக்கம்

எங்கள் பள்ளிக் காப்பாளரான பென்ஜி எங்களோடு மதிய உணவு சாப்பிட வருவதற்குத் தாமதமாகும் என்றறிந்த எனது இறையியல் பேராசிரியரான டாக்டர் லீ, அமைதியாக அவருக்காக ஒரு தட்டில் உணவை எடுத்து வைத்தார். நானும் எனது வகுப்புத் தோழர்களும் பேசிக்கொண்டிருக்கும்போது, டாக்டர் லீ அவருக்காக ஒரு தட்டில் அரிசிச் சாதத்தின் கடைசி பிடியையும் அமைதியாக எடுத்து வைத்தார், அதன்மீது சிறிது துருவிய தேங்காயைச் சுவையான சட்டினியாகச் சேர்த்தார். ஒரு சிறந்த இறையியலாளர் ஒருவரின் பல அன்பான செயல்களில் இதுவும் ஒன்று, மேலும் டாக்டர் லீ தேவன் மீது கொண்டிருந்த உண்மைத்தன்மை என் ஆசிரியர் என்மீது ஏற்படுத்திய தாக்கமும், காயுவும் தனது காலத்தில் ஏற்படுத்திய தாக்கமும், நாம் மற்றவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கான ஆற்றல் வாய்ந்த நினைவூட்டல்கள், இதனைப் பயன்படுத்தி தேவன் பிறரை கிறிஸ்துவிடமாய் திருப்பலாம். நாம் தேவனுடன் உண்மையாக நடக்கும்போது, பிற விசுவாசிகளும் அவருடன் உண்மையாக நடக்க உதவும் வகையில் வாழ்வோம், செயல்படுவோம். வழிந்தோடுவதாகவே இதனை நான் கருதுகிறேன். இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் என் மீது ஏற்படுத்திய ஆழமான தாக்கம் அப்படியே இருக்கிறது.

அப்போஸ்தலன் யோவானுக்கும் ஒரு அன்பான நண்பர் இருந்தார், அவர் பல விசுவாசிகளின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். தேவனுக்கும் வேதவாக்கியங்களுக்கும் உண்மையுள்ளவர், தொடர்ந்து “சத்தியத்தின்படி” (3 யோவான் 1:3) நடப்பவர் என்று அவர்கள் காயுவை குறித்தே பேசினர். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் அந்நியரான பிரசங்கிகள் அரதேசிகளாய் இருந்தாலும் அவர்களை காயு உபசரித்தார் (வ.5). இதன் விளைவாக, யோவான் அவரிடம், “அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சிசொன்னார்கள்” (வ. 6) என்றார். தேவன்மீதும் இயேசுவின் மற்ற விசுவாசிகள் மீதுமான காயுவின் உண்மைத்தன்மை, நற்செய்தியை மேலும் பரவிட உதவியது. என் ஆசிரியர் என்மீது ஏற்படுத்திய தாக்கமும், காயுவும் அவரது காலத்தில் ஏற்படுத்திய தாக்கமும், நாம் மற்றவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கான ஆற்றல் வாய்ந்த அடையாளங்கள். நாம் தேவனுடன் உண்மையாக நடக்கையில், பிற விசுவாசிகளும் அவருடன் உண்மையாக நடக்க உதவும் வகையில் வாழ்வோம், செயல்படுவோம். 

 

குழப்பத்தின் மத்தியில் அமைதி

ஏறக்குறைய ஒரு வருடம் தேடியும் மதுவுக்கு வேலை கிடைக்காதபோது, நிச்சயமற்ற எதிர்காலத்தைப் பற்றிய பயமுறுத்தும் எண்ணங்கள் அவள் மனதை மூடிமறைத்தன. இந்த நேரத்தில் மக்கள் அவளிடம் சொன்ன அன்பற்ற வார்த்தைகளால் அவள் தூக்கத்தையும் வாழ வேண்டும் என்ற ஆர்வத்தையும் கூட இழந்தாள். ஒரு நாள், சூரிய ஒளிக்கதிர் போல, ஒரு வேதாகம வசனம் அவளுடைய நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்தது. அவள் அதை ஒரு அட்டையில் வைத்தாள், அவள் அதைச் சத்தமாகப் படிக்கும்போதெல்லாம், அவளுடைய விசுவாசம் வலுவடைந்தது, அவளுடைய பயம் விலகி அவள் நிம்மதியாக இருந்தாள்.

ஏசாயா 26, அமைதியான மனதைப் பெறுவதற்கான நடைமுறை யோசனைகளை வழங்குகிறது. முதலில், நம்மைக் காக்கும் தேவன் மீது விசுவாசம் வைப்பது (வ.2-3). அவரை நம்புவதுடன், நம் மனதையும் எண்ணங்களையும் தேவன் மீது உறுதியாக நிலைநிறுத்த வேண்டும் (வ.3). நாம் அவரை நம்பி, நம் வாழ்க்கையை அர்ப்பணிக்கும்போது, அவர் நம் மனதைக் காத்து, நமக்கு “பூரண சமாதானத்தை” (வ.3) தருவதாக வாக்களிக்கிறார். இந்த “பூரண சமாதானம்” என்பது மனசாட்சியில் அமைதி, குற்ற உணர்விலிருந்து அமைதி, பதட்டத்திலிருந்து அமைதி அல்லது நாம் கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலைகளில் அமைதி ஆகியவை அடங்கும். நாம் நம்பும் ஒருவர் "நித்திய கன்மலையாயிருக்கிறார்" (வ.4) என்பதே நமது நிச்சயமாகும். நம்முடைய சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும், அவருடைய சுபாவமும் அன்பும் மாறுவதில்லை. நாம் நிச்சயமற்ற தருணங்களினூடே செல்லும்போது, நம் மனம் கவலை மற்றும் பதட்டமான எண்ணங்களுடன் போராடக்கூடும். ஆனால், நம் பாடுகளைத் தேவனிடம் கொண்டு சென்று, நம் மனதை அவர் மீது நிலைநிறுத்தி, அவரது அற்புதமான வாக்குறுதிகளால் நம் எண்ணங்களை நிரப்பினால், மதுவைப் போல, வாழ்க்கையின் கொந்தளிப்புக்கு மத்தியிலும் நாம் அவருடைய சமாதானத்தை அனுபவிக்க முடியும். நாம் தேவனை நம்பி, நமது மன உளைச்சலை அவரிடம் ஒப்படைத்தால், அவர் தனது "பூரண சமாதானத்தால்" நம் மனதைச் சாந்தப்படுத்துகிறார், மேலும் நம் பயம் நீங்கும்படி செய்கிறார். நிச்சயமற்றதைப் பற்றிக் கவலைப்படுவதை விட, கைவிடாத இயேசுவை நம்புவோம்.