Archives: ஜூன் 2025

இப்போது இது வெறுமையாயிருக்கிறது

எனது சகோதரர்களும் எனது குடும்பத்தினரும், நாங்கள் சிறுவயது முதல் வாழ்ந்து வந்த எங்கள் வீட்டிலிருந்த பெற்றோரின் பொருட்களை இடமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டோம். அன்றைய நாளின் மத்தியானத்தில், கடைசியாய் பொருட்களை அவ்வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வருமுன்பு, இனி அந்த வீட்டிற்கு நாங்கள் போகப்போவதில்லை என்பதை அறிந்து, அவ்வீட்டின் பின்புற வராந்தாவில் நின்று நாங்கள் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் அம்மா என் பக்கம் திரும்பி, “இப்போது இது வெறுமையாயிருக்கிறது” என்று என்னிடம் சொன்னபோது, எனக்கு கண்ணீர் வந்தது. 54 வருடங்கள் நாங்கள் வாழ்ந்த அந்த வீடு தற்போது வெறுமையாயிருக்கிறது. அதைக் குறித்து என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.  
எரேமியாவின் புலம்பல்களின் முதல் வசனத்தோடு என் இதயத்தின் வலி எதிரொலிக்கிறது: “ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!” (1:1). “அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம்” (வச. 5) எருசலேம் வெறுமையாய் அமர்ந்திருக்கிறது. அதனுடைய ஜனங்கள் மனந்திரும்ப மறுத்து தேவனுக்கு விரோதமாய் கலகம்பண்ண நினைத்ததால், தேவன் அதின் குடிகளை சிறையிருப்பிற்கு அனுப்பினார் (வச. 18). அனால் என்னுடைய பெற்றோர், பாவத்தினிமித்தம் வீட்டை காலிசெய்யவில்லை. ஆனால் ஆதாமின் பாவத்தினிமித்தம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் பெலவீனத்திற்கு நேராய் கடந்துசெல்லுகிறான். நமக்கும் வயதாகும்போது, நம்மால் பராமரிக்க முடியாத வீட்டிற்குள் நாம் தனிமையாய் வாழமுடியாது.  
ஆனால் எங்களுடைய அந்த அழகான வீட்டில் நாங்கள் வாழ்ந்த அந்த நினைவுகளுக்காய் நான் நன்றிசெலுத்துகிறேன். வேதனை என்பது அன்பின் விலை. எங்கள் பெற்றோரின் வீட்டை மட்டுமல்ல; எங்கள் பெற்றோரையும் சீக்கிரத்தில் நான் இழக்க நேரிடும். அப்போதும் நான் அழுவேன். இந்த வேதனையான பிரிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்தையும் சீரமைக்கும்படிக்கு இயேசுவின் வருகையை எதிர்நோக்குகிறேன். அவர் மீது என் நம்பிக்கை இருக்கிறது.  

விரும்பி கீழ்ப்படிதல்

அந்த இளம்பெண்ணின் முகம் கோபத்தையும் அவமானத்தையும் பிரதிபலித்தது. 2022 குளிர்கால ஒலிம்பிக்கின் பனிச்சறுக்கு விளையாட்டில் அவள் பெற்ற வெற்றி இணையற்றது. பல தங்கப் பதக்கத்தை அவள் வென்றிருக்கிறாள். ஆனால் தடைசெய்யப்பட்ட ஒரு போதை வஸ்தை அவள் எடுத்திருக்கிறாள் என்று மருத்துவ பரிசோதனை நிரூபித்தது. அதிக எதிர்பார்ப்பும் மக்களுடைய கண்டனங்களின் அழுத்தமும் தாங்க முடியாத அவள், தொடர்ந்த அவளுடைய விளையாட்டு பயணத்தில் பலமுறை தடுமாற்றம் கண்டு விழுந்திருக்கிறாள். அந்த மறைவான குற்றத்திற்கு முன்பு அவள் தன்னுடைய விளையாட்டில் சுதந்தரமாகவும் உத்வேகத்துடனும் விளையாடினாள். ஆனால் அவளுடைய இந்த விதி மீறல், அவளுடைய கனவுகளை நொறுக்கியது.  
மனுஷீகத்தின் ஆரம்ப நாட்களில், மனிதனுடைய சுயசித்தத்தை செயல்படுத்துகிற வேளையில் கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தை தேவன் வெளிப்படுத்தினார். உடைக்கப்படுகிற அனுபவமும் மரணமும் பாவத்தின் விளைவு என்பதினால், ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமை பாவத்தின் பாதிப்புகளை முழு மனுஷீகத்திற்கும் கொண்டுவந்தது (ஆதியாகமம் 3:16-19). ஆனால் அச்சம்பவம் அப்படி முடிந்திருக்கவேண்டியதில்லை. தேவன் அவர்களிடம், “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்” (2:16-17) என்று கட்டளையிடுகிறார். அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு, அவர்கள் தேவர்கள் போலாகலாம் என்று எண்ணி, தடைசெய்யப்பட்ட நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை அவர்கள் புசிக்கின்றனர் (3:5; 2:17). அதினிமித்தம் மனுஷீகம் பாவம், அவமானம் மற்றும் மரணம் ஆகியவைகளுக்கு உட்படவேண்டியதாயிற்று.  
தேவன் நமக்கு சுயசித்தத்தையும், அநேக காரியங்களை அனுபவிக்கும் அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார் (யோவான் 10:10). நாம் நன்மையை அனுபவிக்கவேண்டும் என்று நம் மீதான அவருடைய அன்பினிமித்தம் அவருக்கு கீழ்படிய நமக்கு அழைப்புக் கொடுக்கிறார். நாம் கீழ்ப்படிதலை தெரிந்துகொள்ளவும், இலச்சை இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை சுதந்தரித்துக்கொள்ளவும் அவர் நமக்கு உதவிசெய்வாராக.  

தேவனுடைய தோட்டம்

என் வீட்டின் கதவுக்கு வெளியில், அழகை நினைவுகூரும் விதத்திலும் வாழ்க்கையின் சொற்பத்தன்மையை நினைவுபடுத்தும் விதத்திலும் சில காரியங்கள் இருக்கிறது. கடந்த வசந்த காலத்தில், என் மனைவி நிலவு மலர்ச் செடிகளை அங்கே நட்டார். அதில் முழு நிலவை ஒத்த பெரிய வட்டமான வெள்ளை பூக்கள் பூப்பதால் அச்செடிக்கு அவ்வாறு பெயரிடப்பட்டது. அதில் பூக்கும் ஒவ்வொரு பூவும் இரவில் பூத்து, காலையில் சூரிய ஒளி அதின் மீது பட்ட மாத்திரத்தில் வாடிவிடும். மீண்டும் பூக்காது. ஆனால் அந்த செடியானது தொடர்ந்து பூக்களை உற்பத்திசெய்துகொண்டேயிருக்கிறது. அதின் பூக்கள் ஒவ்வொரு நாள் மாலையையும் அலங்கரிக்கிறது. ஒவ்வொரு நாளும் அப்பூக்களை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதின் அழகை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.  
தற்காலிகமாய் உயிர்வாழும் இந்த பூக்கள் ஒரு வேதாகம சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. ஏசாயா தீர்;க்கதரிசியின் வார்த்தைகளை இங்ஙனம் பேதுரு நினைவுகூருகிறார்: “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது” (1 பேதுரு 1:23-25). ஆனாலும் தேவன் அவருடைய வாக்குத்தத்தங்களை நிச்சயமாய் நிறைவேற்றுவார் என்று அவர் உறுதிகூறுகிறார் (வச. 25).  
இந்த தோட்டத்தில் பூத்த பூவைப் போன்று மனுஷனுடைய ஆயுசுநாட்களும் சொற்பமானவைகள். ஆனாலும் மனுஷனுடைய அந்த சொற்ப ஜீவியத்திலும் ஓர் அழகை நாம் பார்;க்கமுடிகிறது. இயேசுவின் நற்செய்தியின் மூலம், நாம் கடவுளுடன் ஒரு புதிய ஆரம்பத்தை உருவாக்குகிறோம், அவருடைய அன்பான பிரசன்னத்தில், நித்திய வாழ்க்கையின் வாக்குறுதியை நம்புகிறோம். நம்முடைய ஜீவியம் சொற்பமாயிருந்தபோதிலும் அவருக்கு நாம் துதி ஏறெடுப்போம்.

விசுவாச அடிகள்

மழைக்காடு ஒன்றின் மிக உயரமான இடத்திலிருந்து கம்பியில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கி பயணிக்க திட்டமிட்டு நான் புறப்பட தயாரானபோது எனக்குள் பயம் பரவியது. நான் அதற்கான மேடையில் இருந்து குதிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, அசம்பாவிதங்கள் நடந்துவிடுமோ என்ற என்னுடைய அச்சம் அதிகரித்தது. ஆனால் நான் முழு தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு அதின் கயிற்று பிடிமானத்தை விடுவித்தேன். காட்டின் உச்சியில் இருந்து கீழே விழுந்து, பசுமையான மரங்கள் வழியாக நான் பயணித்தேன். காற்று என் தலைமுடியை வேகமாக வருடியது. என் கவலைகள் மெதுவாக மறைந்தன. காற்றின் புவியீர்ப்பு விசை என்னை இழுத்துச்சென்ற திசை வழியாக நான் நகர்ந்தபோது, அடுத்து நிறுத்தம் வந்துவிட்டது என்பதை என்னால் தெளிவாக பார்க்கமுடிந்தது. நான் பாதுகாப்பாக வந்துசேர்ந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன்.  
அந்த கயிற்றின் மூலம் நான் ஏறெடுத்த அந்த அபாயகரமான பயணமானது, தேவன் நம்மை வழிநடத்திக் கொண்டுபோகும் புதிய சவால்களை எனக்கு நினைவுபடுத்தியது. நம்முடைய குழப்பமான சூழ்நிலைகளில் நாம் நம்முடைய “சுயபுத்தியின்மேல் சாயாமல்” தேவன் மீது நம்பிக்கை வைக்கும்படிக்கு வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது (நீதிமொழிகள் 3:5). நம்முடைய சிந்தை பயத்தினாலும் சந்தேகத்தினால் நிறைந்திருக்கும்போது, நம்முடைய பாதைகள் தெளிவில்லாமலும், உடைக்கப்பட்டதாயும் தெரியும். ஆனால் நாம் நம்முடைய வழிகளை தேவனிடத்தில் ஒப்புவிக்கும் உறுதியான தீர்மானத்தை எடுக்கும்போது, “அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (வச. 6). ஜெபத்திலும் வேத வாசிப்பிலும் நாம் நேரம் செலவழிக்கும்போது, விசுவாச அடிகளை எடுக்க நாம் உறுதிப்படுத்தப்படுகிறோம்.  
நாம் தேவனை பற்றிக்கொண்டு, நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் நம்மை வழிநடத்த அனுமதிக்கும்போது வாழ்க்கையின் சவால்களில் சுதந்திரத்தையும் அமைதியையும் காணலாம். 

நம் அடைக்கலப் பட்டணம்

ஓய்வு பெற்ற ஆசிரியை டெபி ஸ்டீபன்ஸ் ப்ரோடர், முடிந்தவரை மரங்களை நடுவதற்கு மற்றவர்களை ஊக்கப்படுத்தினார். அதற்கு காரணம்? வெயிலின் உஷ்ணம். தட்பவெப்ப நிலை சார்ந்த காரணங்களை வைத்து பார்க்கும்போது, அமெரிக்காவில் பெரும்பாலானோரின் இறப்புக்கு உஷ்ணமே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. “நான் மரங்களை நடுவதிலிருந்து துவங்குகிறேன்” என்று அந்த பிரச்சனைக்கு அவர் தீர்வளிக்கிறார். சமுதாயத்தை வெயிலின் உஷ்ணத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு பெரிய தீர்வு மரங்களே. “இது சமுதாயத்தை அழகாக்கும் முயற்சியல்ல; மாறாக, வாழ்வா சாவா என்னும் போராட்டம்” என்று அவர் சொல்லுகிறார்.  
நிழல் என்பது வெறும் புத்துணர்வூட்டக்கூடிய காரியம் மட்டுமல்ல; அது உயிரைக் காப்பாற்றக்கூடியது என்பதை 121ஆம் சங்கீதத்தை எழுதிய சங்கீதக்காரன் அறிந்திருந்தான். மத்திய கிழக்கில், சூரிய ஒளியின் ஆபத்து அதிகமாயிருக்கும். “பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை” (வச. 6) என்று தேவனுடைய பாதுகாப்பை விவரிக்கும் சங்கீதக்காரன், தேவனே நம்முடைய ஆபத்துக்காலத்தின் அடைக்கப்பட்டணம் என்பதை இந்த ஒப்புமையின் மூலம் விவரிக்கிறார்.  
இந்த வேதவாக்கியம், கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு வலியோ வேதனையோ இல்லை என்று சொல்லவில்லை. “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு” (யோவான் 16:33) என்றே இயேசு சொல்லுகிறார். ஆனால் நிழல் என்ற இந்த உருவகத்தின் மூலம், நம்முடைய பாதையில் குறுக்கிடுவது எதுவாக இருப்பினும் தேவன் நம்மை அதிலிருந்து பாதுகாக்கிறார் என்பதை உறுதுபடுத்துகிறது (சங்கீதம் 121:7-8). அந்த இடத்தில் அவரை நம்புவதின் மூலமும், அவருடைய அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்கமுடியாது என்று அறிவதின் மூலமும் நாம் இளைப்பாறுதலை அடையமுடியும் (யோவான் 10:28; ரோமர் 8:39).