Archives: ஏப்ரல் 2025

வாடகைக்கு நண்பர்

உலகத்தில் வாழும் பலருக்கு, வாழ்க்கை என்பது தனிமையான ஒன்றாய் மாறிவிடுகிறது. 1990லிருந்து நண்பர்கள் இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளில் 20 சதவீதம் பேர் தனிமையில் வாழுகிறார்கள். ஆனால் ஜப்பான் தேசத்தில், சில வயதானவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்லுகின்றனர். அங்கு அவர்களுக்கு சிநேகிதர்கள் உருவாகின்றனர்.  
இந்த தனிமை தொற்றுநோய்க்கு தொழில்முனைவோர் ஒரு “தீர்வை” கொண்டுவந்துள்ளனர். அது தான் வாடகைக்கு நண்பர். சில மணி நேரங்களுக்கு அவர்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டால் அவர்கள் உங்களை ஒரு ஓட்டலிலோ அல்லது விருந்துக்கோ சந்தித்து பேசி பழகுவார்கள். அப்படிப்பட்ட ஒரு சிநேகிதியிடம், உங்களின் வாடிக்கையாளர் யார் என்று கேட்டபோது, “நண்பர்களை உருவாக்கக்கூட நேரமில்லாமல், நீண்டநேரம் வேலை செய்யும் 30லிருந்து 40 வயதுக்குட்பட்ட நடுத்தர வயதுடையவர்கள்” என்று பதிலளித்தாள்.  
பிரசங்கி 4ஆம் அதிகாரம், பிள்ளையும் சகோதரனுமில்லாமல் ஒண்டியாயிருக்கும் ஒரு நபரைக் குறித்து விவரிக்கிறது. அவனுடைய பிரயாசத்திற்கு முடிவில்லை, ஆனாலும் அவனுடைய ஐசுவரியத்தில் அவன் திருப்தியடைகிறதில்லை (வச. 8). “யாருக்காகப் பிரயாசப்படுகிறேன்?” என்று சரியான கேள்வி எழுப்பப்படுகிறது. நல்ல சிநேகிதர்களை அவன் தனக்கென தெரிந்துகொண்டால், அவனுடைய பணிசுமை இலகுவாகவும், இக்கட்டில் அவனுக்கு துணையாகவும் இருக்கும் (வச. 9-12). இறுதியாக, சிநேகிதரில்லாத வெற்றியும் மாயையே (வச. 8) என்று முடிக்கிறார். 
முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது (வச. 12) என்று பிரசங்கி சொல்லுகிறான். ஆனால் அதை அவ்வளவு சீக்கிரத்தில் நெய்யவும் முடியாது. உண்மையான நண்பர்களை வாடகைக்கு எடுக்க முடியாது என்பதால், அவர்களை உருவாக்குவதற்கு தேவையான நேரத்தை முதலீடு செய்வோம். தேவனை நமது மூன்றாவது இழையாகக் கொண்டு, நம்மை இறுக்கமாக பிணைப்போம்

எதிர்கால விசுவாசம்

சாரா தன்னுடைய பதினான்காம் வயதில் தன்னுடைய தாயை இழந்தாள். அவளும் அவளுடன் பிறந்தவர்களும், தங்கள் வீட்டை இழந்து நிற்கதியாய் நின்றனர். சில காலங்களுக்கு பிறகு, சாரா தன்னுடைய எதிர்கால சந்ததியருக்கு தலைமுறை தலைமுறையாய் இருக்கும்பொருட்டு சொத்துக்களை சேகரிக்கத் துவங்கினாள். அவள் மிகவும் கடினமாய் பிரயாசப்பட்டு தங்கள் குடும்பத்தினர் தங்கும்பொருட்டு நேர்த்தியான ஒரு சொந்த வீட்டை வாங்கினாள்.  
எதிர்கால சந்ததியினருக்காக ஒரு வீட்டில் முதலீடு செய்வது என்பது, நீங்கள் பார்த்திராத எதிர்காலத்திற்கு செய்யும் ஒரு முதலீடாகும். எருசலேம் பாபிலோனியர்களால் கைப்பற்றப்படுவதற்கு முன்பதாக தேவன் எரேமியா தீர்க்கதரிசியை ஒரு நிலத்தை கிரயப்படுத்தும்படிக்கு சொல்லுகிறார் (எரேமியா 32:6-12). தேவன் கொடுத்த இந்த கட்டளை ஏரேமியாவுக்கு சரியானதாகத் தோன்றவில்லை. ஏனென்றால் அனைத்து சொத்துக்களும் எதிரிகளால் விரைவில் கைப்பற்றப்படப் போகிறது.  
ஆனால் தேவன் எரேமியாவுக்கு “நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்” (வச. 42) என்று கர்த்தர் சொன்னார். தீர்க்கதரிசியின் நிலத்தை கிரயப்படுத்தும் இந்த செயலானது, தன் ஜனத்திற்கு தேவன் அவர்களுடைய தேசத்தை மீண்டும் சொந்தமாகக் கொடுப்பதற்கு அடையாளமாக்கப்பட்டுள்ளது. பயங்கரமான அழிவிற்கு பின்னரும், மீண்டும் அவர்களுக்கு இளைப்பாறுதலைக் கொடுப்பதாகவும், சொந்த நிலங்களும் வீடுகளும் வாங்கப்படும் என்றும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 43-44).  
தேவனுடைய வார்த்தையில் நாம் இன்று நம்பிக்கை வைத்து, நம்முடைய விசுவாசத்தில் முதலீடு செய்யத் துவங்கலாம். பூமியில் நம்முடைய சூழ்நிலை எல்லாவகையிலும் மறுசீரமைக்கப்படுதலை நாம் ஒருவேளை சாட்சியிடாமல் இருக்கலாம். ஆனால் தேவன் கோணலான அனைத்தையும் ஒரு நாள் நேராக்குவார் என்று உறுதியாய் நம்பலாம்.  

துதிகளை பிரஸ்தாபம்பண்ணுதல்

 
எங்கள் சபை அதின் முதல் கட்டிடத்தை கட்டியபோது, கட்டிடத்தின் உட்புற அலங்காரம் முடிவடைவதற்கு முன்பு, சுவர்களிலும் (கட்டிடத்தின் சட்டத்தை ஆதரிக்கும் உலர்வாலுக்குப் பின்னால் உள்ள செங்குத்து விட்டங்கள்) மற்றும் கான்கிரீட் தளங்களிலும் மக்கள் நன்றி தெரிவிக்கும் வாக்கியங்களை எழுதினார்கள். அந்த சட்டங்களை விலக்கிப் பார்த்தால் அவைகள் நன்றாய் தெரியும். நிறைய வேத வசனங்கள், மற்றும் “நீர் மிகவும் நல்லவர்” என்பது போன்ற துதி வாக்கியங்களும் ஜெபங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. “சவால்களுக்கு மத்தியில் தேவன் எங்களுக்கு எவ்வளவு நல்லவராய் இருந்தார் என்பதை அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக நாங்கள் அந்த சாட்சியத்தை விட்டுச்சென்றோம்” என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.  
தேவன் நமக்கு செய்த நன்மைகளை நாம் நினைவுகூர்ந்து அதை மற்றவர்களுக்கும் அறிவிக்க வேண்டும். ஏசாயா தீர்க்கதரிசி, “கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும்... கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்” (ஏசாயா 63:7) என்று சொல்லுகிறார். மேலும் “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” (வச. 9) என்று சரித்திரத்தில் தன் ஜனத்தின் மீதான தேவனுடைய அன்பை அவர் தெரியப்படுத்துகிறார். அந்த அதிகாரத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது, இஸ்ரவேலர்கள் இன்னும் நெருக்கத்தில் இருப்பதையும், தேவன் அவர்களுக்காக இடைபடவேண்டும் என்ற தீர்க்கதரிசியின் எதிர்பார்ப்பையும் நாம் காணமுடியும்.  
இக்கட்டான தருணங்களில் தேவன் நமக்கு காண்பித்த இரக்கத்தை நினைவுகூரலாம். சவாலான வாழ்க்கைத் தருணங்களை நாம் சந்திக்கக்கூடும். ஆனால் அவர் இரக்கங்களுக்கு முடிவில்லை. அவர் நமக்கு செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து நன்றியுள்ள இருதயத்தோடு அவரை நோக்கிப் பார்க்கும்போது, அவர் நம்முடைய துதிகளுக்குப் பாத்திரர் என்னும் உண்மையை நாம் அறிந்துகொள்ளக்கூடும்.  

சிறு துண்டைக் காட்டிலும் அதிகமானது

நாமெல்லாரும் ஒரு புதிய இடத்திற்கு போகும்போது, பழைய இடத்தின் ஞாபகங்களில் நம்மில் ஒரு பகுதியை விட்டுச் செல்வது இயல்பு. ஆனால் அதற்கு நேர்மாறாக, அண்டார்டிகாவில் உள்ள வில்லாஸ் லாஸ் எஸ்ட்ரெல்லாஸ் என்ற குளிர் வெறிச்சோடிய இடத்தில் நீண்டகாலமாக வசிப்பவராக மாற, உங்களிடமிருந்து ஒரு பகுதியை விட்டுச் செல்வது மிகவும் அவசியம். அருகில் உள்ள மருத்துவமனை 625 மைல்கள் தொலைவில் இருப்பதால், ஒரு நபர் தனது அப்பென்டிக்ஸ் குடல் வெடித்தால் அதிகமான பாதிப்பிற்குள்ளாகவேண்டியிருக்கும். எனவே ஒவ்வொரு குடிமகனும் அங்கு செல்வதற்கு முன் முதலில் குடல் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். 
ஆச்சரியமாயிருக்கிறதல்லவா? ஆனால் தேவனுடைய இராஜ்யத்தின் குடிமக்களாய் மாறுவதற்கு இது பெரிய ஆச்சரியமல்ல. ஏனென்றால், ஜனங்கள் தங்கள் சொந்த வழியில் தேவனை பின்பற்ற முயற்சிப்பதால் தேவனுடைய சீஷராவது என்றால் என்ன என்பதை இயேசு விவரிக்கிறார் (மத்தேயு 16:25-27). அவர் சொல்லும்போது, “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (வச. 24) என்று சொல்லுகிறார். இது தேவனுடைய இராஜ்யத்திற்கு தடையாயிருக்கும் அனைத்தையும் விட்டுவிடுவதைக் குறிக்கிறது. மேலும் நாம் சிலுவை சுமக்க தயாராகும்போது, சமுதாய மற்றும் அரசியல் பாதிப்புகளை மரணபரியந்தம் சகிப்பதற்கு நாம் ஆயத்தமாயுள்ளோம் என்பதை அறிக்கையிடுகிறோம். விட்டுவிடுவது, மற்றும் எடுத்துச் செல்வதோடு தேவனை பின்பற்றும் விருப்பத்தையும் தேர்ந்தெடுக்கவேண்டும். அவருடைய ஊழியத்தையும் தியாகத்தையும் பிரகடனப்படுத்துவதற்கு இது தேவனுடைய படிப்படியான உருவாக்கும் திட்டமாகும்.  
இயேசுவைப் பின்பற்றுவது என்பது நம்முடைய வாழ்க்கையில் ஒரு சிறு பகுதியை விட்டுச் செல்வதைக் காட்டிலும் அதிகமானது. அவரைப் பின்பற்றுவது என்பது, அவருடைய உதவியோடு, அவருக்கு ஒப்புக்கொடுத்து நம்முடைய சரீரத்தையும் அவருக்கும் முற்றிலும் கீழ்ப்படுத்துவதாகும்.

இயேசுவுடன் வீட்டில் தங்கியிருத்தல்

பல ஆண்டுகளுக்கு முன்பு, விலங்குகள் பராமரிக்கும் இடத்திலிருந்து ஜூனோ என்ற வயது வந்த கருப்பு பூனையை வீட்டிற்கு கொண்டு வந்தோம். எங்கள் வீட்டிலிருக்கும் எலிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே நான் அதை கொண்டுவந்தேன். ஆனால் எங்கள் வீட்டிலிருப்பவர்கள், செல்லப்பிராணியை விரும்பினர். எங்கள் வீடு தான் ஜூனோவின் வீடு என்றும், தன் உணவிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் இங்கே தான் திரும்பிவரவேண்டும் என்றும் அது கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை அதற்கு கற்றுக்கொடுப்பதற்கு முதல் வாரத்தில் நாங்கள் அதிக பிராயாசம் ஏறெடுத்தோம். அதன் பிறகு ஜூனோ எங்கு சுற்றித் திரிந்தாலும், அது வீட்டிற்கு சரியாய் வந்து சேரும்.  
நம்முடைய மெய்யான வீட்டை அறியாதபட்சத்தில், நாம் நன்மை, அன்பு, மற்றும் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடி அலைந்துகொண்டேயிருப்போம். மெய்யான வாழ்க்கையை நாம் அடையவேண்டுமாகில், “என்னில் நிலைத்திருங்கள்” (யோவான் 15:4) என்று இயேசு சொல்லுகிறார். வேதாகம நிபுணரான ஃபிரடெரிக் டேல் ப்ரூனர், நிலைத்திருத்தல் என்னும் வார்த்தையானது குடும்பம் மற்றும் வீடு பற்றிய எண்ணத்தைத் தூண்டுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார். எனவே புரூனர் இயேசுவின் வார்த்தைகளை “என்னோடு வீட்டில் தங்கியிருங்கள்” என்று மொழிபெயர்க்கிறார்.  
வீட்டைக் குறித்த அந்த சிந்தையை தூண்டுவதற்கு இயேசு, திராட்டைச் செடியில் நிலைத்திருக்கும் கிளைகளை உதாரணமாய் பயன்படுத்துகிறார். கிளைகள் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அதின் வீடாகிய செடியில் நிலைத்திருக்கவேண்டும்.  
நம்முடைய பிரச்சனைகளை சரிசெய்வதற்கு அல்லது சில புதிய “ஞானத்தை” அல்லது மகிழ்ச்சியான எதிர்காலத்தை வழங்குவதற்கு வெற்று வாக்குறுதிகளுடன் பல குரல்கள் நம்மை அழைக்கின்றன. ஆனால் நாம் உண்மையாக வாழ வேண்டுமானால், நாம் இயேசுவில் நிலைத்திருக்க வேண்டும். நாம் வீட்டில் இருக்க வேண்டும்