நயாகரா நீர்வீழ்ச்சியின் அற்புதமான ஆற்றலை நான் பார்த்துக் கொண்டிருந்த போது, மற்ற சுற்றுலாப் பயணிகள் திடீரென புகைப்படம் எடுக்கத் தொடங்கியதைக் கவனித்தேன். அதே திசையில் பார்த்தபோது, ஒரு வானவில் தோன்றியதைக் கண்டேன் , அது ஆற்றின் குறுக்கே வளைந்திருந்தது. இது குதிரைக் குளம்பு வடிவ கனேடிய நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் தொடங்கி, அமெரிக்க நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் முடிவடைவது போல் தோன்றியது.
உண்மையில், வானவில்லுக்கு முடிவே இல்லை. வானவில் என்பது ஒரு முழு வட்டம், நான் ஒருமுறை மட்டுமே பார்த்திருக்கிறேன். நான் விமானத்தின் ஜன்னலில் பார்த்துக் கொண்டிருந்தேன், சூரியன் சரியான திசையில் பிரகாசித்து, மேகங்களுக்கு மேலே ஒரு முழு வட்ட வானவில்லை வெளிக்காட்டியது. விமானம் திரும்பி, வட்டம் மறையும் வரை, இந்த காட்சியால் பரவசமாக அமர்ந்திருந்தேன்.
நான் சிந்திக்கும்படி, அந்த வானவில் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. தேவனுக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை, நாம் எங்கிருந்தாலும் அவர் தம் வாக்குத்தத்தங்களை நமக்கு வெளிப்படுத்துகிறார். முடிவில்லாத, நம் நித்திய தேவன் “[அவரது] வில்லை மேகத்தில் வைத்(தார்)தேன்” (ஆதியாகமம் 9:13). “எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு” (வ.15) அது வாக்குத்தத்தமாக இருந்தது. இன்றும் கூட, நம் சிருஷ்டிகர் அந்த வாக்குத்தத்தத்தின் நினைவூட்டலை அவருடைய படைப்பாகிய நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் (வ.13-16).
ஏசாயா 40:28, “பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன்…. அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது” என்கிறது. என்ன ஒரு அற்புதமான சிந்தனை! தம் வாக்குத்தத்தத்தைக் காப்பவரைப் பற்றி அறிந்துகொள்ள நமக்கு நித்தியமே இருக்கும், மேலும் அவருடைய புத்தியின் ஆழத்தை நாம் ஒருபோதும் அடைய மாட்டோம்.
வானவில்லைப் பார்க்கும்போது, தேவனின் என்ன பண்புகளைப் பற்றி நீங்கள் நினைக்கிறீர்கள்? அவருடைய வாக்குத்தத்தங்கள் உங்களுக்கு எப்படி ஊக்கமளிக்கிறது?
தகப்பனே, எங்களுக்கு உமது வாக்குறுதியை உறுதிப்படுத்தும் விதமாக வானவில்லை உருவாக்கி எங்களுக்கு வெளிப்படுத்தியதற்கு நன்றி.