பல ஆண்டுகளுக்கு முன்பு, என் கணவர் தனது சபையைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல தீர்மானித்தார். கடைசி நிமிடத்தில், குழுவினர் பயணிக்க முடியாமல் தடைப்பட்டனர். அனைவரும் ஏமாற்றமடைந்தனர், ஆனால் விமான கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுக்காக அவர்கள் சேகரித்த பணத்தை அவர்கள் பார்க்க முயற்சித்த மக்களுக்கு நன்கொடையாக வழங்கினர். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு மக்கள் அதைப் பயன்படுத்தினர்.
சமீபத்தில், ஒரு ஜெபக்கூட்டத்தில், என் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்திருந்த கிராமத்தில் வாழ்ந்த ஒருவரைச் சந்தித்தார். இந்த நபர் ஒரு ஆசிரியர், அவர் தினமும் அதே கட்டிடத்தின் வழியாக நடந்து செல்வதாகக் கூறினார். அப்பகுதியில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உபயோகமாகத் தேவன் அதைப் பயன்படுத்தினார் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
நம்முடைய திட்டங்களும், விருப்பங்களும் தேவனின் மனதில் கொண்டிருப்பவற்றோடு எப்போதும் ஒத்துப்போவதில்லை. ஏனென்றால், “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசாயா 55:8). தேவனுடைய வழிகள் நம்மிடமிருந்து வேறுபட்டவை மாத்திரம் அல்ல; அவருடைய வழிகள் “உயர்ந்தவை” மற்றும் சிறந்தவை, ஏனெனில் அவர் செய்வதெல்லாம் அவர் யார் என்பதோடு ஒத்துப்போகிறது (வ.9). அவருக்கு ஊழியஞ்செய்வதற்கான நமது முயற்சிகள் நாம் திட்டமிட்டபடி நடக்காதபோது இந்த சத்தியம் நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.
சில சூழ்நிலைகளில் தேவன் இடைப்பட்டதை நாம் அறிந்துகொள்வதற்கு, பல ஆண்டுகள் கழித்துத் திரும்பிப் பார்க்க நேரிடலாம். இருப்பினும், தற்போதைக்கு, அவருடைய நாமத்தால் உலகத்தை நாம் தொடர்ந்து எதிர்கொள்ளுகையில், தேவன் எப்போதும் வல்லமையுடன் செயல்படுகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம் (வ.11).
ஒரு அனுபவத்தால் நீங்கள் எப்போது ஏமாற்றமடைந்தீர்கள்? தேவன் தன்னைப் பற்றி ஏதோவொன்றை உங்களுக்குக் கற்பிக்க இதை எப்படிப் பயன்படுத்தக் கூடும்?
அன்பு தேவனே, நீர் அனைத்தும் அறிந்தவர். நடப்பது என்னவென்று எனக்குப் புரியாதபோது, உம்மையே நம்பிட எனக்கு உதவும்.