Archives: ஜனவரி 2025

தேவனுக்கு திருப்பி கொடுத்தல்

ஒரு வருடம், எங்கள் சபையின் தலைவர்கள் எங்கள் வழக்கமான வாராந்திர காணிக்கைகளுக்கு மேலாக, ஒரு புதிய உடற்பயிற்சி கூடத்தைக் கட்டுவதற்குச் சபையாரிடம் கேட்டனர். இது எங்கள் கூடுகையில் உள்ள குடும்பங்களுக்கு ஊழியம் செய்யப் பயன்படும். ஊனத்துடன் வாழ்வதால் உண்டாகும் மருத்துவச் செலவுகளை ஜெபத்துடன் பரிசீலித்த பிறகு, “நாம் இதைச் செய்யக் கூடுமா?” என்று என் கணவரைக் கேட்டேன். அவர் தலையசைத்தார். அவர், "நாம் கொடுப்பதெல்லாம் ஏற்கனவே தேவனுக்குரியவையே, அவர் நமக்குத் தேவையான அனைத்தையும் தருவார்" என்றார். தேவன் செய்தார்! பத்தாண்டிற்குப் பிறகு, எங்கள் சபை குடும்பங்கள் இன்றும் அவ்விடத்தில் மக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் இயேசுவுக்குச் சேவை செய்யும் பாக்கியம் பெற்றுள்ளனர்.

1 நாளாகமம் 29 இல், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசும்   ஆலயத்தைக் கட்டப்போகிறவருமான தனது மகன் சாலமோனை ஆதரிப்பதில் தனது உறுதிப்பாட்டை இஸ்ரவேலின் மூப்பர்களுக்கு தாவீது ராஜா காட்டினார் (வ.1-5). எல்லோரும் அதைப் பின்பற்றி, "மனப்பூர்வமாய் கொடுத்தார்கள்" மற்றும் " சந்தோஷப்பட்டார்கள்" (வ.6, 9). தாவீது தேவனைப் புகழ்ந்து, "வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்" என்று அறிவித்தார் (வ.11). அவர்: "எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப்பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது." (வ.6) என்று ஜெபித்தார்.

தேவன் நமக்குச் செய்த, அளித்த அனைத்தையும், குறிப்பாக இயேசுவுடனான தனிப்பட்ட உறவென்னும் பரிசை நாம் கருதும்போது, ​​​​சகல நன்மைகளையும் அருளுபவருக்கு நமது ஆராதனையைச் செலுத்தி, தேவனுக்குத் திரும்பக் கொடுப்பதன் மூலம் நமது நன்றியையும் அன்பையும் காட்டலாம்!

 

அறியாதவைகளை குறித்த பயம்

புத்தாண்டின் முதல் நாள் அதிகாலை 3 மணிக்கு, பயந்து விழித்தேன். வரப்போகும் ஆண்டு என்னைப் பயத்தால் மூழ்கடித்தது. குடும்பத்தில் உண்டான வியாதி, என்னை நீண்ட காலமாகச் சோர்வடையச் செய்திருந்தது, இப்போதோ எதிர்காலத்தைப் பற்றிய யோசனைகள் என்னைப் பயமுறுத்தியது. இன்னும் மோசமான விஷயங்கள் நடக்குமோவென்று நான் திகைத்தேன்.

அரங்கேறின மோசமான சம்பவங்கள் உண்டாக்கிய பயத்தை இயேசுவின் சீஷர்கள் புரிந்துகொண்டனர். அவர் மரிப்பதற்கு முந்தைய நாளே அவர்களின் எஜமானர் அவர்களை ஆயத்தப்படுத்தி உறுதியளித்திருந்தாலும், அவர்கள் இன்னமும் பயந்ததிருந்தனர். அவர் கைது செய்யப்பட்டபோது அவர்கள் தப்பி ஓடினர் (மத்தேயு 26:56); பேதுரு அவரை மறுதலித்தார் (யோவான் 18:15-17, 25-27), அவர்கள் ஒளிந்துகொண்டனர் (20:19). இயேசு கைது செய்யப்பட்டு சிலுவையில் அறையப்படுகையிலும், அவர் உபத்திரவப்பட்டபோதும் ஏற்பட்ட கிளர்ச்சியினால் உண்டான பயத்தனிமித்தம், அவர்கள் "திடன்கொள்ளுங்கள்" என்ற அவரது கட்டளைக்கும், "நான் உலகத்தை ஜெயித்தேன்" (16:33) என்ற அவரது வாக்குத்தத்தத்திற்கும் எதிராகச் செயல்பட்டனர்.

ஆனால் கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும், வாழ்வின் மீதும் மரணத்தின் மீதுமான அவருடைய அதிகாரத்தையும் வல்லமையையும் நிரூபித்தது. அவருக்கே இறுதி வெற்றி. நம்முடைய உலகத்தின் பாவ நிலைமை துன்பத்தைத் தவிர்க்க முடியாததாகச் செய்திருந்தாலும், ஞானமும் அன்பும் நிறைந்த நமது தேவனின் அதிகாரத்திற்கு அனைத்தும் கீழ்ப்பட்டவை என்ற சத்தியத்தில் நாம் இளைப்பாறலாம். இயேசுவின் பிரசன்னம் நம்மோடு உண்டு (16:32-33), அவருடைய சீடர்களோடுமிருந்தது, அதனால் நம்பிக்கையுடன் உலகிற்கு நற்செய்தியைப் பகிர்ந்தனர். தேவன் அனைத்தையும் ஆள்கிறார் என்ற வாக்குத்தத்தம், இந்தப் புத்தாண்டில் அவரை நம்புவதற்கும், எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று நமக்குத் தெரியாதபோதும் தைரியமாக இருப்பதற்கும், நம் உள்ளங்களைத் திடப்படுத்தட்டும்.

பாழானவற்றிற்கு அப்பாலான தேவனின் வாக்குத்தத்தம்

"லாரா புயல்" மெக்சிகோ வளைகுடா வழியாக அமெரிக்காவின் லூசியானா கடற்கரையை நோக்கி வீசியதால், தீவிர எச்சரிக்கை விடப்பட்டது. மணிக்கு 150 மைல் வேகத்தில் காற்று வீசுவதை ஒரு ஷெரிப் குறிப்பிட்டு, இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டார்: “தயவுசெய்து வெளியேறுங்கள். ஆனால் நீங்கள் இங்கேயே இருந்தால், எங்களால் உங்களைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், உங்கள் பெயர், முகவரி, தேசிய அடையாள எண் மற்றும் நெருக்கமானவர்களின் பெயரை எழுதி பத்திரமாக உங்கள் சட்டைப் பையில் வைக்கவும். அது இங்கே வரக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார். லாரா புயல் நிலத்தைத் தாக்கியவுடன், அதின் அழிவுகரமான விளைவை அவர்களால் பார்க்க மட்டுமே முடியும் என்று மீட்புக் குழுவினருக்குத் தெரியும். அதன் வீரியத்திற்குமுன் உதவியற்றவர்களாய் இருப்பர்.

பழைய ஏற்பாட்டிலிருந்த தேவஜனங்கள் இயற்கையான அல்லது ஆவிக்குரிய பேரழிவை எதிர்கொண்ட போதெல்லாம், அவருடைய வார்த்தைகள் மிகவும் உறுதியானதாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தன, அழிவின் மத்தியிலும் அவருடைய பிரசன்னத்தை வாக்களித்தன. “அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து.. அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்” (ஏசாயா 51:3) என்றார். மேலும், தேவன் எப்பொழுதும் தம்முடைய மக்களுக்கு மீட்பையும் குணமாகுதலையும் உறுதியளித்தார். அவர்கள் அவரை மட்டுமே நம்பும்போதே அது அவர்களை நிச்சயமாகப் பின்தொடரும். "வானம் புகையைப்போல் ஒழிந்துபோம்" என்றாலும், தேவன் கூறினார் அவருடைய "இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்" (வ. 6) என்று. பாதிப்பு எப்படிப்பட்டதாயினும், அவர்களுக்கான அவரது உறுதியான நன்மை ஒருபோதும் தடைப்படாது.

தேவன் நம்மைக் கஷ்டங்களுக்கு விலக்குவதில்லை, ஆனால் அவருடைய சீர்பொருத்தும் குணமாக்குதலானது, பேரழிவிற்கு மேம்பட்டது என்று அவர் வாக்களிக்கிறார்.

 

இயேசுவின் கதை

கேட் ஹான்கியை அதிகமானோர் அறிந்திருக்க மாட்டார்கள், ஆனால் அவர் ஒரு வியத்தகு பெண்மணி. ஆசிரியர், சுவிசேஷகர், பள்ளி ஒருங்கிணைப்பாளர், அருட்பணியாளர் மற்றும் கவிஞராக அவர் 1800களில், இங்கிலாந்தில் உண்மையாக இயேசுவுக்கு ஊழியம் செய்தார். 1867 ஆம் ஆண்டில், கேட் கடும் நோயால் வாதிக்கப்பட்டார். அவர் தேறுகையில், “தி ஸ்டோரி வாண்டட்" மற்றும் “தி ஸ்டோரி டோல்ட்" என இரு பகுதிகளாக ஒரு நீண்ட கவிதையை எழுதினார். அது, இயேசுவுடனும் அவரது வாழ்க்கை சம்பவங்களுடனும் அவளுக்கிருந்த உறவை நெருக்கமான முறையில் வெளிக்காட்டுகிறது.

எல்லா வசனங்களும் இயேசுவையே சுட்டிக்காட்டி, அவருடைய கதையையே சொல்கின்றன. யோவான் தனது நிருபத்தை ஆரம்பிக்கையில், தாங்கள் எவ்வாறு தனிப்பட்ட முறையில் இயேசுவை அனுபவித்தார்கள் என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார்: “எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற.. உங்களுக்கு அறிவிக்கிறோம்" (1 யோவான் 1:1). அவருடனான எங்கள் அனுபவத்தின் காரணமாகவே நாங்கள் இயேசுவின் கதையைச் சொல்கிறோம் என்று அப்போஸ்தலன் எழுதுகிறார்: “அந்த ஜீவன் வெளிப்பட்டது.. அந்த ஜீவனை நாங்கள் கண்டு..உங்களுக்கு அறிவிக்கிறோம்” (வ.2). பின்னர், யோவான் நம்மைக் கவரும் ஒரு கருத்தைக் கூறுகிறார்: "தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிற(து)தினாலும்" (2:14). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசுவின் கதை நம்முடைய கதை. அவருடனான நமது சொந்த அனுபவத்தின் வெளிச்சத்தில் கிறிஸ்துவின் கதையைச் சொல்ல நாமும் அழைக்கப்பட்டுள்ளோம்.

இதைத்தான் கேட் ஹான்கி தனது கவிதையில் செய்தார். இறுதியில், அவரது கவிதையின் இரண்டு பகுதிகளும் இந்த பிரியமான பாடல்களாக மாறியது: "ஐ லவ் டூ டெல் மை ஸ்டோரி" மற்றும் "டெல் மீ தி ஓல்ட், ஓல்ட் ஸ்டோரி". ஒருவேளை, கேட் போல நாமும் நம்முடைய சொந்த வார்த்தைகளில், தனித்துவமான வழிமுறையில் இயேசு நம்மை நேசித்து, நம்மிடம் வந்து, நம்மை மீட்ட கதையைப் பிறருடன் பகிரலாம்.