ஜீவனைக் காட்டிலும் மேல்
மற்றொரு எதிர்பாராத உடல்நலக்குறைவுக்குப் பிறகு, மலைகளில் இளைப்பாறிட என் கணவரோடும் மற்ற குழுவினரோடும் நானும் சேர்ந்துகொண்டேன். அந்த மலையின் உச்சியில் உள்ள சிறிய தேவாலயத்திற்குச் செல்லும் மர படிக்கட்டுகளில் நான் ஏறினேன். இருட்டில் தனியாக, பிளந்திருந்த ஒரு படியில் ஓய்வெடுக்க நின்றேன். இசை தொடங்கியதும், "எனக்கு உதவும், ஆண்டவரே" என்று நான் மெல்லிய குரலில் சொன்னேன். நான் சிறிய அறைக்குள் நுழையும் வரை மெதுவாக நடந்தேன். நீடித்த வலியினுடே சுவாசித்தேன், வனாந்தரத்திலும் தேவன் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதற்கு நன்றியோடிருந்தேன்.
தேவனை ஆராதிக்கும் மிக நெருக்கமான தருணங்கள் வனாந்தரத்தில் நிகழ்ந்ததை வேதாகமம் பதிவு செய்கிறது. யூதாவின் வனாந்தரத்தில் மறைந்திருந்தபோதும், அநேகமாக தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருக்கும்போது, தாவீது ராஜா இவ்வாறு பாடினார்: “தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” (சங்கீதம் 63:1). தேவனின் வல்லமையையும் மகிமையையும் அனுபவித்த தாவீது, தேவனின் அன்பை "ஜீவனைப்பார்க்கிலும்" நல்லது என்று கருதினார் (வ.3), அதுவே அவர் வனாந்தரத்தில் இருந்தபோதும் வாழ்நாள் முழுவதும் ஆராதனை செய்யக் காரணம் (வ.2-6). அவர், “நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது” (வ.7-8) என்றார்.
தாவீதைப் போலவே, நம்முடைய சூழ்நிலைகள் அல்லது நமக்கு எதிராக நிற்பவர்களின் உறுதியைப் பொருட்படுத்தாமல், தேவனைத் துதிப்பதின் மூலம் தேவனுக்குள்ளான நமது நம்பிக்கையை வெளிக்காட்டலாம் (வ.11). நாம் கஷ்டப்பட்டாலும், சில நேரங்களில் நம்மிடம் தவறு இல்லையென்றாலும், தேவனின் அன்பு எப்போதும் ஜீவனைக்காட்டிலும் நல்லது என்பதை நம்பலாம்.

செவிட்டு இதயம்
தனது சைகை மொழி திறனை மேம்படுத்த, லீசா காது கேளாதோரோடு நெருங்கிப் பழகினாள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விரைவில் புரிந்துகொண்டாள். காது கேளாதவர்கள் செவித்திறனுள்ள நபர்களால் மோசமாக ஒதுக்கப்படுகின்றனர், உதடு அசைவுகளை நன்றாகப் புரிந்துகொள்ளும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள், மேலும் பணியிடத்தில் பதவி உயர்வுக்காக வழக்கமாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான பொது நிகழ்ச்சிகளும் இவர்களுக்கு விளக்கப்படாமலேயே நடக்கின்றன.
செவித்திறனற்றவர்களுடன் இயல்பாக ஒன்றும் அளவிற்கு லீசாவின் செய்கை மொழி சீராக மேம்பட்டது. ஒரு விருந்தின்போது, காது கேளாத நபர் ஒருவர் லீசாவால் கேட்க முடியும் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். லீசா பதிலளிக்கும் முன், மற்றொரு நண்பர், "அவள் மனதளவில் செவிடு" என்று செய்கை காட்டினார். அவர்களின் உலகில் வாழ லீசாவின் விருப்பமே இங்குக் காரியம்.
காது கேளாதவர்களுடன் பழக லீசா தன்னை "தாழ்த்திக்கொள்ளவில்லை". அவளுடைய செவிப்புலன் தவிர, அவளும் அவர்களைப் போல ஒருத்தியே. ஆனால், நம் உலகில் வாழும்படிக்கும், நம் அனைவரையும் சந்திக்கும்படிக்கும், இயேசு "கீழே இறங்கி" வந்தார் . அவர் "தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்(தார்)த" (எபிரெயர் 2:9). கிறிஸ்து "மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்" (வ.14) மாம்சமானார். அவ்வாறு செய்வதன் மூலம், "ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்" (வ.15). மேலும், அவர் "தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியாராயிருக்கும்படிக்கு" (வ.17) முழுமனிதரானார்.
நாம் எதனை எதிர்கொண்டாலும், இயேசு அதை அறிகிறார், புரிகிறார். அவர் நம் இதயகுரலை கேட்கிறார். எல்லா வகையிலும் நம்முடன் இருக்கிறார்.

சிருஷ்டியில் தேவனைக் காணுதல்
கென்னி, கடவுள் நம்பிக்கை இழந்து, பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் விட்டுச் சென்ற சபையின் முன் நின்றார். அவர் தனது நம்பிக்கையை மீட்டெடுக்கப்பட்டதாகப் பகிர்ந்து கொண்டார். எப்படி? சிருஷ்டிப்பில் அவர் பார்த்த அழகு மற்றும் வடிவமைப்பு மூலம் தேவன் அவரது உள்ளத்தில் பேசியிருந்தார். இயற்கை உலகில் காணப்பட்ட தேவனின் பொதுவான வெளிப்பாட்டின் சாட்சியின் மூலம் கென்னி மீண்டும் ஒருமுறை தேவனைக் குறித்துப் பிரமித்தார், மேலும் அவர் இப்போது வேதத்தில் பிரேத்யேகமாக வெளிப்பட்டிருக்கும் தேவ ஞானத்தை ஏற்றுக்கொண்டார். அவரது கதையைப் பகிர்ந்து கொண்ட பிறகு, கென்னி சபையின் முன்புறத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார். அவரது தந்தை, கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, இயேசுவின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
யோபு, வாழ்க்கையில் நிறைய இழந்த பிறகு, யோபுவின் விசுவாசமும் அசைந்தது. அவர் கூறினார், “உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சிநிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.” (யோபு 30:20). தேவன் "பெருங்காற்றிலிருந்து யோபுக்கு” (38:1) பதிலளித்தார், அவர் யோபுவை பாராமல் இல்லையென்றும் மாறாகத் தேவனின் அற்புதமான, கருக்கலான சிருஷ்டிப்பைக் கருத்தில் கொள்ள யோபுவின் பார்வைதான் விரிவாக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தார். "பூமியின் அஸ்திவாரம்" மற்றும் "விடியற்காலத்து நட்சத்திரங்கள்" (வ. 4, 7) மற்றும் இடையில் காணப்படும் அனைத்து உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் நீர் (வவ. 8-41), என்று அனைத்தும் யோபு நம்பக்கூடிய ஒருவரைச் சுட்டிக்காட்டியது, ஆச்சரியமான அன்பும் வல்லமையும் கொண்ட தேவனே அவர். யோபு பதிலாக, "என் காதில் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது" (42:5) என்றார்.
சந்தேகங்கள் கிறிஸ்துவின் மீதான உங்கள் நம்பிக்கையை அச்சுறுத்தும் போது, தேவனின் சிருஷ்டியின் மகத்துவத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். நாம் பார்ப்பதற்கு மனமிருந்தால், அவர் அதில் தன்னை வெளிப்படுத்துகிறார்.

பெத்லகேமென்னும் சிற்றூர்
பிலிப்ஸ் ப்ரூக்ஸ், பெத்லகேமுக்குச் சென்ற பிறகு, பிரபலமான கிறிஸ்துமஸ் பாடலான, "ஓ லிட்டில் டவுன் ஆஃப் பெத்லஹேம்" என்பதின் வரிகளை எழுதினார். அமெரிக்காவில் உள்ள ஒரு சபையின் போதகரான ப்ரூக்ஸ், அவருடைய அனுபவத்தால் மிகவும் நெகிழ்ந்து, தனது ஞாயிறு பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “எனக்கு நினைவிருக்கிறது.. கிறிஸ்துமஸுக்கு முந்தின இரவு, பெத்லகேமின் பழைய தேவாலயத்தில், இயேசு பிறந்த இடத்திற்கு அருகில் நான் நின்று கொண்டிருந்தபோது, மணிக்குமணி சபை முழுவதும் தேவனைத் துதிக்கும் அற்புதமான பாடல்களால் ஒலித்துக்கொண்டிருந்தபோது, மீண்டும் மீண்டுமாக இரட்சகர் பிறப்பின் 'அற்புதமான இரவை' பற்றி ஒருவருக்கொருவர் சொன்னதை, எனக்கு நன்கு தெரிந்த குரல்களைப் போல என்னால் கேட்க முடிந்தது"
1868 ஆம் ஆண்டில், ப்ரூக்ஸ் தனது சிந்தனைகளை ஒரு கவிதையாக வடித்தார், அவருடைய சபையின் இசைக்குழு அமைப்பாளர் அதற்கு இசை அமைத்தார். அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகும் தணியாத தாக்கத்தினூடே அமைதியையும் சமாதானத்தையும் இந்தப் பாடல் அறிவித்தது: “பெத்லகேமென்னும் சிறிய நகரமே, நீ அமைதலாய் உறங்குவதை நாங்கள் காண்கிறோம் . . இத்தனை காலத்தின் நம்பிக்கையும், அச்சங்களும் இன்றிரவு உன்னில் சந்திக்கிறது"
மத்தேயு 2 இல், நமது இரட்சகர் பெத்லகேமில் பிறந்ததைப் பற்றி மத்தேயு எழுதினார். " கிழக்கிலிருந்து சாஸ்திரிகள்" (வ. 1) பெத்லகேமுக்கு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து வந்தபோது (மீகா 5:2 ஐப் பார்க்கவும்), இயேசுவைக் கண்டு, "மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்" (மத்தேயு 2: 10)
இன்று, நாம் இயேசுநாதரின் திருவருள் தோற்றத்தைக் கொண்டாடுகையில், நம் இரட்சகரின் பிறப்பு பற்றிய மகிமையான செய்தி நமக்கும் தேவை. பாடல் நமக்கு நினைவூட்டுவது போல, அவர் "நம்முடைய பாவங்களைத் துரத்திவிட்டு உள்ளே பிரவேசிக்கவும்" மற்றும் "நம்மில் பிறக்கவும்" வந்தார். அவரில் நாம் சமாதானம் காண்கிறோம்.

தேவன் அனைத்தையும் அறிவார்
தேவன் மெய்யாகவே அனைத்தையும் அறிந்தவர். ஆனால் ஒரு பத்திரிகை கட்டுரையின்படி, நமது அலைபேசி தகவல்கள் மூலம் அரசாங்கம் நம்மைப் பற்றி நிறைய அறிந்திருக்கிறது. அலைபேசி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் "மீத்தரவை" உருவாக்குகிறார்கள், அது "மின்னணு தகவல் தடயங்களை" விட்டுச் செல்கிறது. ஒவ்வொரு தனித்தனியான தரவுகளும் முக்கியமற்றதாகத் தோன்றினாலும், அதை ஒன்றிணைத்து பகுப்பாய்வு செய்யும் போது, அது "வடிவமைக்கப்பட்டதிலேயே மிகச் சக்திவாய்ந்த புலனாய்வுக் கருவிகளில் ஒன்றாக" மாறுகிறது. நமது மீத்தரவைக் கண்டுபிடிப்பதன் மூலம், எந்த நேரத்தில் நாம் எங்கிருந்தோம் அல்லது எங்கு இருக்கிறோம் என்பதை புலனாய்வாளர்கள் கண்டுபிடிக்கலாம்.
தேசியப் பாதுகாப்பு மையத்தின் இந்த மின்னணு பகுப்பாய்வை விட உன்னதமானதாக, தேவனுடனான உறவில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதனை அவரறிவார் என்று தாவீது கூறினார். சங்கீதம் 139 இல், நம்முள் இருப்பவற்றை ஆராய்ந்து அறிந்திருக்கிற (வ.1) தேவனிடம் ஜெபத்தை ஏறெடுக்கிறார். சங்கீதக்காரன், "தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்" (வ.23) என்று எழுதினார். அவர் நம்மைப் பற்றிய அனைத்தையும் அறிந்தும் (வ.2-6), எங்கும் நிறைந்தும் இருக்கிறார் (வ.7-12), மேலும் நம் “உள்ளிந்திரியங்களை” (வ.13-16) படைத்தும், அறிந்தும் உள்ளார். அவருடைய ஆலோசனைகள் நமது மனுஷீகமான புரிதலை விட உயர்ந்தவை (வ.17-18), நாம் நம் சத்துருக்களை எதிர்கொள்ளுகையிலும் அவர் நம்முடன் இருக்கிறார் (வ.19-22).
தேவனை அனைத்தையும் அறிந்தவராக, எப்போதும் இருப்பவராக, சர்வ வல்லமையுள்ளவராக இருப்பதால்; நாம் எங்கு இருந்தோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம், எதனால் உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை அவர் சரியாக அறிவார். ஆனால் அவருடைய வழிகளில் நடக்க நமக்கு உதவும் ஒரு அன்பான தகப்பன் அவர். இன்று வாழ்க்கை பாதையில் அவரைப் பின்தொடர்வோம்.