போதகர் தீமோத்தேயு பயணம் செய்யும் போது, தனது போதருக்குரிய கழுத்துப்பட்டையை அணிந்திருந்தால், அவர் அடிக்கடி அந்நியர்களால் அணுகப்படுவார். “தயவுசெய்து எனக்காக ஜெபியுங்கள்” என்று விமான நிலையத்தில் உள்ளவர்கள் அவரது எளிய கறுத்த மேலங்கியின் மீது போதகருக்கான பட்டையைப் பார்க்கும்போது கூறுகிறார்கள். சமீபத்தில் ஒரு விமானத்தில், ஒரு பெண் அவரைக் கவனித்தபோது அவருடைய இருக்கை அருகே மண்டியிட்டு, “நீங்கள் ஒரு போதகரா? எனக்காக ஜெபிப்பீர்களா?” என்று கெஞ்சினார். போதகர் தீமோத்தேயு ஜெபித்தார்.
எரேமியாவில் உள்ள ஒரு பகுதி, தேவன் ஏன் ஜெபத்தைக் கேட்கிறார் மற்றும் பதிலளிக்கிறார் என்பதை நாம் உணர உதவுகிறது. தேவன் அக்கறை காட்டுகிறார்! அவர் தனக்குப் பிரியமான ஆனால் பாவத்தால் நிறைந்து சிறைபிடிக்கப் பட்டுப்போன ஜனங்களுக்கு, “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” (29:11) என்று உறுதியளிக்கிறார். அவர்கள் தம்மிடம் திரும்பும் காலத்தைத் தேவன் எதிர்நோக்கினார். “அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (வ. 12-13).
தீர்க்கதரிசி சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஜெபத்தைப் பற்றி இதையும் இதற்கு மேலும் கற்றுக்கொண்டார். தேவன் அவருக்கு, “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (33:3) என்று உறுதியளித்தார்.
ஜெபிக்கும்படி இயேசுவும் நம்மை உந்துகிறார். “உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்” (மத்தேயு 6:8) என்று அவர் கூறினார். எனவே ஜெபத்தில் “கேளுங்கள்,” “தேடுங்கள்,” மற்றும் “தட்டுங்கள்” (7:7). நாம் வைக்கும் ஒவ்வொரு விண்ணப்பமும் பதில் அளிப்பவருடன் நம்மை நெருங்கச் செய்கிறது. ஜெபத்தில் நாம் தேவனுக்கு அந்நியராக இருக்க வேண்டியதில்லை. அவர் நம்மை அறிந்திருக்கிறார், நம்மிடமிருந்து கேட்க விரும்புகிறார். நம்முடைய கவலைகளை இப்போதே அவரிடம் எடுத்துச் சொல்லலாம்.
நீங்கள் எத்தனை முறை ஜெபிக்கிறீர்கள்? இன்று நீங்கள் தேவனிடம் என்ன சொல்வீர்கள்?
அன்பு தேவனே, என்னைப் பற்றிய உம்முடைய கரிசனையும், அறிவும் என் ஜெபங்களை ஊக்குவிக்கிறது. பதிலளிப்பதற்காக உமக்கு நன்றி.