பொறுமையில் படிப்பினைகள்
பாப் சலம் தனது மூக்கின் மூலம் (அல்லது ஒரு கரண்டியைத் தனது முகத்தில் இணைத்துக்கொண்டு) ஒரு வேர்க்கடலையை 'பைக்' சிகரத்தின் மேலே நகர்த்திய வேகச் சாதனையைப் படைத்துள்ளார். சுற்றுலாப் பயணிகளின் இடையூறு ஏற்படாமல் இருக்க, இரவில் உழைத்து ஏழு நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த விதையை முடிக்கும் நான்காவது நபர் பாப், அதாவது இன்னும் மூன்று பேர் இதைப் பொறுமையாகச் செய்திருக்கிறார்கள்
அவர்களின் பொறுமைக்கான தேவை சுயமாக ஏற்படுத்தப்பட்டது என்று நாம் கூறலாம், ஆனால் வாழ்க்கையில் பெரும்பாலும் அவ்வாறு இருக்காது. நமக்குப் பொறுமை வேண்டும். இது ஆவியின் கனியாகும் (கலாத்தியர் 5:22) மேலும் "ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி" (யாக்கோபு 1:4) ஆக இதுவே அத்தியாவசியமான நற்பண்பு. சுற்றியுள்ள அனைவரும் முழு பீதியில் இருக்கும்போது பொறுமைசாலிகளோ அமைதி காப்பர் . அவர்களும் நிலைமை சீராக விரும்புவர், அது சீராகாவிடினும் அவர்களுக்குக் கவலையில்லை. விவேகமாய் செயல்பட ஞானத்திற்காகத் தேவனை நம்பி, அவர்கள் நிலையான போக்கில் பயணிப்பர் (வ. 5).
பொறுமையிலுள்ள பிரச்சனை என்னவென்றால், அதைக் கற்றுக்கொள்ள ஒரே ஒரு வழிதான் உண்டு. யாக்கோபு கூறுகிறார் "உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று" (வ. 3). இத்தகைய பரீட்சையானது பெரிய மற்றும் சிறிய வழிகளில் வருகிறது. விமான நிலையத்திலிருந்து இதை எழுதுகிறேன். எனது இரவு 11:00 மணி விமானம் 2:00 மணி வரை தாமதமானது, பின்னர் ரத்து செய்யப்பட்டது. ஒரு இரவு தூக்கம் இல்லாமல், நான் காபி குடித்துக்கொண்டிருக்கிறேன், எப்போதாவது வீட்டிற்கு வருவேன் என்று நம்புகிறேன். விமான நிலையத்தில் ஒரு நாள் முழுவதையும் தூக்கத்தில் கழிப்பது எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் என் அன்பான தகப்பன் எனக்குப் பொறுமையைக் கற்றுக்கொடுக்கிறார்.
இன்றைய நாளுக்கான எனது படிப்பினை முடிந்திட ஜெபிக்கிறேன், ஆனால் யார் அறிவார்? அடுத்த விமானத்திற்கான காத்திருப்புப் பட்டியலைச் சரிபார்க்கும் நேரம் இது.
இயேசுவுக்காக ஓடுதல்
100 மீட்டர் விரைவோட்டத்தை பற்றி நாம் குறிப்பிடுகையில், தற்போதைய உலக சாதனையாளரான உசைன் போல்ட் நினைவுக்கு வரலாம். ஆனால் ஜூலியா "ஹரிக்கேன்" ஹாக்கின்ஸை நாம் மறக்க முடியாது. 2021 ஆம் ஆண்டில், லூசியானா முதியோருக்கான விளையாட்டுப் போட்டியில் ஜூலியா 100 மீட்டர் விரைவோட்டத்தில் மற்ற அனைத்து ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் முன்பாக இறுதிக் கோட்டைக் கடந்து வெற்றி பெற்றார். அவரது நேரம் போல்ட்டின் 9.58 வினாடிகளை விடச் சற்று குறைவு; 60 வினாடிகளுக்கு மேல். ஆனால் அவளுக்கு 105 வயது!
ஒரு பெண் இந்த வயதிலும் வேக ஓட்டம் ஓடிக்கொண்டிருப்பது பெரிய காரியம். மேலும் இயேசுவை தங்கள் இலக்காகக் கொண்டு ஓடுவதை நிறுத்தாத விசுவாசிகளைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு இன்னும் நிறைய உண்டு (எபிரெயர் 12:1-2). வாழ்க்கையின் முதுமையிலும் உண்மையுள்ளவர்களைப் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறார்: “நீதிமான் பனையைப் போல் செழித்து . . . அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்” (92:12-14).
இவ்வகையான தரத்தையுடைய முதிர்ந்த விசுவாசிகள், அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துவுக்கு எழுதிய நிருபத்தில் மேலும் அறிவுறுத்தலைக் காணலாம். முதிர்வயதுள்ள புருஷர்கள் "விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி" (தீத்து 2:2), முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் "நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும்" (வ. 3) சொல்கிறார்.
ஓட்டத்தை நிறுத்துவதற்கு முதிர்ந்த விசுவாசிகளுக்கு அழைப்பு இல்லை. தடகள பாதையில் ஜூலியா செய்வது போல் அல்ல, ஆனால் அவர்களுக்குத் தேவையான பெலனை அவர் வழங்குவதால் தேவனை மகிமைப்படுத்தும் வழிகளில் ஓடவேண்டும். அவருக்கும் பிறருக்கும் நன்றாக ஊழியம் செய்ய அனைவரும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவோம்.
பின் இருக்கையில் வேதாகமங்கள்
ஆண்ட்ரூவின் கார் நிறுத்தப்பட்டது, காவலர்கள் கடந்து வந்தனர். அவர் முன்பு பலமுறை செய்ததுபோல இப்போதும், “தேவனே, நீர் பூமியிலிருந்தபோது குருடர்களைப் பார்க்கச் செய்தீர். இப்போது, தயவு செய்து இந்த பார்வையைக் குருடாக்கும்” என்று ஜெபித்தார். பாதுகாவலர்கள் காரைச் சோதனையிட்டனர், சாமான் பைகளிலிருந்த வேதாகமங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆண்ட்ரூ எல்லையைத் தாண்டி, வேதாகமத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள முடியாதவர்களிடம் அதனை எடுத்துச் சென்றார்.
ஆண்ட்ரூ வான் டெர் பிஜில், அல்லது சகோதரர் ஆண்ட்ரூ. கிறிஸ்தவத்தைச் சட்டவிரோதமாக்கிய நாடுகளுக்கு வேதத்தை எடுத்துச் செல்லவேண்டும் என்ற சாத்தியமற்றது போல் தோன்றிய பணிக்காகத் தேவன் அவரை அழைத்தபோது தேவனின் வல்லமையை நம்பியிருந்தார். "நான் மிகவும் சாதாரணமானவன்" என்று அவர் தனது குறுகிய கல்வியறிவு மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் குறிப்பிட்டார். "நான் செய்ததை, யார் வேண்டுமானாலும் செய்யலாம்" என்றவரது இன்றைய ஸ்தாபனம்தான் ஓபன் டோர்ஸ் இன்டர்நேஷனல், உலகம் முழுவதும் உபாத்திரவப்படும் இயேசுவின் விசுவாசிகளுக்கு ஊழியம் செய்கிறது.
யூதாவின் ஆளுநரான செருபாபேல், யூதர்களின் சிறையிருப்பிற்குப் பின், ஆலயத்தை மீண்டும் கட்டுவது சாத்தியமற்றதாக தோன்றியபோது, அவர் ஊக்கம் இழந்தார். ஆனால் தேவன் மனித பலத்தையோ பராக்கிரமத்தையோ நம்பாமல், தம்முடைய ஆவியின் மீது நம்பிக்கை வைக்கும்படி அவருக்கு நினைவூட்டினார் (சகரியா 4:6). சகரியா தீர்க்கதரிசிக்கு அருகாமையில் உள்ள ஒலிவ மரங்களிலிருந்து எண்ணெய் கொண்டு வரப்பட்ட விளக்குகளின் தரிசனத்தின் மூலம் அவர் அவரை ஊக்கப்படுத்தினார் (வ. 2-3). தொடர்ச்சியான எண்ணெய் விநியோகத்தின் காரணமாக விளக்குகள் எரிவது போல, செருபாபேலும் இஸ்ரவேலர்களும் தேவனின் தொடர்ச்சியான வல்லமையை நம்பி அவருடைய வேலையைச் செய்ய முடியும்.
நாம் தேவனைச் சார்ந்திருக்கும்போது, நாம் அவரை நம்பி, அவர் நாம் செய்யும்படி அழைப்பதைச் செய்வோம்.
தேவன் நம்மை காண்கிறார்
மிச்சிகன் மாநிலத்தில் 40 லட்சம் மரங்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை மிகவும் சாதாரணமானவை. ஆயினும்கூட, மாநிலம் ஆண்டுதோறும் "பெரிய மர வேட்டையை" நடத்துகிறது, இது பழமையான மற்றும் மிகப்பெரிய மரங்களை அடையாளம் காணும் ஒரு போட்டியாகும், அவை வாழும் அடையாளமாக மதிப்பூட்டப்படலாம். போட்டியானது சாதாரண மரங்களை வேறொரு நிலைக்கு உயர்த்துகிறது: எந்த வனத்தின் உள்ளேயும் ஒரு வெற்றியாளர் இருக்கலாம், கவனிக்கப்படுவதற்குக் காத்துக்கொண்டிருக்கலாம்.
அநேகரை போலல்லாமல், தேவன் எப்போதும் சாதாரணமானவர்களைக் கவனிக்கிறார். பிறர் புறக்கணிக்கும் எதையும், எவரையும் குறித்து அவர் அக்கறை காட்டுகிறார். யெரொபெயாமின் ஆட்சியின் போது தேவன் ஆமோஸ் என்ற சாதாரண மனிதனை இஸ்ரேலுக்கு அனுப்பினார். ஆமோஸ் தனது மக்களைத் தீமையிலிருந்து திரும்பவும் நீதியை நடப்பிக்கவும் அறிவுறுத்தினார், ஆனால் ஒதுக்கப்பட்டும், அமைதி காக்கும்படியும் கடிந்துகொள்ளப்பட்டார். "தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு” (ஆமோஸ் 7:12) என்று ஏளனமாக சொன்னார்கள். அதற்கு ஆமோஸ், “நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன். ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்” (வ. 14-15) என்றார்.
ஆமோஸ் ஒரு சாதாரண மேய்ப்பனாக இருந்தபோது, மந்தைகளையும் மரங்களையும் கவனித்துக் கொண்டிருந்தபோது தேவன் அவரை அறிந்தும் கவனித்துமிருந்தார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தி மற்றும் காட்டத்தி மரங்களுக்கு அருகேயிருந்த சாதாரண நாத்தான்வேல் (யோவான் 1:48) மற்றும் சகேயு (லூக்கா 19:4-5) ஆகியோரை இயேசு கவனித்து அழைத்தார். நாம் எவ்வளவு மறைக்கப்பட்டவர்களாக உணர்ந்தாலும், அவர் நம்மைப் பார்க்கிறார், நம்மை நேசிக்கிறார், அவருடைய நோக்கங்களுக்காக நம்மைப் பயன்படுத்துகிறார்.
தேவன் நம் கதைகளை உபயோகிக்கிறார்
நான் நினைவுகளுக்காக சேமித்தவற்றின் பெட்டியைத் திறந்து, பத்து வாரக் கருவில் இருக்கும் குழந்தையின் கால்களின் சரியான அளவு மற்றும் வடிவத்தைக் கொண்ட ஒரு சிறிய, வெள்ளி சட்டகத்தை வெளியே எடுத்தேன். பத்து சிறு கால்விரல்களைத் தடவியபடியே, எனது முதல் கருச்சிதைவையும், நான் "அதிர்ஷ்டசாலி, அவ்வளவாய் துன்பப்பட வேண்டியதில்லை" என்று சொன்னவர்களையும் நினைவு கூர்ந்தேன். என் வயிற்றில் ஒருமுறை துடித்த இதயம் போல என் குழந்தையின் பாதங்கள் உண்மையானவை என்பதை அறிந்து நான் துக்கமடைந்தேன். என்னை மனச்சோர்விலிருந்து விடுவித்ததற்காகவும், குழந்தையை இழந்து வருந்தும் மற்றவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும் எனது கதையைப் பயன்படுத்தியதற்காகத் தேவனுக்கு நன்றி தெரிவித்தேன். என் கருச்சிதைவுக்கு இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, நானும் என் கணவரும் இழந்த குழந்தைக்குக் காய் என்று பெயரிட்டோம், சில மொழிகளில் "மகிழ்ச்சி" என்று பொருள். எனது இழப்பால் நான் இன்னும் வேதனைப்பட்டாலும், என் இதயத்தைக் குணப்படுத்தியதற்காகவும், மற்றவர்களுக்கு உதவ எனது கதையைப் பயன்படுத்தியதற்காகவும் தேவனுக்கு நன்றி கூறுகிறேன்.
107-ம் சங்கீதத்தை எழுதியவர், தேவனுடைய மாறாத தன்மையால் களிகூர்ந்து இவ்வாறு பாடினார்: “கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.” (வ.1). "கர்த்தரால்.. மீட்கப்பட்(டவர்கள்)டு" "அப்படிச் சொல்லக்கடவர்கள்" (வ. 2 ,3), "அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக" (வ. 9) என்று அவர் வலியுறுத்தினார். தேவன் ஒருவரே "தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று" (வ. 8) என்ற வாக்குத்தத்தத்துடன் அவர் நம்பிக்கை அளித்தார்.
கிறிஸ்துவின் சிலுவை பலியின் மூலம் மீட்கப்பட்டவர்களாயினும் கூட, துக்கத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எவரும் தப்ப இயலாது. எவ்வாறாயினும், தேவனின் இரக்கத்தை நாம் அனுபவிக்க முடியும், ஏனெனில் அவர் நம் கதைகளைப் பயன்படுத்தி மற்றவர்களை தமது மீட்கும் அன்பிற்கு நேராய் நடத்துகிறார்.