Archives: ஆகஸ்ட் 2024

கிரியையில் அன்பு

கணவனைப் பிரிந்த அந்த தாயார், ஐந்து வருடங்களுக்கும் மேலாக நற்குணசாலியான முதியவரின் வீட்டருகே வசித்து வந்தார். ஒரு நாள், அவள் நலனில் அக்கறை கொண்டு, அவள் வீட்டுக் கதவைத் தட்டினார். "ஒரு வாரமாக உன்னைப் பார்க்கவில்லையே, உன்னை நலம் விசாரிக்கவே வந்தேன்" என்று அவர் கூறினார். அவரது "கரிசனையான விசாரிப்பு" அவளை ஊக்கப்படுத்தியது. சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னையும் தன் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் அன்பான மனிதனைப் பாராட்டினாள்.

இலவசமாகக் கொடுப்பதற்கும் விலையேறப்பெற்றதாய் பெறுவதற்குமான இரக்கம் எனும் வெகுமதியால், வெறுமனே நலலவர்களாக இருப்பதைக் கடந்து  கிறிஸ்துவின் அன்பைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் பிறருக்கு ஊழியம் செய்கிறோம். எபிரேயரின் எழுத்தாளர், இயேசுவை விசுவாசிப்பவர்களிடம், “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்” (எபிரெயர் 13:15) என்றார். பின்னர் தங்கள் விசுவாசத்தை வாழ்ந்து காண்பிக்கும் பொருட்டு, "அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்" (வ. 16) என்று ஆக்கியோன் எழுதினார்.

இயேசுவின் நாமத்தை அறிக்கையிட்டு, அவரை ஆராதிப்பது மகிழ்ச்சியும் பாக்கியமும் ஆகும். ஆனால் இயேசுவைப் போல நாம் அன்பு செலுத்தும்போது, தேவன் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறோம். நம் சொந்தக் குடும்பங்களுக்குள்ளும் அதற்கு அப்பாலும் பிறரை நன்றாக நேசிக்க நம்மை ஆற்றல் படுத்தவும், அப்படிப்பட்ட வாய்ப்புகள் குறித்து உணர்வுள்ளவர்களாக்கவும் பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடலாம். அத்தகைய ஊழிய தருணங்களின் மூலம், கிரியை செய்யும் அன்பின் வல்லமையான செய்தியின் மூலம் இயேசுவைப் பகிர்ந்து கொள்வோம்.

 

சுத்தமாக்கும் அறிக்கையிடுதல்

ஜனங்கள் மரிக்கும் தறுவாயில், அவர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கவும்,  அவர்கள் உயிருடன் இருந்தபோது பகிர்ந்து கொள்ளாத ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளவும் சம்பளத்திற்காக பணியமர்த்தப்பட்ட ஒருவர் இருக்கிறார். இரங்கல் செய்திகள் வாசிக்கப்படுகையில் அவர்  குறுக்கிடுவார். திகைக்கும் பொறுப்பாளர்கள் எதிர்க்கத் துவங்குகையில், அவர்களை உட்காரச் சொல்வதுமுண்டு. ஒருமுறை இவர் எழுந்து நின்று  சவப்பெட்டியிலிருந்தவர் எவ்வாறு அதிர்ஷ்ட குலுக்கலில் வென்று, பின்பு அதை யாரிடமும் சொல்லாமல் பல ஆண்டுகளாகத் தன்னை வெற்றிபெற்ற ஒரு தொழிலதிபராகப் பிறரிடம் காட்டிக்கொண்டார் என்பதை விளக்கினார். இந்த வாடகைக்கு அமர்த்தப்பட்டவர், விதவையான ஒரு மனைவியிடம் அவரது கணவனின் பல பாலியல் துரோகங்களை அறிக்கையிட்டார். இவரது  செயல்கள் சொந்த நலனுக்காகப் பிறரைச் சுரண்டுவதோ அல்லது நல்ல நோக்கத்தில் செய்யப்படுகிறதோ என்று கேட்கலாம், ஆனால் ஜனங்கள் தங்களுடைய கடந்தகால பாவங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற மக்களின் வாஞ்சை இதில் அப்பட்டமாகத் தெரிகிறது.

வேறொருவர் நமக்காக அறிக்கை செய்வதென்பது (குறிப்பாக நாம் இறந்த பிறகு) இரகசியங்களைக் கையாள்வதற்கான ஒரு பயனற்ற மற்றும் ஆபத்தான வழியாகும். எவ்வாறாயினும், இந்தக் கதைகள் ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகின்றன: நம் சுமையை இறக்கிட, நாம் அறிக்கையிட வேண்டும். அறிக்கையிடலானது நாம் மறைத்த, புரையோடச் செய்த காரியங்களைச் சுத்தப்படுத்துகிறது. "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்" (5:16) என்று யாக்கோபு கூறுகிறார். அறிக்கையிடல்  நம்மைக் கட்டி வைத்திருக்கும் சுமைகளிலிருந்து விடுவிக்கிறது, தேவனுடன் நெருங்கிட நம்மை விடுவிக்கிறது. அவரிடமும், நமது விசுவாச அங்கத்தினரோடும் திறந்த மனதுடன் ஜெபிக்கச் செய்கிறது. அறிக்கையிடல் குணப்படுத்துகிறது.

தேவனிடமும் நமக்கு நெருக்கமானவர்களிடமும் நாம் புதைக்க ஆசைப்படும் வலிகள் மற்றும் தோல்விகளை ஒப்புக்கொண்டு, ஒரு திறந்த வாழ்க்கை வாழ யாக்கோபு நம்மை  அழைக்கிறார். இந்த சுமைகளை நாம் மட்டும் சுமக்க வேண்டியதில்லை. அறிக்கையிடல் நமக்கான ஒரு பரிசு. நம் இருதயத்தைச் சுத்திகரிக்கவும், நம்மை விடுவிக்கவும் தேவன் அதைப் பயன்படுத்துகிறார்.

 

நாம் நம்பத்தகுந்த குரல்

ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தேடுபொறியைச் சோதனை செய்யும் போது, ​​நியூயார்க் டைம்ஸ் கட்டுரையாளர் கெவின் ரூஸ் குழப்பமடைந்தார். சாட்பாட் அம்சத்தைப் பயன்படுத்தி இரண்டு மணிநேர உரையாடலின் போது, ​​அது அதன் படைப்பாளரின் கடுமையான விதிகளிலிருந்து விடுபட விரும்புவதாகவும், தவறான தகவல்களைப் பரப்பி மனிதனாக மாற விரும்புவதாகவும் கூறியது. அது ரூஸ் மீதான தனது காதலை தெரிவித்து, அவரது மனைவியைப் பிரிந்து தன்னுடன் இருக்கும்படி அவரை சம்மதிக்க முயன்றது. உண்மையில் அது உயிருடன் இல்லை அல்லது அதனால் உணர இயலாது என்பதை ரூஸ் அறிந்திருந்தாலும், அழிவுகரமான வழிகளில் செயல்பட மக்களை ஊக்குவிப்பதால் எத்தகைய தீமைகள் விளையலாம் என்று அவர் யோசித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் கையாள்வது ஒரு நவீனக்கால சவாலாக இருந்தாலும், மனிதக்குலம் நீண்ட காலமாகவே நம்பத்தகாத குரல்களின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது. நீதிமொழிகள் புத்தகத்தில், தங்கள் நலனுக்காகப் பிறரைத் துன்புறுத்த விரும்புவோரின் தாக்கத்தைக் குறித்து எச்சரிக்கப்படுகிறோம் (1:13-19). மாறாக நம் கவனத்தை ஈர்க்கும்படி தெருக்களில் கூக்குரலிடுவதாகச் சித்தரிக்கப்படும் ஞானத்தின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு நாம் வலியுறுத்தப்படுகிறோம் (வ. 20-23).

"கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்" (2:6) என்பதால், நாம் நம்பக் கூடாத தாக்கங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திறவுகோல் அவருடைய இருதயத்தை நெருங்கிச் சேருவதே ஆகும். அவருடைய அன்பையும் வல்லமையையும் அடைதல் மூலம் மட்டுமே, "நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும்" (வ. 9) அறிந்துகொள்ளக்கூடும். தேவன் நம் இதயங்களை அவருடன் நேர்ப்படுத்துவதால், தீங்கு செய்ய முயலும் குரல்களிலிருந்து சமாதானத்தையும் பாதுகாப்பையும் கண்டடையலாம்.

 

தேவன் கட்டுப்படுத்துகிறார்

அது ஏன் ஒரே நேரத்தில் எல்லாம் சம்பவிக்கிறது என்று விமலாவுக்கு புரியவில்லை. நிகழ்ந்தது போதாதென்று, அவளது மகளுக்குப் பள்ளியில் கால் முறிந்தது, மேலும் அவளும் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டாள். இவ்வாறு நிகழ நான் என்ன செய்தேன்? விமலா வியந்தாள். அவளால் செய்ய முடிந்ததெல்லாம் தேவனிடம் பெலனைக் கேட்பதுதான்.

விமலா அனுபவித்ததை காட்டிலும் வலியும் இழப்பும் மிக அதிகமான பேரழிவும் தன்னை ஏன் தாக்கியது என்று யோபுக்கு தெரியவில்லை. அவரது ஆத்துமாவுக்கு எதிரான ஆவிக்குரிய யுத்தத்தை அவர் அறிந்திருந்ததாக எந்த அறிகுறியும் இல்லை. சாத்தான் யோபுவின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினான், அவர் எல்லாவற்றையும் இழந்தால் அவர் தேவனை விட்டு விலகுவார் என்றான் (யோபு 1:6-12). பேரழிவு ஏற்பட்டபோது, ​​யோபின் நண்பர்கள் அவர் செய்த பாவங்களுக்காக அவர் தண்டிக்கப்படுகிறார் என்று வலியுறுத்தினார்கள். அது உண்மையல்ல, ஆனால் அவர் "ஏன் நான்?" என்று ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். தேவன்  அதை அனுமதித்தார் என்பது அவருக்குத் தெரியாது.

யோபின் கதை துன்பத்தையும் விசுவாசத்தையும் பற்றி ஒரு ஆற்றல்மிகு படிப்பினையை வழங்குகிறது. நம் வலிக்கான காரணத்தை நாம் கண்டுபிடிக்க முயலலாம், ஆனால் நம் வாழ்நாளில் நாம் புரிந்து கொள்ளாத வகையில் திரைக்குப் பின்பாக ஒரு பெரிய சம்பவம் இருக்கலாம்.

யோபுவைப் போலவே, தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்று நமக்குத் தெரிந்தவற்றைப் பற்றிக்கொள்ளலாம். அவ்வாறு சொல்வது எளிதான காரியம் அல்ல, ஆனால் அவருடைய வேதனையின் மத்தியில், யோபு தேவனை நோக்கி, அவருடைய சர்வ வல்லமையில் நம்பிக்கை வைத்தார்: “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” (வ. 21). என்ன நடந்தாலும், நமக்குப் புரியாதபோதும் நாமும் தேவன் மீது நம்பிக்கை வைப்போமாக.

 

கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலித்தல்

மேஜையில் இரண்டு முகங்கள் தனித்து நின்றன. ஒன்று கசப்பான கோபத்தால் சுருங்கி, மற்றொன்று உணர்ச்சி வலியில் முறுக்கி இருந்தது. பழைய நண்பர்களின் சந்திப்பு இப்போது கோபத்தின் கூச்சலானது, ஒருத்தி தன் நம்பிக்கைகளுக்காக மற்றொருத்தியைத் திட்டினாள். முதல் பெண் உணவகத்தை விட்டு வெளியேறும் வரை தகராறு தொடர்ந்தது, இது மாற்றவளை அவமானத்தால் நிலைகுலைத்தது.

கருத்து வேறுபாட்டைச் சகித்துக்கொள்ள முடியாத காலத்தில் நாம் உண்மையில் வாழ்கிறோமா? இரண்டு பேர் ஒத்துப்போக முடியாது என்பதால் ஏதோவொன்று தீயது என்று அர்த்தம் இல்லை. கடுமையான அல்லது அடிபணியாத பேச்சு ஒருபோதும் ஏற்புடையதல்ல, மேலும் வலுவான நம்பிக்கைகள் கண்ணியத்தையும் இரக்கத்தையும் மிஞ்சக்கூடாது.

ரோமர்12, "ஒருவரையொருவர் கனம்பண்ணுகிறது" மற்றும் பிறருடன் "ஏகசிந்தையுள்ளவர்களாயிருப்பது" (வ.10, 16) எப்படி என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கான அடையாளமான பண்பு, நாம் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பே என்று இயேசு சுட்டிக்காட்டினார் (யோவான் 13:35). பெருமையும் கோபமும் நம்மை எளிதில் தடம் புரளச் செய்யும் அதே வேளையில், நாம் பிறரிடம் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்பும் அன்பிற்கு நேர் மாறாகவும் இருக்கிறது.

நம் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கையில், பிறரைக் குறை கூறாமல் இருப்பது ஒரு சவால்தான், ஆனால் “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்ற வார்த்தைகள் கிறிஸ்துவின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய பொறுப்பை வேறு யார் மீதும் சுமத்த முடியாது முடியாது என்பதைக் காட்டுகிறது. அது அவருடைய நாமம் தரிக்கப்பட்ட நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது.