Archives: ஆகஸ்ட் 2024

பரலோகம் பாடுகிறது

அந்த உயர்நிலைப் பள்ளி பாடகர்கள் அர்ஜென்டினா பாடலான "எல் சியோலோ கான்டா அலெக்ரியா" பாடியபோது அவர்களின் குரல்களில் மகிழ்ச்சி பொங்கியது. அதை ரசித்தேன், ஆனால் எனக்கு ஸ்பானிஷ் தெரியாததால் பாடல் வரிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பாடகர் குழு "அல்லேலூயா!" என்று மகிழ்ச்சியுடன் பிரகடனப்படுத்த  தொடங்கியதும், எனக்கு பரீட்சயமான அந்த வார்த்தையை விரைவிலேயே என் செவியில் விழுந்தது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மொழிகளில் ஒரே மாதிரியாக ஒலிக்கும் தேவனுக்கான துதிப் பிரகடனமான “அல்லேலூயா” என்பதைத் திரும்பத் திரும்பக் கேட்டேன். பாடலின் பின்னணியை அறிய ஆவலுடன், நிகழ்ச்சிக்குப்பின் இணையத்திற்குச் சென்றேன், "பரலோகம் சந்தோஷத்தால் பாடுகிறது" என்று மொழிபெயர்க்கப்பட்டதைக் கண்டுபிடித்தேன்.

வெளிப்படுத்துதல் 19 இல் உள்ள ஒரு கொண்டாட்டம் நிறைந்த பத்தியில், அந்தப் பாடலில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைநிலையின் ஒரு துளி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது; பரலோகம் முழுவதும் மகிழ்ச்சி! புதிய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகத்தில் அப்போஸ்தலன் யோவானின் எதிர்காலத்தைப் பற்றிய தரிசனத்தில், தேவனுக்கு நன்றி தெரிவிக்கும் மகத்தான ஜனத்திரள் மற்றும் தேவதூதர்கள் பரலோகத்தில் கூடியிருந்ததைக் கண்டார். தீமையையும் அநீதியையும் வென்ற தேவனின் வல்லமையையும், முழு பூமியின் மீதும் அவருடைய ஆளுகையையும், அவருடன் என்றென்றும் வாழும் நித்திய வாழ்க்கையையும் அந்த பாடல் குழுவின் குரல்கள் கொண்டாடுகிறது என்று யோவான் எழுதினார். மீண்டும் மீண்டும், பரலோகவாசிகள் அனைவரும் “அல்லேலூயா!” அல்லது “தேவனைத் துதியுங்கள்!” என்று அறிவிக்கிறார்கள் (வ. 1, 3, 4, 6).

ஒரு நாள்  "சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து" (5:9)  வரும் மக்கள் தேவனின் மகிமையை அறிவிப்பார்கள். மேலும் மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு மொழியிலும் நம் குரல்கள் அனைத்தும் ஒன்றாக “அல்லேலூயா!" என்று முழங்கும்.

 

ஒருவருக்கொருவர் உதவுங்கள்

அவ்வளவாகப் பிரபலமாகாத பயிற்சியகத்தை சேர்ந்த கிரிக்கெட் அணியினர் கிரிக்கட் மண்டல போட்டிக்காகக் களம் இறங்கியபோது, ​​அரங்கிலிருந்த ரசிகர்கள் தோல்வியடையக்கூடிய அந்த  அணிக்கு ஆரவாரம் செய்து ஊக்குவித்தனர். இந்த அணி முதல் சுற்றில் வெற்றிபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் வென்றனர். இப்போது அவர்களுடன் இசைக்குழு இல்லையென்றாலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கைகள் பிரிவிலிருந்து அவர்களின் பள்ளி கீதம் ஒலிக்கக் கேட்டனர். இப்போது வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர்களின் எத்திரணியின் இசைக்குழுவினர், போட்டி முடியும் சில நிமிடங்களுக்கு முன்புதான் இவர்களின் பள்ளி பாடலைக் கற்றுக்கொண்டனர். அந்த இசைக்குழுவினர் தங்களுக்குத் தெரிந்த பாடல்களை வெறுமனே வாசித்திருக்கலாம், ஆனால் அவர்கள் மற்றொரு பள்ளி மற்றும் மற்றொரு குழுவிற்கு உதவ அந்த பாடலைக் கற்றுக்கொண்டனர்.

இந்த இசைக்குழுவின் செயல்கள் பிலிப்பியரில் விவரிக்கப்பட்டுள்ள ஒற்றுமையை அடையாளப்படுத்துவதைக் காணலாம். பவுல் பிலிப்பியில் உள்ள ஆரம்பக்கால சபையாருக்கும் இன்று நமக்கும், ஒற்றுமையில் அல்லது "ஏக சிந்தை(யுடன்)" (பிலிப்பியர் 2:2) வாழச் சொன்னார், குறிப்பாக அவர்கள் கிறிஸ்துவில் ஒன்றுபட்ட காரணத்தால். இதைச் செய்ய, சுயநலமான  நோக்கத்தை விட்டுவிட்டு, பிறர் நலனை தங்கள் சொந்த நலன்களுக்கு முன்னதாக கருத்தில் கொள்ளும்படி அப்போஸ்தலன் அவர்களை ஊக்குவித்தார்.

நம்மை விடப் பிறரை முக்கியத்துவப்படுத்துவது இயல்பாகவே வராமல் இருக்கலாம், ஆனால் கிறிஸ்துவை அவ்வாறே நாம் பிரதிபலிக்கலாம். பவுல்,  “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (வ.3) என்று எழுதினார். நம்மீது மட்டுமே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, தாழ்மையுடன் “பிறருக்கானவகளையும் நோக்கு(வது)வானாக” (வ.4) சிறந்தது.

நாம் எப்படி மற்றவர்களைத் தாங்கக் கூடும்? அவர்களுக்கு எதிரானதைச் செய்வதோ அல்லது அவர்களுக்குத் தேவையானதை வழங்குவதோ என்பதை அவர்களின் ஆர்வங்களைக் கவனமாகப் பரிசீலிப்பதன் மூலமே.

கும்பத்திற்கு மேலானதாக

செல்வா ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் முழுநேர பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவரது மூத்த சகோதரன் மோகன் மகிழ்ச்சியடைந்தார், ஆனால், சகோதரர்களாக, சிறுவயதில் செல்வாவை அவர் எவ்வாறு புழுதியில் தள்ளி சண்டையில் வெல்வார் என்பதைச் சொல்லி அவரையறியாமலேயே கிண்டல் செய்தார். செல்வா வாழ்க்கையில் வெகுதூரம் முன்னேறிவிட்டார், எனினும் அவர் எப்போதும் மோகனின் சிறிய தம்பியாகவே இருப்பார்.

நீங்கள் மேசியாவாகவே இருந்தாலும் குடும்பத்தால் மதிக்கப்படுவது கடினம். இயேசு நாசரேத்தின் மக்களிடையே வளர்ந்தார், எனவே அவர் விசேஷித்தவர் என்று நம்புவதற்கு அவர்கள் சிரமப்பட்டனர். ஆனாலும் அவர்கள் அவரை கண்டு வியந்தனர். "இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா?" (மாற்கு 6:2-3). இயேசு, "தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்" (வ. 4) என்று குறிப்பிட்டார். இவர்கள் இயேசுவை நன்கு அறிந்திருந்தனர், ஆனால் அவர் தேவனின் குமாரன் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.

ஒருவேளை நீங்கள் ஒரு ஆவிக்குரிய குடும்பத்தில் வளர்க்கப்பட்டிருக்கலாம். உங்கள் ஆரம்பக்கால நினைவுகளில் சபைக்குச் செல்வதும், பாடல்களைப் பாடுவதும் நிறைந்திருக்கலாம். இயேசு எப்போதும் ஒரு குடும்பத்தாரைப் போலவே உணர்ந்தார். நீங்கள் அவரை விசுவாசித்துப் பின்பற்றினால், இயேசு உங்கள் குடும்பத்தினர். அவர் "(நம்மை) சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்" (எபிரெயர் 2:11). தேவனின் குடும்பத்தில் இயேசு நம் மூத்த சகோதரர் (ரோமர் 8:29) இது ஒரு பெரிய பாக்கியம், ஆனால் நம்மிடையேயான நெருக்கம் அவரை சாதாரணமானவராகக் காட்டலாம். ஒருவர் குடும்பத்தினராக இருப்பதால் அவர்கள் விசேஷித்தவர் அல்ல என்று அர்த்தமல்ல.

இயேசு நமது குடும்பத்தினரும், குடும்பத்தினரை விட மேலானவர் என்பதிலும்  உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? இன்று நீங்கள் அவரைப் பின்தொடரும்போது, ​​அவர் மேலும் நெருக்கமானவராகவும், மேலும் விசேஷித்தவராகவும் உங்களுக்கு மாறுவாராக.

 

குற்றவாளியாயினும் விடுதலை

"நான் அதைச் செய்யவில்லை!" அது ஒரு பொய், தேவன் என்னை இடைமறித்திருக்காவிட்டால் நான் கிட்டத்தட்ட அதிலேயே நிலைத்திருந்திருப்பேன். நான் நடுநிலைப் பள்ளியிலிருந்தபோது, ​​ஒரு நிகழ்ச்சியின் போது எங்கள் இசைக்குழுவினரின் பின்பாக எச்சிலைத் துப்பிய கூட்டத்தில் நானும் இருந்தேன். எங்கள் இயக்குநர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி மற்றும் ஒழுக்கத்திற்கு பேர்போனவர், நான் அவரை கண்டாலே பயப்படுவேன். அதனால் என் சகாக்கள் என்னைக் குற்றத்தில் சிக்கவைத்தபோது, ​​நான் அவரிடம் பொய் சொன்னேன். பிறகு என் தந்தையிடமும் பொய் சொன்னேன்.

ஆனால் பொய்யைத் தொடர்ந்திடத் தேவன் அனுமதிக்க மாட்டார். அவர் எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியைக் கொடுத்தார். பல வாரங்கள் எதிர்த்த பிறகு, நான் மனந்திரும்பினேன். நான் தேவனிடமும் அப்பாவிடமும் மன்னிப்பு கேட்டேன். சிறிது நேரம் கழித்து, நான் எனது இயக்குநரின் வீட்டிற்குச் சென்று கண்ணீருடன் ஒப்புக்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக, அவர் அன்பாகவும் மன்னிப்பவராகவும் இருந்தார்.

அந்த பாரம் நீங்கினது எவ்வளவு அருமையாக இருந்தது என்பதை என்னால் மறக்கவே முடியாது. நான் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டு, பல வாரம் கழித்து முதல்முறையாக சநதோஷப்பட்டேன்.  தாவீது தனது வாழ்க்கையிலும் குற்றம் சுமந்து அறிக்கை செய்த நேரத்தை விவரிக்கிறார். அவர் தேவனிடம்,  “நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.  இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால்” என்றவர் மேலும்,  "என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்" (சங்கீதம் 32:3-5) என்கிறார்.

நம்பகத்தன்மை தேவனுக்கு முக்கியம். நம்முடைய பாவங்களை அவரிடம் ஒப்புக்கொள்ளவும், நாம் தவறிழைத்தவர்களிடமும் மன்னிப்பு கேட்க அவர் விரும்புகிறார். "தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்" (வ. 5) என்று தாவீது அறிவிக்கிறார். தேவனின் மன்னிப்பால் உண்டாகும் விடுதலையை அனுபவிப்பது எவ்வளவு அருமையானது!

 

தேவனின் தாராளமான அன்பு

ஒரு பட்டமளிப்பு விழாவில், மேக்கிங் யுவர் பெட் எவெரி டே என்ற தலைப்பில் பேசி இணையத்தில் 100மில்லியன் முறை பார்க்கப்பட்ட  காணொளியில் தோன்றிய இராணுவ வீராகவே அவர் அறியப்படுகிறார். ஆனால் ஓய்வுபெற்ற கடற்படை அட்மிரல் வில்லியம் மெக்ராவன் மற்றொரு முக்கியமான படிப்பினையைப்  பகிர்ந்து கொள்கிறார். மத்திய கிழக்கில் ஒரு இராணுவ நடவடிக்கையின் போது, ​​ஒரு அப்பாவி குடும்பத்தைச் சேர்ந்த பலர் தவறுதலாகக் கொல்லப்பட்டதை மெக்ராவன் வருத்தத்துடன் ஒப்புக்கொண்டார். அக்குடும்பத்திடம் நேர்மையாக மன்னிப்பு கேட்க வேண்டியதே சரியானது  என்று நம்பிய மெக்ராவன், மனம் உடைந்த தந்தையிடம் துணிகரமாக மன்னிப்பு கேட்டார்.

"நான் ஒரு சிப்பாய், ஆனால் எனக்கும் குழந்தைகள் உள்ளனர், என் உள்ளம் உங்களுக்காக வருந்துகிறது” என்று மெக்ராவன் ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் அவரிடம் கூறினார். அந்த மனிதனின் பதில்? அவர் மெக்ராவனுக்கு மன்னிப்பு என்ற தாராள பரிசை வழங்கினார். அந்த மனிதனின் உயிர் பிழைத்த மகன் மூலம், “மிக்க நன்றி. உங்களுக்கு எதிராக நாங்கள் எதையும் எங்கள் உள்ளத்தில் கொள்ள மாட்டோம்" என்று அவரிடம் கூறினார்.

அப்போஸ்தலனாகிய பவுல் இதுபோன்ற தாராளமான கிருபையைப் பற்றி எழுதினார்: "நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு" (கொலோசெயர் 3:12). வாழ்க்கை நம்மை பல்வேறு வழிகளில் சோதிக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார், எனவே கொலோசேயில் உள்ள சபை விசுவாசிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (வ.13).

இத்தகைய இரக்கமுள்ள, மன்னிக்கும் இதயங்களைக் கொண்டிருக்க எது நமக்கு உதவுகிறது? தேவன் தாராளமான அன்பே. பவுல் நிறைவு செய்ததுபோல்,  "இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்" (வ.14).