வயது வந்தோருக்கான நட்பைப் பற்றி ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தைத் தொடங்க நான் ஒருபோதும் திட்டமிடவில்லை. அவ்வாறு செய்ய நான் அழைக்கப்பட்டபோது, எனக்குள் பல கேள்விகள் இருந்தன. தொண்டு நிறுவனம் எவ்வாறு நிதியளிக்கப்படும், அதை உருவாக்க எனக்கு யார் உதவ வேண்டும்? இந்த விஷயங்களில் எனக்கு வணிகப்புத்தகத்தைக் காட்டிலும் வேதாகமத்திலிருந்தே அதிக உதவிகள் கிடைத்தது.
எதையாவது கட்டியெழுப்ப தேவனால் அழைக்கப்பட்ட எவருக்கும் எஸ்றா புத்தகம் இன்றியமையாத வாசிப்பாகும். இப்புத்தகம் யூதர்கள் சிறையிருப்பிற்கு பின்பு தங்கள் எருசலேம் நகரத்தை மீண்டும் எவ்வாறு கட்டியெழுப்பினார்கள் என்பதையும் அதை கட்டுவதற்கு தேவையான பொருளாதார தேவைகளை தேவன் எவ்வாறு சந்தித்தார் என்பதையும் விவரிக்கிறது (எஸ்ரா 1:4-11; 6:8-10). மேலும் தன்னார்வலர்களும் ஒப்பந்தக்காரர்களும் எவ்வாறு வேலையைச் செய்தார்கள் (1:5; 3:7) என்பதையும் விவரிக்கிறது. இது ஆயத்தமாகும் நேரத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. யூதர்கள் சிறையிருப்பிலிருந்து மீண்டு திரும்பி, இரண்டு ஆண்டுகளாய் தங்கள் கட்டுமானப்பணியை துவக்கவில்லை (3:8). எதிர்ப்பு எவ்வாறு வரக்கூடும் என்பதை இது காட்டுகிறது (அதி. 4). ஆனால் கதையில் ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. எந்தவொரு கட்டிடமும் தொடங்குவதற்கு ஒரு வருடம் முன்பு, யூதர்கள் பலிபீடத்தை கட்டியெழுப்பினர் (3:1-6). “கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை” என்றாலும் ஜனங்கள் தேவனை ஆராதித்தனர் (வச. 6). முதலாவது ஆராதனை நடைபெற்றது.
புதிதாக ஏதாவது தொடங்க தேவன் உங்களை அழைக்கிறாரா? நீங்கள் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினாலும், ஒரு வேதப்பாட படிப்பைத் தொடங்கினாலும், ஒரு ஆக்கப்பூர்வமான திட்டத்தைத் தொடங்கினாலும் அல்லது ஏதேனும் ஒரு புதிய வேலையைத் தொடங்கினாலும் எஸ்றாவின் கொள்கையானது முக்கியத்துவம் வாய்ந்தது. தேவன் கொடுத்த திட்டம் கூட நம் கவனத்தை அவரிடமிருந்து விலக்கிவிடலாம். எனவே முதலில் தேவன் மீது கவனம் செலுத்துவோம். நாம் வேலை செய்வதற்கு முன், அவரை ஆராதனை செய்வோம்.
யூதர்கள் ஏன் முதலில் பலிபீடத்தைக் கட்டினார்கள் என்று நினைக்கிறீர்கள்? இன்று உங்கள் பணிக்கு ஆராதனை எவ்வாறு பொருந்தக்கூடும்?
பரலோகத் தகப்பனே, இன்று நீர் எனக்குக் கொடுத்துள்ள பணிகள் உட்பட அனைத்திற்கும் ஆண்டவராக உம்மை ஆராதனை செய்கிறேன்.