எட்டு வாழைப்பழங்கள் இருக்கும் என்று நினைத்தேன். அதற்குப் பதிலாக, எனது வீட்டிற்கு வழங்கப்பட்ட மளிகைப் பைகளைத் திறந்தபோது, இருபது வாழைப்பழங்களைக் கண்டுபிடித்தேன்! நான் இங்கிலாந்துக்குச் சென்றதன் அர்த்தம், மளிகைப் பொருட்களை பவுண்டுகளில் ஆர்டர் செய்வதிலிருந்து கிலோகிராமில் அவற்றைக் கோருவதற்கும் மாறினேன் என்பதை நான் விரைவாக உணர்ந்தேன். மூன்று பவுண்டுகளுக்குப் பதிலாக, மூன்று கிலோகிராம் (கிட்டத்தட்ட ஏழு பவுண்டுகள்!) வாழைப்பழங்களை ஆர்டர் செய்திருந்தேன்.

தாராளமாய் பழங்கள் இருந்ததினால் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்பொருட்டு நான் வாழைப்பழ ரொட்டியை அதிகமாய் செய்தேன். அதற்காக நான் பழத்தை பிசைந்தபோது, எனது வாழ்க்கையின் மற்ற பகுதிகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். அங்கு நான் எதிர்பாராத மிகுதியை அனுபவித்தேன்.  மேலும் ஒவ்வொரு பாதையிலும் தேவனை நான் சாட்சியிட்டேன். 

பவுல் தனது வாழ்க்கையில் தேவனுடைய மிகுதியைப் பற்றி பிரதிபலிக்கும் இதேபோன்ற அனுபவத்தை பெற்றதாக தோன்றுகிறது. தீமோத்தேயுவுக்கு எழுதிய தனது முதல் கடிதத்தில், பவுல் இயேசுவுக்கு முன்பாக தனது வாழ்க்கையை விவரிக்கிறார். தான் “தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைசெய்கிறவனுமாயிருந்தேன்” என்றும் தன்னை “பிரதான பாவி” என்றும் விவரிக்கிறார் (1 தீமோத்தேயு 1:13,16). பவுலின் உடைந்த நிலையில், தேவன் கிருபையையும், விசுவாசத்தையும், அன்பையும் தாராளமாக ஊற்றினார் (வச. 14). அவருடைய வாழ்வில் உள்ள அனைத்து மிகுதிகளையும் விவரித்த பிறகு, பவுல் அப்போஸ்தலரால் தேவனுக்கு துதி செலுத்தாமல் இருக்க முடியவில்லை. தேவனுக்கே “கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக” என்று அறிவிக்கிறார் (வச. 17).

பவுலைப் போலவே, பாவத்திலிருந்து மீட்பதற்கான இயேசுவின் வாய்ப்பை ஏற்றுக்கொண்டபோது, நாம் அனைவரும் ஏராளமான கிருபையைப் பெற்றோம் (வச. 15). விளைந்த எல்லா ஆசீர்வாதங்களையும் பற்றி சிந்திக்க நாம் இடைநிறுத்தும்போது, அபரிவிதமாய் நம்மை ஆசீர்வதிக்கும் நமது தேவனுக்கு நன்றியுள்ள துதியில் பவுலுடன் இணைவதைக் காண்போம்.