இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் குண்டுவீசித் தாக்கப்பட்டபோது, பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அதன் அசல் வடிவமைப்பின்படி அதை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கூறினார். அது சிறியதாக இருக்க வேண்டும், எனவே விவாதங்கள் நேருக்கு நேர் இருக்கும். அது அரைவட்டமாக இல்லாமல் நீள்வட்டமாக இருக்க வேண்டும், அரசியல்வாதிகள் “சபையின் மையத்திற்கு வர” ஏற்றதாயிருக்கும். இது இடது மற்றும் வலதுசாரியினர் அறை முழுவதும் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் பிரிட்டனின் கட்சி அமைப்பைப் பாதுகாத்தது. மேலும் கட்சிமாறுமுன் கவனமாகச் சிந்திக்கவும் வேண்டியிருந்தது. “நாம் நமது கட்டிடங்களை வடிவமைக்கிறோம், பின்னர் நமது கட்டிடங்கள் நம்மை வடிவமைக்கின்றன” என்று சர்ச்சில் முடித்தார்.
யாத்திராகமத்தில் உள்ள எட்டு அதிகாரங்கள் (அதிகாரங்கள் 24-31) ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கான வழிமுறைகளை விவரிக்கின்றன. ஆறு (அதிகாரங்கள் 35-40) இஸ்ரவேலர் அதை எவ்வாறு செய்தனர் என்பதை விவரிக்கிறது. தேவன் அவர்களின் ஆராதனையில் அக்கறை காட்டினார். ஜனங்கள் பிராகாரத்தினுள் நுழைந்தபோது, மின்னும் தங்கமும், கூடாரத்தின் வண்ணமயமான திரைச்சீலைகளும் (26:1, 31-37) அவர்களை வியப்பூட்டின. தகனபலிபீடம் (27:1-8) மற்றும் தண்ணீர்தொட்டி (30:17-21) அவர்களின் மன்னிப்பின் கிரயத்தை அவர்களுக்கு நினைவூட்டியது. வாசஸ்தலத்தில் ஒரு குத்துவிளக்கு (25:31-40), சமூகப்பத்து மேசை (25:23-30), தூபபீடம் (30:1-6), மற்றும் உடன்படிக்கைப் பெட்டி (25:10-22) ஆகியவை இருந்தன. ஒவ்வொரு பொருளும் பெரும் முக்கியத்துவம் பெற்றிருந்தன.
இஸ்ரவேலுக்கு செய்ததைப் போல, தேவன் நம்முடைய ஆராதனை ஸ்தலத்திற்கு விரிவான வழிமுறைகளை வழங்கவில்லை, ஆனால் நமது ஆராதனை எவ்விதத்திலும் குறைவானதல்ல. நாம்தான் அவர் வாசம்பண்ணும்படி பிரித்தெடுக்கப்பட்ட கூடாரமாக இருக்க வேண்டும். நாம் செய்யும் அனைத்தும் அவர் யார், அவர் என்ன செய்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டட்டும்.
தேவனைக் குறித்தும், உங்கள் மீதான அவர் அன்பைக் குறித்தும், உங்கள் ஆராதனை எவ்வாறு கற்பிக்கிறது? நீங்கள் எத்தகைய மாற்றங்களைச் செய்ய விரும்புகிறீர்கள்?
தகப்பனே, நீரே என்னுடைய சிறந்த ஆராதனைக்குத் தகுதியானவர்.