மூன்று ஆண்டுகளாக வீட்டுத் தேவைகளைத் தவிர, கவிதா தனக்காக எதையும் வாங்கவில்லை. கோவிட்-19 பெருந்தொற்று எனது தோழியின் வருமானத்தைப் பாதித்தது, அவள் எளிமையான வாழ்க்கை முறையை தழுவினாள். “ஒரு நாள், எனது வீட்டை சுத்தம் செய்யும் போது, எனது பொருட்கள் எவ்வளவு மோசமாகவும், பழையதாகவும் இருப்பதை கவனித்தேன். அப்போதுதான் எனக்கு புதிய பொருட்களின் அருமை புரிந்தது; அவை தரும் புத்துணர்வும் உற்சாக உணர்வும் தனிதான். என் சுற்றுப்புறமே சோர்ந்துபோய் பழையதாக தோன்றியது. எதிர்காலமே இல்லை என்பது போல் உணர்ந்தேன்” என்று பகிர்ந்துகொண்டாள்.
வேதாகமத்தில் உள்ள சற்றே வித்தியாசமான ஒரு புத்தகத்தால் கவிதா உற்சாகம் கொண்டாள். எருசலேம் பாபிலோனிடம் வீழ்ந்த பிறகு, எரேமியாவால் எழுதப்பட்ட புலம்பல், தீர்க்கதரிசியும், ஜனங்களும் அனுபவித்த துயரத்தின் ஆறா காயத்தை விவரிக்கிறது. எனினும், துயரத்தின் விரக்தியின் மத்தியிலும், நம்பிக்கைக்கான உறுதியான அடித்தளம் உள்ளது; அது தேவனின் அன்பு. “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்” (3:22-23) என்று எரேமியா எழுதினார்.
ஒவ்வொரு நாளினூடும் தேவனின் ஆழமான அன்பு எப்பொழுதுமே புதிதாக உண்டாயிருப்பதை கவிதா உணர்ந்தாள் . எதிர்நோக்குவதற்கு இனி எதுவும் இல்லை என்று சூழ்நிலைகள் நம்மை உணர்த்தும்போதும், அவருடைய உண்மைத்தன்மையை நாம் சிந்தித்து, அவர் நம்மைப் போஷிப்பதை ஆவலுடன் எதிர்நோக்கலாம். நம் நம்பிக்கை வீண் போகாது என்பதையறிந்து, நாம் நிச்சயமாகத் தேவனில் நம்பிக்கை கொள்ளலாம் (வ. 24-25). ஏனெனில் அந்த நம்பிக்கை அவருடைய உறுதியான அன்பாலும், இரக்கத்தாலும் காக்கப்படுகிறது.
“தேவனின் அன்பு எப்படியோ ஒவ்வொரு நாளிலும் எனக்குப் புதிதாயுள்ளது. ஆகவே நான் நம்பிக்கையோடு எதிர்நோக்குவேன்” என்கிறாள் கவிதா.
உங்கள் சூழ்நிலையில் எந்த நம்பிக்கையும் இல்லாததுபோல் நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்? தேவனின் அன்பு "ஒவ்வொரு காலையும் புதியது" என்ற வாக்குத்தத்தம் உங்களுக்கு எவ்வாறு நம்பிக்கை அளிக்கிறது?
அன்பு தேவனே, ஒவ்வொரு நாளும் அதனோடு உமது உறுதியான, நிச்சயமான அன்பைக் கொண்டு வருகிறதற்காக உமக்கு நன்றி.