பாதங்களையும் பாத்திரங்களையும் கழுவுதல்
சார்லி மற்றும் ஜானின் ஐம்பதாவது திருமண ஆண்டு விழாவில், அவர்கள் தங்கள் மகன் ஜானுடன் ஒரு ஓட்டலில் காலை உணவை சாப்பிட்டனர். அன்று உணவகத்தில் ஒரு மேலாளர், சமையல்காரர் மற்றும் தொகுப்பாளினி, பணிப்பெண் மற்றும் பணம் சேகரிக்கும் ஒருவர் என்று வெகு குறைவான பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் காலை உணவை முடித்ததும், சார்லி தனது மனைவி மற்றும் மகனின் பக்கம் திரும்பி, “அடுத்த சில மணிநேரங்களில் உங்களுக்கு வேறு ஏதாவது முக்கியமான வேலை இருக்கிறதா?” என்று கேட்க, அவர்கள் இல்லை என்று பதிலளித்தனர்.
எனவே மேலாளரின் அனுமதியுடன், சார்லியும் ஜானும் உணவகத்தின் பின்புறத்தில் பாத்திரங்களைக் கழுவத் தொடங்கினர். ஜான், உணவுகள் சிதறிக்கிடந்த மேசைகளைத் துடைக்கத் தொடங்கினார். ஜானின் கூற்றுப்படி, அன்று நடந்தது உண்மையில் ஆச்சரியப்படும் காரியம் இல்லை. அவனுடைய பெற்றோர், இயேசு “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய” வந்தார் (மாற்கு 10:45) என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுத்தே வளர்த்திருக்கிறார்கள்.
யோவான் 13ல், கிறிஸ்து தம் சீஷர்களுடன் கடைசியாகப் பகிர்ந்துகொண்ட உணவைப் பற்றி வாசிக்கிறோம். அன்றிரவு, அவர்களின் அழுக்கு கால்களைக் கழுவுவதன் மூலம் தாழ்மையின் ஊழியத்தைக் குறித்து இயேசு அவர்களுக்குக் கற்பித்தார் (வச. 14-15). பன்னிரண்டு பேர்களின் கால்களைக் கழுவும் கீழ்த்தரமான வேலையைச் செய்ய அவர் தயாராக இருந்தால், அவர்களும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் ஊழியம் செய்திருக்கக்கூடும்.
நாம் செய்ய வேண்டிய ஊழியங்களின் தன்மை வித்தியாசப்படலாம், ஆனால் அது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்பதை மறுக்கமுடியாது. ஒருவர் புகழைப்பெறுவதற்காய் இந்த சேவைப் பணியில் ஈடுபடுவதில்லை, மாறாக, மற்றவர்களுக்கு சேவை செய்வதின் மூலம் நம்முடைய தாழ்மையான, தியாக உருவான தேவனுக்கு மகிமையைச் செலுத்துகின்றனர்.
தேவனை பின்பற்ற கற்றுக்கொள்ளுதல்
“ஒரு சராசரி நபர் வாழ்நாளில் 7,73,618 முடிவுகளை எடுப்பார் என்றும் அதில் 143,262 முடிவுகளுக்காக அவர் வருத்தப்படுகிறார்” என்று ஒரு பிரிட்டிஷ் செய்தித்தாள் கூறுகிறது. இந்த எண் இலக்க கணக்கு எந்த அளவிற்கு சரி என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நம் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற முடிவுகளை நாம் எதிர்கொள்கிறோம் என்பது உண்மையே. அவை எத்தனை என்று அறியும்போது நாம் ஒருவேளை ஆச்சரியப்படக்கூடும். அதிலும் குறிப்பாய், நமது தேர்வுகள் அனைத்தும் விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கருதும்போது, சில மற்றவர்களை விட மிக முக்கியமானவைகளாய் தெரியும்போது ஆச்சரியமடையலாம்.
நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்த பிறகு, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் புதிய தேசத்தின் விளிம்பில் நிற்கின்றனர். அவர்கள் தேசத்திற்குள் பிரவேசித்த பின்னர், அவர்களின் தலைவனான யோசுவா அவர்களுக்கு ஒரு சவாலான தேர்வை அறிவிக்கிறார்: “கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்” சேவியுங்கள் என்கிறார். “உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை” (யோசுவா 24:14) அகற்றிவிடவும் எச்சரிக்கிறார். மேலும் யோசுவா, “கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்... நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” என்று கூறுகிறார்.
ஒவ்வொரு புதிய நாளையும் நாம் தொடங்கும் போது, பல தீர்மானங்களை நாம் எடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். தேவனை முன்நிறுத்தி நாம் எடுக்கும் தீர்மானங்களில் தேவன் மகிமைப்படுவார். அவருடைய ஆவியானவரின் வல்லமையினாலே, அவரை அனுதினமும் பின்பற்றும் தீர்மானத்தை நாம் எடுக்க பிரயாசப்படுவோம்.
பிழைகளிலிருந்து கற்றுக்கொள்ளுதல்
1929 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தை வீழ்த்தியது போன்ற எதிர்கால நிதித் தவறுகளைத் தவிர்க்க உதவும் வகையில், ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் தவறுகளின் நூலகம் என்று ஒன்று (டுiடிசயசல ழக ஆளைவயமநள) நிறுவப்பட்டது. அடுத்த தலைமுறை பொருளாதார வல்லுனர்களுக்கு கல்வி கற்பதற்கு உதவும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களின் தொகுப்பை இது உள்ளடக்கியுள்ளது. நூலகத்தின் கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, “புத்திசாலி மக்களும் முட்டாள்தனமான செயல்களைச் செய்கிறார்கள்” என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒரே வழி, தங்களுடைய முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதுதான் என்று அந்த கண்காணிப்பாளர்கள் நம்புகிறார்கள்.
சோதனையை மேற்கொள்வதற்கும், நிலையான ஆவிக்குரிய ஜீவியத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், தேவ ஜனங்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதே சிறந்த வழி என்று பவுல் கொரிந்தியர்களுக்கு அறிவுறுத்துகிறார். அவ்வாறு செய்வதின் மூலம் அவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தை மேன்மைப் பாராட்டாமல், இஸ்ரவேலர்களின் தோல்விகளிலிருந்து ஞானத்தைக் கற்றுக்கொள்ள அவர்களை மாதிரிகளாய் பயன்படுத்துகிறார். இஸ்ரவேலர்கள் விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு, விபச்சாரம் செய்து, தேவனுடைய சித்தத்திற்கும் நோக்கத்திற்கும் விரோதமாக முறுமுறுத்து, தேவன் ஏற்படுத்திய தலைமைத்துவத்திற்கு விரோதமாக கலகம்பண்ணினார்கள். அவர்களுடைய பாவத்தின் காரணமாக, அவர்கள் அவருடைய சிட்சையை அனுபவிக்க நேர்ந்தது (1 கொரிந்தியர் 10:7-10). இஸ்ரவேலின் தவறுகளை மீண்டும் செய்வதைத் கிறிஸ்தவர்கள் தவிர்க்கும்பொருட்டு, பவுல் இந்த வரலாற்று “உதாரணங்களை” வேதத்திலிருந்து முன்வைக்கிறார் (வச. 11).
தேவனுடைய உதவியோடு, அவருக்கு கீழ்படிதலை வெளிப்படுத்தும் பொருட்டு, நம்முடைய தவறுகளிலிருந்தும் மற்றவர்களுடைய தவறுகளிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம்.
இயேசுவுக்காய் மற்றவர்களுக்கு ஊழியம் செய்தல்
“ஸ்டார் ட்ரெக்” என்ற தொடரில் லெப்டினன்ட் உஹ_ராவாக நடித்ததற்காக நடிகை நிச்செல் நிக்கோல்ஸ் சிறப்பாக நினைவுகூரப்படுகிறார். இந்த பாத்திரத்தில் நடித்தமைக்காக, பெரிய தொலைக்காட்சித் தொடரில் வெற்றிகரமாய் நடித்த முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பெண் என்று நிக்கோலஸ் பெயர்பெற்றார். ஆனால் அதைவிட பெரிய வெற்றி வரவிருந்தது.
நிக்கோல்ஸ் உண்மையில் “ஸ்டார் ட்ரெக்” தொடரின் முதல் சீசனுக்குப் பிறகு தனது நாடகப் பணிக்குத் திரும்புவதற்காக அதில் இருந்து ராஜினாமா செய்தார். ஆனால் பின்னர் அவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரைச் சந்தித்தார். அவர் அதிலிருந்து வெளியேற வேண்டாம் என்று வலியுறுத்தினார். முதன்முறையாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் எதையும் செய்யக்கூடிய, விண்வெளிக்குச் செல்லக்கூடிய அறிவார்ந்த மனிதர்களாக தொலைக்காட்சியில் பார்க்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார். லெப்டினன்ட் உஹ_ரா என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக நிக்கோல்ஸ் அடைந்த அந்த பெரிய வெற்றியானது, கறுப்பின பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் வாழ்நாளில் என்னவாக மாறமுடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
யாக்கோபும் யோவானும் தேவனுடைய ராஜ்யத்தில் இரண்டு சிறந்த பதவிகள் வேண்டும் என்று விண்ணப்பித்தது எனக்கு நினைவுக்கு வருகிறது (மாற்கு 10:37). அந்த பதவிகள் அவர்களுடைய தனிப்பட்ட வெற்றிகளாய் இருந்திருக்கக்கூடும். இயேசு அவர்களின் வேண்டுகோளின் வேதனையான உண்மைகளை விளக்கியது மட்டுமல்லாமல் (வச. 38-40) அவர்களை உயர்ந்த இலக்குகளுக்கு அழைத்தார், “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்” (வச. 43). அவரைப் பின்பற்றுபவர்கள் தனிப்பட்ட வெற்றிகளை மட்டும் தேடவில்லை, ஆனால் அவரைப் போலவே, மற்றவர்களுக்கு சேவை செய்ய தங்கள் பதவிகளைப் பயன்படுத்துகிறவர்களாயிருப்பார்கள் (வச. 45).
நிச்செல் நிக்கோலஸ், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியை கொடுக்கும் நோக்கத்துடன் அந்த ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சி தொடரில் தொடர்ந்து பணியாற்றினார். நாமும் தனிப்பட்ட வெற்றியில் மட்டும் திருப்தி அடையாமல், நாம் பெறும் எந்த பதவியையும் அவருடைய நாம மகிமைக்காய் மற்றவர்களுக்கு சேவை செய்வதில் பயன்படுத்த பிரயாசப்படுவோம்.
கடவுள் மீது நிலைத்திருக்கும் பார்வை
2011 ஆம் ஆண்டு ஜப்பானில் புகுஷிமா டெய்ச்சி அணுசக்தி பேரழிவு, பூகம்பத்தால் ஏற்பட்டது. அதின் விளைவாய் பெரிய அளவு நச்சு வாயுக்கள் வெளியேற்றப்பட்டன. 150,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “புகுஷிமாவில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பனி விழுந்து, தொடர்ந்து விழுந்து, அப்பகுதியையே மூடியது போல் உள்ளது” என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார். கதிர்வீச்சின் பாதிப்புகள் அங்கிருந்த பயிர்கள், இறைச்சி மற்றும் தாவரத்திலிருந்து வெகு தொலைவுக்கு பரவியிருந்தது. கதிர்வீச்சின் அந்த கொடிய விஷங்களை எதிர்த்துப் போராட, உள்ளூர்வாசிகள் கதிர்வீச்சை உறிஞ்சும் தாவரமான சூரியகாந்தியை நடவு செய்தனர். அவர்கள் இருநூறாயிரத்திற்கும் மேற்பட்ட விதைகளை நட்டனர். இப்போது ஃபுகுஷிமாவில் மில்லியன் கணக்கான சூரியகாந்தி பூக்கள் பூத்துள்ளன.
சூரியகாந்தி, முழு உலகத்தையும் குணமாக்கும் கிறிஸ்துவின் செய்கையை பிரதிபலிக்கும் தேவனுடைய வடிவமைப்பு. இயேசு “நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்” (ஏசாயா 53:4). இந்த உலகத்தின் தீமை, வன்முறை மற்றும் நச்சுகள் மற்றும் மனிதர்களாகிய நாம் நம்மை நாமே அழித்துக்கொள்ளும் அனைத்து வழிகளையும் அவர் தனக்குள் ஏற்றுக்கொண்டார். நம்முடைய பாவங்கள் அனைத்தையும் அவர் தன் மீது ஏற்றுக்கொண்டார். இயேசு சிலுவையில் தன்னுடைய மீறுதல்களுக்காய் அல்லாமல், “நம்முடைய மீறுதல்களினிமித்தம்” (வச. 5) அறையப்பட்டார். அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்ததினால் நாம் பூரணமாக்கப்பட்டோம். அவருடைய தழும்புகளாலே நாம் குணமாகிறோம் (வச. 5).
கிறிஸ்து தொலைவில் நின்று நம்மை மன்னிக்கிற தேவனில்லை, அவர் நமக்குள் இருக்கும் தீமைகளையும் பாவங்களையும் அவருக்குள் எடுத்துக்கொள்கிறார். இயேசு அனைத்தையும் உறிஞ்சிக்கொள்கிறார். மேலும் அவர் நம்மை ஆவிக்குரிய ரீதியாகவும் சுகமாக்குகிறார்.