“நான் ஒரு காலத்தில் இருந்தவன் அல்ல. நான் ஒரு புதிய நபர்” என பள்ளிக் கூடுகையில் என் மகன் சொன்ன அந்த எளிய வார்த்தைகள், தேவன் அவனுடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளை விவரித்தது. ஹெராயின் என்னும் போதை வஸ்துக்கு அடிமையாயிருந்த ஜெஃப்ரி, அதே பாவ கண்ணோட்டத்தோடே தன்னுடைய வாழ்க்கையை பார்க்க நேரிட்டது. ஆனால் தற்போது அவன் தன்னை தேவனுடைய பிள்ளையாய் பார்க்க ஆரம்பித்துவிட்டான். 

வேதாகமம் இந்த வாக்குறுதியுடன் நம்மை ஊக்குவிக்கிறது: “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17). நம்முடைய கடந்தகாலத்தில் நாம் யாராக இருந்தோம், நாம் என்ன செய்துகொண்டிருந்தோம் என்பது முக்கியமில்லை, ஆனால் நாம் இயேசுவை விசுவாசித்து, அவருடைய சிலுவை கொடுக்கும் பாவமன்னிப்பை பெற்றுக்கொண்ட பின்பு நாம் புது சிருஷ்டியாய் மாறிவிடுகிறோம். ஏதேன் தோட்டத்தில் நாம் பாவத்தால் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டோம். ஆனால் “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கினார்” (வச. 18-19). நாம் அவரால் சுத்திகரிக்கப்பட்டு, அவருடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருக்கத்தக்க அவருடைய அன்பான பிள்ளைகளாயிருக்கிறோம். 

இயேசு நம்மை பாவத்திலிருந்தும் அதன் ஆதிக்க வல்லமையிலிருந்தும் விடுவித்து, தேவனுடன் ஒரு புதிய உறவை மீட்டெடுக்கிறார். ஆகையால் நாம் இனி நமக்காக வாழாமல், “தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி” வாழுவோம் (2 கொரிந்தியர் 5:15). இந்த புத்தாண்டு தினத்தில், அவருடைய மறுரூபமாக்கும் அன்பு நம்மை புதிய அடையாளத்துடனும் நோக்கத்துடனும் வாழத் தூண்டுகிறது என்பதை நினைவில் கொள்வோம். இது மற்றவர்களை நம் இரட்சகரிடம் வழிநடத்த உதவுகிறது. அவர்களும் புதிய சிருஷ்டிகளாக மாற முடியும்!